பால்யத்தின் சிற்றலைகள்

பேரலைகளின் சீற்றத்தை விடவும் சிற்றலைகளின் நடனம் வசீகரிக்கக் கூடியது. நாவலிலும் அப்படித்தான். போரும் அமைதியும், கரமசோவ் சகோதரர்கள் போன்ற அடர்த்தியான, பல்வேறு பின்னல்களும் அடுக்குகளும் கொண்ட நாவல்கள் தரும் வாசிப்பு அனுபவம் ஒருவிதம் என்றால் ஒட்டுச்சில்லை வீசி எறியும்  போது அது தண்ணீரில் எழும்பும் சிற்றலை போலச் சிறியதும் பெரியதுமாக வாழ்வு அனுபவங்களைத் தொடுத்து எழுதப்படும் நாவல்கள் முற்றிலும் புதுவகை வாசிப்பு அனுபவத்தைத் தருகின்றன.

தமிழில் இந்த வகை நாவலுக்கு உதாரணமாகக் காசியபனின் அசடு மற்றும் ஹெப்சிபா ஜேசுதாசனின் மா-னீ  ஆகிய இரண்டினையும் குறிப்பிடுவேன்

மா-னீயில் கூட உள்ளார்ந்த சோகம் அதிகமுண்டு. ஆனால் அசடு  நாவல்நேரடியாக, குரலை உயர்த்தாமல், எளிய சம்பவங்களின் வழியாகப் புறக்கணிக்கபட்ட மனிதனின் வாழ்க்கையைத் துல்லியமாகப் பதிவு செய்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு க்ரியா பதிப்பகம் வெளியிட்ட சின்னச் சின்ன வாக்கியங்கள் என்ற பியரெத் ஃப்லுசியோவின் நாவல் முக்கியமானது. தாய் மகள் என இரண்டு பெண்களுக்கிடையிலுள்ள உறவும் பகிர்தலும் அழுத்தமாகச் சொல்லப்பட்டிருக்கிறது

நாவலாசிரியன் சம்பவங்களை வளர்த்து எடுத்துச் செல்வதில் ஆர்வம் கொண்டவன். ஒரு சம்பவத்திலிருந்து கிளைவிட்டுச் செல்லும் துணைசம்பவங்கள் வழியாகவும் கதை நீளக்கூடும். புதிய நிகழ்வுகள். புதிய சம்பவங்கள் என்று அடுக்கு அடுக்காக ஒன்றின் மீது ஒன்று வைத்து  நாவலை உருவாக்குவதும் உண்டு. சில வேளை சோழிகளை குலுக்கிப் போடுவது போல கைநிறைய சம்பவங்களை அள்ளி உருட்டி விளையாடுவதும் நாவலில் சாத்தியம்.

சில நாவல்களில் நீருற்றைப் போல ஒரு சம்பவம் பெரும் உயரத்திற்குச் சென்று பின்பு அதுவே வீழ்ந்து உள்சென்று வேறு நிகழ்வாகப் பரிணமித்து மேல் எழுவதும் உண்டு. ஐரோப்பிய நாவல்களுக்கு என்று ஒருவிதமான கதை சொல்லும் முறையிருக்கிறது. பனிச்சறுக்கு விளையாட்டு போன்ற கதை சொல்லுதல். நிகழ்வை துல்லியமாக, வேகமாக, முன்பின்னாக நகர்த்திச் செல்லுவதும் எதிர்பாராத திருப்பத்தை அநாயசமாகத் தாண்டிச் செல்வதுமான கதைசொல்லும் முறை. கேமிராவின் துல்லியம் கொண்ட எழுத்துமுறையது.

சமீபத்தில் இந்த வரிசையில் இடம்பெறத்தக்க அற்புதமான நாவலாசியர் ஒருவரை வாசித்தேன். ஆகோதா கிறிஸ்தோப் எழுதிய மூன்று குறுநாவல்களின் தொகுப்பு அது. (Three Novels by Agota Kristof) ஹங்கேரியில் பிறந்து வளர்ந்த கிறிஸ்தோப் ஸ்விட்சர்லாந்தில் வசித்தவர். எழுதியது பிரெஞ்சில். நாடகம். கவிதை, நாவல்கள் என இவரது படைப்புலகம் பன்முகத்தன்மை கொண்டது. 1986ல் இவரது முதல்நாவல் தி நோட்புக் வெளியாகி பரந்தவாசக கவனத்தைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக மூன்று நாவல்களை எழுதினார். இந்த மூன்று நாவல்களும் சுயசரிதைத் தன்மை கொண்டவை.

கிறிஸ்தோப்பின் தனித்துவம் கூழாங்கற்களைக் கொண்டு வீடு கட்டியது போலச் சின்னஞ்சிறு நிகழ்வுகளை அடுக்கிக் கட்டும் கதை சொல்லும் முறையாகும்.

நவீன ஒவியத்தினைப் போலத் தொடர்பற்ற தொடர்பை உருவாக்கி காட்டுகிறார். பெரும்பான்மை சம்பவங்கள் அவரது பால்யத்தில் நடந்தவை. வெறும்நினைவுகளாக அவற்றை மறுஉருவாக்கம் செய்யாமல் கவித்துவமான தருணங்களாக, வாழ்வின் அடிப்படைகளைக் கற்றுக் கொண்ட நிகழ்வுகளாக உருமாற்றுகிறார்.

நாவலின் மையம் பாட்டி. அவளது வீட்டிற்குச் செல்லும் இரட்டை சிறுவர்களின் நினைவுகளின் வழியே கதை சொல்லப்படுகிறது. இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் கதை நடைபெறுகிறது.

பாட்டி ஊருக்கு போகும் வரை அம்மாவிற்கு ஒரு அம்மா இருப்பாள் என்றே அவர்களுக்குத் தெரியாது. ஆகவே பாட்டி அவர்களுக்கு ஆச்சரியமளிக்கிறாள். பாட்டி அம்மாவை போன்றவளில்லை. அவள் முன்கோபி. அவளைச் சூன்யக்காரி என மற்றவர்கள் தூற்றுகிறார்கள். சுத்தமில்லாதவள். வீம்புபிடித்தவள் எனப் பாட்டியை பற்றிப் பல்வேறுவிதமாகப் பேசுகிறார்கள்.  பாட்டியை அவர்களுக்கு பிடிக்கவில்லை. பாட்டிக்கும் அவர்களைப் பிடிக்கவில்லை. ஆனால் பரஸ்பரம் அவர்கள் எப்படி ஒருவரையொருவர் புரிந்து கொண்டார்கள். நேசித்தார்கள் என்பதையே நாவல் விவரிக்கிறது.

பாட்டிக்குத் தெரியாமல் இரட்டையர்கள் ஒருநாள் சாலையில் நின்று பிச்சை எடுக்கிறார்கள். ஒரு சிலர் காசு போடுகிறார்கள். சிலர் ஆப்பிள். பிஸ்கட் எனத் தருகிறார்கள். ஆனால் ஒரு ஆள் ஏன் இப்படிப் பிச்சை எடுக்கிறீர்கள். உங்களுக்கு வேலை தருகிறேன், சாப்பாடு தருகிறேன் என்னோடு வாருங்கள் என அழைக்கிறான்.

அதைக்கேட்ட சிறுவர்கள்  பிச்சை எடுப்பது எப்படியிருக்கிறது என அறிந்து கொள்வதற்காகத் தான் நாங்கள் பிச்சை எடுக்கிறோம். பிச்சை கேட்கும் போது மனிதர்களின் நடத்தை வியப்பூட்டுகிறது. இது புதுவிதமான அனுபவமாக இருக்கிறது. நீ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ எனத் துரத்திவிடுகிறார்கள். மாலையில் பிச்சை எடுத்துப் பெற்ற ஆப்பிள், பிஸ்கட் போன்றவற்றை வீட்டிற்கு திரும்பி வரும் போது சாலையோரம் தூக்கி எறிந்துவிடுகிறார்கள்.

இவ்வளவு தான் ஒரு சம்பவம்.

இன்னொரு இடத்தில் அவர்கள் தங்களுக்குக் கண்தெரியாமல் போய்விட்டது போல விளையாடுகிறார்கள். ஒருவனுக்கு கண் தெரியவில்லை. மற்றவனுக்கு காது கேட்கவில்லை என்பதாக நடிக்கிறார்கள்.

பட்டினி கிடந்தால் என்ன ஆகும் என்பதைத் தெரிந்து கொள்ள இரண்டு நாள் வெறும் தண்ணீர் மட்டும் குடிக்கப் போவதாகப் பாட்டியிடம் சொல்கிறார்கள். அவள் அதைக் கண்டுகொள்ளாமல் அவர்களுக்குப் பிடித்த கோழிக்கறியை சமைத்து வைக்கிறாள். அதைப் பார்க்கும் போது எச்சில் ஊறுகிறது. ஆனால் சாப்பிடாமல் பிடிவாதம் பிடிக்கிறார்கள். பாட்டி கோபத்தில் கத்துகிறாள்

இன்னொரு நாள் அவர்களாக ஒரு கோழியை கொன்று சமைத்து பார்க்கிறார்கள். முடிவெட்டிக் கொள்ள மறுத்து கூச்சலிடுகிறார்கள். தபால்காரனிடம் பாட்டிக்கு வரும் மணியாடரை பொய்கையெழுத்து போட்டு வாங்குகிறார்கள்.

இன்னொரு நாள் இரட்டையர்கள் ஒருவரை மற்றவர் அடித்து விளையாடுகிறார்கள்., ஏன் இப்படி அடித்துக் காயப்படுத்திக் கொள்கிறீர்கள் எனப் பாட்டி தடுத்த போது இப்படி அடித்துக் கொண்டு விளையாடுவது சந்தோஷமாக இருக்கிறது. அதைத் தடுக்காதே. வேண்டுமானால் நீயும் எங்களை அடி என்று பாட்டியிடம் வேண்டுகிறார்கள்.

ஒரு நாள் புத்தகக் கடை ஒன்றுக்குப் போய்த் தங்களுக்கு நோட்பும் பென்சிலும் காசில்லாமல் வேண்டும் என்று கேட்கிறார்கள். கடைக்காரன் தர மறுக்கிறான். எங்களிடம் காசில்லை. நோட்டும் பென்சிலும் வாங்கித் தர வீட்டில் யாருமில்லை. பாட்டி மட்டுமேயிருக்கிறாள். அவளிடம் பணமில்லை. நாங்கள் உண்மையைச் சொல்கிறோம். இதைத் திருடிக் கொண்டு போக விருப்பமில்லை. ஆகவே எங்களுக்கு நோட்டுக் கொடுங்கள் எனச் சண்டையிட்டுக் கடைக்காரனிடம் நோட்டினைப் பெறுகிறார்கள்.

ஒருநாள் பக்கத்துவீட்டுப் பெண் அவர்களைக் குளிக்க வைக்கும் போது ஆண்உறுப்பைச் சீண்டி வேடிக்கை காட்டுகிறாள். அவர்களே ஒருநாள் உள்ளுர்பூசாரி ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதை ஒளிந்து பார்த்துவிட்டு அவரை பிளாக்மெயில் செய்து மிரட்டுகிறார்கள்.

இன்னொரு இடத்தில் இப்படி ஒரு சம்பவம் நடக்கிறது , ஒரு ஒரினச்சேர்க்கையில் விருப்பம் கொண்ட ஜெர்மனியனிடம் மாட்டிக் கொள்கிறார்கள். அவனுடன் உறங்குகிறார்கள். விடியும் போது இப்படி நடக்கிறது

Don’t move. Keep sleeping.’

‘We want to urinate. We have to go.’

‘Don’t go. Do it here.’

We ask: ‘Where?’

He says: ‘On me. Yes. Don’t be afraid. Piss! On my face.’

We do it, then we go out into the garden, because the bed is all wet.

பால்யத்தின் தூய்மையும் வசீகரமும் புதிரும் குறும்பும் கோபமும் அறியாமல் செய்யும் குரூரமும் ஒன்று கலந்து எழுதப்பட்ட இந்த நாவல் நம் அகத்தை மாற்றி அமைக்கிறது. கறுப்பு வெள்ளை புகைப்படத்தில் நம் பால்யத்தைப் பார்த்துக் கொள்வது போல நாவலின் ஊடாக நம்மை அடையாளம் காணுகிறோம். உலகை எப்படி எதிர்கொண்டோம். எப்படி உருவாகி வளர்ந்தோம் என்பதன் சாட்சி போல இந்நாவல் எழுதப்பட்டிருக்கிறது.

சிறுவர்களின் உலகை இவ்வளவு துல்லியமாக, சிறப்பாக யாரும் எழுதியதில்லை. அந்த வகையில் ஆகோதா கிறிஸ்தோப் நாம் கொண்டாடப்பட வேண்டிய நாவலாசிரியராவார்.

••

20.08.2016

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: