உப பாண்டவம் நான்காம் பதிப்பு.


உப பாண்டவம் நாவலின் நான்காவது பதிப்பு விஜயா பதிப்பகத்தால் இன்னும் சில நாட்களில் வெளிவர உள்ளது. அதற்கு எழுதப்பட்ட முன்னுரை.
**
இதிகாசங்கள் மாபெரும் சிகரங்களை போன்றவை. அவற்றை கண்களால் பார்த்து மட்டுமே அறிந்து கொள்ள முடியாது. மலை வளர்வதை போல மௌனமாக இதிகாசங்களும் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. அதன் அக இயக்கம் ரகசியமானது. பிரம்மாண்டத்தை மலை தன் இயல்பாக கொண்டிருப்பது போன்றதே இதிகாசங்களும்.


இதிகாசத்தினுள் நுழைவதற்குள் எண்ணிக்கையற்ற பாதைகள் இருக்கின்றன. அதற்கு துவக்கம் முடிவு என்பதெல்லாம் வெறும் கற்பனை புள்ளிகள் மட்டுமே. மகாபாரதத்தை வாசிக்கையில் ஒவ்வொரு முறையும் வியப்பும் மிதமிஞ்சிய சந்தோஷமும் கொள்வதற்கு காரணம் இதுவே.


என் பதின்வயதிலிருந்து மகாபாரதத்தை வாசிப்பதும் புரிந்து கொள்ள முயற்சிப்பதும் கடந்து போவதுமாக இருக்கிறேன். கூட்டமாக வந்திறங்கி கிளையில் உட்கார்ந்திருக்கும் பறவைகளை அவதானிப்பது போன்றது இதிகாசம் வாசிப்பது. பறவை நம் கண்ணுக்கு புலப்படும். ஆனால் அது பறந்து வந்த தூரம் நமக்கு தெரியாது. கிளையில் அமர்ந்த பறவைகளில் எது எந்த நிமிசம் பறக்க போகிறது என்பதும் புரியாது.பறவைகள் கிளைகளை நம்பி அமர்வதில்லை அது தன் கால்களின் பலத்தில் அமர்கின்றன என்பது கண்பார்வையால் புரிந்து கொள்ள முடியாது. கடந்து வந்த ஆகாசமும் அதன் கண்களில் பட்டு தெறித்த காட்சிகளையும் பறவையை ஏறிட்டு பார்ப்பதால் எப்படி கண்டு கொள்ள முடியும். ஏதோவொரு ஒழுங்கில் ஏதோவொரு நெருக்கத்தில் அவை ஒன்றாக அமர்கின்றன. ஒன்றையொன்று விலக்கியிருக்கின்றன. தனித்தனியாகவும் கூட்டமாகவும் ஒரே நேரத்தில் இருக்கின்றன.


பறவைகள் ஒன்றை போல மற்றொன்று இருப்பது போல தோன்றினாலும் அது  வெறும் மயக்கம் மட்டுமே. எந்த பறவையிலிருந்து எந்த பறவை வந்தது. கண்ணால் பார்த்து பறவைகளில் எது தாய் எது பிள்ளை என்று அடையாளம் கண்டு கொள்ள முடியுமா? இதிகாசத்தில் இப்படியான திகைப்பும் முடிவற்ற தேடுதல்களும், மறுக்கமுடியாத உண்மைகளும் அகதரிசனங்களும் நிறைந்து கிடக்கின்றன. கற்பனையில்லாத வாசகன் இதிகாசங்களை ஒரு போதும் புரிந்து கொள்ள முடியாது.


உப பாண்டவம் என் கற்பனை. மகாபாரத்திலிருந்து உருவான நாவல். இதை எழுதும் நாட்களில் யுதிஷ்ட்ரனும் பீஷ்மரும் சிகண்டியும் சகுனியும் என் அறையின் குறுக்காக நடந்தபடியே என்னோடு பேசிக் கொண்டிருந்தார்கள். அம்பாவும், குந்தியும் காந்தாரியும் திரௌபதியும்,இடும்பியும்  மௌனமாக என் கைகளை பற்றிக் கொண்டு என்ன செய்யபோகிறாய் என்று கேட்டார்கள்.


அந்தகன் திருதராஷ்டிரனின் விரல்கள் என் முகத்தில் ஊர்ந்து எதையோ சொல்லிப்போயின. விதுரன் பேசமறுத்து நாவை ஒடுக்கியிருந்தான். நான் பகடை காய்களை போல அவர்களால் உருட்டப்பட்டேன். மதமேறிய யானை மரங்களை ஒடித்து வெறி தீற தின்பது போல இதிகாசத்தின் சாற்றை குடித்து கிறங்கி கிடந்தேன். ஆற்றில் விழுந்துவிட்ட எறும்பு தத்தளிப்பதை போன்று இதிகாசத்தின் சுழலில் அடித்து செல்லப்பட்டேன்.


ஒவ்வொரு நாவலும் அதற்கான விதியை கொண்டிருக்கிறது போலும். உப பாண்டவம் என் வலியாலும் அகதுயரங்களாலும் எழுதப்பட்டது.


இன்று உப பாண்டவம் நான்காவது பதிப்பாக வெளியாகிறது. இதன் மூன்று பதிப்புகள் வாசகர்களின் கவனத்திற்கும் விருப்பதிற்குமானதாக அமைந்திருந்தன. விஜயா பதிப்பகம் வேலாயுதம் அய்யா அவர்கள் என்மீதும் என் எழுத்தின் மீதும் மிகுந்த அக்கறை கொண்டவர். அவரது விஜயா பதிப்பகம் வழியாக உப பாண்டவத்தின் மூன்றாம் பதிப்பு வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று ஒரு வருசத்தில் மறுபதிப்பு காண்கிறது.


***

Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
March 2018
M T W T F S S
« Feb    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Subscribe

Enter your email address: