உணவை மறுத்தவள்.

2016ம் ஆண்டுக்கான மேன் புக்கர் பரிசைப் பெற்ற நாவல் ‘தி வெஜிடேரியன்’. தென் கொரியாவைச் சேர்ந்த ஹன் காங்க் (Han Kang) எழுதியது. கொரிய சமகால நாவல்களில்TREES ON A SLOPE – Hwang Sun-wo˘n மற்றும் THE DWARF- Cho Se-hu˘i ஆகிய இரண்டினை வாசித்திருக்கிறேன்.

சமகாலக் கொரியப் படைப்புகளின் வழியே மிதமிஞ்சிய நுகர்வு கலாச்சாரம் கொரிய வாழ்வினை எவ்வாறு பாதித்துள்ளது என்பதையும், குடி, போதை. பாலின்பம், வன்முறை எனப் பெருநகரவாழ்வு சிதைந்து போயிருப்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. கொரிய திரைப்படங்களும் இவற்றையே முதன்மைப்படுத்துகின்றன.

கொரிய உணவுமுறையானது அரிசி, நூடுல்ஸ், பன்றி, கோழி இறைச்சி, மீன், காய்கறிகள் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டது சாம்கைடாங் (SamGyeTang) என்ற கொரிய வேகவைத்த முழுக்கோழி பிரபலமானது. இது போலவே சனக்ஜிதென் என்ற உணவானது, குட்டி ஆக்டோபஸைத் துண்டுகளாக்கி, எள் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்துப் பரிமாறப்படுவதாகும். பட்டுப்புழுக்களைக் கொதிக்கவைத்து உண்ணுவதும் அங்கே வழக்கம். தொக்போகி என்பது அரிசி சாதம். கிம் எனும் கடல்பாசியும் உணவில் முக்கியமாக இடம்பெறுகிறது, கிம்ச்சி என்பது மீன்பொடி கலந்து ஊறூகாய்ப் போடபட்ட முட்டைகோஸ் , இதைச் சாதத்துடன் தொட்டுக் கொள்வார்கள்

கொரிய உணவுப் பண்பாட்டினைத் தெரிந்து கொண்டால் இந்நாவலை தெளிவாகப் புரிந்து கொள்ளமுடியும்.

‘தி வெஜிடேரியன்’மூன்று பகுதிகளால் ஆகிய சிறிய நாவல்.

முதற்பகுதி இளம்பெண் இயாங்க்-ஹையின் கணவரால் கூறப்படுகிறது. இயாங்க் ஹை ஒருநாள் இனி நான் அசைவம் சாப்பிட மாட்டேன். சமைக்கவும் மாட்டேன். வீட்டில் இனி மேல் அசைவ உணவுகளும் கிடையாது என முடிவு எடுக்கிறாள் . இந்த முடிவு அவளையும் அவளது குடும்பத்தையும் எப்படி நெருக்கடிக்குள் தள்ளுகிறது என்பதையே நாவல் விவரிக்கிறது.

அன்றாடம் அசைவ உணவு சாப்பிடுகிற கொரிய உணவுப்பழக்கத்தில் சைவம் என்பது விரும்பித் தேர்வு செய்கிற ஒன்று. பௌத்த துறவிகளும் நோயாளிகளும் உணவுகட்டுப்பாடு கொண்டவர்களும் மட்டுமே சைவ உணவைத் தேடி உண்ணுவது வழக்கம்.

இளம்பெண்களில் சிலர் உடற்பருமனைக் கட்டுப்படுத்த சைவ உணவிற்கு மாறுவார்கள். ஆனால் ஒரு கனவின் பொருட்டு யாரும் சைவத்திற்கு மாறியது கிடையாது. இந்நாவலில் இயாங்க்ஹை தனது துர்கனவிலிருந்து விழுந்து எழுந்த மறுநாள் முதல் இனி சைவ உணவுகள் மட்டுமே சாப்பிடுவேன் என முடிவெடுக்கிறாள்.

ஃப்ரிஜ்ஜிலிருந்த இறைச்சி, மீன்களைத் தூக்கி வெளியே எறிகிறாள்.. இயாங்க்-ஹையிற்கு வரும் கனவுகள் விசித்திரமானவை. அவளது பயமும் குழப்பமும் ஒன்றுசேர்ந்து உருக் கொண்டது போல இக்கனவுகள் விரிகின்றன. சைவ உணவிற்கு அவள் மாறியதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத கணவன் இனி வீட்டில் அனைவரும் சைவ உணவை மட்டுமே  சாப்பிட வேண்டும் என்பதை ஏற்க மறுக்கிறான்.

இயாங்க்-ஹையுடன் சண்டையிடுகிறான். அவள் பிடிவாதமாக இருக்கிறாள். நாளுக்கு நாள் அவள் மெலிந்து கொண்டே வருகிறாள். ஒருநாள் விருந்திற்குப் போன போது அவள் நடந்து கொண்ட முறை அவமானத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ஆத்திரமான கணவன் அவளது அம்மாவிற்குத் தகவல் தருகிறான். அம்மாவும் சகோதரியும் இணைந்து அவளை எப்படியாவது அசைவம் சாப்பிட வைத்துவிட முயற்சிக்கிறார்கள்.

அவள் மறுக்கவே, கட்டாயப்படுத்தி வாயில் திணிக்கிறார்கள். தன்னை அவர்கள் இம்சிக்கிறார்கள் என ஆவேசப்படும் இயாங்க்ஹை தன்னுடைய கையை வெட்டிக் கொள்கிறாள் ரத்தம் கொட்டுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கபடுகிறாள்.

மருத்துவமனையில் சிகிட்சை அளிக்கபடுகிறது. உடல் நலம் தேற அவளுக்குச் சூப் தரப்படுகிறது. அதுவும் நான்-வெஜ் சூப். அதையும் வாந்தி எடுக்கிறாள். மெல்ல அவள் மனச்சிதைவிற்கு உள்ளானவள் போல நடந்து கொள்ள ஆரம்பிக்கிறாள். முடிவில் ஒருநாள் நிர்வாணமாக அவள் மருத்துவமனையின் வெளியே அமர்ந்திருப்பதையும் அவள் கையில் சிறகுகள் பிடுங்கப்பட்ட ஒரு பறவை இருப்பதையும் அவளது பற்களில் ரத்தகறையிருப்பதையும் அவளது கணவன் அதிர்ச்சியுடன் காணுகிறான்

இரண்டாவது பகுதி இயாங்க்ஹையின் சகோதரி கணவனின் பார்வையில் விவரிக்கபடுகிறது, அவன் இயாங்க்ஹை மீது ரகசிய ஆசை கொண்டிருக்கிறான். இயாங்க்ஹேயின் நாபி மலரின் இதழ் போன்றுள்ளது என ரசிக்கிறான்.  அவளுடன் கலவியில் ஈடுபடுவதாகக் கனவு காணுகிறான்.

மூன்றாவது பகுதி இயாங்க்ஹையின் சகோதரி இன்ஹை பார்வையில் சொல்லப்படுகிறது. அவள் தனது சகோதரியின் பிடிவாதமான முடிவு அவளை எப்படி மனச்சிதைவிற்கு உள்ளாக்கியது என்பதை விவரிக்கிறாள். மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட இயாங்க்ஹை எதையும் சாப்பிட மறுத்து உடல் மெலிந்து முப்பது கிலோ எடை கொண்டவளாகிறாள். பட்டினி கிடந்து சாகப்போகிறாயா என இன்ஹை கோவித்துக் கொள்ளும் போது தன்னை யாருமே புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள். என் உடலில் இருந்த மிருகத்தை நான் முற்றிலும் வெளியேற்றிவிட்டேன். நான் இப்போது ஒரு தவாரம். தாவரங்கள் இன்னொரு உயிரை சாப்பிடுவதில்லை என்கிறாள்.

இயாங்க்ஹை குடும்பத்தின் மூத்தபெண். சிறுவயதிலிருந்தே உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு வாழ்ந்தவள், அந்தக் கசப்புணர்வு இப்போது பீறிடுகிறது. தன்னைச் சுற்றி நடக்கும் கொடுமைகளில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காகத் தான் தாவரமாகி வருவதாக விளக்குகிறாள். இன்ஹையால் அதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஏன் அவளாகச் சாவை தேடிக் கொள்ள முனைகிறாள் என வேதனைப்படுகிறாள்.

301, 302 என்றொரு தென்கொரியப்படத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்பாகப் பார்த்தேன். Park Chul-soo.இயக்கியது, இப்படத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இரண்டு பெண்களே முக்கியக் கதாபாத்திரங்கள். ஒருவர் எதையும் சாப்பிட மறுத்து அசூயை கொள்ளும் எழுத்தாளர். மற்றவர் மிச்சமாகிப்போகிறதே எனக் கிடைத்த உணவை எல்லாம் சாப்பிடுகிற இளம்பெண். விதவிதமாகச் சமைப்பவர்.

உணவு பழக்கத்தில் எதிர் நிலை கொண்ட இந்த இரண்டு கதாபாத்திரங்களுக்கு இடையில் ஏற்படும் உறவும் விலகலும் சண்டையுமே படம். இருவரின் உணவு பழக்கத்திற்கும் ஆழமான உளவியல் காரணமிருப்பதைப் படம் விவரிக்கிறது. எழுத்தாளரான யுன் ஹையின் வளர்ப்பு தந்தை இறைச்சி கடை நடத்துபவர். பதின்வயதில் அவளை வற்புறுத்தி பாலுறவு கொள்ள முயன்றவர் என்பதால் அவள் அசைவ உணவை வெறுக்கிறாள். மற்றவள் கணவன் தன்னைப் புரிந்து கொள்ள மறுப்பதால் அவனது வளர்ப்பு நாயை கொன்று சூப் வைத்துவிடுகிறாள். வேண்டும் என்றே விதவிதமாகச் சமைக்கிறாள். தனியே அதைச் சாப்பிடுகிறாள். படத்தின் இறுதியில் யுன் ஹை தன்னையே வெட்டி சமைத்துக் கொள்ளும்படி தருகிறாள்.

அதிர்ச்சியூட்டும் இந்தபடம் கொரியாவில் உணவு பழக்கம் சார்ந்த உளவியல் சிக்கல்கள் அதிகமிருப்பதைச் சுட்டிக்காட்டியது. அதன் தொடர்ச்சியாகவே இந்த நாவலைக் கருதுகிறேன்.

இயாங்க்ஹையின் சைவ உணவு பழக்கம் எதிர்ப்பின் வெளிப்பாடு. தன் வாழ்வின் மீது அவள் அடைந்த அதிருப்தியின் வடிவம். உணவை மறுத்துத் தன்னைச் சிதைத்துக் கொள்வதன் வழியே அவள் தாவரத்தைப் போலச் சூரிய ஒளியை சாப்பிட்டு வாழ்ந்துவிட முடியும் என நம்புகிறாள். நாவலில் கதைப்போக்கின் இடையே கனவினை துண்டித்து இணைத்திருப்பது சிறப்பாக உள்ளது.

எளிமையான இந்நாவலுக்கு மேன் புக்கர் விருது கிடைத்திருப்பது குருட்டு அதிர்ஷடம் என்றே கருதத் தோன்றுகிறது

••

0Shares
0