வரலாற்றின் குரல்

தினம் ஒரு தகவல் என்ற நிகழ்ச்சி ரேடியோவிலும் தொலைக்காட்சியிலும் ஒலிபரப்பபடுகிறது. இவற்றில் பெரும்பாலும் புகழ்பெற்ற மனிதர்கள். நிகழ்ச்சிகள். பொதுவான வரலாற்றுச் சம்பவங்கள் பற்றியே பேசப்படுகின்றன. மறந்து போனவற்றை நினைவுபடுத்துவது போல மட்டுமே இந்நிகழ்ச்சிகள் உருவாக்கபடுகின்றன.

ஆனால் மனித குல வரலாற்றில் முக்கியமான, அறியப்படாத செய்திகளை. மறைக்கப்பட்ட வரலாற்றை. அறிவியல் உண்மைகளை, ஆளுமைகளை முதன்மைப்படுத்தித் தனித்துவமான பார்வையுடன் தினம் ஒரு தகவல் எழுதப்பட்டால் எப்படியிருக்கும் என்பதற்கான உதாரணமான உள்ளது எட்வர்டோ கலியானோ எழுதிய ‘சில்ரன் ஆஃப் தி டேஸ்: எக் காலண்டர் இன் ஹ்யூமன் ஹிஸ்டரி’(Children of the Days/ A Calendar of Human History/ Eduardo Galeano)

உருகுவேவின் புகழ்பெற்ற எழுத்தாளரார் எட்வர்டோ கலியானோ. வரலாற்றைச் சிறுசிறு துண்டுகளாக்கி சாலட் போலத் தருகிறார். ஆயிரம் பக்கங்கள் கொண்ட வரலாற்று நூல் தரமுடியாத அனுபவத்தை ஒன்றிரண்டு பக்கங்களில் கலியானோவால் தர முடிகிறது என்பதே அவரது தனித்துவம்.

வரலாறு என்பது இறந்த மனிதர்களின், இறந்த பெயர்களின், இறந்த தரவுகளின் தொகுப்பாக இருப்பதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. வரலாறு வாழ்ந்து கொண்டேயிருக்ககூடியது. அது முடிவுறாத ஒரு கதை. சரித்திரத்தை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள மீள்நினைவு கொள்வது தேவைப்படுகிறது. அதையே தான் தொடர்ந்து செய்கிறேன் என்கிறார் கலியானோ.

பத்திரிக்கையாளராகப் பணியாற்றிய கலியானோ உருகுவே நாட்டிலும் நடந்த ராணுவப் புரட்சியின் போது கைது செய்யப்பட்டார். விடுதலையாகி நாட்டை விட்டு வெளியேறி பதிப்பக எடிட்டராகச் சில ஆண்டுகள் பணியாற்றினார். இவரது லத்தீன் அமெரிக்காவின் வெட்டுண்ட ரத்தநாளங்கள் நூல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. ராஜன் மொழிபெயர்த்துள்ளார். பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.

இது ஒரு அரசியல் இலக்கியமாகும் . லத்தீன் அமெரிக்காவின் வரலாற்றை அதன் சமூகம் ,பண்பாடு, அரசியல் பொருளாதார நிலைகளில் ஏற்பட்ட மாற்றங்களின் ஊடாக இந்நூல் விவரிக்கிறது.

கலியானோ லத்தீன்அமெரிக்கா முழுவதும் அலைந்து திரிந்தவர். அரசியல் களத்தில் நேரிடையாகச் செயல்பட்டவர். மனிதஉரிமை போராளியாக விளங்கியவர். கலியானோவின் உறுதியான நம்பிக்கையே அவரது எழுத்தின் பலம் என்கிறார் இஸபெல் ஆலண்டே.

Mirrors: Stories of Almost Everyone, Days and Nights of Love and War , Voices of time: a life in stories , Upside Down: A Primer for the Looking-Glass World போன்றவை கலியானோவின் முக்கியமான புத்தகங்கள்.

ஜோனா ரஸ்கின் எடுத்த நேர்காணலில் கலியானோ இவ்வாறு கூறுகிறார்

“நேர்மையாக எழுதுவது என்பது மிக முக்கியமானது. நாம் பேசும் வார்த்தைகளை வைத்துதான் ஒருவரை மற்றவர் அறிந்து வைத்திருக்கிறோம். நான் ஒரு சொல்லை உங்களுக்குத் தரும்போது என்னையே தருகிறேன்”

இன்னொரு கேள்விக்குப் பதில் சொல்லும் போது ” இயற்கைக்கு எதிராக இழைக்கப்படும் எந்தவொரு குற்றமும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றமே. உலகமானது இன்று துப்பாக்கிகள் வெடித்துக் கொண்டிருக்கும் ஓரிடத்தில் தட்டுத் தடுமாறிச் செல்லும் குருடனைப் போலவேயிருக்கிறது. ” என்கிறார்

சில்ரன் ஆஃப் தி டேஸ் நூலில் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை தினம் ஒரு தகவலாக எழுதப்பட்டிருக்கிறது.

இதில் ஜனவரி 3ம் தேதியை பற்றி எழுதும் போது கிமு. 47ம் ஆண்டு இதே நாளில் தான் அலெக்சாண்ட்ரியாவின் புகழ்மிக்க நூலகம் எரிக்கபட்டது. சமீபத்தில் ஈராக் யுத்ததில் பாக்தாத் நூலகம் குண்டு வீசி எரிக்கபட்டதும் இதே தேதியில் தான் என்று கலியானோ சுட்டிக்காட்டுகிறார். அத்துடன் சுல்தான் அப்துல் ஹசீம் இஸ்மாயில் தான் பயணம் செல்லுகிற இடங்களுக்கெல்லாம் கூடவே தனது ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை 400 ஒட்டகங்களில் ஏற்றிக் கொண்டு பயணம் செய்த அரிய தகவலையும் இணைத்துக்காட்டுகிறார்

ஜனவரி 4ம் அன்று நியூட்டனின் 1643ல் நியூட்டன் பிறந்தார் என்பதைக் குறிப்பிடும் போது புவியீர்ப்பு விசையைக் கண்டுபிடித்த நியூட்டன் வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எந்தப் பெண்ணின் ஈர்ப்பிற்கும் அவர் உள்ளாகவில்லை என்றும் கேலியாகச் சுட்டிக்காட்டுகிறார்

இன்னொரு நாளில் குறிப்பிடுகிறார்

“ஒரு நாள் ஐன்ஸ்டின் தமது நண்பர்கள் சொன்னார் ‘இந்தப் புவிப் பரப்பிலிருந்து தேனீக்கள் காணாமல் போய்விட்டால் மனிதனின் ஆயுள் காலம் நான்கு ஆண்டுக் காலத்திற்கு மேலிருக்காது. புவியில் தேனீக்களும் இருக்காது, மனிதர்களும் இருக்க மாட்டார்கள்.’ இது வீண் பயம் என நண்பர்கள் கேலியாகச் சிரித்தார்கள். ஆனால் ஐன்ஸ்டின் சிரிக்கவில்லை.”

சுற்றுச்சூழல்சீர்கேடு மனிதனை இந்தப் புவியிலிருந்து வேகமாக அழிந்துவிடும் என்பதை எல்நினோ போன்ற சமகாலச் சம்பவங்கள் உறுதிபடுத்துகின்றன. அதன் எச்சரிக்கை குரல் போலவே ஜன்ஸ்டீனின் குறிப்புக் காணப்படுகிறது

இன்னொரு குறிப்பில் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஜன்ஸ்டீன் ரஷ்யாவின் உளவாளி என அமெரிக்க அரசால் சந்தேகிக்கபட்டார். அவரது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டன எனக்குறிப்பிடுகிறார்

1756 ஜனவரி 27 இசைமேதை மொசார்ட் பிறந்ததினம். அதைக் குறிப்பிடும் கலியானோ அவர் இந்த உலகிற்குத் தந்த கொடை நிகரற்றது. இன்று வரை அவரது இசையைக் கேட்கும் குழந்தைகள் அழுகையைத் தானே நிறுத்திவிடுகின்றன. இந்தப் பூமியில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் இது தான் உனது வீடு. இதன் சப்தம் இப்படிதானிருக்கும் என மொசார்ட் தனது இசையின் மூலம் வரவேற்கிறார் என்பதே உண்மை என்கிறார்

பிப்ரவரி 21 உலகத் தாய்மொழிகள் தினம். ஒவ்வொரு இரண்டுவாரத்திலும் உலகில் ஏதாவது ஒரு மொழி இறந்து போகிறது. வார்த்தைகளுக்குக் கடவுள் வடிவம் கொடுத்தவன் மனிதன். இன்றோ தாய்மொழிகளின் அழிவு வேகமாக நடந்து வருகிறது. லாகோமராவில் விசில் அடிப்பது தான் மொழி. இடையர்கள் பரஸ்பரம் பேசிக் கொள்வதற்கு விசில் அடிப்பதையே வழக்கமாக வைத்திருக்கிறார்கள். சந்தோஷம். துக்கம் தகவல் எல்லாமும் விசில் வழியாகவே வெளிப்படுத்தபட்டன என்கிறார் கலியானோ

மார்ச் 14 1883 பணத்தின் மதிப்பு பற்றியும் பணம் உலகில் ஏற்படுத்திய மாற்றங்கள் பற்றியும் பல்லாயிரம் பக்கங்கள் எழுதிய கார்ல் மார்க்ஸ் வறுமையில் தான் இறந்து போனார். அவரது இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர் வெறும் 11 பேர் மட்டுமே.

மார்ச் 16 கதைசொல்லிகள் தினம். கதை சொல்வதன் வழியே நினைவுகள் காப்பாற்றப்படுகின்றன. மனிதர்கள் உயிர்பெறுகிறார்கள், பூர்வகுடிகள் கதை சொல்வதை வழிபாடாகக் கருதுகிறார்கள்.

இப்படித் தினம் ஒரு தகவலாக இலக்கியம், இசை, வரலாறு, அறிவியல். பொருளாதாரம். நுண்கலைகள் , ஆளுமைகள் எனப் பல்துறை சார்ந்த அபூர்வமான தகவல்களை, குறிப்புகளை. நிகழ்ச்சிகளைக் கலியானோ தேர்வு செய்து எழுதியிருக்கிறார்.

இவற்றின் வழியாக நாம் கடந்தகாலத்தின் உண்மை முகங்களை அடையாளம் காணமுடிகிறது. வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்ளவும் சிந்திக்கவும் முடிகிறது. வரலாற்று நூல்களை வாசிப்பதை பெரும்பாரமாகக் கருதி ஒதுக்கும் இளையோருக்கு இந்நூல் சாக்லேட் சாப்பிடுவதைப் போல ருசிக்கும் என்பது நிஜம்

••

Archives
Calendar
February 2019
M T W T F S S
« Jan    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  
Subscribe

Enter your email address: