முடிவற்ற விசாரணை

ஒரு சிறிய அறை. நான்கே முக்கியக் கதாபாத்திரங்கள். யூத சமயசட்டப்படி விசாரணை செய்யும் மூன்று நீதிபதிகள். இவர்களுக்குள் நடக்கும் வாதப்பிரதிவாதங்களை முன்வைத்து 115 நிமிஷங்கள் பரபரப்பாகச் செல்லும் திரைக்கதை.

Gett: The Trial of Viviane Amsalem என்ற 2014ல் வெளியான இஸ்ரேல் பிரெஞ்சு கூட்டுதயாரிப்பில் உருவான படத்தைப் பார்த்து முடிக்கும் போது அதிர்ந்து போய்விடுகிறோம்.

விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் ஒரு யூதப்பெண் படும் பாடு தான் படத்தின் மையக்கதை.

யூதச்சட்டப்படி ஒரு பெண் விவகாரத்து பெற வேண்டும் என்றால் மதகுருமார்களைக் கொண்ட சமயநீதிசபையை நாட வேண்டும். அங்கே கணவரிடமிருந்து Gett எனும் அனுமதியைப் பெற வேண்டும். கணவன் சம்மதிக்காவிட்டால் அந்தப் பெண்ணிற்கு விவாகரத்து கிடைக்காது.

விவியன் என்ற 45 வயது பெண் கணவனுடன் சேர்ந்து வாழப்பிடிக்காமல் விவாகரத்திற்கு விண்ணப்பிக்கிறாள். அவளது கணவன் எலிசா ஒரு பக்கம். விவியன் மறுபக்கம் என விசாரணைக்குக் காத்திருப்பதில் படம் துவங்குகிறது

விவியன் சார்பில் வாதிட கார்மல் என்ற வழக்கறிஞர் உடனிருக்கிறார். விசாரணையில் எலிசாவோடு 20 ஆண்டுகள் வாழ்ந்து குழந்தைகள் பெற்று வளர்த்த போதும். அவரோடு சேர்ந்து வாழ முடியவில்லை. விவாகரத்துக் கொடுங்கள் எனக் கேட்கிறாள் விவியன்.

எலிசாவிடம் உன் மனைவி மீது சந்தேகப்படுகிறாயா எனக் கேட்கிறார்கள்.

இல்லை. அவள் தங்கமான பெண், அன்பானவள். சிறந்த தாய் என்கிறான்.

பின் ஏன் அவளுடன் இரண்டு வருஷங்களாகப் பேசாமல் இருக்கிறாய் என வழக்கறிஞர் கேட்கிறார்.

அது அப்படித்தான். அவளை எனக்குப் பிடிக்கவில்லை. அவளை வெறுக்கிறேன். என்கிறான்.

பிடிக்காவிட்டால் விவாகரத்து தர வேண்டியது தானே எனக்கேட்கிறான் கார்மல்.

இல்லை. அவள் வாழ்நாள் முழுவதும் என் மனைவியாகத் தான் இருக்க வேண்டும். அது அவளுக்கு அளிக்கபடும் தண்டனை என்கிறான் எலிசா.

இதைக்கேட்ட விவியன் கொதித்து எழுந்து என்னை ஏன் வாழ விடாமல் இம்சிக்கிறாய் எனக் கணவனிடம் கேட்கிறாள். பதிலுக்கு அவன் மெலிதான புன்முறுவல் மட்டுமே செய்கிறான்.

யூதநீதிபதிகள் அவளிடம் கணவனிடம் கோவித்துக் கொண்டு உன் சகோதரன் வீட்டில் போய் இருப்பது தவறு. உடனே அவனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என உத்தரவிடுகிறார்கள். அவள் மறுக்கிறாள். நீதிமன்றம் அவளைக் கடுமையாக எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்கிறது.

அடுத்த காட்சி ஆறுமாதங்களுக்குப்பிறகு அதே நீதிமன்றத்தில் விவியன் நிற்கிறாள்.

என்ன நடந்தது என நீதிபதிகள் விசாரிக்கிறார்கள்.

இந்த ஆறுமாதமும் தன்னோடு கணவன் ஒருவார்த்தை பேசவில்லை. தன்னை வெறுத்து ஒதுக்குகிறான் என்கிறாள்.

கணவனுக்கு வேறு ஏதாவது ஒரு பெண்ணுடன் தொடர்பு உள்ளதா, குடி, சீட்டு போன்ற பழக்க வழக்கம் உள்ளதா எனக்கேட்கிறார் நீதிபதி.

இல்லை என்கிறாள் விவியன்.

சாட்சிகள் விசாரணைக்கு அழைக்கபடுகிறார்கள். எல்லோரும் எலிசா நல்லவன். ஒழுக்கமானவன். மதசட்டப்படி வாழ்பவன், கடின உழைப்பாளி. இளகிய மனம் கொண்டவன் எனப் புகழுகிறார்கள்.

அது போல விவியனும் நல்ல மனைவி. சிறந்த தாய், அன்பான பெண் என்கிறார்கள். ஆனால் இவர்கள் இருவரும் ஏன் சேர்ந்து வாழ முடியவில்லை என்று நீதிமன்றத்திற்குப் புரியவில்லை.

பிடிக்காத ஒருவரை திருமணம் செய்து கொண்டு கட்டாயத்தின் பேரில் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்துவிட்டேன். மீதமிருக்கும் நாட்களை என் விருப்பம் போல வாழ அனுமதியுங்கள் என விவியன் மன்றாடுகிறாள்.

எலிசா விவகாரத்து தர மறுக்கிறான். அவனது சம்மதமின்றி அவளுக்கு விவாகரத்து கிடைக்காது. ஆகவே வாய்தா போடப்படுகிறது.

மீண்டும் நீதிமன்றம். விசாரணை. இம்முறை அவள் கோபத்தில் நீதிபதிகளைத் திட்டிவிடுகிறாள். ஆகவே அவளை நீதிமன்றம் தண்டிக்கிறது. விசாரணை கிடப்பில் போடப்படுகிறது.

அடுத்த ஆறுமாதங்களுக்குப் பிறகு வேறு நீதிபதி விசாரணை செய்கிறார். வழக்கில் எலிசாவின் சகோதரன் அவனுக்காக வாதிடுகிறான். விவியனை தனக்குப் பிடிக்காத போதும் அவளுக்கு மணவிலக்கு தரமுடியாது. அது மதவிரோதம் என உறுதியாகச் சொல்கிறான் எலிசா.

விவியனுக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை. இதுவரை அவனுக்காக வாழ்ந்த வாழ்க்கைக்கு நன்றிக்கடனாக மணவிலக்கு தந்துவிடும்படி கெஞ்சுகிறாள். பிடிவாதமாக மறுக்கிறான் அந்த நல்ல கணவன்.

விவியன் கண்ணீர் விடுகிறாள். உலகத்தில் ஏன் ஒருவர் கூடத் தன்னைப் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள் எனக் கூச்சலிடுகிறாள்.

ஆனால் கணவன் பிடிவாதமாகயிருக்கிறான்

முடிவில் பேசிப்பேசி எலிசாவை ஒத்துக் கொள்ள வைக்கிறார்கள். ஆனால் மணவிலக்கு தரப்போகும் நாள் வருகிறது. அன்று நடப்பவை நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது

படம் முழுவதும் நீதிவிசாரணை தான். ஆனால் ஆர்ப்பாட்டமான வாதங்களில்லை. உணர்ச்சிபூர்வமான, உள்ளார்ந்த கோபத்துடன். இயலாமையுடன் வாதிடுகிறார்கள். தனிமனித வாழ்க்கையை எப்படி எல்லாம் மதம் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. நல்ல கணவன், நல்ல மனைவி என்பதன் அடையாளம் என்ன. ஒரு பெண் ஏன் 45 வயதில் மணவிலக்கு கேட்கிறாள், கணவன் மனைவி உறவின் அடிப்படை எது என்பது போன்ற பல்வேறு கேள்விகளை இந்த விசாரணை முன்வைக்கிறது

திரைக்கதையாக்கபட்ட விதம் அபாரம். ஒருவரையொருவர் ரகசியமாக முறைப்பதும் திட்டுவதும் வெறுப்பதுமான காட்சிகளில் கேமிரா கோணங்கள் அற்புதமாக உள்ளன. எலிசாவின் முகத்தில் வெளிப்படும் வெறுப்பு நம்மைக் கோபம் கொள்ளத்தூண்டுகிறது படத்தின் ஒளிப்பதிவு Jeanne Lapoirie என்ற பிரெஞ்சு பெண் ஒளிப்பதிவாளர். ஆகவே அவரால் விவியனின் மனவுணர்ச்சிகளைத் துல்லியமாகப் புரிந்து படமாக்க முடிந்திருக்கிறது

சிறிய அறைக்குள் முழுப்படத்தையும் எடுத்துள்ளது இயக்குனரின் திறமை. ஒரு காட்சி கூட அரங்கிற்கு வெளியே கிடையாது. கச்சிதமான எடிட்டிங். விவியன் மனநிலைக்கு ஏற்ப அவளது உடை மாறுகிறது. அவள் உட்கார்ந்திருக்கும் நிலை மாறுகிறது. நீதிவிசாரணையில் என்ன நடக்கிறது என்பதை விவியனின் சில க்ளோசப் காட்சிகள் துல்லியமாக விவரிக்கின்றன. அக்காட்சிகளில் Ronit Elkabetz மிகச்சிறந்த நடிகை என நிரூபணம் செய்துள்ளார்.

நீதிவிசாரணையை மையமாகக் கொண்டு நிறையத் திரைப்படங்கள் வந்துள்ளன. அதில் Sidney Lumet இயக்கிய 12 Angry Men தலைசிறந்தபடம். அதற்கு நிகரான உருவாக்கதில் இப்படம் வந்துள்ளது.

படத்தில் ஒரு காட்சியில் வழக்கறிஞர் யூதசம்பிரதாயப்படியான தலைக்குல்லா அணியாமல் வந்துவிடுவார். அவரை நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்து இது போன்ற செயல்களை அனுமதிக்கமுடியாது என்கிறது. இன்னொரு காட்சியில் நீதிபதிகளே கிசுகிசு பேசுவதில் ஈடுபடுகிறார்கள். நீதிபதிகளும் ஆண்களாகவே நடந்து கொள்வார்கள் என்ற உண்மையைப் படம் அழுத்தமாகச் சுட்டிக்காட்டுகிறது

எலிசாவின் அண்டைவீட்டுக்காரன் சொல்லும் சாட்சியமும். பக்கத்துவீட்டில் நடக்கும் சண்டை பற்றிச் சொல்லும் போது ஏற்படும் அலட்சிய முகபாவமும் மறக்கமுடியாதவை. சாட்சி சொல்பவரின் மனைவியிடம் தனியே விசாரணை செய்ய வேண்டும் எனக் கார்மல் சொல்லும் போது அந்த நபர் விசாரணை அறையை விட்டு வெளியே போக மறுக்கிறார். மனைவி வாயை திறப்பதற்குள் அவரே பதில் சொல்லிவிடுகிறார்.

கார்மல் அந்த ஆளை வெளியேற்றிவிட்டு அவரது மனைவியிடம் உண்மையை மறைக்காமல் சொல்லுங்கள் எனும் போது அவள் உடைந்து அழுகிறாள். அக்காட்சியில் விவியன் மட்டுமில்லை. எல்லாப் பெண்களும் கணவனின் அடிமைகளைப் போலவே தான் வாழ்கிறார்கள் என்பது முகத்தில் அறைவது போலக் காட்டப்படுகிறது

கடைசிக்காட்சியில் எலிசா தன் மனைவி அருகில் வந்து உட்காருவதும் பரிவோடு அவளுடன் பேச முற்படுவதும் கவித்துவமாக உருவாக்கபட்டுள்ளது.

உலகெங்கும் பல்வேறு வழக்குகளுக்காக இது போல நீதிமன்றத்தில் காத்திருக்கும் பெண்கள் இருக்கிறார்கள். நீதி கேட்டு ஆண்டாண்டுகளாகக் காத்திருப்பது துயரமானது. விவியன் அவர்களின் ஒரு உதாரணம் அவள் எழுப்பும் கேள்விகள் எல்லாச் சமூகத்திற்கும் பொருந்தக்கூடியது.

மணவிலக்குப் பற்றிய படமாக இருந்தாலும் குடும்பம் என்பதன் அடிப்படைகளை மறுவிசாரணை செய்யவே படம் முயற்சிக்கிறது. அதுவே இப்படத்தை உலக அளவில் கொண்டாடச் செய்கிறது.

••

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: