உறங்க மறுப்பவனின் கனவுகள்

 


 


கனவு காண்பதால் நான் உயிர்வாழ்வதாக நம்புகிறேன் என்று ஸ்ரைன்பெர்க் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். காற்றில் பறக்கும் நீர்குமிழிகளை போல வெறுமை கொள்ளும் ஜாலம் தான் கனவுகளா? கனவுகளும் துர்சொப்பனங்களும் ஒன்றல்ல? துர்சொப்பனங்கள் நம்மை அலைக்கழிக்கின்றன. நம் உடலை, மனதில் ஒடுங்கி கிடந்த வலியை, நினைவுகளை பீறிடச் செய்கின்றன. 


 


மனித விசித்திரங்களில் ஒன்று உறக்கம். அதை விளக்கிச் சொல்வது எளிதில்லை. இயற்கை துயில் கொள்வதில்லை. அது விழித்து கொண்டேதானியிருக்கிறது. தூக்கம் ஒரு தாதியைப் போல நம்மை அரவணைத்து கொள்கிறது. தூய்மைப்படுத்துகிறது. சாந்தப்படுத்துகிறது. முந்தைய நாளின் கசடுகளை, அலுப்பை, நீங்காத வலியை துடைத்து எறிகிறது. நீருக்குள்ளிருந்து பூக்கும் மலரை போல உடலில் அரும்பத் துவங்குகின்றன கனவுகள்.


 


நினைவு கொள்வதால் மட்டுமே கனவை நாம் புரிந்து கொள்கிறோம். கனவு என்று நாம் சொல்வது நினைவு கொள்ளுவதையே.


 


மெலிஞ்சி முத்தனின் கனவுகள் அவரது துயரத்திலிருந்து உருவானவை. தனிமை தான் அந்தக் கனவின் ஆதாரபுள்ளி. யாரும் ஒரு போதும் பதில் தராத போதும் தன் இருப்பைக் கத்தி கத்தி நிருபணம் செய்யும் காகத்தின் குரலைப் போல இந்த கனவுகள் அவருக்குள்ளிருக்கும் துயரை உலகிற்கு வெளிக்காட்டுகின்றன.


 


இந்த கனவுகளுக்கு வேரும் விதையும் இருக்கின்றன. அவை மறக்க முடியாத ரத்த சாட்சிகள். யுத்தம் ஏற்படுத்திய ஆறாத வடு. மனித அவலத்தின் முன் கைகட்டி நின்ற தருணங்கள்.


 


யுத்தம் வெறும் சொல் அல்ல. அது ஒரு பெருந்துயர். அதன் சுழலில் சிக்கி வீசி எறியப்பட்டவர்கள் உலகெங்கும் ஒடுங்கிக் கிடக்கிறார்கள். இருப்பிடத்தையும் சொந்த மனிதர்களையும் வாழ்வாதாரங்களையும் இழந்த மனிதன் காற்றில் அடித்து செல்லப்படும் காகிதத்தைப் போல தன்னை ஊழின் கைகளில் ஒப்படைத்து கொண்டுவிடுகிறான்.


 


அது அவன் விதியைக் கொண்டு செல்கிறது. அவனை அவமானங்களின் முன்பாக மண்டியிடச் செய்கிறது. நிர்வாணப்படுத்தி கேலி செய்கிறது. அகதி என்ற சொல்லைச் சூடி அவனைக் குப்புறத் தள்ளுகிறது.


 


அகதியின் கண்கள் பூமியை உற்று நோக்கத் தெரிந்தவை. அவன் மண்ணோடு பேசுகிறான். மனிதனாக வாழ்வதற்கு குற்றவுணர்வு கொள்கிறான். வாழ்க்கை மண்புழுவைக் கூட மண்ணுக்குள் புதைந்து தான் வாழும்படி வைத்திருக்கிறது என்பதை கண்டு அவமானம் கொள்கிறான்.


 


நம் காலம் வாழ்வு குறித்த எண்ணிக்கையற்ற கேள்விகளால் நிரம்பியது. அதற்கான பதில்கள் நம்மிடமில்லை. முந்தைய பதில்கள் போதுமானதாகயில்லை.


 


மெலிஞ்சி முத்தனின் கனவுகள் வாழ்வாதாரங்களை பறிகொடுத்த  வலியலிருந்து உருவான புகலிட கலைஞனின் குரல். அவர் அலைக்கழிந்து திரிந்த வாழ்க்கையை, அதன் ரணங்களை,  தன்னிடமிருந்து பறி போன அடையாளத்தை அவர் கனவுகளின் வழியே எதிர் கொள்கிறார். கவிதையை போல படிமங்களும் உருவகங்களும் நிரம்பிய அற்புதமான உரைநடை அவருடையது. கனவுகளின் வழியே அவர் சொல்லும் கதை  யுத்தம் உருவாக்கிய மனிதனை பற்றிய உண்மையான வெளிப்பாடு.


 


எதன் மீது சார்பு கொள்ளமுடியாதபடி அவரது மனம் துவண்டுகிடக்கிறது. எழுத்து மட்டுமே வாழ்வின் மீதான ஒரே பற்றுக்கோடாக உள்ள ஒரு கலைஞன் மெலிஞ்சி முத்தன். கனடாவில் வசிக்கும் இவர் ஒரு சிறந்த கூத்து கலைஞர்.


 


வெளிச்சம் பிடிக்காத பூச்சிகள் உலகில் நிறைய இருக்கின்றன. அவை இருளை குடித்து இருளுக்குள்ளாகவே வாழப் பழகிவிட்டன. வெளிச்சத்தின் சிறு துணுக்கை அவை எதிர் கொள்ளும்போதும் பதறி ஒடுகின்றன. யுத்தம் மனிதர்களை இந்த பூச்சிகளை போல தான் மாற்றி வைத்திருக்கிறது.


 


மகாபாரதத்தில் மகாபிரஸ்தானிகம் என்றொரு நிகழ்வு குறிப்பிடப்படுகிறது . யுத்த முடிவில் ஆயிரக்கணக்கான ஆண்கள் இறந்து போய்விடுகிறார்கள். இழப்பின் துக்கம் தாளமுடியாமல் பெண்கள் கதறி அழுகிறார்கள்.  இறந்து போனவர்களை திரும்ப ஒரேயொரு முறை தாங்கள் பார்க்க முடியாதா என்று புலம்புகிறார்கள்.


 


ஒரு இரவு  இறந்து போன யாவரும் மீள்உரு கொண்டு வருவார்கள் என்று கிருஷ்ணன் ஒரு மாயத்தை நிகழ்த்திக் காட்டுகிறார். பாண்டவர் கௌரவர் என பேதமில்லாமல் இறந்த மனிதர்களை சந்திக்க ஆற்றின் கரையில் கூடி நிற்கிறார்கள். இறந்து போன யாவரும் ஆற்றின் அடியிலிருந்து வெளிப்பட்டு கரையை நோக்கி மறுபடி வருகிறார்கள்.


 


அவர்களை கண்டதும் ஆவேசத்துடன் மனைவி குழந்தைகள் ஒடி வரவேற்று கட்டிக் கொள்கிறார்கள். ஏதேதோ கேட்கிறார்கள். சொல்கிறார்கள். ஆனால் இறந்தவர்கள் பேசுவதில்லை. அவர்கள் கண்கள் நிலை குத்தி நிற்கின்றன. அதை தான் உயிரோடு இருப்பவர்களால் தாங்கமுடியவில்லை. ஒரேயொரு வார்த்தை அவர்கள் பேசினால் போதும் என்கிறார்கள். ஆனால் அது கடைசி வரை நடக்கவில்லை.


 


சாவின் மாபெரும் மௌனம்  அவர்கள் துயரை அதிகமாக்குகிறது. கடைசியில் இறந்தவர்கள் மரணத்தின் பேராற்றில் திரும்பவும் கலந்துவிடுகிறார்கள். அந்த மௌனம் பூமியெங்கும் மிச்சமிருக்கிறது என்கிறது மகாபாரதம்.


 


மெலிஞ்சி முத்தனை வாசிக்கையில் அந்த மௌனத்தையே உணர முடிகிறது. நம்பிக்கை தரும் புதிய படைப்பாளியாக, உரைநடையில் புதிய பாய்ச்சலையும் கவித்துவத்தையும் உருவாக்கும் மெலிஞ்சி முத்தனிடமிருந்து இன்னும் நிறைய கதைகளும் கவிதைகளும் வரவேண்டும். அவரது புதிய எழுத்து அதற்கான தனித்துவத்துவத்தையும் நம்பிக்கையையும் நிறையவே தருகிறது.


  


 


கனடாவில் வசிக்கும் மெலிஞ்சி முத்தனின் புதிய புத்தகமான வேருலகு உயிர்மை பதிப்பக வெளியீடாக விரைவில் வெளி வர உள்ளது, அதற்கு எழுதப்பட்ட முன்னுரை இது


 


 

Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: