மூன்று நண்பர்கள்

புகழ்பெற்ற ஸ்பானிய திரைப்பட இயக்குனர் Carlos Saura. இவரது இயக்கத்தில் 2001ம் ஆண்டு வெளியான BUÑUEL AND KING SOLOMON’S TABLE என்ற படத்தை இரண்டு நாட்களுக்கு முன்பாகப் பார்த்தேன்.

இப்படம் பிரபல இயக்குனர் லூயி புனுவலைப்(Luis Buñuel) பற்றியது. குறிப்பாக ஒவியர் டாலி, கவிஞர் லோர்க்காவோடு அவருக்கிருந்த நட்பைப்பற்றியது. மூவரும் நெருக்கமான நண்பர்களாகப் பழகினார்கள், சில ஆண்டுகள் மேட்ரிட்டில் ஒரே அறையில் ஒன்றாக வசித்தார்கள்.

புனுவலின் வாரிசு எனக் கொண்டாடப்படும் கார்லோஸ் சுரா இப்படத்தை ஒரு homage போலவே செய்திருக்கிறார். படத்தைப் பார்ப்பதற்கு முன்பாகப் புனுவலின் படங்களையும் டாலி மற்றும் லோர்க்காவை பற்றியும் அறிந்திருக்க வேண்டியது அவசியம். அப்போது தான் படத்தின் ஊடாக எதையெல்லாம் நினைவுபடுத்துகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இல்லாவிட்டால் மொழி தெரியாத படத்தைப் பார்ப்பது போலாகிவிடும். நிஜவாழ்வில் நடந்தவை. புனுவலின திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள், டாலியின் ஒவியங்கள். லோர்க்காவின் கவிதை வரிகள் என யாவும் ஒன்றிணைந்து  உருவாக்கபட்டிருப்பதால் இவற்றை தெரிந்து வைத்துக்  கொள்ள வேண்டியது அவசியம்

ஒருவேளை நீங்கள் இவர்களைப் பற்றி அறிந்திருந்தால் இப்படம் ஒரு முழு விருந்து. நான் மிகவும் ரசித்துப் பார்த்தேன். ஜோர்ஜ் லூயி போர்ஹேயின் கதைகளைப் படிக்கும் போது கிடைக்கும் பரவசத்தை இதில் அடைந்தேன். ஒருவேளை போர்ஹே திரைப்படம் ஒன்றை இயக்கியிருந்தால் இப்படித்தான் இருந்திருக்கும்.

சர்ரியலிசத் திரைப்படம் என்றே இதை வகைப்படுத்துகிறார்கள். கனவுத்தன்மையை ஒரு திரைப்படத்தில் எப்படிக் கையாள முடியும் என்பதற்கு இப்படம் சிறந்த உதாரணம்

வயதான புனுவலுக்கு ஒரு புதிய படம் இயக்குவதற்கான வாய்ப்பு வருகிறது. அப்படத்தின் கதை சாலமனின் புதையலில் ஒன்றான மேஜை ஒன்றை தேடுவதைப் பற்றியது. உண்மையில் அந்த மேஜை ஒரு கண்ணாடி. வெறும் கண்ணாடியில்லை. முக்காலத்தையும் காட்டும் மாயக்கண்ணாடி. அது ஒட்டுமொத்த உலகின் முக்காலத்தையும்  காட்டிவிடும். அந்த மாயக் கண்ணாடி எப்படிக் கைமாறிப் போயிருக்ககூடும் என்ற வரலாற்றுத் தகவல்களை ஒருவர் படத்தின் ஆரம்பத்தில் விளக்குகிறார் .

புனுவல் செவித்திறன் பாதிக்கபட்டவர். ஆகவே அவர் காதுகேட்பதற்கு மெஷின் வைத்துக் கொண்டிருக்கிறார். சில நேரங்களில் அதைப் பொருத்திக் கொள்ள மறுத்து எதிரேயுள்ளவர் பேசுவதை முகபாவத்திலிருந்தே கிரகித்துக் கொள்கிறார்.

புனுவலின் திரைப்படத்தைப் போலவே இப்படமும் கிறிஸ்துவச் சமயக்கட்டுபாடுகள், கன்னியாஸ்திரிகள், மதநெறிகள், காமம், ரகசிய வேட்கை, துயரமான பால்யநினைவுகள், விசித்திரமான சம்பவங்கள், கனவுகள் இவற்றைப் பற்றியே பேசுகிறது.

படம் பார்க்கும் போது நாமும் முடிவற்ற கனவு ஒன்றில் நுழைந்துவிட்டதைப் போன்றேயிருக்கிறது. ஒரு திரைப்படத்தில் பார்வையாளனை இந்த அளவு உள்ளிழுத்து தன்னோடு பயணிக்கச் செய்ய வைத்திருப்பது இயக்குனரின் அசாத்திய திறமை.

புனுவல், டாலி. லோர்க்கா மூவரும் முக்கிய ஆளுமைகள். மூவரும் விசித்திரமான மனநிலை கொண்டவர்கள். மூவருக்கும் நிறைய ஒப்புமைகள் இருக்கின்றன. யதார்த்த உலகின் போதமையை மூவரும் உணர்ந்தவர்கள். தீவிரமான கலைஞர்கள். காதலைக் கொண்டாடியவர்கள். கனவைத் தனித்த வாழ்நிலை எனக் கருதுபவர்கள்.

லோர்க்கா சொற்களைக் கொண்டு கனவை உருவாக்குகிறார். அது கவிதையாகிறது. டாலி வண்ணங்களை. புனுவல் கேமிராவைக் கொண்டு தத்தமது கனவுகளை உருவாக்குகிறார்கள். இந்த மூவரும் ஒன்று சேர்ந்தால் எப்படியிருக்கும். யோசித்துப் பாருங்கள். புதிர்பாதை ஒன்றினுள் நாம் சுற்றிக் கொண்டேயிருப்பதைப் போன்ற அனுபவமாகயிருக்கிறது.

வயதான புனுவல் தான் திரைப்படமாக்க வேண்டிய கதையைக் கற்பனை செய்கிறார். அவர் கண்ணை மூடினால் காட்சி துவங்கிவிடுகிறது. தன் மண்டைக்குள் எப்போதும் சினிமா ஒடிக் கொண்டேயிருக்கிறது. கண்ணை மூடினால் பார்க்கத் துவங்கிவிடலாம் என இன்னொரு காட்சியில் புனுவலே சொல்கிறார்.

புனுவல் கடந்த காலத்தினுள் பிரவேசிக்கிறார். 1930களில் நண்பர்கள் மூவரும் சாலமனின் மேஜையைத் தேடி Toledoவிற்குப் பயணம் செய்கிறார்கள். அது ஒரு புராதன நகரம். அங்கே மூவரும் ஒரு உணவகத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது டாலி அந்நகரில் யாராவது வேசைகள் இருக்கிறார்களா என வெயிட்டரிடம் கேட்கிறார்.

ஒருவர் கூடக் கிடையாது என்கிறான் அந்த நபர்.

அவனிடம் நீ புனுவல் படங்களைப் பார்த்திருக்கிறாயா எனக்கேட்கிறார்கள். அவன் நான்கு படங்களைப் பார்த்துள்ளதாகச் சொல்லி அவரது படங்களில் எறும்பு வருவது தனக்குப் பிடிக்கும். தான் பூச்சிகளைப் பற்றி ஆய்வு செய்பவன் என்கிறான்.

அப்போது புனுவல் இரண்டு படங்களை மட்டுமே இயக்கியுள்ளார். அந்த வெயிட்டர் எதிர்காலத்தில் அவர் எடுக்கப்போகும் படங்களைப் பார்த்தவனாகயிருக்கிறான் என்பதே விசித்திரம்

.அப்போது ஒரு சிறுமி கடிதம் ஒன்றைக் கொண்டுவந்து புனுவலிடம் தருகிறாள்

அந்த முகவரி ஒரு புராதனப்பொருட்கள் விற்கும் கடை. அங்கே செல்லும் புனுவல் பாத்திமா என்ற அழகான இளம்பெண்ணைச் சந்திக்கிறார். அவள் முந்திய காட்சியில் பிரெஞ்சு பெண்ணாக விடுதி அறையில் வேலை செய்தவளாகயிருக்கிறாள். அவளே இப்போது வேறு ஒரு பெண்ணாகத் தோன்றுகிறாள். இருவரில் யார் நிஜம். அவளுடன் நெருக்கமாக அமர்ந்து அவள் காட்டும் திரைக்காட்சிகளை ரசிக்கிறார். துப்பறியும் கதை போலவே திரைக்கதை அமைக்கபட்டிருக்கிறது. ஆனால் எதைத் தேடுகிறார்கள் என்பது தான் புதிர். அது கடவுளை தேடும் செயலைப் போன்றுமிருக்கிறது.

திரைப்படம் எடுப்பது என்பது புதையலைத் தேடுவதைப் போன்ற வேலை எனப் புனுவல் குறிப்பிடுகிறார். இன்னொரு காட்சியில் ஒரு திரைப்பட விமர்சகர் புனுவலைச் சந்தித்து அவரது சினிமா பற்றி கண்டபடி திட்டுகிறார். அவரை கோபத்தில் அடிக்கப் போகிறார் புனுவல்.

டாலி படம் முழுவதும் கனவு நிலைப்பட்டவராகவே வருகிறார். ஒரு நிகழ்வை அவர் விவரிக்கிறார். அதில் ஒரு சிறுவன் கடல் அலையை ஒரு போர்வையை விலக்கி தனியே எடுப்பது போலத் தூக்கிவிடுகிறான். அலையின் அடியில் காயம்பட்டு ரத்தவெள்ளத்தில் மிதந்துகிடக்கிறான் லோர்க்கா. இது தான் லோர்க்காவின் எதிர்காலம். அக்காட்சி கனவு போலவே விவரிக்கபடுகிறது

லோர்க்கா தனது கவிதைகளைச் சொல்லும் விதமும் அதைப் புனுவல் எதிர்கொள்வதும் கவித்துவமாகச் சித்தரிக்கபட்டுள்ளது. குறிப்பாக லோர்க்காவின் கவிதையை ஒரு பெண் ஆடிப்பாடும் காட்சி அபாரம்.

சாலமனின் மேஜை உண்மையில் உள்ளதா. அதைத்தான் தேடுகிறார்களா. இல்லை அது வெறும் கற்பனையா. இந்தக் குழப்பம் கதாபாத்திரங்களுக்கும் ஏற்படுகிறது. பார்வையாளனும் இதே நிலையை அடைகிறான்.

ஒருநாளிரவு மூவரும் ஆளுக்கு ஒரு வீதிவழியாகப் பிரிந்து தேடுவதாகப் பிரிகிறார்கள். லோர்க்கா தான் முதலில் இருண்ட வீதி ஒன்றில் நடக்க ஆரம்பிக்கிறார். மூவரில் அவரே முதலில் மரணமடைந்தவர். டாலியும் புனுவலும் நிற்கிறார்கள். அவரவர் விதியை அவரே அனுபவிக்க வேண்டும் நீ உன் வீதி வழியாக நடந்து போ என அவரை விட்டுப் பிரிகிறார் புனுவல்.

இந்த மூன்று கலைஞர்களும் தனிவழியே நடந்தவர்கள் என்பதை நினைக்கும் போது இக்காட்சி மிகவும் அர்த்தப்பூர்வமாகவுள்ளது

இருட்டில் நடக்கும் புனுவல் தன்னிடமிருந்த பணத்தை எரித்து வெளிச்சம் உண்டாக்கி நடக்கிறார். பின்பு தனது பாஸ்போர்ட்டை எரித்து அந்த நெருப்பு வெளிச்சத்தில் நடக்கிறார். நமது அடையாளங்களை இழந்த பிறகே நம்மால் விசித்திரஉலகிற்குள் பிரவேசிக்க முடியும் என்பதற்கு இக்காட்சி ஒரு உதாரணம்.

புணர்ச்சி நிலையிலே ஒரு பெண் இறந்துகிடக்கிறாள். புனிதரின் சிலை ஒன்றை கண்டதும் டாலி பதற்றம் கொள்கிறார். துறவி ஒருவன் விசித்திர கண்ணாடியை பரிசாக தருகிறான். தனக்குத் தெரியாத ஹீப்ரு மொழியில் தனது கவிதைகளைச் சொல்கிறான் லோர்க்கா. இப்படி எத்தனையோ குறியீடுகள்.

முடிவில் அவர்கள் அந்த மாயக்கண்ணாடியைக் கண்டுபிடிக்கிறார்கள். அக்கண்ணாடி போர்ஹேயின் The Aleph கதையில் வரும் Aleph போலவே எனக்குத் தோன்றியது. அந்தக் கண்ணாடிப்பரப்பு கடல் அலை போல அசைகிறது. அக்கண்ணாடியில் கடந்தகாலம். நிகழ்காலம் எதிர்காலம் மூன்றும் தெரிகிறது. தான் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்படுவதைத் தானே பார்க்கிறான் லோர்க்கா. மூவரின் எதிர்காலம் மட்டுமில்லை. உலகின் எதிர்காலத்தையும் அவர்கள் பார்க்கிறார்கள்.

உலக யுத்தம், பேரழிவு. அவலம் என மானுடத்துயரத்தின் முடிவில்லாத காட்சிகள் தோன்றி மறைகின்றன. சலனப்படங்களின் காலத்தை அது நினைவூட்டுகிறது. உலகம் தலைகீழாக மாறுகிறது. காட்சிகள் தலைகீழாகவே திரையில் ஒடுகின்றன. அதில் உலகின் மீட்பராகத் தோன்றுவது பிரிட்ஜ் லாங்கின் Metropolis படத்தில் வரும் எதிர்கால நகரிலுள்ள பெண் உருவம். அது ரோபோ வடிவம் கொண்டது. அந்த உருவத்திலிருந்து வெளிப்படும் ஒளி அவர்களை மயங்க செய்கிறது. அது ஒரு திரையரங்கில் வெளிப்படும் கார்பன் ஒளியை போன்றிருக்கிறது. ஆனால் அதன் வண்ணம் வேறு. பிரிட்ஜ் லாங்கின் சினிமா தந்த உந்துதலே புனுவலை இயக்குனராக்கியது. அதன் மறுவடிவமே இக்காட்சி.

புனுவலின் திரைப்படங்களில் மெல்லிய பகடி இழையோடும். இப்படத்திலும் மெல்லிய நகைச்சுவை படம் முழுவதும் இடம்பெறுகிறது.

கனவும் நிஜமும் ஒன்று கலந்து உருவான புனுவலின் திரைப்படங்களைப் போலவே அவரைப்பற்றிய திரைப்படத்தையும் Carlos Saura எடுத்துள்ளார். இது மகத்தான சாதனை. சினிமா என்ற கலைவடிவத்தினைக் கொண்டு எதையெல்லாம் சாதிக்க முடியும் என்பதற்கான அடையாளம்.

••

Archives
Calendar
December 2017
M T W T F S S
« Nov    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: