மணற்புயலுக்குள் இரண்டு பிக்குகள்

பௌத்தம் தொடர்பான திரைப்படங்களைத் தேடிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  அதில் NFDC தயாரித்த Trishagni என்ற ஹிந்திப்படம் கிடைத்தது. நேற்றிரவு அதைப் பார்த்தேன்.

1988ல் வெளியான இப்படத்தை நடிகரும் எழுத்தாளருமான Nabendu Ghosh இப்படத்தை இயக்கியுள்ளார். தேசிய விருது பெற்றுள்ளது இப்படம்

வங்காள எழுத்தாளர் Sharadindu Bandyopadhyayவின் சிறுகதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கபட்டுள்ளது. Trishagni என்பதற்கு மணற்புயல் என்று அர்த்தம்.

கிமு 200ல் பாலைவன பிரதேசத்திலுள்ள சாரிபுத் என்ற நகரில் இக்கதை நடக்கிறது. அங்கு புகழ்பெற்ற பௌத்த மடாலயம் ஒன்றுள்ளது. வணிகர்களின் பொருளுதவியால் அந்த மடாலயம் நடைபெறுகிறது. ஒருமுறை மிகப்பெரிய மணற்புயல் நகரை மூழ்கடித்து விடுகிறது.

புயலில் சிக்கி இரண்டு புத்த பிக்குகள் மட்டுமே உயிர்பிழைக்கிறார்கள். ஒருவர் நானா படேகர், மற்றவர் அலோக் நாத். அழிந்து போன ஊரினுள் யாரோ அழும்குரல் கேட்டு தேடிச் செல்லும் போது ஒரு சிறுவனைக் கண்டுபிடிக்கிறார் நானா படேகர்.

இது போல இன்னொரு இடத்தில் ஒரு சிறுமியையும் கண்டுபிடிக்கிறார் அலோக் நாத்,. மணற்புயலில் பெற்றோர்களை இழந்த அவர்களைத் தாங்களே வளர்ப்பது என முடிவு செய்து மடாலயத்திற்குக் கொண்டு செல்கிறார்கள்

பெண்ணிற்கு இதி என்றும் பையனுக்கு நிர்வாண் எனவும் பெயரிடுகிறார்கள்,

காலம் ஒடுகிறது. அவர்கள் வளர்ந்து இளைஞர்களாகிறார்கள். நிர்வாணிற்குப் பௌத்த சமய போதனை அளித்துத் தனது சீடனைப் போல வளர்த்துவருகிறார் நானா படேகர். இதியைத் தனது மகள் போல அன்புடன் வளர்த்து வருகிறார் அலோக் நாத்.

இருவரும் நட்புடன் பழகுகிறார்கள். ஒன்றாகப் பாலைவனத்தில் சுற்றியலைகிறார்கள். அவர்களின் நட்பு காதலாக மாறுகிறது. துறவியாக வேண்டியவன் காதலிக்கக் கூடாது என நிர்வாணைத் தடுக்கிறார் நானா படேகர். இதி அதை ஏற்க மறுக்கிறாள்

பௌத்த மடாலயத்தில் வளர்க்கபட்டவர்கள் என்பதால் எதற்காகத் துறவு வாழ்க்கையை வாழ வேண்டும், புத்தரே திருமணம் செய்து கொண்டவர் தானே என வாதிடுகிறாள்.

இதன் காரணமாக நிர்வாண் ரகசியமாக இதியைக் காதலிக்கிறான். இது நானா படேகருக்கு மேலும் ஆத்திரத்தை உருவாக்குகிறது. அவர்கள் காதலை தடுத்து பிரிக்க முயற்சிக்கிறார்.

இந்நிலையில் நானா படேகரின் மனம் காமத்தில் சஞ்சலம் கொள்கிறது. கனவில் தானே இதியை அடைவது போல நினைத்துக் கொள்கிறார், அதிர்ச்சி அடைந்து தனக்குத் தானே தண்டனை அளித்துக் கொள்கிறார்.

ஒருநாள் இதியும் நிர்வாணும் பாலைவனத்தில் ஒன்றாக இருக்கும் போது பிடித்து இழுத்துக் கொண்டுவரும் நானா படேகர் நிர்வாண் துறவறத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என வற்புறுத்துகிறார். அதன்படி நிர்வாண் துறவியாகிறான். இதியால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அழுது கரைகிறாள். நிர்வாணை சந்தித்து  வெளி வேஷம் போடாதே எனத் திட்டுகிறாள்

முடிவில் அவர்கள் அந்தப் பௌத்த மடாலயத்திலிருந்து ஒடிவிட முயற்சிக்கிறார்கள். அப்போது மணற்புயல் துவங்குகிறது. அதில் சிக்கிக் கொள்கிறார்கள்.

புத்தரின் அறவுரைகள். பௌத்த சமய சிந்தனைகள் படத்தில் நேரடியாக இடம் பெறுகின்றன. புத்தரின் Fire Sermon பற்றி விரிவாக எடுத்துச் சொல்கிறார் பிக்கு.

பௌத்த பிக்குகளாக நானா படேகரும் அலோக் நாத்தும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதிலும் வயதில் மூத்தபிக்குவாக வரும் அலோக் நாத் பௌத்த துறவி எப்படியிருப்பார் என்பதற்கான உதாரணமாகவே நடித்துள்ளார்.

பிக்குவாக இருந்த போது அவர் இதியை தனது மகளைப் போலவே நினைக்கிறார். அன்பு செலுத்துகிறார். அவள் காதலை அடையட்டும் என நினைக்கிறார். ஆனால் நானா படேகரின் வற்புறுத்தல் அவரை நிர்வாணுக்குத் தீட்சை அளிக்க வைக்கிறது. மனம் நோகச் செய்கிறது

மடாலயங்கள் வீழ்ச்சி அடைந்ததற்கான காரணங்களில் முக்கியமானது தவறான பிக்குகளின் வழிகாட்டுதல்களேயாகும்.

நிதானமாக விரியும் திரைக்கதை. தத்துவார்த்தமான உரையாடல்கள். நாடகம் போலவே கதாபாத்திரங்கள் பேசிக் கொள்கிறார்கள்.

ஒரு காட்சியில் பௌத்த அறவுரை நிகழ்த்தும் போது சாமானிய மக்கள் ஒன்று திரண்டுவந்து உரைகேட்கிறார்கள். பௌத்தம் இந்தியாவில் எப்படி வேரூன்றியிருந்தது என்பதற்கான சாட்சியமது

நானா படேகருக்கு. பிக்குத் தோற்றம் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது. மனசஞ்சலம் அடையும் காட்சிகளில் அவர் காட்டும் உணர்ச்சிவெளிப்பாடுகள் அற்புதம். கோபமும் இயலாமையும் தான் நினைத்ததைச் சாதித்து விட்ட பெருமிதமும் இதியிடம் அவர் நடந்து கொள்ளும் முறையும் இந்தியாவின் ஒப்பற்ற நடிகர் என்பதை நிரூபணம் செய்கின்றன.

நிர்வாணாக நடித்திருப்பவர் மகாபாரதம் தொலைக்காட்சி தொடரில் கிருஷ்ணனான நடித்த நிதிஷ் பரத்வாஜ். இதியாக நடித்திருப்பவர் பல்லவி ஜோஷி. பெருமளவு காட்சிகளை அரங்கிற்குள்ளாகவே படமாக்கியிருக்கிறார்கள். அரங்க அமைப்பும் உடைகளும் கலைநேர்த்தியுடன் உருவாக்கபட்டுள்ளன.

ஆசையே துன்பதற்குக் காரணம் என்ற பௌத்த உபதேசமே படத்தின் மையக்கரு. மணற்புயல் என்பது காலத்தின் குறியீடு. மடாலயத்தில் வளர்க்கப்பட்ட இருவர் ஏன் காதலிக்கக் கூடாது என அந்தப் பெண் வாதிடும் போது அவள் புத்தர் இல்லறத்தை அனுபவித்துவிட்டு தானே துறவியானார் எனக்குறிப்பிடுகிறாள். ஒரு காட்சியில் பௌத்த உபதேசம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது அதை ஒளிந்திருந்து கேட்கிறாள் இதி. அதை நானா படேகர் கண்டிக்கிறார். பௌத்த பிக்குகளுக்குள் பெண் ஒரு போதும் ஞானத்தை அடைந்துவிட முடியாது என்ற எண்ணம் வேரூன்றியிருந்திருக்கிறது. அதன் அடையாளமே நானா படேகரின் செயல்.

பாலைவனத்தில் நிலவை காணும் காட்சியும் மணற்புயலின் வருகையும் நேர்த்தியாகப் படமாக்கபட்டுள்ளன. சலீல் சௌத்திரியின் இசையில் பாடலும் பின்ணணி இசையும் சிறப்பாக உருவாக்கபட்டுள்ளன.

புத்தன் பிறந்த இந்தியாவில் பௌத்தம் தொடர்பான நிகழ்வுகளை. சிந்தனைகளை, துறவு வாழ்க்கையை முதன்மைப்படுத்திக் குறைவான திரைப்படங்களே வெளியாகியுள்ளன. ஹெர்சாக் திபேத்திய பௌத்த சடங்கான காலச்சக்கரம் வரைவதை Wheel of Time என்ற ஆவணப்படமாக உருவாக்கியிருக்கிறார். இது மிகச்சிறந்த ஆவணப்படங்களில் ஒன்றாகும்.

உலக அளவில் பௌத்தம் சார்ந்து எடுக்கப்பட்ட திரைப்படங்களான Samsara, Spring, Summer, Fall, Winter, Travelers and Magicians, The Cup , Kundun, Siddhartha, Why Has Bodhi-Dharma Left for the East? போல இந்தியாவில் ஒரு படம் இன்றும் உருவாக்கபடவில்லை.

இந்திய சினிமாவில் புதிய மாற்றங்களை உருவாக்கியதில் NFDC முக்கியப் பங்கு வகித்துள்ளது. NFDC தயாரித்த பெரும்பான்மை படங்கள் திரைப்பட விழாக்களோடு முடங்கிப்போய்விடுகின்றன. சமீபமாகவே NFDC இணைதயாரிப்புகளின் வழியே திரைஅரங்குகளை நோக்கி நகர்ந்துள்ளது . NFDC தயாரிப்பில் வெளியான பல முக்கியமான படங்கள் இன்று தரமான டிவிடியாக மலிவு விலையில் கிடைக்கின்றன. அப்படங்களின் சிறப்புப் பற்றி யாருக்கும் தெரியவில்லை என்பது தான் துரதிருஷ்டம்.

••

Archives
Calendar
November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Subscribe

Enter your email address: