எழுதித் தீராப் பக்கங்கள்

காலம் இலக்கிய இதழின் ஆசிரியர் கனடா செல்வம். தமிழ் இலக்கிய உலகோடு நெருக்கமான தொடர்பு கொண்டவர். தமிழ் எழுத்தாளர்கள் பலருக்கும் நல்ல நண்பர். கனடாவிற்கு நான் சென்றிருந்த போது செல்வம் வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தேன். சிறப்பாக உபசரிப்புச் செய்தார்.

இலக்கியப் புத்தகங்களை அறிமுகம் செய்வது,. கூட்டங்கள் நடத்துவது, சிற்றிதழ் கொண்டு வருவது , புத்தகக் கண்காட்சி நடத்துவது, ஈழ அரசியல் சார்ந்த கூட்டங்களை ஒருங்கிணைப்புச் செய்வது, நவீன நாடகங்கள் நடத்த உதவி செய்வது,  கூத்து, நாட்டுப்புற இசை, குறும்படத் திரையீடுகள். மாற்றுசினிமா முயற்சிகள் எனப் பல்வேறு கலை இலக்கியச் செயல்பாடுகளில் தீவிரமாக இயங்கிவருபவர் செல்வம்.

இவ்வளவு அலைச்சலுக்கும் நடுவில் தேடிப்படித்து எழுத்தாளர்களைத் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டிவிடுவது அவரது தனித்துவம்.

செல்வம் மிகுந்த நகைச்சுவையுணர்வு கொண்டவர். அவருடன் நயாகரா அருவியைக் காண்பதற்காகக் காரில் சென்றபோது வழி முழுவதும் அவர் சொன்ன வேடிக்கை நிகழ்வுகளை இப்போது நினைத்தாலும் சிரிப்பு பீறிடுகிறது

இலங்கையிலிருந்து  பாரீஸிற்குப் புலம் பெயர்ந்த அனுபவங்களை செல்வம் அருளானந்தம் எழுதித்தீராப் பக்கங்கள் என்ற பெயரில் கட்டுரைகளாக எழுதியிருக்கிறார். தொடராக வெளிவந்த இக்கட்டுரைகளைத் தமிழினி நூலாக வெளியிட்டுள்ளது. சமீபத்தில் படித்த மிக முக்கியமான புத்தகம் இதுவென்றே சொல்லுவேன்.

சொந்தவாழ்வின் துயரங்களைப் பகடி செய்து சிரிப்பதும் எழுதுவதும் எளிதானதில்லை. அந்தப் பக்குவமும் மனநிலையும் செல்வத்திற்குக் கைகூடியிருக்கிறது. தான் பட்ட கஷ்டங்களை ஒருவர் இவ்வ்ளவு நகைச்சுவையாகச் சொல்ல முடியுமா என வியப்பாகவே இருக்கிறது. படிக்கும் போது வாய்விட்டு சிரிக்கும் நாம் கட்டுரையின் முடிவில் கனத்த மனத்துயரை அடைகிறோம்.

புலம்பெயர்ந்து சென்ற ஈழத்தமிழர்கள் எப்படியெல்லாம் துன்பங்களை அனுபவித்தார்கள் என்பதற்கு செல்வம் விவரித்துக்காட்டும் பாரீஸ் நகர வாழ்க்கை அனுபவங்கள் ஒரு சான்று.

அகதியாக ஒரு தேசத்தில் தஞ்சம் புகுவதற்கு அவர் எடுத்துக் கொள்ளும் முயற்சிகள். பாரீஸ் நகருக்குள் கள்ளத்தனமாக நுழைந்து மொழி தெரியாமல் படும் அவஸ்தைகள். காவல்நிலையத்தைத் தேடி அலைந்த போது ஏற்பட்ட வேடிக்கையான அனுபவம். பழைய நண்பர்களை எதிர்பாராமல் திரும்பச் சந்திப்பது. சேர்ந்து குடிப்பது. பாரீஸில் வேசைகளைத் தேடி அலையும் போது ஏற்பட்ட நிகழ்ச்சி, எம்.ஜி. ஆர், சிவாஜி படங்கள் பற்றிய நினைவுகள் எனச் செல்வம் ஒளிவுமறைவின்றித் தன் வாழ்க்கையைத் திறந்து காட்டியிருக்கிறார்

தான் சந்தித்த மனிதர்களை கோட்டுச்சித்திரங்களை போல எழுத்தில் காட்சிரூபம் கொள்ளச் செய்வது அவரது எழுத்தின் சிறப்பு.

இது செல்வத்தின் வாழ்க்கையாக விவரிக்கபட்டாலும் தனி ஒருவரின் அனுபவமில்லை. புலம் பெயர்ந்த வாழ்க்கையின் பொது அடையாளமே இச்சம்பவங்கள். நாடும் நிகழ்த்தவிதமும் மாறுபாடு கொண்டிருக்கலாம். அடைந்த அவமானமும் வேதனையும் ஒன்றாகவே இருக்ககூடும்

செல்வத்தின் எழுத்தில் காணப்படும் எளிமையும்,நேரடியாக அருகில் அமர்ந்து பேசுவது போன்ற தொனியும், வெடித்துச் சிரிக்க வைக்கும் வரிகளும் தனித்துவமானவை. நண்பர்கள் கொடுத்த நெருக்கடி காரணமாக இதை எழுதியதாகச் செல்வம் முன்னுரையில் சொல்கிறார். எழுத்து கைவரப்பட்ட அவர் தனது அனுபவங்களைக் கொண்டு விரிவான நாவல் ஒன்றை எழுத வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்

நெருக்கடியும் கஷ்டமும் கொண்ட நிலையிலும் மனித மனம் எப்படி இன்பத்தைத் தேடுகிறது. அழகை ரசிக்கிறது, என்பதற்குச் செல்வத்தின் அனுபவங்களே சான்றுகள்.

பாரீஸ் நகர அழகை வியந்து எழுதுவதும், தமிழ் சினிமா பற்றிய நினைவுகளும், தனது இயலாமையைப்  புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுவதும், பால்யகால நினைவுகளில் சஞ்சாரம் செய்வதும், தாய்மண்ணையும் மனிதர்களையும் நேசிப்பதும், ஒடியோடி உதவிகள் செய்வதும் என வாழ்வின் மீதான உறுதியான பற்றுதல் கொண்ட ஒருவரின் அடையாளமாகவே இப்புத்தகம் உள்ளது.  அவ்வகையில் எழுதித் தீராப் பக்கங்கள் கொண்டாடப்பட வேண்டிய முக்கியப் படைப்பாகும்.

••

Archives
Calendar
December 2017
M T W T F S S
« Nov    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: