தி இந்துவில்

இன்றைய (17.09.2016 ) தி இந்து நாளிதழில் என் குடும்பம் பற்றிய கட்டுரை ஒன்று இடம்பெற்றுள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள மல்லாங்கிணர் எனது சொந்த ஊர். அப்பா சண்முகம் கால்நடை மருத்துவராகப் பணியாற்றினார். அம்மா மங்கையற்கரசி நிறையப் படிக்ககூடியவர். எனது நற்குணங்கள் யாவும் அவர் உருவாக்கியதே.

நாங்கள் ஆறு பிள்ளைகள். அண்ணன் டாக்டர் வெங்கடாசலம். அடுத்தவன் நான். தங்கைகள் கமலா, கோதை, உஷா. கடைசித்தம்பி பாலகிருஷ்ணன். அப்பா அரசாங்கவேலையில் இருந்த போதும் நாங்கள் விவசாயக் குடும்பமாகவே வாழ்ந்து வந்தோம். சூலக்கரையில் வயலும் கரிசல்காடும் எங்களுக்கிருந்தன.

நான் எழுத வேண்டும், இலக்கியவாதியாக வேண்டும் எனப் பெரிதும் ஊக்கபடுத்தியவர்கள் நா.சுப்ரமணியம், பரமசிவம் ஆகிய இரண்டு சித்தப்பாக்களே. கேட்கும் போதெல்லாம் புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தும் அரவணைத்துக் கொண்டவர் அண்ணன் டாக்டர் வெங்கடாசலம்.

எந்த வேலைக்கும் போகக்கூடாது. முழுநேர எழுத்தாளராக மட்டுமே வாழ வேண்டும் எனக் கல்லூரியில் நுழைந்த முதல் நாளில் முடிவு செய்து கொண்டேன்.

எழுத்தை நம்பி வாழ்வது கஷ்டம் எனப் பலரும் அறிவுரை சொன்னார்கள். கண்டித்தார்கள். ஆனால் எழுதி மட்டுமே வாழுவேன் என உறுதியோடு இருந்தேன். இதற்காகப் பல்வேறு அவமானங்களையும் நெருக்கடிகளையும் சந்தித்தேன்.ஆனால் எழுத்து மட்டுமே என்னை வாழ வைத்தது. எனக்கான அடையாளங்களை உருவாக்கி தந்தது. இதற்குக் காரணமாக இருந்த பத்திரிக்கை ஆசிரியர்களுக்கும் முகமறியாத வாசகர்களுக்கும் என்றும் நன்றியுடையவனாகவே இருப்பேன்.

நான் காதல் திருமணம் செய்து கொண்டவன். என் மனைவியின் பெயர் சந்திரபிரபா. என் தங்கையோடு படித்தவள். அவளது அண்ணன் கார்த்திகேயன் எனது நண்பன். புத்தகம் படிப்பதில் என் மனைவிக்கு இருந்த ஆர்வமே எங்கள் காதலுக்கான துவக்கம்.

சிவகாசியில் என் மனைவி டிஆர்க் படித்துக் கொண்டிருந்த நாட்களில் காதல் துவங்கியது. நிறையக் கடிதங்கள் எழுதிக் கொண்டோம். கனவு கண்டோம். தேசாந்திரியாகச் சுற்றியலைந்து கொண்டிருந்த எனக்குக் காதலே வாழ்வின் மீதான பற்றை, அன்பின் மகத்துவத்தைப் புரியச் செய்தது.

அவள் வேலைக்குப் போய்ச் சம்பாதித்துப் பணம் அனுப்பி எனது தேவைகளுக்கானதை வாங்கிக் கொள்ளச் செய்தாள். அப்படித்தான் சென்னையில் வாழ்ந்தேன். எப்படியும் எழுதி ஜெயித்துவிடுவேன் என உற்சாகப்படுத்தினாள். அந்த நம்பிக்கையே என்னை இயக்கியது.

அறையில்லாமல் சென்னையில் சுற்றியலைந்த நாட்களில் எனது ஒரே கனவு எனக்கென ஒரு வீடு வேண்டும் என்பதே.

எதிர்காலம் எப்படியிருக்கும் எனத்தெரியாத குழப்பம். எழுதி மட்டுமே வாழ வேண்டும் என்ற பிடிவாதம். இரண்டும் ஒன்று சேர சென்னை நகரில் அடையாளமற்ற நிழலை போலத் திரிந்து கொண்டிருந்தேன். எத்தனையோ நண்பர்கள், முன்அறியாத மனிதர்கள் உண்ணவும் உறங்கவும் தங்கவும் உதவி செய்தார்கள்.

சென்னை ஒரு அற்புதமான நகரம். என்னை எழுத்தாளனாக உருவாக்கியதும் வாழவைத்ததும் இந்த நகரமே. எனக்கு மட்டுமில்லை நம்பிக்கையுள்ள எவரையும் இந்த நகரம் கைவிடுவதில்லை. அவரவருக்கான இடத்தை  உருவாக்கித் தரவே செய்கிறது. அதைக் காப்பாற்றிக் கொள்வது நம்கையில் தானிருக்கிறது.

வேலைக்கே போகக் கூடாது என நினைக்கிற ஒருவனை நம்பி ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள முன்வந்தது எனது அதிர்ஷடமே. அதுவும் எழுத்தாளனாக எனக்கென உருவாக்கிய சிறுவட்டத்திற்குள். கொந்தளிக்கும் உணர்ச்சிநிலைகளுக்குள் வாழுகிற ஒருவனைப் புரிந்து கொண்டு அரவணைத்து அன்பு செலுத்தி இலக்கியத்திலும் வாழ்விலும் நிகரற்ற துணையாக என் மனைவி இருப்பது எனது நல்லூழ்.

வீட்டில் சந்தோஷமும் அன்பும் நிரம்பியிருந்தால் போதும் ஒரு மனிதனால் இந்த உலகை எளிதாக எதிர்கொள்ளவும் வெல்லவும் முடியும். விருதுநகரில் எங்கள் திருமணம் நடைபெற்றது. நிறைய எழுத்தாளர்கள் அதில் கலந்து கொண்டார்கள். சில ஆண்டுகள் விருதுநகரில் வசித்தோம். கடந்த பதினைந்து ஆண்டுகளாகச் சென்னையில் வசிக்கிறோம்.

எழுத்தாளனின் மனைவியாக இருப்பது வரமும் சாபமும் ஒன்று கலந்தது. இன்று நான் அறியப்பட்ட எழுத்தாளன். நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறேன். ஆனால் ஆரம்பக் காலங்களில் நிறையக் கஷ்டங்களும் நெருக்கடியும் வறுமையும் இருந்தன. அதை நான் ஏற்றுக் கொண்டதை விடவும் அப்படிதானிருக்கும் வாழ்க்கை எனப் புரிந்து கொண்டு எனக்காக எவ்வளவோ விட்டுக் கொடுத்து மனஉறுதியோடு தைரியத்துடன் வாழ்க்கையை எதிர்கொண்டவள் என் மனைவி.

என்னைப் பார்க்க வேண்டி வீடு தேடி வரும் வாசகர்கள். பத்திரிக்கை. தொலைக்காட்சி நண்பர்கள். வெளிநாட்டிலிருந்து வருபவர்கள். எனப் பலருக்கு சிற்றுண்டியும் உணவும் கொடுத்து உபசரித்து, தேவைப்படும் உதவிகள் செய்து, நட்புறவோடு நடந்து கொள்வது அவளது இயல்பு.

எழுத்து மட்டுமே எனது உலகம் என மூழ்கிக்கிடப்பவன் நான். சினிமா, பத்திரிக்கை, புத்தகங்கள். உரைநிகழ்த்துதல், நாடகம், இணையம், எனப் பலதளங்களில் பணியாற்றுகிறவன்.

இந்தப் பணிகள் தொடர்பான சந்திப்புகள். நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்புச் செய்வது. பதிப்பகங்களுடன் தொடர்பு கொள்வது. புரூப் பார்ப்பது. வங்கி கணக்குவழக்கு, ஆடிட்டர். சினிமா ஒப்பந்தங்கள். படப்பிடிப்பு விபரங்கள். பயணத்திட்டங்கள், இலக்கியச்சந்திப்புகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான நினைவூட்டல் என அத்தனையும் செய்வது எனது மனைவி. அதுவே இப்போது அவளது முழுநேரவேலையாகிவிட்டது. அவள் படித்த கட்டிடக்கலை சார்ந்த துறையில் அவளால் இப்போது ஈடுபட இயலவில்லை.

எங்களுக்கு இரண்டு பையன்கள். மூத்தவன் ஹரி பிரசாத். அண்ணா பல்கலைகழகத்தின் மீடியா சயின்ஸ் பிரிவில் நான்காம் ஆண்டுப் படித்துவருகிறான். அவனது ஆர்வம் முழுவதும் சினிமா எடிட்டிங் மட்டுமே. இதற்காக என்எப்டிசி நடத்திய சான்றிதழ் பயிற்சியை முடித்திருக்கிறான். குறும்படங்களுக்கு எடிட்டிங் செய்துவருகிறான்.

சின்னவன் ஆகாஷ். ஒன்பதாம் வகுப்புப் படிக்கிறான். எழுத்தில் ஆர்வம் கொண்டவன். நிறையக் காமிக்ஸ் படிக்ககூடியவன். இசையில் ஆர்வம் அதிகம். கீ போர்ட் கற்றுக் கொள்கிறான். என்னோடு இணைந்து சிறுவர்களுக்காக ஏழு புத்தகங்கள் எழுதியிருக்கிறான்.

அன்றாடம் இரவு ஒன்பது மணிக்கு வீடே ஒன்றுகூடி ஏதாவது ஒரு அயல்நாட்டுத் திரைப்படத்தைப் பார்க்கிறோம். மாதம் ஒன்றோ இரண்டோ தமிழ் படங்களை அரங்கிற்குச் சென்று பார்த்து வருவோம். மற்றபடி நான் பார்த்து ரசிக்ககூடிய சகல உலகச் சினிமாக்களையும் குடும்பமே பார்க்கிறார்கள். எந்தத் தடையும் கட்டுபாடுமில்லை.

தமிழ் இந்தி பாடல்கள். கர்நாடக சங்கீதம். ஹிந்துஸ்தானி, மேற்கத்திய இசை என நிறையச் சேகரித்து வைத்திருக்கிறேன். அவற்றை நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேட்கிறோம். இதைத் தவிரச் செய்தி, கிரிக்கெட், பழைய பாடல்கள் பார்ப்பதற்கு மட்டுமே டிவியைப் பயன்படுத்துகிறோம். மற்ற நேரங்களில் டிவி அணைத்தேயிருக்கும்.

தினமும் மாலையில் கே.கே.நகரிலுள்ள சிவன் பூங்காவிற்கு மனைவியோடு நடைப்பயிற்சிக்குப் போது வழக்கம். காலையில் யோகா, சில நாட்கள் ஷட்டில் காக் விளையாடுவதுண்டு.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் முழுமையான விடுமுறை. பள்ளிபிள்ளைகளைப் போலவே நானும் ஒய்வு எடுத்துக் கொள்கிறேன். எழுத்துப் படிப்பு என ஒரு வேலையும் கிடையாது. பயணம். ஒய்வு. சினிமா. விளையாட்டு என ஜாலியாகச் செலவழிப்பது வழக்கம். இந்த ஒருமாத காலத்தில் எல்லா நண்பர்களையும் சந்தித்துவிடுவேன்.

இலக்கியம் உலகைப்புரிந்து கொள்ள வைப்பதுடன் உடன்வாழும் மனிதர்களின் முக்கியத்துவத்தையும் அன்பையும் புரிந்து கொள்ளச்செய்கிறது. ஒரு எழுத்தாளனாக எனது கிளைகள் வான் நோக்கி விரிந்திருக்கலாம். ஆனால் என்னைத் தாங்கும் நிலமாக, என் வேர்களாக இருப்பது வீடே.

••

நன்றி

புகைப்படம் சி.ஜே. ராஜ்குமார்

தி இந்து நாளிதழ்

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: