கிரீடம் இல்லாத அரசன்

1957ல் சார்லி சாப்ளின் எழுதி இயக்கிய A King in New York திரைப்படம் 1973 வரை அமெரிக்காவில் வெளியாகவில்லை. சாப்ளின் ஒரு கம்யூனிஸ்ட் எனக் குற்றம் சாட்டி அமெரிக்க அரசு அவர் மீது விசாரணை மேற்கொண்டது. இதனால் அவர் அமெரிக்காவை விட்டு வெளியேறினார்.

சாப்ளின் இயக்கிய The Great Dictator படத்தை விடவும் நேரடியாக அரசியல் பேசும்படமிது. இதுவே சாப்ளின் கதாநாயகனாக நடித்த கடைசிப்படம்.

அமெரிக்காவில் கம்யூனிஸ்டுகளாகக் கருதப்பட்டவர்கள், சந்தேகிக்கப்பட்டவர்கள் தேசத்திற்கு எதிராகச் செயல்படுகிறார்கள் எனக் குற்றம்சாட்டி விசாரிக்கபட்டார்கள். இந்த விசாரணை கமிஷனுக்குத் தலைவராக இருந்தவர் ஜோசஃப் மெக்கார்த்தி.

புகழ்பெற்ற இயக்குனர்கள், திரைக்கதை ஆசிரியர்கள், நடிகர்கள் என 200 பேருக்கு மேல் குற்றம் சாட்டப்பட்டார்கள். விசாரணை மிகவும் மோசமாக நடைபெற்றது ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுவது, தேசப்பற்றைக் காரணம்காட்டி எவரையும் தண்டிப்பது. மக்களிடையே பொய்யான பீதியை உண்டாக்குவது போன்ற செயல்களுக்கான ஒற்றை வார்த்தையாக மெக்கார்த்தியிசம் என்ற சொல் இப்போது பயன்படுத்தபடுகிறது.

சாப்ளின் இந்த விசாரணையின் காரணமாக அமெரிக்காவை விட்டு வெளியேறி ஸ்விட்சர்லாந்தில் வாழ்ந்தார். அவரது சொத்துகளை அமெரிக்கா முடக்கியது. பத்திரிக்கைகள், மற்றும் தொலைக்காட்சிகள் அவர் மீது சேற்றை வாறி இறைத்தன. தன் மீதான குற்றசாட்டிற்குப் பதில் அளிப்பதற்காகச் சாப்ளின் இப்படத்தை எடுத்தார்.

சாப்ளினுக்கே உரித்தான கோமாளித் தோற்றம் இதில் இல்லை. மாறாக அவர் எஸ்ட்ரோவியா என்ற நாட்டின் மன்னராக நடித்திருக்கிறார். அரசன் ஷடவ் எஸ்ட்ரோவியாவில் நடந்த திடீர் புரட்சியால் நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் புகுகிறார். அவரது பிரதம மந்திரி ஒட்டுமொத்த செல்வத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு ஒடிவிடுகிறான். வெறும் ஆளான மன்னர் ஷடவ் அணுசக்தி மூலம் புத்துலகம் ஒன்றினை உருவாக்கும் திட்டத்திற்குப் பணம் திரட்ட முயற்சிக்கிறார்.

நியூயார்க்கில் தற்செயலாக அறிமுகமாகும் விளம்பர அழகி அவரை ஒரு விருந்திற்கு அழைத்துச் செல்கிறாள். அங்கே ரகசிய கேமிரா மூலம் அவரது வேடிக்கையான செயல்கள் படமாக்கபட்டுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்படுகிறது. இதனால் அவர் திடீர் புகழ் அடைகிறார். விளம்பர நிறுவனங்கள் அவரை நோக்கி படையெடுக்க ஆரம்பிக்கின்றன. இதனிடையே ரூபார்ட் எனும் புத்திசாலிச் சிறுவனைப் பள்ளியின் கண்காட்சி ஒன்றில் சந்திக்கிறார். ரூபார்ட்டின் தந்தையும் தாயும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு உதவி செய்து காவலர்களிடம் மாட்டிக் கொண்டவர்கள். அவர்கள் மீதும் விசாரணை நடைபெறுகிறது.

யாரெல்லாம் கம்யூனிஸ்ட்டுகள் என அவர்கள் காட்டிக் கொடுக்க மறுக்கிறார்கள். தப்பி ஒடிவந்த ரூபார்ட்டிற்க்கு சாப்ளின் உதவி செய்கிறார். அதன் காரணமாக அவர் மீதும் கம்யூனிஸ்ட் எனக் குற்றம் சாட்டப்படுகிறது. அதிலிருந்து விடுபட அவர் மேற்கொள்ளும் எத்தனிப்பே படத்தின் இறுதிநிகழ்வு.

அமெரிக்க ஊடகங்கள், விளம்பர நிறுவனங்கள் எவ்வளவு தந்திரமாக, சுயநலத்துடன் நடந்து கொள்கின்றன என்பதைப் படத்தில் தோலுரித்துக் காட்டுகிறார் சாப்ளின்.

படத்தில் அரசியல் கருத்துகளை உரக்கப்பேசும் சிறுவனாக நடித்திருப்பது சாப்ளினின் மகன் மைக்கேல்.

அவனிடம் ஒரு காட்சியில் நீ என்ன படித்துக் கொண்டிருக்கிறாய் எனச் சாப்ளின் கேட்கிறார். அவர் கார்ல் மார்க்ஸின் தாஸ் கேபிடல் என்று பதில் சொல்கிறான்

நீ கம்யூனிஸ்ட்டா என அவர் பதிலுக்குக் கேட்கிறார். உடனே அச்சிறுவன் கம்யூனிஸ்ட்டுகள் மட்டும் தான் கார்ல் மார்க்ஸை படிக்க வேண்டுமா எனப் பதிலுக்குக் கேட்கிறான்.

புத்திசாலியான அந்தச் சிறுவன் கதாபாத்திரத்தை வைத்துக் கொண்டு அமெரிக்காவில் நடைபெற்ற மெக்கார்த்தி விசாரணைகளைக் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார் சாப்ளின். மன்னராட்சிக்கும் அமெரிக்க ஜனநாயகத்திற்கும் பெரிய வேறுபாடு ஒன்றில்லை எனச் சுட்டிக்காட்டுகிறார்

திரையரங்கிற்குப் படம் பார்க்க செல்லும் காட்சியில் சாப்ளின் அமெரிக்க மக்களின் சினிமா மோகத்தையும், திரையில் காட்டப்படும் பல்வேறு டிரைலர்களின் வழி ஹாலிவுட் சினிமாவின் போலித்தனத்தையும் கடும் கிண்டல் அடித்திருக்கிறார்..

மன்னர் ஷடவ்வை ஒரு பணக்காரப் பெண் விருந்திற்கு அழைக்கிறாள். அங்கே செல்லும் சாப்ளின் ரகசிய கேமிரா ஒன்று தன்னைப் படம்பிடித்துக் கொண்டிருப்பது தெரியாமல் ஹாம்லட் வசனங்களைக் கோபாவேசத்துடன் நடித்துக் காட்டிக் கொண்டிருப்பார். அவரை விருந்திற்கு அழைத்து வந்த விளம்பர அழகி திடீரெனப் பற்பசை விளம்பரத்திற்கான வசனங்களை இடைவெட்டி பேச ஆரம்பித்துவிடுவாள். விளம்பர நிறுவனங்கள் எவ்வளவு தந்திரமாக நடந்து கொள்ளுவார்கள் என்பதை இக்காட்சியின் மூலம் வெளிச்சமிட்டுக் காட்டுகிறார் சாப்ளின். விஸ்கி விளம்பரம் ஒன்றுக்காகச் சாப்ளின் நடிக்கும் காட்சியும் மறக்கமுடியாதது.

சாப்ளின் நான்கு முறை திருமணம் செய்தவர். இதில் இரண்டாவது மனைவியான லிடா கிரேயை விவாகரத்துச் செய்ய முற்பட்ட போது 6 லட்சம் டாலர்கள் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அது மிகப்பெரிய தொகை. இப்படத்தில் அரசியல் காரணங்களுக்காக மன்னர் ஷடவ்வை திருமணம் செய்து கொண்ட ராணி மணவிலக்கிற்கு நஷ்டஈடு எதுவும் வேண்டாம் எனக்கூறுவாள். அப்போது சாப்ளின் லிடா கிரேவிற்கு வழங்கிய நஷ்டஈட்டினை நினைவுபடுத்தும் விதமாகக் கேலியான வசனத்தைச் சொல்கிறார்.

திருமண நாள் அன்று விவாகரத்து பெற்றுக் கொள்ளலாம் என முடிவு செய்யும் காட்சியை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு சாப்ளின் தான் துவக்கி வைத்திருக்கிறார்.

அரிதாக ஒன்றிரண்டு காட்சிகளில் பழைய சாப்ளின் பாணியை நாம் காணுகிறோம். குறிப்பாக விளம்பர படங்களில் நடிப்பதற்காக அவர் மேற்கொள்ளும் பிளாஸ்டிக் சர்ஜரியும் அதைத் தொடர்ந்து அவரது உதடுகள். மற்றும் மூக்கு உருமாற்றம் அடைவதும். அதைச் சகிக்க முடியாமல் சாப்ளின் நடந்து கொள்வதும் நகைச்சுவையின் உச்சம்.

மற்றபடி படம் முழுவதும் நேரடியான அரசியல் விமர்சனங்கள், எதிர்ப்புக்குரல்களே ஒலிக்கின்றன. இப்படம் ஐரோப்பாவில் பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் அமெரிக்காவில் படம் ஒடவில்லை. சாப்ளின் இயக்கிய முக்கியமான படங்களில் ஒன்றாக இன்று விமர்சகர்களால் கொண்டாடப்படுகிறது

சாப்ளின் இப்படத்தில் அணுசக்தியை பயன்படுத்துவதா வேண்டாமா என்ற விவாதத்தை மையப்பொருளாக முன்வைக்கிறார். அமெரிக்கா அணுஆயுதங்களை வைத்திருப்பது தவறானது என வெளிப்படையாகக் கண்டிக்கிறார். கலைஞர்களின் குரல்வளையை நெறிக்கும் விதமாகவே மெக்கார்த்தி விசாரணை நடைபெற்றது என்பதை விரிவாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். மெகார்த்தி மீதான தனது கோபத்தின் அடையாளமாக விசாரணை அதிகாரிகள் மீது தீணையக்கும் குழாயை கொண்டு தண்ணீரை பீச்சியடிக்கிறார் சாப்ளின்.

தி கிட் படத்தில் தன்னிடம் அடைக்கலமாகும் சிறுவனை மகனைப் போல நேசிப்பார் சாப்ளின். அந்தச் சிறுவனுக்கு நேர் எதிர் இப்படத்தில் வரும் ரூபார்ட். போலீஸாரின் கட்டாயத்தின் பேரில் அவன் கம்யூனிஸ்டுகளைக் காட்டிக் கொடுக்கும் நிலை ஏற்பட்டது என்பதை உணர்த்தும்விதமாக இறுதிகாட்சியில் முகத்தைக் கையால் மூடி நிற்கிறான். மறக்கமுடியாத காட்சியது.

சாப்ளின் என்றால் வேடிக்கையான கோமாளி பிம்பமே நம் மனதில் பதிந்துள்ளது. அந்த கோமாளிக்கு இப்படி ஒரு அரசியல் முகமும் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள அவசியம் இப்படத்தைக் காண வேண்டும்.

••

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: