திரையில் ஒரு விசாரணை.


ஹிட்லருக்கான பிரச்சார படங்களை இயக்கியவரும் ஜெர்மனிய நடிகையும் பெண் இயக்குனர்களில் முக்கியமானவருமான லெனி ரிபெய்ன்ஸ்டால் பற்றிய ஆவணப்படம் ஒன்றினை பார்த்தேன்.

மூன்று மணிநேரத்திற்கும் மேலாக ஒடக்கூடிய The Wonderful, Horrible Life of Leni Riefenstahl என்ற இந்த ஆவணப்படத்தை இயக்கியவர் Ray Muller.

ஹிட்லரையும் நாஜி காலத்தைய ஜெர்மனியையும் கொண்டாடியவர் என்று குற்றம்சாட்டப்பட்ட லெனி தன் முதிய வயதில் தன்மீது சுமத்தபட்ட குற்றங்களை. தனது மனசாட்சியின் குரலை, இத்தனை காலம் தனக்குள் புதைந்து போயிருந்த நினைவுகளை மீளச் செய்வதே இந்த ஆவணப்படத்தின் முக்கிய அம்சம்.

ஒருவகையில் இது திரையில் பதிவு செய்யப்பட்ட விசாரணை போன்றேயிருக்கிறது. ராய் முல்லர் சமகால ஜெர்மனிய மக்களின் குரலை போலவும் அதற்கு பதில் சொல்லும் நாஜி காலத்து குரலாகவும் லெனியிருக்கிறார். யூதபடுகொலைகள், ஹிட்லரின் எழுச்சி. ரகசிய காதல்கள், கோயாபல்ஸ்க்கும் லெனிக்கும் இடையில் நடைபெற்ற பனிப்போர் என்று படம் அறுபது வருசங்களுக்கு முந்தைய நினைவுகளை துல்லியமாக விவரிக்கிறது.


பலநேரங்களில் தான் ஒரு திரைப்பட இயக்குனர் என்பதால் லெனி ஆவணப்படம் இயக்குபவர்களிடம் என்ன ஷாட் அது, அதை ஏன் இப்படி எடுக்கிறார்கள் என்று விசாரிக்கிறார். மாற்றம் செய்கிறார். எந்த கோணத்தில் ஒரு காட்சியை படம் பிடித்தால் சிறப்பாக இருக்க முடியும் என்று விளக்குகிறார். ஆகவே இந்த ஆவணப்படத்திற்குள் அதை படமாக்கிய விதமும் சேர்ந்து பதிவாகியிருக்கிறது.

லெனி தனது எடிட் மெஷின் முன்பாக உட்கார்ந்தபடியே தான் இயக்கிய படங்களின் துண்டுகாட்சிகளை மறுபடி ஒடவிட்டு ஒவ்வொரு பிரேமாக பார்த்து ரசிப்பதில் படம் துவங்குகிறது. அவரது நினைவுகள் துல்லியமாக வெளிப்படுகின்றன.

ஒரு காலத்தில் ஜெர்மனியின் உச்ச நட்சத்திரம் என்று தானகொண்டாடப் பட்டதையும்  இன்று ஜெர்மனியின் டிராகுலா என்று வெறுக்கபடுவதையும் இறுக்கமான முகத்துடன் கூறுகிறார். அவரோடு ஐம்பது வருசத்தின் முன்பு பணியாற்றிய ஒளிப்பதிவாளர்களை மறுபடியும் காண்கிறார். தன் முதல்படம் எடுத்த மலைபிரதேசத்தில் மீண்டும் ஹெலிகாப்டரில் பயணம் செய்கிறார்.

ஹிட்லர் காலத்தில் ஸ்டுடியோவாக இருந்த இடங்கள் இன்று உருமாறியிருக்கின்றன அந்த இடங்களுக்கு பயணம் செய்து தன் நினைவை பகிர்ந்து கொள்கிறார். ஒருவகையில் நாஜி சினிமாவின் உண்மைகளை பற்றிய நீண்ட விசாரணையாக அவரது நேர்காணல் இருக்கிறது

ரஷ்யாவின் ஐசன்ஸ்டீனுக்கு இணையானவர் என்று நாஜிகளால் கொண்டாட்டபட்ட லெனியின் குரல் நாஜி கால சினிமா வரலாற்றின் மிக முக்கிய தருணங்களை துல்லியமாக வெளிப்படுத்துகிறது.

1921 ல் பெர்லினில் பாலே நடனக்காரியாக தன் வாழ்வை துவங்கிய லெனி தன் திறமையால் சில ஆண்டுகளிலே முன்னணி நடனக்காரியாக அறியப்பட்டார். ஒரு முறை நடன நிகழ்ச்சியில் அவரது கால் முறிவு கொள்ளவே மருத்துவ சிகிட்சைக்காக ஒய்வு பெற வேண்டியிருந்தது. அந்த நாட்களில் சினிமா முக்கிய ஊடகமாக வளர்ந்துவரவே தான் திரைப்பட நடிகையாக மாற விரும்பினார். அவரது தோற்றமும் கவர்ச்சியும் எளிதாக அவரை சினிமா நாயகியாக்கியது. Arnold Fanck உடன் லெனி நடித்த படங்கள் வெற்றிகரமாக ஒடின. பணமும் புகழும் தேடி வந்தன.

லெனி தயாரித்து இயக்கிய The Blue Light. என்ற படம் வெனிஸ் திரைப்பட விழாவில் விருது பெற்றது. அதில் ஜெர்மானிய கிராமப்புற பெண்ணாக லெனி நடித்திருந்தார். அந்த படத்தை ஹிட்லர் மிகவும் விரும்பி பார்த்திருக்கிறார். ஒரு ஜெர்மனிய பெண் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு மாதிரி போல இருக்கிறாள் லெனி என்று புகழ்ந்து பாராட்டி  அவளை நாஜி அரசின் நட்சத்திர பெண்ணாக மாற்றினார். நீல வெளிச்சம் என்ற அந்த திரைப்படம் ஐரோப்பாவெங்கும் அவளுக்கு புகழைத் தேடி தந்தது.

1932 ம் ஆண்டு ஹிட்லரின் உரை ஒன்றை கேட்டு மயங்கிய லெனி அவரது நாஜி அரசின் சாதனைகளை விளக்கும் பிரச்சார படங்களை இயக்க முன்வந்தார். ஹிட்லரின் விருப்பத்திற்குரிய தோழியாக அறியப்பட்ட லெனிக்கு அரசு தேவையான அத்தனை வசதிகளையும் செய்து தந்தது. , Triumph of the Will என்ற இவரது நாஜி பிரச்சார படம் தொழில் நுட்ப ரீதியில் வியக்கத்தக்க சாதனைபடமாகும். நாஜியின் மீது மக்களுக்கு பெரிய விருப்பம் உருவாவதற்கு இந்த படமே காரணமாக இருந்தது என்கிறார்கள் சினிமா விமர்சகர்கள்.

ஹிட்லரின் பிரச்சார பேச்சுகள், அவரது அணிவகுப்பு, நேரடியான போர்களக் காட்சிகள் மற்றும் அரசின் யூத எதிர்ப்பு கருத்துகள் என யாவும் கலந்து உருவாக்கபட்ட படத்தை ஹிட்லர் வெகுவாக ரசித்ததோடு அதை நாடு முழுவதும் திரையிடும்படியாக ஆணையிட்டார். இந்த படம் பல உலக திரைப்பட விழா விருதுகளை பெற்றிருக்கிறது. உலக சினிமாவில் மிக முக்கிய கவனம் பெற்ற முதல் பெண் இயக்குனர் லெனியே.

தன்னை மீறி அந்த படத்தை நாஜிகள் தாங்களே எடிட் செய்து தங்களது தந்திரங்களுக்காக பயன்படுத்திக் கொண்டார்கள். தான் நாஜிகளின் கைக்கூலியாக இருக்கவில்லை என்று லெனி இந்த ஆவணப்படத்தில் வெளிப்படையாக கூறுகிறார்.

படத்தின் தலைப்பில் துவங்கி அதன் காட்சியமைப்பு வரை யாவையும் முடிவு செய்தது ஹிட்லரே. அவரது நேரடி மேற்பார்வையில் தான் அந்த படம் தயாரானது. அப்படியொரு படத்தை ஏன் செய்தேன் என்று இன்று நினைக்கையில் குற்றவுணர்ச்சி வருகிறது. ஆனால் கலைஞர்கள் எப்போதுமே அதீத மனவுணர்ச்சி கொண்டவர்கள் தான். அன்றைய எனது மனநிலை அப்படியிருந்தது. ஆனால் இன்று நினைக்கையில் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியே ஏற்படுகிறது. நான் இந்த படத்தை இயக்கினேன். ஆனால் அதற்கு முழு காரணம் நானில்லை என்று அவர் குறிப்பிடும் போது ஆவணப்பட இயக்குனர் அதை மறுத்து இது அறிந்த குற்றமே என்கிறார்.

லெனி நேர்காணல் செய்யும் மில்லருடன் சண்டையிடுகிறார். கோவித்து கொண்டு அவரது ஆவணப்படத்திற்கு இனி நான் ஒத்துழைப்பு கொடுக்க போவதில்லை என்று மறுக்கிறார். ஆனால் மில்லர் அவரிடம் நேரடியாக நீங்கள் ஹிட்லரின் கள்ளகாதலியாக இருந்ததாக செய்திகள் இருக்கிறதே அது உண்மையா என்று கேட்கிறார்.

தான் ஹிட்லரை சந்தித்து இருப்பதாகவும். அவரோடு விருந்தில் கலந்து கொண்டதாகவும் ஹிட்லர் அழகாக பெண்களிடம் நெருக்கமாக இருக்கவே விரும்புவார் என்னிடமும் அப்படி தான் நடந்து கொண்டார். உண்மையில் கோயாபல்ஸ் என்னை அடைய விரும்பி பாலியல் தொல்லைகள் தந்து கொண்டிருந்தார். அதை நான் ஆவேசமாக எதிர்க்கவே அவர் என்னை பற்றிய அவதூறுகளைபரப்ப முயன்றார். அத்துடன் அவரே ஹிட்லரின் என்னை பற்றி தவறான பல தகவல்களை தந்தபடி இருந்தார் என்கிறார் லெனி. 

எது கடந்த காலத்தின் உண்மை என்று நம்மால் அறிந்து கொள்ள முடியாது. ஆனால் லெனி உணர்ச்சிபூர்வமாக ஹிட்லருக்கு வாக்னரின் இசை பிடிக்கும் என்பதற்காக வாக்னரை நாஜி ஆதரவாளன் என்று ஒதுக்கிவிடுவீர்களா என்று கேட்கையில் அவரது நியாயத்திற்கு ஒரு பக்கம் இருப்பதை ஒத்துக் கொள்ளவே வேண்டியிருக்கிறது.

இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து 1936 ம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் பற்றி ஆவணப்படம் ஒன்றினை இயக்கும்படி ஹிட்லர் லெனியை பணித்தார். உண்மையில் ஹிட்லருக்கு விளையாட்டில் துளியும் விருப்பம் இல்லை. வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் ஜெர்மனிய வீரர்களை வெல்வதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தனது செல்வாக்கை உலகம் அறிய வேண்டும் என்பதற்காக மட்டுமே அவர் ஒலிம்பிக்கை நடத்த முயற்சி செய்தார் என்று கூறும் லெனி ஒலிம்பிக்கை படமாக்குவதற்கு விரிவாக திட்டங்களை உருவாக்கினார்

இதற்காக பிரத்யேக மூன்று நான்கு கேமிராக்கள், உபகரணங்கள். படமாக்கும் முறைகள் திட்டமிடப்பட்டன. மிகப் பெரிய பொருட்செலவு. ஒட்டப்பந்தய வீரர்களுடன் கூடவே ஒடும் ஒளிப்பதிவாளர்கள். ஸ்லோமோஷன், டிராக் ஷாட், லாங் வைட் என்று புதிய உத்திகளுடன் நீச்சல் குளத்தின் அடியில் இருந்து நீச்சல்வீரர்களை படமாக்குவது என்று சினிமாவின் பல்வேறு புதிய சாத்தியங்களை இந்த ஆவணப்படத்திற்காக லெனி உருவாக்கி காட்டினார்.  

அந்த படத்தின் சிறிய பகுதி ஒன்றை நான் பார்த்திருக்கிறேன். இன்றுள்ள எந்த அதிநவீன தொழில்நுட்பமும் இல்லாமல் ஒலிம்பியா மிக அசாத்தியமான முறையில் படமாக்கபட்டிருக்கிறது. விளையாட்டினை எப்படி படமாக்க வேண்டும் என்பதற்கு அது ஒரு உதாரண படம்.

ஒலிம்பிக்ஸில் கலந்து கொள்ளும் ஆரியர்கள் அல்லாத வீரர்களை படம்பிடிக்க வேண்டாம் என்று கோயாபல்ஸிடமிருந்து உத்தரவு வந்தது. அதை தூர எறிந்துவிட்டு லெனி எல்லா வீரர்களையும் படமாக்கியிருக்கிறார். பல்லாயிரம் அடிகள் படமாக்கட்டு இரண்டு ஆண்டுகாலம் எடிட் செய்யப்பட்டு ஹிட்லரின் பிறந்தநாள் பரிசாக அந்த படம் 1938 ம் ஆண்டு பொதுமக்களுக்குதிரையிட்டு காட்டப்பட்டது. 

பலத்த வரவேற்பு பெற்ற அந்த படத்துடன் அமெரிக்கா சென்றார் லெனி. அங்கு அவரை பத்திரிக்கையாளர்கள் ஜெர்மனியின் உளவாளி என்று விமர்சனம் செய்தார்கள். யூதபடுகொலைகள் பற்றி அவர் என்ன சொல்கிறார் என்று கேள்வி கேட்டார்கள். லெனி சம்பந்தமில்லாமல் ஹிட்லரை கொண்டாடிபேசியதை அமெரிக்க பத்திரிக்கைகள் கேலி செய்து எழுதின.

மிக அதிகமான பணம் செலவு செய்துவிட்டார் என்று கோயாபல்ஸ் அவர் மீது வெளிப்படையாக குற்றம்சாட்டினார். போலந்து ஆக்ரமிப்பை பற்றி படம் உருவாக்குங்கள் என்று யுத்தகளத்திற்கு அனுப்பபட்டார் லெனி.அங்கே அவர் நாஜிகளின் கோர முகத்தை நேரடியாக கண்டார். ஈவு இரக்கமின்றி படுகொலைகள் தன் கண்முன்னே நடப்பதை கண்டு பயந்து போய் படமாக்குவதை நிறுத்தி கொண்டதுடன் நாஜிகளோடு தனக்கிருந்த தொடர்பையும் துண்டித்து கொண்டார். ஆனால் ஹிட்லர் அவரை விடவில்லை. தனக்காக இன்னொரு படம் இயக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். 

Tiefland என்ற படத்தை லெனி இயக்க முடிவு செய்தார். நான்கு ஆண்டுகாலம் இதற்கான படப்பிடிப்பு நடைபெற்றது. அப்படத்தில் சிறைக்கைதிகளாக உள்ள ஜிப்சிகளை கட்டாயப்படுத்தி நடிக்க பயன்படுத்தினார் லெனி என்ற குற்றசாட்டு எழுந்தது. ஆகவே அந்த படத்தை அவர் முடிக்க இயலவில்லை. 1954ல் தான் அந்த படம் வெளியானது. 1940ம் ஆண்டு துவங்கி பதினாலு வருசங்களுக்கு பிறகு வெளியான ஒரே படம் இது என்று கின்னஸ் ரிக்கார்ட் கூறுகிறது.


அதிகார துஷ்பிரயோகம் செய்தார். நாஜியின் வெளிப்படையாக பிரச்சார தலைவராக இருந்தார் என்று அவர் மீது எண்ணிக்கையற்ற குற்றசாட்டுகள் எழுந்தன. லெனியின் செயல்பாடுகள் முடக்கபட்டன. அவர் மீது விசாரணைகள் நடந்தது. பெர்லினில் இருந்து உயிர்தப்பி அமெரிக்காவில் சரண் அடைந்தார் லெனி.

நூறு வயது வரை வாழ்ந்த லெனி கடைசி வரை மக்களால் வெறுக்கபட்டவராகவே இருந்தார். நாஜிகளின் மீதான வெறுப்பின் கடைசி பெண்ணாக லெனியை அடையாளம் காட்டின பத்திரிக்கைகள். அவரது 97 வயதில் கூட ஜிப்சிகளின் மீதான அவரது அடக்குமுறை பற்றி விசாரிக்கபட்டார். கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கபட்டன.

ஜெர்மனியில் இருந்து வெளியேறிய பிறகு அவர் படம் எடுக்க முயற்சிக்கும் போது அது பலத்த கண்டனங்களால் தடை செய்யப்பட்டன. அதன் பிறகு அவரால் தன்வாழ்நாள் முழுவதும் முழு நீளப்படம் இயக்க முடியவில்லை. சில ஆண்டுகள் ஹெமிங்வேயின் நாவலை படமாக்குவது என்று ஆப்ரிக்காவில் நீண்ட பயணம் மேற்கொண்டார். ஆரம்ப தயாரிப்பு வேலைகள் நடந்தன. அந்த நாட்களில் ஆதிவாசிகளுடன் நெருக்கமாக பழகி அவர்களை புகைப்படம் எடுத்தார்லெனி. இந்த புகைப்படங்கள் தனித்து ஒரு புத்தகமாக வெளிவந்திருக்கிறது.

தனது நூறாவது பிறந்தநாளின் போது வெளியிட வேண்டும் என்று ஆழ்கடலில் நீந்துவது பற்றி சிறிய ஆவணப்படம் ஒன்றினை உருவாக்கினார் லெனி. தனது 101 வது வயதில் தன்னோடு பல ஆண்டுகாலம் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய  Horst Kettner யை திருமணம் செய்து கொண்டார். கேன்சரில் பாதிக்கபட்ட லெனி 2003 ம் ஆண்டு மரணமடைந்தார்.

இந்த ஆவணப்படத்தில் லெனி ஒலிம்பிக்கை படமாக்குவதற்கு எடுத்த முயற்சிகளும் புதுப்புது உத்திகளும் அவருக்குள் இருந்த கொந்தளிக்கும் கலைஞனை துல்லியமாக அடையாளம் காட்டுகிறது. சினிமாவில் பெண்களுக்கு என்று தனித்த அடையாளங்களை உருவாக்கிய முன்னோடி இயக்குனர் இவரே. நாஜிகளை அவர் கொண்டாடியதும், ஹிட்லரின் மீதான அவரது விசுவாசமும் துடைக்க முடியாத பெருங்கறையாக லெனி மீது படர்ந்திருக்கிறது. அந்த நினைவுகள் எளிதில் மறக்கமுடியாதவை.

ஒலிம்பியா என்ற ஆவணப்படம் இன்றும் லெனியின் திறமையை உலகிற்கு சொல்லும் அரிய கலைப்படாக இருக்கிறது. அதை நினைவு கொள்ளும் தருணங்களில் லெனியின் கண்கள் தானறியாமல் கசிகின்றன. தன் தவறுகளுக்காக தன் கலைப்படைப்புகளை வெறுக்காதீர்கள் என்று லெனி படத்தில் ஒரு இடத்தில் கூறுகிறார். அந்த ஆதங்கம் உண்மையானதும் புரிந்துகொள்ளபட வேண்டியதுமேயாகும்.

***

Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Subscribe

Enter your email address: