கசந்த உறவு

ஜோர்ஜ் லூயி போர்ஹேயின் கதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த Norman Thomas di Giovanni தனது அனுபவங்களையும் போர்ஹேயின் திருமண வாழ்வு குறித்தும் Georgie & Elsa என்ற சுவையான புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

இந்த அளவு யாரும் போர்ஹேயின் மறுபக்கத்தை எழுத்தில் அடையாளம் காட்டியதில்லை.  மிரட்சியோடு வியந்துபார்க்க வைக்கும் எழுத்துகளைப் படைத்த போர்ஹேயும் சாமானியரின் ஆசைகளுடன் விருப்பு வெறுப்புகளுடன், ஏமாற்றங்கள். குடும்பச் சண்டைகளுடன் வாழ்ந்திருக்கிறார் என்பதை நுட்பமாகச் சுட்டிக்காட்டுகிறார் ஜியோவனி.

தான் கல்லூரி நாட்களில் காதலித்த எல்சாவை தனது 68வது வயதில் திருமணம் செய்து கொண்டார். போர்ஹே பார்வையிழப்பிற்கு உள்ளான போர்ஹேயை அவரது அம்மா அக்கறையுடன் கவனித்துவந்தார். அம்மாவிற்கு 90 வயதாகிவிட்டது என்பதால் தனக்கொரு துணை வேண்டும் என விரும்பி இளமையில் நிறைவேறாத காதலை மறுபடியும் உயிர்பித்துக் கொண்டார் போர்ஹே.

அது இமலாயத்தவறு என்பதை அவர் எவ்வாறு உணர்ந்து கொண்டார் என்பதை நேரடியாகச் சாட்சியாக இருந்த ஜியோவனி விவரிக்கிறார்.

1967 ஆகஸ்ட் 4 அன்று அவர்களின் திருமணம் நடைபெற்றது. நண்பர்கள் மட்டுமே அழைக்கபட்டிருந்தார்கள். விதவையான எல்சாவை அவர் திருமணம் செய்து கொள்ள அம்மா ஒத்துக் கொள்ளவில்லை.  ஆனால் போர்ஹேயின் கட்டாயத்தாலே அத்திருமணம் நடைபெற்றது

திருமணமான ஜோடிகள் முதலிரவை கழிக்க ஹோட்டலில் அறை ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என எலிசாவின் குடும்பம் ஆலோசனை சொன்னது. ஆனால் போர்ஹே இந்தத் திருமணம் ஆத்மார்த்தமானது. உடல் ரீதியாக இதை பார்க்க வேண்டாம். தான் அன்றைய இரவை தனது அம்மாவின் அறையில் கழிக்கப் போவதாக அறிவித்தார். அது தான் எலிசாவின் முதல் அதிர்ச்சி. உடலுறவில் அவருக்கு விருப்பமில்லை என்பதை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டது கோழைத்தனம் என எல்சா அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதிலிருந்து அவருக்கும் எல்சாவிற்கும் இடையில் ஏற்பட்ட சண்டைகள். சச்சரவுகள். மனக்கசப்புகளை ஜியோவனி விரிவாக விவரித்திருக்கிறார்.

அதே நேரம் தன்னோடு இணைந்து எப்படி ஆங்கில மொழியாக்கப்பணியில் போர்ஹே ஈடுபட்டார். அவரது அக்கறையும் அன்பும் எத்தகையது என்பதையும் நெகிழ்வுடன் விவரிக்கிறார்.

பார்வையற்ற போர்ஹேயை கழிப்பறைக்கு அழைத்துச் சென்று மூத்திரப்பிறையை அடையாளம் காட்டுவதுடன் சரியாக அவர் மூத்திரப்பிறையில் மூத்திரம் பெய்வதற்கு உதவி செய்வது வரை  அக்கறையுடன் கவனித்துக் கொண்டிருக்கிறார் ஜியோவனி.

போர்ஹேயின் கவிதைகளை மொழியாக்கம் செய்த போது சந்தித்த பிரச்சனைகள். கூடி விவாதித்த விஷயங்கள். தன்னை ப்யூனஸ் அயர்ஸ் நகருக்கு விருந்தினராக அழைத்துச் சென்று உபசரித்தவிதம், அறிமுகம் செய்த எழுத்தாளர்கள். அழைத்துச் சென்ற உணவகங்கள் போர்ஹே அம்மாவிற்கும் மருமகளுக்கும் நடந்த சண்டையை அவர் கையாண்ட விதம் என வேடிக்கையான சம்பவங்களும் ஆழ்ந்த விவாதங்களும் ஒன்று சேர்ந்து வாசிப்பை சுவாரஸ்யப்படுத்துகின்றன

அமெரிக்கப் பல்கலைகழகங்களில் உரையாற்றுவதற்காகப் போர்ஹே வந்திருந்த நாட்களைப் பற்றிய பதிவுகள் மிக முக்கியமானது. குறிப்பாகப் பார்வையற்ற அவர் கவிதைகள் குறித்து உரையாற்றுவதைக் கேட்பதற்கு எப்படி அரங்கு நிரம்ப மாணவர்கள் காத்திருந்தார்கள்.

தன்னால் காணமுடியாத அந்த வாசகர்களுடன் அவர் எப்படி மானசீகமாக உரையாடினார் என்பதையும் ஜியோவனி அழகாக விளக்கியிருக்கிறார்

மனைவிக்குத் தெரியாமல் புத்தகங்களுக்குள் பணத்தை ஒளித்துக் கொள்ளும் பழக்கம் போர்ஹேயிற்கு இருந்தது. அது ஒன்று தான் மனைவி தேடாத இடம் என அவர் வேடிக்கையாகச் சொல்வாராம். ஆடைகள் அணிவதில் மிகவும் கவனம் செலுத்திய போர்ஹே விருந்திற்கு என்ன நிறத்தில் உடையணிந்து செல்வது என்பதைக் கூட நம்பிக்கையின் அடிப்படையில் தான் முடிவு செய்வார் என்கிறார்.

போர்ஹேக்கு யாரெல்லாம் போன் செய்கிறார்கள். என்ன பேசுகிறார்கள். ஒரு உரைக்கு எவ்வளவு பணம் அவருக்குக் கிடைக்கிறது. அம்மாவும் மகனும் என்ன ரகசியம் பேசிக் கொள்கிறார்கள் எனத் துருவித்துருவி எல்சா கண்காணித்துக் கொண்டிருந்தது போர்ஹேயிற்குப் பிடிக்கவில்லை. மூன்றாண்டுகள் அவர் எல்சாவோடு வாழ்ந்தார். பிறகு அவர்கள் சட்டப்பூர்வமாகப் பிரிந்துவிட்டார்கள்.

ஜியோவனியின் திருமணத்திற்குச் சாட்சியாக உடனிருந்தவர் போர்ஹே. நண்பர்கள் மட்டுமே அழைக்கபட்டிருந்த அந்த நிகழ்விற்கு எல்சா எப்படிப் பகட்டான உடை அணிந்து வந்திருந்தார் என்பதை ஜியோவனி நினைவு கூறுகிறார்

நியூயார்க்கர் இதழில் போர்ஹே கதைகள் தொடர்ந்து வெளிவருவதற்கு ஜியோவனியே முக்கியக் காரணமாக இருந்திருக்கிறார். அத்துடன் போர்ஹேக்கு இருந்த பெரிய இடத்து நண்பர்கள். நட்பு காரணமாக முக்கியப் பதிப்பாளர்களுக்கு அவரை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்கள். அதன்காரணமாகவே அமெரிக்கப் பல்கலைகழகத்திற்கு அவர்  உரையாற்ற அழைக்கபட்டிருக்கிறார். ஒரு உரைக்கு அவருக்கு ஆயிரம் டாலர் சன்மானம் தரப்பட்டிருக்கிறது.

போர்ஹேயின் எழுபதாவது பிறந்த நாள் விழாவின் போது புத்தக வடிவிலே கேக் வெட்டப்பட்டதையும் அந்த விழாவிற்காகச் சிறப்பு அலங்காரம் செய்து கொண்டு மிக இளமையாகக் காட்சியளிக்க எல்சா மேற்கொண்ட எத்தனிப்புகளைப் பற்றியும் ஜியோவனி கேலியாகக் குறிப்பிடுகிறார்

போர்ஹேயின் தங்கை நோரா ஒரு ஒவியர். கனத்த குரலில் பேசுகிறவர். அவளது கணவர் குலிர்மோ பல்கலைகழகப் பேராசியர். விமர்சகர். அவரைப் போர்ஹேயிற்குத் துளியும் பிடிக்காது. என்னால் அவரைப் பார்க்க முடியாது. அவரால் என் பேச்சை கேட்கமுடியாது. அவ்வளவு பொருத்தம் எங்களுக்குள் என்று போர்ஹே குறிப்பிடுகிறார்

பார்வையற்ற நிலையிலும் போர்ஹே மேற்கொண்ட பயணங்கள். சொற்பொழிவுகளுக்காக அவர் எடுத்துக் கொள்ளும் கவனம் பற்றிக் குறிப்பிடும் ஜியோவனி பலநேரம் நினைவில் இருந்து பேசுவதால் தவறாகவும் அவர் மேற்கோள்களைக் காட்டுவார். சமகால இலக்கியம் குறித்து அவருக்கு அதிக வாசிப்பில்லை. ஆகவே அவர்களைப் பற்றிய எந்தக் கேள்வியையும் அவர் தவிர்த்துவிடுவார்  என்கிறார்

எழுத்தாளருக்குப் பகல்தூக்கம் அவசியமானது. அதுவும் ஆடைகள் இல்லாமல் உறங்கவே நான் விரும்புகிறேன் எனப் போர்ஹே குறிப்பிட்டதாகவும் அவரது விசித்திர நம்பிக்கைகள் எப்படி ஒரு சிறுவனின் மனோநிலையில் இருந்தன என்பதையும் ஜியோவனி விவரிக்கிறார்

அவருக்கும் போர்ஹேயிற்கும் இடையில் நடந்த கடிதப்போக்குவரத்துகள். மொழிபெயர்ப்பிற்காக  மேற்கொண்ட எத்தனிப்புகள். விடாப்பிடியான உழைப்பு இவற்றை அறியும் போது ஜியோவனி போல ஒருவர் மொழிபெயர்ப்பாளராகக் கிடைப்பது எழுத்தாளரின் நல்லூழ் என்றே சொல்லத் தோன்றுகிறது

••

Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: