இருளும் யானையும்

மனுஷ்யபுத்திரனின் இருளில் நகரும் யானை கவிதைத்தொகுப்பை வாசித்து முடித்தேன்

எட்வர்டு மஞ்ச் வரைந்த “The Scream” என்ற ஒவியம் நினைவில் வந்து போகிறது. ஒலமிடும் அந்த மனிதனின் முகம் மறக்கமுடியாதது. அது சுயவருத்தத்தில் உருவான ஒலமில்லை. தன் கண்முன்னே உலகம் அழிவுறுவதன் அலறல். தன் இயலாமையை, தவிப்பை, இழப்பை அடையாளப்படுத்தும் குரல். மனுஷ்யபுத்திரனின் கவிதைகளும் இதையே செய்கின்றன

எளிய நம்பிக்கைகளே மனிதர்களின் பிடிமானம். அவை பொய்யென உணர்ந்த போதும் கூட அவற்றைப் பற்றிக் கொண்டே மனிதர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் இந்த நம்பிக்கைகளை மறுதலித்து நேரடியாக வேதனையை. துயரத்தை, வெறுப்பை, ஏமாற்றத்தை தனது கோப்பையில் ஏந்திக் கொள்ளும் ஒரு மனிதனின் வெடித்த குரலாகவே இக்கவிதைகள் எதிரொலிக்கின்றன.

இருளில் நகரும் யானை என்பது அற்புதமான படிமம். உண்மையில் இருள் வேறு யானை வேறில்லை. வனத்தில் அவர் எதிர்கொண்ட இரண்டு யானைகளைப் பற்றி முன்னுரையில் குறிப்பிடுகிறார். ஒன்று அச்சமூட்டும் யானை. மற்றொன்று கண்ணீர் விடும் யானை.

மொகலாயர் காலத்தில் வரையப்பட்ட சிறகுள்ள யானையின் ஒவியத்தைப் பார்த்திருக்கிறேன். யானை வானில் பறந்து கொண்டிருக்கும். இன்னொரு ஒவியத்தில் பறவைக்கூட்டம் போல யானைகள் பறந்து விளையாடிக் கொண்டிருக்கும். தமிழில் அதிகம் எழுதப்பட்ட விலங்கு யானை. என்றாலும் அதன் மீதான வியப்பும் பயமும் குறையவேயில்லை. நிஜத்தில் யானையை காண்பது போலவே எழுத்தில் காணவும் விருப்பமாகவே இருக்கிறது. கவிதை யானையைப் பறக்கும் விலங்காக மாற்றுகிறது.

புறஉலகில் எதிர்கொள்ளும் நிகழ்வுகளில் இருந்தே கவிதைகள் உருவாகிறதாகக் கவிஞன் சொல்வது உண்மையில் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு சொல்லும்  எளிய காரணம் போல தான் தோன்றுகிறது

மாறாகப் புறஉலகின் நிகழ்வுகள் எப்போதும் கவிஞனின் தன்னிலையை பாதிக்கின்றன. அசைக்கின்றன. சங்கடப்படுத்துகின்றன. சந்தோஷமோ துயரேமோ கொள்ள வைக்கின்றன. சொற்களின் துணைகொண்டு அவற்றைக் கடந்துவிட விரும்புகிறான் கவிஞன். அதுவே கவிதையாகிறது.

கவிதை என்பது உண்மையில் ஒரு கண்டுபிடித்தல். கவிஞன் தான் கண்டுபிடித்தவற்றை வியக்கிறான். அது துயரமாகவே இருந்தாலும் சரி. இறப்பை பற்றி அதனால் தான் மனுஷ்யபுத்திரனால் இவ்வளவு கவிதைகளை எழுத முடிகிறது.

கவிஞனாக இருப்பதால்  அச்சமூட்டும் யானையும் கண்ணீர் விடும் யானையும் ஒன்று தான் என அவர் கண்டு கொள்கிறார்.

இந்த இரண்டு யானைகள் போலின்றி தண்ணீர் துறையில் தன்னைப் பார்த்துக் கொள்ளும் யானை ஒன்றை தேக்கடியில் கண்டேன்.

என்ன பார்க்கிறது அந்த யானை.

தன்னை அது ரசிக்ககூடியதா.

வியந்து கொள்ளுமா. இல்லை வருத்தப்படுமா.

தன்னைப் போல இன்னொரு யானை தண்ணீருக்கு அடியில் இருந்து நேசக்கரம் நீட்டுகிறது என நினைத்துக் கொள்ளுமா.

எல்லாமும் எனது கற்பனைகள்.

யானை மௌனமாகக் கடந்து போகிறது. தூரத்திற்குப் போன பிறகு திரும்பி பார்க்கிறது. யானைகள் அடிக்கடி திரும்பி பார்த்துக் கொள்கின்றன. அது தான் என்னை ஆறுதல் படுத்துகிறது .  இக்கவிதைகளும் நிறைய திரும்பி பார்க்க வைக்கின்றன.

மனுஷ்யபுத்திரனின் கவிதையை வாசிப்பது எளிதானதில்லை. சொற்கள் கையில் எடுக்கமுடியாத பாதரசம் போல ஒடுகின்றன. மீறி கையில் ஏந்திவிட்டால் அதன் கனம் தாளமுடியாததாகிவிடுகிறது.

கவிஞனின் குரல் வியப்பூட்டுக்கிறது. அந்தக்குரல் தொன்மையானது. காலமற்றது. சில நேரம் அது உச்சாடனம் செய்யும் மந்திரவாதியின் குரலை போல ஒலிக்கிறது. சில தருணங்களில் ஏக்கமும் ஏமாற்றமும் ஒன்று கலந்து பீறிடும் அழுகையாக மாறுகிறது. சில நேரம் நம் குரலை அப்படியே எதிரொலிக்கிறது. அரிதாகத் தருணங்களின் கடவுளின் குரலை போலவும் ஒலிக்கிறது.

எப்போதும் கவிதையிடமிருந்து சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் தான் பெரும்பான்மை வாசகர்கள் எதிர்பார்க்கிறார்கள். உலகம் தனக்குத் தராத, அனுமதிக்காத சந்தோஷங்களைக் கவிஞர்கள் தந்துவிடுவார்கள் என நம்புகிறார்கள்.

கவிதையின் ஒரு சிறகு மகிழ்ச்சி என்றால் மறுசிறகு துயரம் தான் போலும். மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் எந்தச் சந்தோஷத்தையும் தனித்துத் தருவதில்லை. துயரத்தோடு சேர்த்தே வழங்குகின்றன.

தொலைதூர ரயலின் படிக்கட்டில் உட்கார்ந்திருக்கும் ஒருவன் அதை நெருக்கடியாகக் கருதுவதேயில்லை. தனது விருப்பத்திற்குரிய தேர்வாகக் கருதுகிறான். தனிமையான உலகை அவன் காண விரும்புகிறான்.

உலகம் ஒரு போதும் தனிமையானதில்லை. அப்படிக் காட்டிக் கொள்கிறது. ஒடும் ரயிலில் இருந்து ஒரு பக்கத்தை மட்டுமே நாம் காண்பதில்லையா. அது போலத் தான். உண்மையில் அவன் உலகை சாக்காக வைத்துக் கொண்டு தனது தனிமையை உணரத்துவங்குகிறான். ரயில் பயணத்தில் நீங்கள் உங்கள் தனிமையை முழுமையாக உணர்வீர்கள். குளிர்சாதனப்பெட்டிக்குள் வைக்கப்பட்ட ஆப்பிளைப் போல.

வழியில் ஒரு சந்திப்பு என்ற கவிதையில் இரண்டு பெண்கள் பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்பு சந்தித்துக் கொள்கிறார்கள். இந்த இடைவெளியில் எவ்வளவோ இருவருக்கு நிறைய சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அதை வெளிப்படுத்த இயலாமல் அணைத்துக் கொண்டு தேம்புகிறார்கள். பின்பு இவரும் தனிமையின் முழுவெப்பத்தையும் இரண்டு கிளாஸ்களில் ஜுஸாகக் குடிக்கிறார்கள். பிரிந்துவிடுகிறார்கள்.

உண்மையில் அந்தச் சந்திப்பு ஒரு எதிர்பாராத சந்தோஷம். ஆனால் அது பிரிவின் துயரமாக உருமாறிவிடுகிறது. கண்ணீரால் அவர்கள் கடந்த காலத்தை எளிதாகப பரிமாறிக் கொண்டுவிட முடிகிறது. ஆண்களால் அதுவும் இயலாது.

பலநேரம் ஆண்களுக்குப் பதினைந்து வருஷம் என்பது மிகச்சிறிய காலம்.

கவிதையில் வரும் பெண்கள் எதிர்பாராத சந்திப்பின் வழியே அவர்கள் தங்களின் கடந்தகாலத்தைத் திரும்பப் பார்த்துக் கொள்கிறார்கள். நிஜத்தில் அச்சந்திப்பு என்பது ஒரு கண்ணாடி. அதன் முன்பு அவர்கள் கல்லூரி தோழிகளாக அடையாளம் காணுகிறார்கள். காலம் நம்மை பின்னோக்கி போக அனுமதிப்பதில்லை. ஆனால் இது போன்ற சந்திப்புகளின் வழியே  அது சாத்தியமாகி விடுகிறது.

காலத்தில் முன்னோக்கி போவதை விடவும் பின்னோக்கி போகவே நாம் அதிகம் ஆசைப்படுகிறோம். கவிதைகள் வாசிப்பதும் அதற்காக தானோ.

விறால்மீன்கள் என்ற கவிதையில் வரும் பெண் மீனை கொல்வதற்குப் பதிலாகப் பிரிஜ்ஜிற்குள் உள்ள ஐஸ்பாக்ஸில் போட்டு பூட்டிவைக்கிறாள். அது ஒரு குரூரயுக்தி. அவள் எப்படி இதைக் கண்டுபிடித்தாள். நினைக்கவே பயமாக இருக்கிறது. ஒருவேளை தன்னைக் குடும்பம் எப்படி நடத்தியது என்பதிலிருந்து தான் மீனை வதைக்கும் முறையை அவள் உருவாக்கிக் கொண்டாளோ.

இன்னொரு பெண் விறால் மீனிடம் பேசுகிறாள். வீணான எதிர்ப்புகளால் ஒன்றும் நடக்கப்போவதில்லை என. அது சுயமொழி போலவே இருக்கிறது. பலமுறை இப்படி அவள் தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தவள் தானே. இந்த முறை தன் முடிவை அவள் விறால் மீனிடம் தெரிவிக்கிறாள் அவ்வளவே வேறுபாடு

கவிதையின் கடைசி பாராவில் தான்  கவிஞன் தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறான். வேட்டையாடிய தனது பூர்வநினைவுகளை மீட்டுக்கொள்ளவே பெண்கள் விறால்மீன்களைக் கொல்கிறார்கள் எனக் கூறுகிறான். திடீரென அபார்ட்மெண்டின் சமையலறையில் நிற்கும் பெண்ணின் கையில் வில்லும் அம்பும் தோன்றுவதை என்னால் காணமுடிகிறது.

கடைசிவரி காமத்தின் மீதான ஒரு பகடியை போல முடிந்துவிடுகிறது. நெரூதா தக்காளிக்காக ஒரு காதல்பாடலை எழுதியிருக்கிறார். அதில் தக்காளியும் வெங்காயும் ஒன்றாக வதக்கபடும் போது ஒன்றையொன்று ஆசையோடு முத்தமிட்டுத் தழுவி கொள்வதாக எழுதியிருப்பார். அதை வாசித்தபிறகு தக்காளி காதலின் அடையாளமாகவே மாறிப்போனது . விறால் மீனும் காதலின் அடையாளமாவது அப்படித்தான்

அன்றாட வாழ்க்கையை அதன் நறுமணத்துடனும் கசடுகளுடனும் நேரடியாக எதிர்கொள்கிறார் மனுஷ்யபுத்திரன். அவற்றைப் பிரித்து வேறுபடுத்துவதில் தான் அவரது கவிதையின் உலகம் துவங்குகிறது. சந்தோஷத்தை துக்கமாகவும் பிரிவை மரணமாகவும், மரணத்தை நினைவாகவும் நினைவை அன்பாகவும் உருமாற்றுகிறார், பயனற்றதாக உலகம் கருதுவதோடு மட்டுமே தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறார். அந்த உணர்வை அவர் வெளிப்படுத்தும் போது நீண்டகாலம் மருத்துவமனையில் தங்கிவிட்ட நோயாளியின் உறக்கமற்ற  முணுமுணுப்பை போலிருக்கிறது.

தானே மலரும் மலர்,. தானே உதிக்கும் சூரியன், தன்னியல்பில் வீசும் காற்று போல இயல்பாக அன்பு செலுத்தபடாதா என்ற அவரது ஏக்கம் நம் காலத்தின் ஆதங்கமாகும். பட்டும் படாமல் என்றொரு சிறிய கவிதை அது இப்படி விரிகிறது

தாமரை இலையில்

தண்ணீரைப் போல மாறிவிட்டேன் என்கிறார்கள்.

இப்போதெல்லாம்

அந்தத் தாமரை இலை கூட எனக்கு இல்லை.

காற்றில் அந்தரமாய்

பறந்து கொணடிருக்கிறேன்

ஒரு நீர்த்துளியாக

இது சந்தோஷத்தின் கவிதையா, துக்கத்தின் கவிதையா. ஒரு நீர்துளியாகப் பறந்து கொண்டிருப்பது எவ்வளவு பெரிய ஆனந்தம். அதை எப்படிச் சாத்தியமாக்குவது எனத்தெரியாமல் தானே சாமானியர்கள் அவதிப்படுகிறார்கள்.

1914ஆம் ஆண்டில் புதுச்சேரியில் அடித்த புயல் மழையில் மரங்கள் வீழ்ந்தன. அதைக்கண்ட பாரதி ‘பிழைத்த தென்னந்தோப்பு…” என்ற கவிதை எழுதினான். அதில்

வீழ்ந்தன சிலவாம் மரங்கள்

மீந்தன பலவாம்;

வாழ்ந்திருக்க வென்றே அதனை

வாயு பொறுத்துவிட்டான் எனக்குறிப்பிடுகிறான். மனுஷ்யபுத்திரனின் புயல்  கடந்த தினங்கள் இந்த வரிசையில் வைத்து பேசவேண்டிய கவிதைகளாகும்

பாரதியின் கவிதையில்  இப்படி ஒரு கண்ணியிருக்கிறது.

தனிமை கண்டதுண்டு; அதிலே

சார மிருக்குதம்மா!

பனிதொலைக்கும் வெயில், அதுதேம்

பாகு மதுரமன்றோ

புயலை பாடிய அதே கவிஞன் தான் பனிதொலைக்கும் வெயிலையும் பாடுகிறான்

இது போலவே புயலை எதிர்கொள்ளும் மனுஷ்யபுத்திரன்

எவ்வளவு மிருதுவானது

இந்தக்காற்று

இவ்வளவு காலம்

என் நுரையீரலில் அல்லவா வசித்தது

என கவிதையை துவக்குகிறார். அபாரமான கவிதையது.

மனமாகிய குரங்கு செய்வதை எல்லாம் எழுதிக்கொண்டு போனால் காலக் கிரமத்தில் அதை வசப்படுத்திவிடலாம் என்பது என்னுடைய கருத்து. ஒன்றை அடக்கு முன்பாக அதன் இயல்புகளை யெல்லாம் நாம் அறிந்துகொள்ள வேண்டும். நம்மால் நன்றாக அறியப்படாததை நாம் வசப்படுத்த முடியாது. என்கிறான் பாரதி

தன்னைச் சுற்றிய உலகின் மீது மனுஷ்யபுத்திரன் கொள்ளும் ஈர்ப்பும் அக்கறையும் எதிர்வினையும் பாரதியின் எண்ணங்களின் செயல்வடிவம் போலவேயிருக்கிறது

இருளில் நகரும் யானை கவிதைத்தொகுப்பு மனுஷ்யபுத்திரனின் அரியதொரு சாதனை என்றே சொல்வேன்

•••

எட்வர்டு மஞ்ச் வரைந்த “The Scream”

Archives
Calendar
April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Subscribe

Enter your email address: