தங்கல்

அமீர்கான் நடித்துள்ள தங்கல் படத்தை நேற்று பார்த்தேன். இந்திய சினிமாவில் அமீர்கான் அளவிற்கு அர்ப்பணிப்புடன் புதிய கதைகளன்களைத் தேர்வு செய்து நடிக்கும் நடிகர்கள் குறைவு. இப்படத்தில் அவரது இன்னொரு பரிமாணத்தைக் காணமுடிகிறது.

விளையாட்டுச் சார்ந்த படங்களில் கதாநாயகன் அல்லது நாயகி தான் பிரதானமாக இருப்பாள். ஆனால் இதில் அமீர்கான் மையக்கதாபாத்திரம் மட்டுமே. அவர் மல்யுத்தப்போட்டியில் தனது இரண்டு மகள்களை ஈடுபடச்செய்வதும் அவர்கள் வெற்றியின் படிக்கட்டுகளில் ஏறி உச்சத்தை அடைவதுமே கதை.

இளம் மல்யுத்த வீரராகவும், ஒரு அப்பாவாகவும், பயற்சியாளராகவும் அசத்தியிருக்கிறார் அமீர். அத்தனைக்கும் கச்சிதமாகத் தனது உடலை மாற்றியிருப்பதுடன் அதற்கான நடை உடை பாவனைகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த ஆண்டிற்கான தேசிய விருது அவருக்காகக் காத்திருக்கிறது என்பது நிஜம்.

படத்தில் என்னைக் கவர்ந்தவர்கள் அமீர்கானின் இரண்டு மகள்கள். இளம் வயது கீதாவாக வரும் ஜைரா வாசிம், வளர்ந்த கீதாவாக வரும் பாத்திமா சனா, சிறுமி பபிதாவாக வரும் சுஹானி, வளர்ந்த பபிதாவாக வரும் சான்யா மல்கோத்ரா ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் நடிகர்கள் போலவேயில்லை. முறையான மல்யுத்த வீராங்கனைகள் போலச் சண்டையிடுகிறார்கள். அவர்களின் நடையும் பார்வையும் உணர்ச்சியை வெளிப்படுத்தும் விதமும் அற்புதம்.

குறிப்பாக இளவயது கீதா மல்யுத்த போட்டியில் வென்றபிறகு நடந்து வரும் காட்சி அபாரம் . சேது ஸ்ரீராம் தமிழகத்தைச் சேர்ந்த ஒளிப்பதிவாளர். என் நண்பர். அவரது பங்களிப்பு உலகத்தரமானது. பீரிதமின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பிரமாதம்.

தேர்ந்த படத்தொகுப்பு. கச்சிதமான கதாபாத்திரங்கள், காலகட்ட மாற்றங்களைத் துல்லியமாக வெளிப்படுத்தும் கலை இயக்கம் எனப் படம் பொழுதுபோக்கு சினிமாவின் அடுத்தப் பரிமாணமாக உருக்கொண்டுள்ளது.

முதல்முறையாகக் கீதா போட்டியில் ஒரு பையனுடன் மல்யுத்தம் செய்து வென்று திரும்பும் போது அரங்கமே ஆரவாரம் செய்கிறது. அது போலவே அமீரும் கீதாவும் பயிற்சிகளத்தில் மல்யுத்தம் செய்து கொள்வதும் தந்தையால் சீண்டப்படும் கீதா அவரை வீழ்த்தி வெல்லும் போது பபிதாவின் முகத்தில் தோன்றும் வருத்தம், கோபம், பபிதாவிற்கும் கீதாவிற்கும் நடக்கும் உரையாடல் யாவும் அற்புதம்.

பாட்டியாலாவின் தேசிய பயிற்சிகூடத்திலிருந்து இரண்டு மகளையும் நீக்கப்போகிறார்கள் என அறிந்து அமீர்கான் விசாரணை அதிகாரிகளிடம் பேசும் காட்சி அவரது நடிப்பின் உச்சம். மகளின் வெற்றியை அவர் சிறு கண் அசைவிலே அங்கீகரிக்கும் விதம். உறங்கும் மகளின் காலை அமுக்கிவிடும் தந்தையின் பாசம், போட்டியில் உற்சாகப்படுத்தும் விதம் என மாவீர் சிங் போகத் என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் அமீர்கான்.

மல்யுத்தப்போட்டிகள் எப்படி நடத்தப்படுகின்றன. அதில் வெற்றி தோல்வி எவ்வாறு முடிவு செய்யப்படுகிறது எனப் படத்தில் அடிப்படை தகவல்கள் எளிய பார்வையாளனுக்குச் சரியாகப் புரிய வைக்கப்பட்டுள்ளன. இதனால் மல்யுத்தத்தின் மீது புதிய ஆர்வம் இளைஞர்களிடம் உருவாகும் என்பது நிச்சயம்

ஹரியானாவில் நடந்த உண்மை சம்பவத்தினைப் படமாக்கியிருக்கிறார்கள். சுவாரஸ்யத்திற்காக எவ்விதமான மசாலாக்களையும் சேர்க்காமல் மிக நேர்மையாகப் படமாக்கியுள்ளதற்காக இயக்குனர் நிதேஷ் திவாரிக்கு வாழ்த்துகள்.

அமீர்கான் இந்திய சினிமாவின் பெருமிதம். அவசியம் காண வேண்டிய படம் தங்கல்.

••

Archives
Calendar
December 2017
M T W T F S S
« Nov    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: