இளமையின் சங்கீதம்

இரண்டு நாட்களுக்கு முன்பாக LA LA LAND என்ற ஹாலிவுட் திரைப்படத்தைச் சத்யம் திரையரங்கில் பார்த்தேன். அரங்கம் முழுவதும் இளைஞர்கள். படம் முழுவதும் கைதட்டி ரசித்துக் கொண்டாடுகிறார்கள்.  இசை நிகழ்ச்சியின் போது உற்சாகத்தில்  ஆடுவது போன்ற சந்தோஷப்பீறிடலை  படம் தருகிறது.

இளமை ததும்பும் படம் என்பதற்கு இப்படம் ஒரு அத்தாட்சி. மூன்று ஆஸ்கார் விருதுகள் பெற்ற திரைப்படமான Whiplash படத்தை இயக்கிய Damien Chazelleயின் புதிய படமிது.

டேமியன் முறையாக மேற்கத்திய இசை பயின்றவர். இசைக்குழு ஒன்றில் டிரம்மராகப் பணியாற்றியவர். இதனால் அவரது திரைப்படங்கள் இசையை மையமாகக் கொண்டு உருவாக்கபடுகின்றன. இப்படமும் ஜாஸ் இசையைப் பற்றியதே.

டைட்டானிக் திரைப்படம் இளைஞர் மத்தியில் உருவாக்கிய எழுச்சியை இப்படமும் உருவாக்கியுள்ளது.

ஒரு காதல்கதையை ஜாஸ் இசையோடு ஒன்றிணைத்து உருவாக்கியிருக்கிறார்கள். படத்தின் துவக்ககாட்சி அபாரமானது. ஹாலிவுட் படங்களின் துவக்க காட்சிகளில் இது ஒரு சாதனை. லாஸ் ஏஞ்சலஸ் நகரின் டிராபிக்கில் நிற்கும் கார்களில் இருந்து இறங்கி ஆடிப்பாடும் இளைஞர்களின் உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது. இப்பாடலில் அரங்கமே ஆரவாரம் செய்கிறது

நடிப்பிற்காக வாய்ப்பு தேடிக் கொண்டிருப்பவள் மியா. Auditionக்காகப் போக வேண்டிய நேரத்தில் போக்குவரத்து நெருக்கடியில் மாட்டிக் கொள்கிறாள். அப்போது தற்செயலாகச் செபஸ்டியனை சந்திக்கிறாள். அவன் ஒரு பியானோ இசைக்கலைஞன். ஜாஸ் இசையில் தீவிர ஈடுபாடு கொண்டவன். முதற்சந்திப்பில் இருவரும் மோதிக் கொள்கிறார்கள்.

அன்றிரவு ஒரு பார்ட்டி அதற்குத் தோழிகள் மியாவை அழைத்துப் போகிறார்கள். திரும்பி வரும் போது மியா எங்கிருந்தோ வரும் இசையில் ஈர்க்கபட்டு இசையைப் பின்தொடர்ந்து செல்கிறாள். அங்கே செபஸ்டியனை மீண்டும் சந்திக்கிறாள். இந்த முறையும் அவர்களுக்குள் சந்திப்பு நிகழவில்லை. அந்த இரவு அற்புதமாகப் படமாக்கபட்டுள்ளது

செபஸ்டியனை ஜாஸ் இசை வாசிக்கக் கூடாது எனத் தடுக்கிறார் உணவக உரிமையாளர் பில். அவன் அதை ஏற்க மறுக்கிறான். இதனால் வேலைபோகிறது அந்தச் சந்திப்பில் . மியாவை அவன் கண்டுகொள்ளவில்லை.

படத்தின் திரைக்கதை ஒவ்வொரு பருவகாலமாக மாறிக்கொண்டிருப்பதாக அமைக்கபட்டுள்ளது. அடுத்தச் சந்திப்பில் ஒரு இசைக்குழுவில் செபஸ்டியன் வாசித்துக் கொண்டிருக்கிறான். அந்தக் குழுவிடம் தனக்குப் பிடித்த பாடலை இசைக்கும்படி கேட்கிறாள் மியா. அதன்பிறகு இருவரும் பரஸ்பரம் அறிமுகமாகிக் கொள்கிறார்கள்

செபஸ்டியன் அவளை ஒரு ஜாஸ் கிளப்பிற்கு அழைத்துப் போகிறான். இருவரும் சேர்ந்து இசையை ரசிக்கிறார்கள். ஒன்றாகத் திரைப்படத்திற்குப் போகிறார்கள். முதல்முறையாகத் தயக்கத்துடன், ஆசையுடன் முத்தமிட்டுக் கொள்ள முயலும் போது திரையில் படம் அறுந்து போய்விடுகிறது. அரங்கம் விழித்துக் கொண்டுவிடுகிறது. ஆகவே அரங்கிலிருந்து வெளியேறி பிளானடோரியம் ஒன்றிற்குப் போகிறார்கள். ஒளிரும் நட்சத்திரங்கள் நிரம்பிய வானம். ஏகாந்தமான இரவு. காதலால் மியா மிதக்க துவங்குகிறாள். அந்தப் பாடல் காட்சி இளமை கொண்டாட்டத்தின் அடையாளம்.

மியாவின் காதல் மெல்ல வளர்கிறது. பரஸ்பரம் தங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ளப் போராடுகிறார்கள். ஜாஸ் இசைக்குப் புத்துயிர்ப்பு தர முயற்சிக்கிறான் செபஸ்டியன். அதற்காக மியா நிறைய யோசனைகள் சொல்கிறாள். உதவிகள் செய்கிறாள். அது போலவே அவள் நடிகையாவதற்கு உதவி செய்கிறான் செபஸ்டியன். காதலும் சண்டையும் பிரிவும் தனிமையும் இசையோடு இணைந்து விரிகின்றன. ததும்பி வழியும் ஜாஸ் இசையே படத்தின் பலம். காதலும் இசையும் இரண்டு சிறகுகளைப் போல விரிந்து நம்மைப் பறக்க வைக்கின்றன. படத்தின் முடிவு நாம் எதிர்பாராதது.

Jacques Demy இயக்கிய The Umbrellas of Cherbourg, The Young Girls of Rochefort போன்ற இசையை மையமாகக் கொண்ட படங்களி பாதிப்பிலிருந்தே இப்படத்தை உருவாக்கியதாக இயக்குனர் கூறுகிறார். ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இசைப்படங்களை நினைவுகூறுவதாகவும் இப்படத்தில் பல காட்சிகள் இடம் பெற்றுள்ளன. தேர்ந்த, கவித்துவமான ஒளிப்பதிவு. துள்ளும் இசை. குறைவான கதாபாத்திரங்கள். காலமாற்றங்களின் வழியே நீளும் திரைக்கதை. அற்புதமான நடிப்பு என இப்படம் பொழுதுபோக்கு சினிமாவின் முழுவிருந்து என்றே சொல்லத் தோன்றுகிறது.

ஏழு கோல்டன் குளோப் விருதுகள் பெற்றுள்ள இப்படம் நிச்சயம் ஆஸ்கார் விருதுகளில் மூன்றோ நான்கோ பெறக்கூடும். இளமை கொண்டாட்டத்தை அனுபவிப்பதற்காக இதனைத் திரையரங்கில் சென்று அவசியம் காண வேண்டும்.

••

Archives
Calendar
December 2017
M T W T F S S
« Nov    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: