காணாமல் போனவன்

ஆஸ்கார் விருதிற்கான சிறந்த படம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது Lion திரைப்படம். ஆஸ்திரேலியத் தயாரிப்பான இப்படத்தின் கதைக்களம் இந்தியா.  ஸ்லம் டாக் மில்லினியர் படத்தில் நடித்த தேவ் படீல் முக்கிய நடிகர். படத்தின் இயக்குனர் Garth Davis.  இது இவரது முதற்படம்

A Long Way Home / Saroo Brierley என்ற புத்தகத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கபட்டுள்ளது.

ஐந்து வயதில் வீட்டை விட்டு ஒடி காணாமல் போய் ஆஸ்திரேலியத் தம்பதிகளால் தத்துப்பிள்ளையாக வளர்க்கபடும் சாரோ இருபது ஆண்டுகளுக்குப் பின்பு தனது தாயைத் தேடிக் கண்டுபிடித்து ஒன்று சேரும் உணர்ச்சிப்பூர்வமான கதை.

மத்திய பிரதேசத்திலுள்ள Khandwa நகரை ஒட்டிய கணேஷ்தலி என்ற சிற்றூரில் வசிக்கும் சாரோவும் குட்டுவும் விளையாட்டுதனமான சிறார்கள். ஒடும் ரயிலில் ஏறி நிலக்கரி திருடுகிறார்கள். அம்மாவிற்குப் பல்வேறு விதங்களில் உதவி செய்கிறான் சாரோ. ஒருநாள் இரவு குட்டுவும் சாரோவும் அருகிலுள்ள ரயில் நிலையத்திற்கு வேலைதேடி போகிறார்கள்.

அங்கே பெஞ்சில் உறங்கிவிடும் சாரோ வழி தெரியாமல் ரயிலில் ஏறி கல்கத்தாவிற்குப் போய்விடுகிறான். சொந்த ஊருக்கு திரும்பிப் போக வழிதெரியவில்லை. பசியோடு உறங்க இடமில்லாமல் கல்கத்தாவில் சுற்றியலைகிறான்.

முடிவில் காவல்துறையால் மீட்கப்பட்டுச் சீர்திருத்தப்பள்ளி ஒன்றில் சேர்க்கபடுகிறான். அங்கிருந்து ஆஸ்திரேலிய தம்பதிகளால் தத்து எடுக்கபட்டு ஆஸ்திரேலியா போய்ச் சேருகிறான். Nicole Kidman வளர்ப்புதாயாக நடித்திருக்கிறார்.  சாரோவின் வாழ்க்கை திசைமாறுகிறது. வளர்ந்து பெரியவன் ஆகிறான். மெல்போர்ன் நகரில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படிக்கிறான்.

அங்கே நண்பர்களின் சந்திப்பில் தனது கடந்தகாலத்தைப் பற்றிப் பகிர்ந்து கொள்கிறான். அந்த நினைவுகளின் பீறிடல் காரணமாகத் தனது சொந்த ஊரை, வீட்டை, தாயைத் தேட ஆரம்பிக்கிறான். இதற்குக் கூகிள் எர்த் மேப் உதவி செய்கிறது. அதன் உதவியால் கணேஷ்தலி என்ற ஊரை கண்டுபிடித்து எப்படிச் சேருகிறான் என்பதே படம்.

இந்தூரை ஒட்டிய பகுதிகளில் சாரோவின் பால்யகாலத்தைப் படமாக்கியிருக்கிறார்கள். அற்புதமான ஒளிப்பதிவு. சாரோவாக நடித்துள்ள சிறுவன் அசத்தியிருக்கிறான். ரயில் தண்டவாளத்தில் நடப்பது. ஜாங்கிரி சாப்பிட ஆசைப்படுவது. குளிர்பானம் குடிப்பது. இரவில் ரயில் நிலையத்திலிருந்து தப்பி ஒடுவது, என அச்சிறுவன் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறான்.

ஸ்லம் டாக் மில்லினியர் படத்தில் நடித்த தேவ் படீல் இப்போது வளர்ந்து இளைஞனாகியிருக்கிறான். என்னவொரு கம்பீரம். அவனது குரலும் நடிப்பும் அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. படத்தில் ஒரு காட்சியில் ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி என்ற ஏ.ஆர். ரஹ்மான் பாடல் அழகாகப் பயன்படுத்தபட்டுள்ளது.

இப்படம் ஒரு உண்மைச்சம்பவம். படத்தின் இறுதியில் உண்மையான சாரோவும் அவனது அம்மாவும் காட்சி தருகிறார்கள். வளர்ப்புதாயும் உண்மையான தாயும் கட்டிக் கொள்கிறார்கள். கூகிள் எர்த் உதவியால் எப்படித் தன் ஊரைக்கண்டுபிடித்தான் என்ற விபரம் காட்டப்படுகிறது

தொலைந்து போன தனது உறவுகளைத் திரும்பக் கண்டுபிடித்து ஒன்று சேரும் காட்சி மிகவும் உணர்ச்சிபூர்வமாக உள்ளது. படத்தின் இறுதிகாட்சி கவித்துவமாக முடிகிறது.

உண்மைசம்பவம் என்பதால் படத்தில் எதிர்பாராத திருப்பங்கள் எதுவும் கிடையாது. சீராக வளர்ந்து செல்கிறது திரைக்கதை. இந்திய திரைப்படங்களில் ஒரு போதும் காட்சிப்படுத்தபடாத நிலக்காட்சிகள். வீதிகள். ரயில்வே பாலம். ஒடும் ஆறு. கல்கத்தாவின் நெரிசல் மிக்க ரயில் நிலையம். குடியிருப்புகளைத் தேடித்தேடி படமாக்கியிருக்கிறார்கள்

ஆங்கிலப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற நினைவேயில்லை. பாதிக்கு மேல் ஹிந்தி. இப்படத்திற்கு நிச்சயம் ஏதாவது பிரிவில் ஆஸ்கார் விருது கிடைக்ககூடும். ஒளிப்பதிவிற்குக் கிடைத்தால் சந்தோஷப்படுவேன்.

இந்தப் படத்தைக் காணும் போது இதே போலச் செங்கல்பட்டை சேர்ந்த ஒரு சிறுவன் அமெரிக்காவிற்குத் தத்துபிள்ளையாகப் போய்ப் பலவருஷங்களுக்குப் பிறகு ஊர் திரும்பி தனது தாயை கண்டுபிடித்த செய்தி நினைவில் வந்து போனது. அச் செய்தி புகைப்படத்துடன் செய்திதாளில் வந்திருந்தது. அதைத் துண்டித்து வைத்திருந்தேன்.

ஒரு திரைப்படம் உருவாவதற்கு இது போலச் சின்னச்சிறு பொறி போதும். எண்ணிக்கையற்ற நிஜசம்பவங்களின் பின்னே கதைகள் ஒளிந்திருக்கின்றன. அவற்றைக் கண்டுபிடிப்பதும் உரிய முறையில் காட்சிப்படுத்துவதும் இயக்குனரின் வேலை.

டொரன்டோ திரைப்படவிழா உள்ளிட்ட பல்வேறு திரைப்பட விழாக்களில் இப்படம் கலந்து கொண்டு மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது

••

Archives
Calendar
April 2017
M T W T F S S
« Mar    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Subscribe

Enter your email address: