குறத்தி முடுக்கின் கனவுகள்


தமிழில் எனக்கு பிடித்தமான காதல்கதை குறத்திமுடுக்கு. உடல் இச்சையிலிருந்து துவங்கி  காதலை நோக்கி நகர்வது தான் இதன் தனிச்சிறப்பு.


தமிழ் புனைகதையுலகில் அதிகம் காதல்கதைகள் எழுதப்படுவதில்லை. அரிதாக எழுதப்படும் நேரங்களில் கூட அது உடல்இச்சையை கவனமாக தவிர்த்துவிடுகின்றன. காதலின் பிரிக்க முடியாத ஈர்ப்பு காமம் என்பதை கதைகள் அதிகம் விவரிப்பதேயில்லை. வேறு எந்த உணர்ச்சியையும் விட காமமே மனிதனின் ஆதார பிரச்சனை. அதை வெளிப்படுத்துவதிலும் நுகர்வதிலும் சமூகம் உருவாக்கிய தடைகளும் கட்டுபாடுகளுமே தனிமனதின் தீராதபிரச்சனையாக இருக்கின்றன.


துக்கம், சந்தோஷம் போன்றவை ஏதாவது ஒரு தருணத்தில் கட்டுக்குள் அடங்காமல் பீறிடுகின்றன. அதை பொதுவெளி அங்கீகரித்து ஏற்றுக் கொள்கிறது. அப்படி காமம் காட்டுதீயென அடங்க மறுத்து கொந்தளிப்பதையோ, காமத்தின் மிகை நாடகத்தையே அனுமதிப்பதேயில்லை. ஆண் பெண் இருவரின் பரிச்சயம் அல்லது நட்புணர்வு அதில் உருவாகும் மனக்கிளர்ச்சிகளே தமிழ்காதலுக்கு போதுமானதாகயிருக்கிறது.


உடல் காமத்தின் சுழல்வெளி. அது உருவாக்கும் சூறாவளிகளும். ஒருவரையொருவர் அந்த சுழலுக்குள் ஒப்புக் கொடுத்து உருவாக்கும் விந்தைகளும் தமிழ் கதை எழுத்தின் கறாரான ஒழுக்கவிதிகளால் தொடர்ந்து விலக்கபட்டு வந்திருக்கின்றன. எளிய மனிதன் எல்லா காலத்திலும் காமத்தால் தான் அதிகம் பீடிக்கபட்டிருக்கிறான். அவனை உடல் இச்சை தீராதநோய் என்று வதைக்கிறது. ஆனால் அதை நேர்கொள்ள அவனுக்கு இயலவில்லை. அரிதாக கிடைக்கும் சந்தர்ப்பங்களில் காமத்தை பசியை நேர்கொள்வது போன்று விழுங்கவே செய்கிறான். உடலின் உள்ளே புகையும் நறுமணசுழல் அவனால் நுகரப்படுவதேயில்லை. ஆணோ பெண்ணோ காமத்தை அவசரமில்லாமல் அணுக தெரியாதவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.


படகின் இரண்டு துடுப்புகள் புறவிசையால் முன்நகர்வது போல காமம் அவர்களை முன்நகர்த்துகிறது அவ்வளவே. நாகராஜனின் எழுத்துகளில் இந்த பாசாங்குகள். காதல் தெய்வீகமானது என்ற போலித்தனங்கள் எதுவுமில்லை. காரணம் அதில் வரும் ஆண் பெண்கள் தங்கள் உடலின் தேவைகளின் வழியாகவே அடுத்த நிலைகளை கண்டறிய துவங்குகிறார்கள். பலநேரங்களில் பாலியல் தூய்ப்பின் பின்பாக அவர்களுக்கு பேச்சும், சாவகாசமான உடல் ஆராதனைகளும் தேவைப்படுகின்றன.


ஒருவகையில் உடலை கடந்து செல்லும் முயற்சியாக அதை கொள்ளலாம். மனதில் தேவையற்ற கிளர்ச்சிகள் இல்லாமல் அவர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். ஒழுக்கம், கற்புநெறி போன்ற கலாச்சாரநெருக்கடிகள் அவர்களை தீண்டுவதில்லை. பெரும்பான்மை காதல்கள் உடலின்பத்தின் காரணமாகவே அடுத்த நிலைகளுக்கு செல்கின்றன என்பதே நடைமுறை உண்மை.


குறத்திமுடுக்கு 61 பக்கமே உள்ள குறுநாவல். இதை பெரிதாக எழுத நாகராஜனிடம் திட்டமிருந்தது என்கிறார்கள். ஒருவகையில் அவரது பிரதான கதையுலகின் மிக முக்கிய மாதிரிபிரதி என்று இதை சொல்லலாம். நாகராஜன் திருநெல்வேலியில் வாழ்ந்த காலத்தில் அனுபவித்த மாடத்தெரு வாழ்க்கையை தான் குறத்திமுடுக்கு என்று மாற்றிவிட்டார் என்றும் குறிப்பிடுகிறார்கள்.


திருநெல்வேலியில் அந்த காலத்தில் மாடத்தெரு வேசைகளுக்கு பெயர்போனது. குறத்திமுடுக்கின் பெயர் வள்ளிகுறத்தி முடுக்கு என்றும் அதை முழுமையாக யாரும் அழைப்பதில்லை என்றும் கதையில் ஒரு வரி இடம்பெற்றிருக்கிறது.
முடுக்கு என்பது சிறிய சந்து. திருநெல்வேலியில் கல்லத்திமுடுக்கு  என்று ஒரு சிறிய சந்து இருக்கிறது. குறத்திமுடுக்கின் வசீகரம் இந்த இரண்டு சொற்களில் இருந்தே துவங்குகின்றது.


குறத்தியின் மீதான மையல் எப்போதும் தீராதது. குறத்திகள் அழகை மறைப்பதில்லை. அத்துடன் தன் உடல்வனப்பை அவர்கள் வேடிக்கையாக்குகிறார்கள். குறவன் குறத்தி ஆட்டம் பார்க்கையில் குறத்தி தன் உடல் உறுப்புகளை பகடைகளை போல உருட்டி விளையாடுகிறாள். நேரடியாக காமத்தை பேசுகிறாள். குறவன் அவள் உடல்மீதான தனது ஈர்ப்பை ஒளிவில்லாமல் சொல்கிறான். தேவானை வள்ளி என்று இரண்டு பெண்களை முருகன் மணந்த போதும் தேவானை அதிகம் கொண்டாடப்படுகின்றவள் இல்லை. மாறாக வள்ளியே என்றைக்கும் வசீகரமான இருப்புடன்  தொடர்ந்து பேசப்படுகிறாள்.


நாவலின் முகப்பில் என் வருத்தம் என்ற பெயரில் சிறிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. அது நாட்டில் நடப்பதை சொல்லியிருக்கிறேன். அதில் உங்களுக்கு பிடிக்காதது இருந்தால் ஏன் இப்படி நடக்கிறது என்று வேண்டுமானால் கேளுங்கள். ஏன் இதை எழுத வேண்டும் என்று கேட்காதீர்கள். உண்மையை சொல்வது என்றால் முழுமையும் தான் சொல்லவேண்டும். நான் விரும்புமளவு சொல்ல முடியவில்லையே என்பது தான் வருத்தம் என்று ஆசிரியர் குறிப்பிடுவது போல உள்ளது.


தமிழில் வேசைகளை பற்றிய குறிப்புகளும் அவர்களிடம் பொருளை இழந்தவர்களை பற்றிய கதைகளும் நிறையவே உள்ளது. சிலப்பதிகாரம் காட்டும் வேசையின் வாழ்க்கை நுண்கலைகளின் கொண்டாட்டத்தின் உயர்நிலை போன்றே உள்ளது. ஒவ்வொரு ஊரிலும் ஏதோவொரு வீதி வேசைகளின் குடியிருப்பாக இருந்திருக்கிறது. அங்கு வந்து போனவர்களின் கதையும். காலமாற்றத்தில் அங்கிருந்த குடும்பங்கள் வெளியேறிப்போன நினைவுகளும் ஊர் ஊருக்கு சிதறிக்கிடக்கின்றன. தமிழ்குடும்பங்களில் இன்றைக்கும் சற்று கூடுதலாக பெண்கள் அலங்காரம் செய்து கொள்வது வேசைத்தனம் என்ற பொதுப்புத்தியே வெளிப்படுத்தபடுகிறது.


நாகராஜனின் கோபம் வேசைகளின் இயல்புலகை சொல்வதில் எதற்காக இத்தனை ஒழுக்ககட்டுபாடுகள் என்பதில் தான் இருக்கின்றது. அவர் அந்த கட்டுபாடுகளுக்குள் நின்றவரில்லை. அதே நேரம் அவரை அறியாமல் அவருக்குள்ளும் நிரம்பியிருந்த ஆண்வய பாலியல் நுகர்வுணர்ச்சி தடைகள், வெளிப்படுத்தும் முறைகள் நாவலில் வெளிப்படுத்தபடுகின்றன.


நாகராஜனின் விருப்பத்திற்குரிய எழுத்தாளர் தாமஸ்வுல்ப். இவர் அமெரிக்காவின் நவீன நாவலாசிரியர்களில் மிக முக்கியமானவர். பாக்னர் இவரை அமெரிக்க இலக்கியத்தின் மாபெரும்ந நாயகன் என்று கொண்டாடுகிறார். தாமஸ்வுல்பின் வாழ்க்கை பெருமளவு நாகராஜனின் சொந்த வாழ்க்கைக்கு அருகாமையில் இருக்கிறது. சுயஅனுபவங்களில் இருந்து நாடங்களும் நாவல்களும் எழுதி துவங்கி தாமஸ்வுல்ப் குடும்பத்தின் சிதைவையே தனது பிரதான கதைக்களமாக கொண்டார். அதுவும் குடி மற்றும் வேசைகளின் காரணமாக சிதறுண்டு போகும் குடும்பம் தான் அவரது கதைக்களம்.


தாமஸ்வுல்பின் இளவயதில் அவர் வேசைகளிடமே தனது பாலுறவு நாட்டத்தை தீர்த்து கொண்டதாகவும், வேசைகளுடனே சேர்ந்து வாழ்வதற்கு பிரயாசை பட்டதையும் அதில் ஏற்பட்ட சிக்கல்களையும் ஒளிவுமறைவின்றி எழுதியிருக்கிறார். அவரது Look Homeward, Angel, , முக்கியமானது. அந்த நாவலில் ஒரு இடத்தில் தாமஸ்வுல்ப் நிர்வாணமாகவும் தனியாகவுமே நாம் பிறக்கிறோம்.கர்ப்பத்தில் இருந்த நாட்களில் நமக்கு தாயின் முகம் நினைவில் இருப்பதில்லை. உடலின் சிறையான கர்ப்பத்திலிருந்து சூழலின் சிறையான உலகிற்குள் நாம் பிரவேசிக்கிறோம். காமம் தான் உலகின் ஆதார விசை. அது தான் மனிதர்களை முன்நகர்த்துகிறது. என்று குறிப்பிடுகிறார்.அந்த எண்ணம் நாகராஜனுக்குள்ளும் ஆழமாக வேரோடியிருக்கிறது. நாகராஜனின் சமகால படைப்பாளிகள் ரஷ்ய இலக்கியங்களில் இருந்து தங்களது உந்துதல்களை உருவாக்கி கொண்ட போது அவர் அமெரிக்காவின் பிரதான படைப்பாளிகளிடமிருந்து தனது படைப்பிற்கான உந்துதல்களை பெறுகிறார். ஆனால் ரஷ்ய இலக்கியங்களை அவர் கவனமாக வாசித்திருக்கிறார் என்பதற்கு அவர் படைப்பின் ஊடாக வெளிப்படும் ருஷ்ய கதைகள் போன்ற புறச்சூழலை சித்தரிக்கும் விதம் வெளிப்படுத்துகிறது.


குறத்தி முடுக்கின் வீடுகள் தோறும் பெண்கள் நின்று கொண்டிருக்கின்றனர் என்ற முதல்வரியில் ஒரு காட்சி தோன்றிமறைகிறது. அங்கே நின்று கொண்டிருந்த  பெண்கள் காத்திருக்கிறார்கள். அக்கம்பக்கம் உள்ள தெருக்களில் அதிகப்படியான மனிதநடமாட்டம் இருக்கிறது. ஆனால் குறத்தி முடுக்கு மங்கலான வெளிச்சத்தில் பாதி இருளும் வெளிச்சமுமாக அறிமுகமாகிறது. அது தான் அங்குள்ள பெண்களின் மனநிலையும். அவர்கள் ஒரு போதும் முழுமையான வெளிச்சத்தை விரும்புகிறவர்கள் இல்லை.


தங்கள் இயல்பான விருப்பங்களைபாதி மறைத்து கொண்டு ஒரு நாடகம் போல காமத்தை அரங்கேற்றுகிறார்கள். உடலை ஒப்பு கொடுப்பதன் முன்பாக பேரம் பேச தெரிந்திருக்க வேண்டியிருக்கிறது. உடலின் மீதான ஈர்ப்பை உண்டுபண்ணி காமத்தை தூண்டவும். தணிக்கவும் நுட்பங்கள் அறிந்திருக்க வேண்டியிருக்கிறது. அங்கு வருகின்றவன் பெரிதும் தன் இயல்பை மறைத்துக் கொள்கிறவன். அவன் சூட்டை தணித்து கொள்வது என்று காமத்தை நினைக்கிறவன். அதனால் அவர்களின் அழகோ, கேலியான பேச்சோ அவனை பெரிதும் ஈர்ப்பதில்லை.


அவன் உடலை தேர்வு செய்கிறான். தன்னை தணித்து கொள்கிறான். அவ்வளவே. அப்படியொருவன் நாவலில் அறிமுகமாகிறான். அவனை கண்டதும் அங்குள்ள பெண்கள் அசைந்து கொடுக்கின்றார்கள் இலேசாக ஏதோ முணுமுணுக்கிறார்கள் என்ற ஒரு வரி வருகிறது. அது தான் உண்மையான இயக்கம். தன்னை காட்டிக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதே நேரம் இறங்கி அவனை தன்வசம் இழுக்கமுடியாது.அவனை தன்வசமாக்காவிட்டால் இன்னும் அதிக நேரம் காத்திருக்கவேண்டும். அந்த காத்திருப்பு அவமானகரமானது. அது பசியை மறைத்துக் கொண்டு தன்னை அலங்கரித்து கொண்டதை கலைத்து பசி தன்னை வெளிக்காட்டும் குரூரமான நிமிசம். சப்தமில்லாத அந்த முணுமுணுப்பு தன்னை தானே சமாதானப்படுத்திக் கொள்ளும் ஒரு தந்திரம் அவ்வளவே. அந்த வேசைகள் வீடுகளில் ஆண்கள் தற்காலிகமானவர்கள். அவர்கள் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். ஒற்றை அறை குடியிருப்பில் சினிமா படங்களை கத்தரித்து ஒட்டிக் கொண்டு பாயில் படுத்தபடியே தங்களை ஒப்புக் கொடுக்கும் பெண்களும் அவர்களின் வெறுமைபடிந்த பகல்களும் மிச்சமிருக்கின்றன.


அந்த வாலிபன் ஒரு இளம்பெண்ணை தேர்வு செய்கிறான். வயது பாலியல் தொழிலின் பிரதான வசீகரம். காமம் வயதோடு எவ்விதமான தொடர்பும் கொண்டதில்லை. ஆனாலும் இந்த போலிமயக்கம் என்றைக்குமிருக்கிறது. அவள் அந்த வாலிபனோடு பேரம் பேசுகிறாள். ஒரு ரூபாய் தருவதாக சொல்கிறான். அவள் மறுக்கிறாள். அவளை விலக்கி அவன் வெளியேற நினைக்கிறான். பசி அவளை ஜெயிக்க துவங்குகிறது. அவனை விட மனதில்லை.  தன் மார்பகங்களை காட்டுகிறாள். அவனிடம் மயக்கமில்லை. அவர் பேரத்தில் கறாராக இருக்கிறான். இரண்டு ரூபாய்க்கு பேரம் முடிகிறது.


 அவளாக பாயில் படுத்துக் கொண்டு தன் ஜம்பர் முடிச்சுகளை தளர்த்திக் கொள்கிறாள். அவன் முத்தமிடுகிறான்.  அவன் முத்திய ஒவ்வொரு இடத்தையும் அவள் துடைத்துக் கொள்கிறாள் என்றொரு வரி வருகிறது, முத்தங்களால் உருவான கறைகளை அவள் அவன் முன்னாடியே அழிக்கிறாள். முத்தம் காதலின் வெளிப்பாடு. அதை வெறும் நுகர்ச்சிவெளிப்பாடாக அவள் மனது ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. முத்தத்தைவேசை அழிக்கும் அந்த ஒரு வரி அற்புதமானது. அதில் தான் அவளது மனது வெளிப்படுகிறது. உடலை அவள் பகிர்ந்து கொள்ளும் ஒரு சாதனமாக்கிவிட்டாள். ஆனால் அதை மீறி அவளுக்குள் இயல்பான ஆசைகளும் விருப்பங்களும் இருக்கின்றன என்பதன் சுட்டல் அது. இன்னொரு பக்கம் ஆணின் முத்தம் வெறும்பாசங்கு. அதை அழித்து துடைப்பதை தவிர வேறில்லை என்ற பெண்ணின் அககுரலின் வெளிப்பாடு என்றும் அதை கொள்ளலாம்.


அவள் காமத்தை வெறும்சடங்காக கடந்துவிட நினைக்கிறாள். பொய்யான பேச்சு இருவருக்குள்ளும் ஏற்படுகிறது. பின்பு காமம் அவசரமாக நடந்தேறுகிறது. இருவரும் எழுந்து ஜலசுத்தி செய்து கொள்கிறார்கள். அவள் காபிக்கு தனியே காசு கேட்கிறாள். கதவு திறக்கபடுகிறது. அடுத்த வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த சற்றே வயதான ஒரு பெண் மரகதம் அதிர்ஷடக்காரி என்று பெருமூச்சுவிடுகிறாள்.


அதிர்ஷ்டக்காரியின் இரவு என்பது அல்பமான பேரத்தால் தான் நிறைந்திருக்கிறது என்பதன் வழியே குறத்தின் முடுக்கின் சிறிய குறுக்குவெட்டு தோற்றம் நமக்கு அறிமுகமாகிறது.


பொதுவாசகன் எப்போதுமே வேசை கதைகளில் தன்னை வாலிபனாகவே பொருத்திக் கொள்கிறான். ஒரு போதும் அவன் வேசையோடு தன்னை அடையாளம் கொள்வதில்லை. அவளது காத்திருப்போ, உடல் வலிகளோ அவனை துக்கமடைய செய்வதில்லை. அவன் வரையில் வேசையை பற்றிய கதைகள் என்பது ரகசியமான காமபிரதி. அது பாலுறவின் கிளர்ச்சிகளை அறிமுகப்படுத்தும் ஒரு தந்திரம் அவ்வளவே. தன் வயதின் காரணமாக எவரும் கூட வராமல் காத்திருந்து பெருமூச்சிடும் அந்த பேரிளம் பெண்ணின் முகம் நமக்கு தெரிவதில்லை. ஆனால் அந்த பெருமூச்சை இன்னொரு நாள் மரகதமும் விடப்போகிறாள் என்பதே நிஜம்.


மனிதர்களை வேறு எந்த உயிரினமும் பாலின்பத்திற்காக இத்தனை அவமானங்களை, அசிங்கங்களை உருவாக்கிக் கொள்வதோ, சந்திப்பதேயில்லை. வேசையர் விடுதியின் பொது உரையாடல் இங்கே நீ வந்து எவ்வளவு காலமாச்சி. உன்னோட உண்மையான பெயர் என்ன என்பதே. அது இந்த முதல் அத்தியாயத்திலே துவங்கிவிடுகிறது. காரணம் அது பொய்யான கனவுலகம் என்பது போலவே அதற்குள் பிரவேசிக்கின்றவன் நினைக்கிறான். அவன் தன்னை மறைத்துக் கொள்வதை போலவே அங்கிருப்பவர்களும் தங்களை மறைத்துக கொள்வார்கள் என்று எண்ணுகிறான். அதன்வெளிப்பாடே இந்த கேள்விகள்.


அடுத்த அத்யாயத்தில் கதையின் முக்கிய பாத்திரம் நான் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பத்திரிக்கை நிருபர் அறிமுகமாகிறான். அதுவும் ஒரு இரவுக்காட்சியே. டீக்கடையில் கிராமபோன் ஒடிக்கொண்டிருக்கிறது. இரவு காட்சி விடுவதற்கு இன்னும் கொஞ்ச நேரமிருக்கிறது. ஒட்டல் கிராம போன்கள் சர்க்கஸ் விளையாடிக்களைத்த சிறுமிகளை போல தொண்டை கனத்து தலைகவிழ்ந்து சிறிது நேர ஒய்வுக்குள் ஆழ்ந்துவிடும் என்ற அற்புதமான வரியின் வழியே கிராமபோன் உருவாக்கிய அலறல் நுட்பமாக பதிவாகிறது. மனிதர்களை பற்றிய கண்ணோட்டம் மாறும்போது வாழ்க்கையை பற்றிய கண்ணோட்டம் மாறிவிடுகிறது என்று அந்த கதாபாத்திரம் குறிப்பிடுகிறது. இந்த வரி தான் குறத்திமுடுக்கு நாவலின் மையச்சரடு. நாகராஜன் எழுத்தில் உருவாக்க நினைத்த முயற்சியும் இதுவே.


ஆணுக்கு பெண் தேவை. பெண்ணுக்கு ஆண்தேவை.  குழந்தை வளர்ப்பு என்ற தொல்லையை சமாளிக்கவே குடும்பம் என்ற அமைப்பு உருவாக்கபடுகிறது. காமத்தை தீர்த்துக் கொள்ள வழிகள் இருக்கும் வரை குடும்பம் தேவைப்படாது என்று நான் நம்புகிறேன் என்கிறது மையப்பாத்திரம். உண்மையில் குடும்பங்கள் தான் காமத்தின் பிரதான ஒடுக்குமுறை களமாக இருக்கிறது. அதிலிருந்து விடுபடவும். காமத்தை தனித்த உணர்ச்சி வெளிப்பாடாகவும் அடையாளம் காண விரும்புகின்ற மனதே பெரிதும் காமப்பெண்களை நாடி செல்கிறது.


காமத்தினுள் எப்போதும் ஒளிந்திருக்கும் புழு போல கர்ப்பமாகிவிடுவது பற்றிய அபாயம் நெளிந்து கொண்டேயிருக்கிறது. கர்ப்பமில்லாத காம உறவு என்பது தான் வேசைமையின் பிரதான அடையாளம்.


பின்னிரவில் நிருபர் குறத்திமுடுக்கின் வழியே நடந்து போகிறான். எட்டுமணிக்கு அந்த தெருவில் இருந்த ஜாலங்கள் இப்போது ஒடுங்கியிருந்தன.  பிசாசின் குரலில் வரவேற்பு கொடுக்கும் காம அழைப்புகள் ஒய்ந்திருந்தன. புதிய சரக்கு ஒன்றினை தேடிப்போகிறான் அவன். அந்த பெண் சுத்தமான அறையில் இருந்தாள். சுவரில் ராமன் சீதை படமும் சிவன் பார்வதி படங்களும் ஒட்டப்பட்டிருந்தன. காமத்தின் நித்ய சாட்சிகள் கடவுள்கள் தானே. இரண்டு நாட்களாக தொடர்ந்து சினிமாவுக்கு போய்க் கொண்டிருந்தேன் என்று சொல்லி தங்கம் அறிமுகமாகிறாள்.  அவள் தன்னுடைய உண்மையான பெயர் லட்சுமி என்றும் இங்கே வந்தபிறகு தங்கம் என்று மாற்றிக்கொண்டதாக சொல்கிறாள். இந்த விளக்கம் எல்லாம் தன்னை ஏமாற்ற தானே என்று அவன் சந்தேகபடுகிறான்.


அவள் மிக இயல்பாக அவனை கேலி செய்தபடியே படுக்கையை போடுகிறாள். உரிமையோடு அவனை கட்டிக் கொள்கிறாள்.  ஏன் முடியை இவ்வளவு நீளமாக வச்சிருக்கீங்க என்று கேட்கிறாள். வேசைகளின் செயல்கள் வெறும்நடிப்பு என்று நம்பும் பொதுபுத்தி அவனுக்குள்ளும் எழுகிறது. அவன் அந்த செய்கைகளுக்கு உள்காரணம் இருக்க கூடும் என்று சந்தேகிக்கிறான். பாலுறவுக்கு பிறகு அவனிடம் சந்தோஷம் தானா என்று தங்கம் கேட்கிறாள்.  எப்படி பதில் சொல்வது என்று தெரியாமல் சங்கோசப்படுகிறான். பிறகு அங்கிருந்து விடைபெற்று தன் அறையை நோக்கி செல்கிறான்.


குறத்தி முடுக்கு நாவலில் வரும்பெண்கள் சினிமாவை தங்களது அந்தரங்கமான வடிகாலாகா கொண்டிருக்கிறார்கள். சினிமா படங்களை வெட்டி அறையில் ஒட்டி வைத்து கொள்கிறார்கள். சினிமாவிற்கு போகிறார்கள். சினிமா பற்றிபேசிக் கொள்கிறார்கள். அது விழித்தபடியே கனவு காண்பது என்று அவர்களுக்கு புரிகிறது. அந்த பெண்களின் கனவுகள் நீர்குமிழ்கள் போல தோன்றிய சில நிமிசங்களில் அழகுகாட்டி உடைந்துவிடுகின்றன. சில கனவுகளை அவர்கள் துரத்தி போகிறார்கள்.அது கானலை போல அவர்களை திசை தெரியாமல் கொண்டுபோய்விடுகிறது.


வேசையர் உலகின் பகல்பொழுதுகள் வெறுமையின் கால்களால் நத்தையை போல மெதுவாக கடந்து போக கூடியவை. அதை கடத்தவே வேண்டியிருக்கிறது. பகல் உறக்கமும் தனிமையை மறைத்துக் கொள்ள கூடிய விளையாட்டுகளுமே துணை. குப்ரின் தனது யாமா நாவலில் வேசைகள் ஒன்றாக ஒரு செங்கல்சுவரின் மீது உட்கார்ந்து  கொண்டு வானில் தென்படும் சூரியனை பார்த்து பேசி சிரித்துக் கொண்டிருப்பார்கள் என்றொரு காட்சியை சித்தரிக்கிறார். அது வெறும்பகல் காட்சியல்ல. மாறாக அவர்களின் தீராத அகதனிமையை வெளிப்படுத்தும் அற்புதமான தருணம். நாகராஜன் நாவலிலும் வேசைகளின் பகல்பொழுது அற்புதமாக சித்தரிக்கபடுகிறது.


ஏன் பகல் காமம் பொதுவில் விலக்கபடுகிறது. அடிநிலை மக்கள் பகல்காமத்தை பெரிதும் விரும்புகிறார்கள். இரவுக்காமம் உயர்மரபுகளுடன் தொடர்புடையதாகவே இருக்கிறது. பெரும்பான்மை உயிரினங்கள் பகல்காமத்தையே கொண்டிருக்கின்றன.


மரகதம் என்ற பெண்ணும் செண்பகமும்  தாயமாடுகிறார்கள். அங்கே மரகத்தை காதலிக்கும் ஒரு இளைஞன் அறிமுகமாகிறான். அவன்  சினிமா பார்க்க அவளிடம் காசு கேட்கிறான்.அவனை அணைத்து முத்தமிட்டு கொஞ்சுகிறாள். அவள் கண்களில் நீர் ததும்புகிறது. இளைஞன் அவள் இடுப்பில் காசை ஒளித்து வைத்திருக்கிறாளா என்று தேடுகிறான். ஆள் வருவதை கண்டு அந்த இளைஞன் ஒடிவிடுகிறான். வந்தவனை தாஜா செய்து காசு வாங்குகிறாள் மரகதம். அதை அந்த இளைஞன் பறித்துகொண்டு போகிறான். மரகதம் தன்னை தேடி வரும் ஆண்களிடம் கிடைக்காத ஒரு உறவை அந்த இளைஞனின் வழியே எதிர்பார்க்கிறாள். அவளது உடல் ஆண்களுக்கு தான் கவர்ச்சி அவளுக்கு அது வெறும் சதை திரட்சி அவ்வளவே. அவளுக்குள் தான் காதலிக்கபட வேண்டும் என்ற ஏக்கமே ததும்பிக்கொண்டிருக்கிறது.


தங்கத்திடம் ஏற்பட்ட காம ஈர்ப்பு மெல்ல காதலாகிறது. அது தான் நாவலின் சிறப்பான வளர்ச்சி. அவன் தங்கம் வேசையாக நடந்து கொள்வதில்லை என்பதற்காக அவளை பிடித்திருப்பதாக சொல்கிறாள். அவள் ஒரு வாடிக்கையாளர் என்பதை தாண்டி அவனை தனது காதலனை போல நடத்துகிறாள். அந்த காதலை சொல்ல தெரியாமலே அவன் தடுமாறுகிறான்.  அத்துடன் அவள் காமத்தின் தூண்டுதலில் தன்னிடம் வருபவனை அதில் திளைக்க வைக்கிறாள். ஒருவகையில் அவள் காமத்தை கற்று தரும் ஒரு ஆசானாகிறாள். அவர்கள் பாலுறவுக்கு பிறகு அதிக நேரம் ஒன்றாக அமர்ந்து பேசவும் நிலவொளியை ரசிக்கவும் விரும்புகின்றவர்களாக மாறுகிறார்கள். அது தான் காதலின் முதற்குறி.


உடலை பற்றிய புதிய அர்த்ததை தான் கண்டுபிடித்துவிட்டதாக அவன் கருதுகிறான். உண்மையில் அங்கே நடந்தது மனத்தடைகள் இல்லாத காமத்தை அவன் நுகர்ந்தது மட்டுமே. அநேக ஆண்களின் மனதில் கொந்தளித்துகொண்டிருக்கும் தடையில்லாத காம நுகர்ச்சி அவனுக்கு சாத்தியமாகிறது. அவன் பாலுறவின் எழுச்சியை முற்றாக உணர துவங்குகிறான்.


இந்த உணர்ச்சியின் நேர் எதிர் அதன் அடுத்த அத்தியாயத்தில் விவரிக்கபடுகிறது. தங்கத்தின் வழியே காமம் ஒரு எழுச்சியாக அறிமுகபடுத்தும் அதே நேரம் கர்ப்பிணி பெண்ணாக செண்பகத்துடன் பாலுறவு கொள்ள வரும் ஒரு குடும்ப மனிதன் உடல்திணவை போக்கி கொள்ள அந்த பெண்ணை வன்புணர்ச்சி கொள்கிறான். அவளோ வலி தாங்கமுடியாமல் பல்லை நெறிக்கிறாள். அவன் போன பிறகு கதறுகிறாள்.   மற்றபெண்கள் உதவி செய்து அவளை தேற்றுகிறார்கள். காமம் உடலின் மீதான ஆக்ரமிப்பாக அடையாளப்படுத்தபடுகிறது.


தங்கத்தின் மீதான விருப்பம் அவளை காதலியை போலவே நடத்த விருப்பத்தை உருவாக்குறது. அதை அவள் ஏற்றுக் கொள்வதில்லை. அவள் காதல் காமம் இரண்டையும் பெரிதாக கொண்டவளில்லை. அவள் தன்னை நெருங்கிவரும் ஆணிற்குள் ஏக்கம் தீராத குழந்தைமை இருப்பதை அடையாளம் கண்டுவிடுகிறாள் போலும். அந்த நெருக்கம் தான் அவள் மீதான பிரேமையாக வளர துவங்குகிறது.  அவள் தன் கணவன் நடராஜனை பற்றி சொல்கிறாள். அவனது ஏமாற்றுதனத்தை அவன் தன்முதலாளியை தன்னிடம் கூட்டி கொடுப்பதை எடுத்து சொல்கிறாள். 


 ஆனால் அதெல்லாம் அவள் வரையில் தப்பான விஷயமில்லை. பணத்தாசை அவரை அப்படி நடந்து கொள்ள வைக்கிறது என்று சொல்கிறது. அந்த நிமிசங்களில் தங்கம் தன்னை எந்த செயலும் களங்கபடுத்துவிட முடியாது என்பதன் அடையாளமாக மாறுகிறாள்.


போலீஸ் குறத்திமுடுக்கு பெண்களை கைதுசெய்து கோர்டில் அபராதம் கட்ட வைக்கிறது. தங்கத்தை தனிவீடு எடுத்து கொடுத்து தன்னுடன் வைத்துக் கொள்ள அவன் விரும்புகிறான். தங்கம் மறுக்கிறாள். அவள் குடும்ப பெண்ணாக இந்த உலகை விட்டு விலகும் கனவுகள் அற்றவள் என்பது போலவே பேசுகிறாள். தங்கம் போலீஸ்காரர்களால் கைது செய்யபட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு போக படுகிறாள். தான் செய்வது வேசைதனம் என்றாலும் யாரையும் தெருவில் நின்று கையை பிடித்து இழுத்து வேசைமை செய்யவில்லை என்று கோபபடுகிறாள். ú போலீûஸ எதிர்த்து நீதிமன்றத்தில் பேச விரும்புகிறாள்.


அவளுக்காக நிருபர் சாட்சி சொல்கிறான். தங்கத்தை திருமணம் செய்து கொள்ள போவதாக நீதிமன்றத்திலே தெரிவிக்கிறான். அவ கெட்டுப்போனவள் இல்லையா என்று கேட்கும்போது நானும் கெட்டுப்போனவன் தான் என்கிறான்.


இந்த இடத்தில் நாவல் ஒரு முழுமையான காதல்கதையாகிவிடுகிறது. அவனை திருமணத்தை நோக்கி உந்து செல்வது காமம் அல்ல. சொல்லப்போனால் காமத்தை அடைவதற்கு அவனுக்கு வழிகள் திறந்தேயிருக்கின்றன. அவன் காதலிக்கபடவும் காதலிக்கவும் விரும்புகிறான். காதலியாக உள்ள பெண் குறித்த உயர்வெண்ணங்கள் அவனிடமில்லை. மாறாக அவனை புரிந்து கொண்டிருக்கிறாள் என்ற ஒரே அம்சமே போதுமானதாக இருக்கிறது.  ஆனால் அவன் தான் அவளை காதலிக்கவில்லை அது வெறும் ஆசை தான் என்கிறான். ஆசை எப்போது பெண்ணை தனதுடையைமாக்கிக் கொள்ள எத்தனிக்கிறதோ அங்கே தான் காதலாகிறது.


அந்த இடத்தில் தங்கத்தை தோளில் சுமந்து கொண்டு ஒரு மேட்டில் ஏறிச்செல்வது போன்ற மனப்பிராந்திக்கு அவன் உட்படுவதாக நாகராஜன் குறிப்பிடுகிறார். அந்த உணர்ச்சி வெறும் ஆசையில்லை. மாறாக அது ஆழ்ந்த ஏக்கம். அல்லது நிறைவேறாத அன்பின் கட்டற்ற வெளிப்பாடு.


தங்கத்தின் காதலோடு மரகத்தின் காதல் எப்போதுமே எதிர்நிலையாக முன்வைக்கபடுகிறது. மரகத்தை ஒரு இளைஞன் காதலின் பேரில் ஏமாற்றுகிறான். தங்கத்தை இன்னொரு இளைஞன் காதலின் பெயரால் மீட்சியளிக்க விரும்புகிறான். இந்த எதிர்நிலையில் தங்கம் தனது சுயவிருப்பங்களை எப்போதுமே மறைத்து கொள்கிறவளாகவும் மரகதம் இயல்பான, தன்னை வருத்திக் கொண்டு விசும்பும் பெண்ணாக அடையாளப்படுத்தபடுகிறாள். தங்கம் ஒரு நாள் காணாமல் போய்விடுகிறாள். 


அந்த ஏமாற்றத்தை மறைக்க அவன் காமம் தான் ஆணுக்கு அழகு. காதல் வெறும் நோய் ஒரு ஆண் பெண்ணை காமத்தை வைத்தே வெல்ல வேண்டும். வேறு எந்த சக்தியின் உதவியையும் நாடக்கூடாது என்று சுயசமாதானம் செய்து கொள்கிறான்.


ஆனாலும் தங்கம் காணாமல் போனது அவனிடம் ஆழ்ந்த மனபாதிப்பை உருவாக்குகிறது. திருநெல்வேலியில் இருந்து மதுரைக்கு மாற்றாலகிறான்.  பின்னொரு நாள் திருவனந்தபுரத்தில் தற்செயலாக தங்கத்தை சந்திக்கிறான். சாலையோரம் ஒரு குழாயடியில் அவள் நின்று கொண்டிருந்தாள். இருவரும் அடையாளம் கண்டு கொள்கிறார்கள். வீட்டுக்கு அழைத்து போகிறாள். தங்கம் கழுத்தில் புதிதாக மஞ்சள் கயிறு தெரிகிறது. தான் புருஷனுடன் இருப்பதாக சொல்கிறாள். அவள் ஆளே மாறியிருக்கிறாள். அவளின் நெருக்கடியான இருப்பு அவன் மனதில் வலியுருவாக்குகிறது. 


 அவள் வீட்டில் சாப்பிடுகிறான்.  அவளுக்கு ஏதாவது பண உதவி வேண்டுமா என்று கேட்கிறான். அவள் மறுக்கிறாள். தன்னை கட்டிக் கொண்ட நடராஜனின் மூத்தமனைவியின் குடும்பம் பற்றி சொல்கிறாள். அவரை முதல்மனைவியோடு சேர்ந்துவிட தான் விரும்புவதாக தெரிவிக்கிறாள். என்ன பெண் இவள் என்று வியப்போடு பார்க்கிறான் அவன். இரவெல்லாம் அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். காமம் இல்லாத அந்த பொழுதுகள் அவனது காதலின் அழியாத சாட்சி போலாகிறது.


அந்த வலியின் உக்கிரம் போல குறத்திமுடுக்கில் தேவானை என்ற பெண் உத்தரத்தில் தூக்குமாட்டிக்கொள்ள முயற்சித்து கயிறு அறுந்து உயிர்பிழைக்கும் காட்சி சித்தரிக்கபடுகிறது. அது குறத்தின்முடுக்கின் விதி போலும். அங்கே வரும்பெண்கள் தங்களை அழித்துக் கொள்கிறார்கள். அதற்கு காமம் தான் ஒரே உத்தி. காமத்தின் வழியே தங்கள் ஆசைகளை, பிராயத்தை தினம் கொஞ்சமாக அழித்து கொள்கிறார்கள். அப்படியும் தன்மீதான வெறுப்பை தாங்க முடியாத பெண் தூக்குகயிறை நாடுகிறாள். சாவது எளிதானதில்லை. அது வாழ்வை விடவும் அவளை அதிக ஊசலாட்டத்திற்கும் அவமானத்திற்கும் உட்படுத்துகிறது.


 தேவனையின் மௌனம், வெளிச்சொல்லாத காரணம் தான் குறத்திமுடுக்கின் ஆறாத துயரம். அது நாவலின் இறுதியில் பீறிடுகிறது. அந்த பெண்ணுக்குள்ளும் காமம் தாண்டிய அன்பிற்கான ஏக்கமே நிரம்பியிருக்க கூடும். அந்த வலி குறத்தி முடுக்கின் அறைகளில் எப்போதும் சாவின் சுருக்குகயிறு  தொங்கிக் கொண்டேயிருப்பதை போலவே உணர வைக்கபடுகிறது.


முடிவில் ஒரு கனவு வருகிறது. அது நிறைவேறாத ஆசைகள் கொந்தளிப்பது போன்றது. தங்கம் யாரோ ஒருவரின் அரவணைப்பில் உறங்குகிறாள் என்பதை தாளமுடியாத நிருபர் கொள்ளும் கனவு அது. அவன் தோற்றுபோன காதலில் துவள்கிறான். அவன் மனதில் அவளது நெருக்கமும் அன்பும் காமமும், இதுநாள்வரை தான் இறுக்கமாக்கி வைத்திருந்த சுயபிரமைகள் உடைய  பீறிடுகின்றன. அவன் வாழ்வின் கசப்பை குடிக்கிறான்.. அறையில் இருக்க முடியாமல்வெளியே வர வெளியே மின்னல் வெட்டுகிறது. நன்றாக அடித்து ஒரு மழை பெய்ய வேண்டும் என்று நினைத்து கொள்வதோடு நாவல் நிறைவு பெறுகிறது.


அந்த மழை போன்ற பெரிய ஆகர்சணம். அரவணைப்பு அவனுக்கு தேவைப்படுகிறது. அது காமத்தால் ஒரு போதும் தரமுடியாதது. பெண் தன் முழுமையான அன்பால் ஆணை காதலிக்கும் போது ஆண் பயங்கொள்கிறான் என்று நீட்ஷே ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். குறத்தி முடுக்கிலும் அதுவே நடக்கிறது.


காதலின் பிரிவுத் துயரம் இலக்கியத்தின் மாறாத உணர்ச்சி வெளிப்பாடு. அது குறத்தி முடுக்கை வாசித்து முடிக்கையில் நம்மை முழுமையாக கவ்விக் கொள்கிறது. உன்னதமான காதல்நாயகியாக தங்கம் ஒளிர்கிறாள். தூரத்து நட்சத்திரம் போல அவள் இருப்பு நாவலுக்கு வெளியிலும் மினுங்கிக் கொண்டேயிருக்கிறது.


குறத்திமுடுக்கு என்ற தெருவின் கதை அழியாத காதலின் நிரந்த வசீகரத்தை சொல்லிக் கொண்டேயிருக்கிறது. அவ்வகையில் ஜி. நாகராஜனே நம் காலத்தின் சிறப்பான காதல்நாவலை எழுதிய அற்புத எழுத்தாளன்.
**


 

Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Subscribe

Enter your email address: