தனுஷ்கோடி

மோவி என்ற மதுரையைச் சேர்ந்த பத்திரிகையாளர்  https://thetimestamil.com இணையத்தில் எழுதியுள்ள குறிப்பிது.

•••

மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கலைக் கல்லூரியின் வரலாற்று துறை பேராசிரியர் திரு ஆத்மனாதன். . சில ஆண்டுகளாக தனுஷ்கோடி பற்றிய தீவிர ஆய்வில் இருந்தார். இன்று தனது ஆய்வுக்கட்டுரையை மதுரை காமராஜர் பல்கலையில் சமர்பித்துள்ளார். அவருடன் உரையாடிய போது

••

அன்று அதிகாலை மணி மூன்றை நெருங்கிக்கொண்டிருந்தது. பாம்பன் – தனுஷ்கோடி இடையிலான பயணிகள் ரயில் பாம்பன் ரயில் நிறுத்ததில் நின்றுகொண்டிருந்தது. ரயில் முழுவதும் பயணிகள் கூட்டம். அனைத்து கதவு ஜன்னல்களும் அடைக்கப்பட்டிருந்தது. வெளியே கடுமையான மழை, காற்று. புயலாக இருக்குமோ என்று எண்ணியவாரே கையில் குடையுடன் ஸ்டேஷன் மாஸ்டர் வெளியே வந்து பார்த்தார்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது குடை காற்றில் பறந்து, அந்த அடர் இருட்டில் மறைந்தது.

வேகமாக உள்ளே வந்தவர், “மழை அதிகமாக இருக்கிறது, கொஞ்சம் பொருத்து பார்க்கலாம்.” என்கிறார்.

அங்கிருந்த சக ஊழியர்களும் அதையே ஏற்றுக்கொள்ள, சிறிது நேரம் அந்த அறை முழுவதும் மழை தனது சத்தத்தால் நிரப்பிக்கொண்டிருந்தது.

ரயிலில் இருந்து சில குரல்கள் ஸ்டேஷன் மாஸ்டரின் காதுகளில் விழ, மீண்டும் வெளியே வருகிறார். “நேரமாகுது, ரயிலை எடுங்க, கப்பலுக்கு போகனும்,” இது போன்ற குரல்கள். சரி இதற்கு மேல் விட்டால் தாங்காது, எல்லோரும் பிழைப்புக்காக செல்பவர்கள், நேரம் முக்கியம் என்று எண்ணியவர், உள்ளே வந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஊழியர்களை இறங்க உத்தரவிடுகிறார்.

வானிலை நிலவரம், காற்றின் வேகம் என அனைத்தையும் ஆராய்ந்து ஒரு முடிவு எடுக்கப்படுகிறது. மறுபுறம் இருக்கும் ராமேஷ்வரம் ஸ்டேஷனுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுகிறது.

பாலத்தில் செல்லும் போது எவ்வளவு வேகத்தில் செல்ல வேண்டும் என்று ரயில் எஞ்சினில் இருப்பவருக்கும் தகவல் சொல்லப்படுகிறது. சிக்னல் போடுபவர் கையில் குடையுடன் வேகமாக ஓடிச்சென்று சிக்னல் போடும் இரும்புக் கம்பியை பிடித்து இழுக்க, சிக்னல் கைகாட்டியது.

புகையைக் கக்கிக்கொண்டு சத்தம் எழுப்பியவாரு மெதுவாக ரயில் புறப்பட்டது. அதுவரை கூச்சல் போட்டுக்கொண்டிருந்த மக்கள் அமைதியாகினர். சிலர் ஜன்னலைத் திறந்து வெளியே பார்த்துக்கொண்டிருந்தனர். மெதுவாக ரயிலை நகர்த்திக்கொண்டிருந்தார் எஞ்சின் டிரைவர்.

ரயில் மெதுவாக பாலத்தின் முகப்புக்கு சென்றது. சிக்னல் போடுபவரை தவிர அனைவரும் ஸ்டேஷனுக்குள் இருந்தனர். மழையில் நனைந்தபடியே கையில் இருந்த பச்சை விளக்கை ஆட்டிக்கொண்டிருந்தார் அவர். ரயில் கொஞ்சம் கொஞ்சமாக பாலத்தினுள் சென்று அந்த இருட்டில் மறையத்தொடங்கியது.

சிக்னல் போடும் அந்த ஊழியர், ரயில் சென்ற பாதையை பார்த்தவாரே இருந்தார். திடீரென கையில் இருந்த பச்சை விளக்கை கீழே வைத்து விட்டு வேகமாக ஸ்டேஷனுக்குள் நுழைந்து லாந்தர் விளக்கை கையில் பிடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தார். அங்கிருந்த அனைவருக்கும் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. வெளியே வந்தவர் தண்டவாளத்தில் இறங்கி பாலத்தை நோக்கி ஓட ஆரம்பித்தார்.

பாலத்தின் சிறிது தூரம் ஓடியவர், கையில் இருந்த லாந்தரை வைத்து தண்டவாளத்தில் அடித்து பார்த்துவிட்டு, “சார் ரயிலைக் காணோம் சார்…” என்று கத்தினார். அவர் தான் தனுஷ்கோடி புயலின் கோரத்தை பார்த்த முதல் சாட்சி என்றார் திரு ஆத்மனாதன்.

1964ஆம் ஆண்டு தாக்கிய தனுஷ்கோடி புயலில் பாம்பன், இராமேஸ்வரம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளும் இலங்கையின் வடக்குப் பகுதியும் புரட்டிப்போடப் பட்டது. பாம்பனிலிருந்த புறப்பட்ட ரயில் புயலில் சிக்கி தூக்கி எறியப்பட்டது. இதில் பயணித்த அனைவரும் மாண்டனர். இந்தப் புயலால் தனுஷ்கோடி முற்றிலுமாக அழிக்கப்பட்டது. இதுநாள் வரை அந்த ஊர் சிதைக்கப்பட்டதன் வடுக்களுடனே காட்சித் தருகிறது.

••

Archives
Calendar
July 2020
M T W T F S S
« Jun    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Subscribe

Enter your email address: