எஷ்னாபூரின் புலி.


புகழ்பெற்ற ஜெர்மனிய இயக்குனரான ப்ரிட்ஜ் லாங்கின் இந்திய காவியங்கள் என்று போற்றப்படும் The Tiger of Eschnapur  மற்றும் The Indian Tomb ஆகிய இரண்டு படங்களை சமீபமாக பார்த்தேன்.1959ம் ஆண்டு வெளியான இந்தப் படங்கள் ஜெர்மனியில் பெரிய வெற்றிபெற்றவை. இந்தியாவில் படமாக்கபட்ட வெளிநாட்டு படங்களில்  லாங்கின் இந்தப் படங்களே மிக பிரம்மாண்டமான முயற்சியாகும். ராஜஸ்தானில் பெரும்பகுதியான படப்பிடிப்பு நடைபெற்றிருக்கிறது. மற்றவை ஜெர்மனிய ஸ்டுடியோக்களின் அரங்கில் உருவாக்கபட்டிருக்கின்றன. ஈஸ்ட்மென் கலரில் உருவாக்கபட்ட இந்த இரண்டு படங்களையும் ஒரு சேர மூன்றரை மணி நேரம் பார்த்து முடிந்த போது அடைந்த வியப்பும் மனஎழுச்சியும் மிகுந்த சந்தோஷம் தரக்கூடியது. இவை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படங்கள் என்ற ஜாடையே படத்தில் இல்லை.
இன்டியா ஜோன்ஸ் படங்களை பார்ப்பது போன்ற அதே விறுவிறுப்பு, கதைவேகம், சாகசங்கள். ஆனால் வழக்கமான ஹாலிவுட் படங்கள் எதிலும் காணமுடியாத காட்சிகோணங்கள். அரங்குகள், மற்றும் வண்ணங்களை திறம்பட பயன்படுத்தியுள்ள அழகு என்று படத்தின் ஒவ்வொரு காட்சியும் தனித்த ஒவியம் ஒன்றை போலவே இருந்தது.ஐரோப்பாவின் நிலக்காட்சிகளை பார்த்து நாம் வியந்ததை மாற்றி இந்தியா எவ்வளவு அழகானது என்று ப்ரிட்ஜ் லாங்கின் காட்சிகள் நமக்கு அறிமுகம் செய்கின்றன. குறிப்பாக ராஜஸ்தானின் பாலைவெளியும், கோட்டை சூழ்ந்த நகரங்களும் மிதக்கும் அரண்மனைகளும் அதன் உயர்ந்த மதில்சுவர்களுமாக மிக புராதனமான நகரம ஒன்றை காண்பது போன்று கண்முன்னே இந்தியா விரிகிறதுபடத்தின் முக்கிய கதாபாத்திரமாக நடித்தவர்களில் பலரும் ஜெர்மனியை சேர்ந்தவர்கள். அவர்களை இந்திய அரசவம்சத்தின் சாயலோடு தேர்வு செய்து மிகையற்ற இயல்பான நடிப்பை வெளிக்கொண்டுவந்திருப்பது லாங்கின் சாதனை.ஐம்பது வருடங்களுக்கு முந்தைய ஹாலிவுட் படங்களில் இந்தியர்களை சித்தரிக்க வேண்டுமென்றால், கருத்த உருவமுள்ள ஆதிவாசிகள் போன்ற தோற்றம் கொண்டவர்களாகவோ  மஞ்சள் முகம் கொண்ட சீனர்களையோ தான் பயன்படுத்துவார்கள். அசலான இந்திய முகம் எதையும் ஹாலிவுட் சினிமாவில் நான் பார்த்தேயில்லை. ஆனால் இந்தப்படத்தில் அரசனாக முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ள வால்டர் ரேயர் ஒரு  ஜெர்மனிய நடிகர் என்பது வியப்பாகவே இருக்கிறது. அந்த அளவு பொருத்தமான கதாபாத்திரம். குறிப்பாக ராஜஸ்தானிய உடற்கட்டு, நடைஉடை பாவனைகள். பேசும்விதம். உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பாங்கு யாவும் அப்படியே ராஜ வம்சத்து மனிதரை நினைவு கொள்ள வைக்கின்றன.இந்த கதையை லாங் தனது திரை வாழ்வின் துவக்கத்திலே எழுத துவங்கியிருந்தார்.ஆனால் அதை திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. சில வருசங்களுக்கு பிறகு இதே கதை படமாக்கபட்ட போதும் கூட லாங்கிற்கு பதிலாக இன்னொரு இயக்குனர் இப்படத்தை இயக்கினார். அந்த வருத்தம் அவருக்குள் நிறையவே இருந்தது. ஆகவே வெற்றிபெற்ற இயக்குனரானதும் ப்ரிட்ஜ் லாங் தனது இந்திய காவியங்களை உருவாக்க முனைந்தார். ஹாலிவுட் ஸ்டுடியோக்களே தயாரிப்பிற்கு முன்வந்தன. பெரும்பொருட்செலவில் இவை இந்தியாவில் உருவாக்கப்பட்டன. ஜெர்மன் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் படம் வெளியானது.லாங், மெட்ரோபாலிஸ், எம் போன்ற திகிலூட்டும்  படங்களையே அதிகம் உருவாக்கியவர் .தனது வழக்கமான பாணியிலிருந்து விலகி இந்த இரண்டு படங்களையும்  இயக்கியுள்ளார்.. படத்தின் கதை எளிமையானது.எஷ்னாபூரை ஆண்டு வருகிறார் சந்திரா என்ற அரசன். இது பண்டைய ராஜஸ்தான் என்று வைத்துக்கொள்ளலாம். இங்கே கோவில் ஒன்றை கட்டுவதற்காக ஹரால்டு என்ற கட்டிடக்கலைஞரை லண்டனில் இருந்து வரவழைக்கிறார் அரசர். சந்திரனின் அரண்மனையில் சீதா என்ற அழகான நாட்டியக்காரியிருக்கிறாள். அவள் மீது சந்திரனுக்கு காதல். ஆனால் அதை அறியாமல் ஹரால்டு சீதாவின் மேல் காதல் கொண்டுவிடுகிறான். அவளும் ஹரால்டை காதலிக்க துவங்குகிறாள். இது அரசனுக்கு பிடிக்கவில்லை.ஹரால்டின் சகோதரியும் அவளது கணவர் ரோட்ஸ் இருவரும் கட்டிடக்கலை நிபுணர்கள். அவர்களும் இதே பணிக்காக வந்து இந்தியா வந்து சேர்க்கிறார்கள். சீதா ஒரு வெள்ளைகாரனை காதலிப்பதை தாங்க முடியாத அரசன் அவர்களை பிரித்து வைக்க சூழ்ச்சி செய்கிறான். ஆனால் சீதாவை கூட்டிக் கொண்டு அரண்மனையில் இருந்து ஒடிவிடுகிறான் ஹரால்டு.இதனால் ஆத்திரமான சந்திரன் அவளுக்காக ஒரு நினைவுமண்டபம் ஒன்றை கட்ட திட்டமிடுகிறான். தாஜ்மஹால் போன்ற இந்த கனவின் பின்னே ஒரு குரூரம் ஒளித்திருக்கிறது. அது என்னவென்றால் சீதாவை உயிரோடு பிடித்து வந்து சமாதியாக்க வேண்டும் என்பதே. இதற்கு ரோட்ஸ் ஒத்துக் கொள்ள மறுக்கிறார். இதற்கிடையில் பாலைவனத்தில் சிக்கிக் கொள்கிறார்கள் சீதாவும் ஹரால்டும். பாலைப்புயல் காரணமாக மயங்கி விழும் அவர்களை காப்பாற்றி அடைக்கலம் தருகிறது ஒரு சிறிய கிராமம்.சந்திரனின் சகோதரன் ராமிதாமிக்கு அண்ணனை கொன்றுவிட்டு அரண்மனையை கைப்பற்ற வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. அதற்காக அவன் சதிவேலை செய்கிறான். அவன் அண்ணனை கொல்ல சீதா மீதான காதலை பயன்படுத்தி கொள்ள முடிவு செய்கிறான். அதனால் அவனே சீதாவை தேடி கண்டுபிடிக்கிறான். அவளை சிறைப்படுத்தி அரண்மனைக்கு கொண்டுவருகிறான்பிடிபட்ட ஹரால்டை பாதாளச் சிறைச்சாலையில் அடைத்து வைக்கிறான். தனது அண்ணன் காணமல் போய்விட்டதை அறிந்த ரோட்ஸின் மனைவி அவனை தேடித் திரிந்து உண்மையை அறிகிறாள். அரண்மனைக்குள் அடைத்து வைக்கபட்ட அண்ணனை கண்டுபிடிக்க முயற்சிக்கிறாள். இதே நேரம் சந்திரன் சீதாவை கல்யாணம் செய்து கொள்ள போவதாக அறிவிக்கிறான். அதை எஷ்னாபூரின் பாரம்பரிய கோவில் சாமியாடிகள் ஏற்றுக் கொள்வதில்லை. வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.சீதா  அரசனை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று மறுக்கிறாள். அவளிடம் ஹரால்ட் உயிரோடு இருக்கும் உண்மையை சொல்லி அவன் உயிர்தப்பி சொந்தநாடு போக வேண்டும் என்றால் சீதா அரசனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிறான் ராமிதாமி.இந்த நிலையில் எஷ்னாபூரை கைப்பற்ற அண்டை நாடுகளின் மன்னர்கள் ரகசியமாக சுரங்கம் வழியாக அரண்மனைக்குள் வருகிறார்கள். ரோட்ஸின் மனைவி தன் அண்ணனை ஒளித்து வைத்த பாதாள சிறையை சீதாவின் உதவியால் கண்டுபிடிக்கிறாள். திருமணம் நடைபெற உள்ள நேரத்தில் அரண்மனையினுள் கலவரம் ஏற்படுகிறது. சந்திரன் சிறைபிடிக்கபடுகிறான். ஆனால் விசுவாசமான படைத்தளபதி உதவியால் தப்பி அந்த கலவரத்தை அடக்கி நாட்டை மீட்கிறான்.  முடிவில் சீதா ஹரால்டையே கல்யாணம் செய்து கொள்கிறாள்.சதி முக்கோண காதல் காதலியோடு தப்பியோடுவது பிடிபடுவது பாதாள சிறைகள், என்று படம் மிக விறுவிறுப்பான திரைக்கதையமைப்பை கொண்டிருக்கிறது.படத்தின் இரண்டு முக்கிய காட்சிகள் உள்ளன. ஒன்று சீதா பாம்பின் முன்னால் உடம்பில் ஒட்டு துணி மட்டுமே அணிந்து ஆடும் மிக சிறந்த நடனம். பாம்பின் சீற்றம் போல துள்ளுவதும் நெளிவதுமாக டெபரா போகட்டின் நடனம் அன்று எப்படி தணிக்கையின் கையிலிருந்து தப்பி திரைக்கு வந்தது என்ற ஆச்சரியமாக இருக்கிறது.மற்றொன்று சுரங்கவழியை கண்டுபிடித்து தப்பிவரும் ரோட்ஸின் மனைவி எதிர்பாராமல் சுரங்கத்தின் அடைத்து வைக்கப்பட்ட தொழுநோயாளிகளிடம் மாட்டிக் கொள்வது. இரண்டும் லாங்கால் மட்டுமே உருவாக்கபட முடியும் என்பது போன்ற காட்சிகள்.ப்ரிட்ஜ் லாங் எப்போதுமே நிழலை ஒரு கதாபாத்திரம் போல பயன்படுத்துகிறவர். இருள் படிந்த முகங்கள் அவரது விசேசமான முத்திரை.இதிலும் மன்னர் சந்திரன் முகத்தில் எப்போதுமே நிழலாடுகிறது. பாதி இருண்டேயிருக்கிறது. அதிலும் அவன் மூர்க்கம் கொள்ளும் போது அவனது முகத்தில் மாறி செல்லும் ஒளியமைப்பு அற்புதமானது.லாங் கதாபாத்திரங்களின் மனஇயல்பின் வழியே கதையை முன்நகர்த்துகிறார். ஆகவே ஒவ்வொரு கதாபாத்திரமும் என்ன நினைக்கிறது என்பது படத்தின் ஆதார தொனியாக உள்ளது. சிறு கதாபாத்திரங்கள் கூட கச்சிதமாக உருவாக்கபட்டிருக்கின்றன. சகோதர சூழ்ச்சி முக்கோண காதல், புலிக் கூண்டு , சுரங்கவழி, கத்திசண்டைகள் என்று இந்திய சரித்திர புனைகதையின் கதை சொல்லும் முறையை அப்படியே பின்பற்றியிருக்கிறார் லாங்இந்த படத்தினை பார்க்கையில் மொகலே ஆசாம் தான் நினைவிற்கு வந்தது. இரண்டும் ஒரே ஆண்டில் தான் தயாரிக்கபட்டிருக்கின்றன. இரண்டுமே ரஜபுத்திர வம்சத்து கதைகளே. இன்னும் நெருங்கி ஆராய்ந்தால் இரண்டின் கதைகளும் ஒன்றே. அதில் அனார்கலி சலீம் இதில் சீதா ஹரால்ட். சலீம் போர்களத்தில் வளர்ந்து இளைஞனாக வீடு திரும்புகிறான். ஹரால்ட் பொறியியல் படித்து எஷ்னாபூர் திரும்புகிறான். அனார்கலி ஒரு நடனக்காரி. சீதாவும் ஒரு நடனக்காரியே. அவர்கள் காதல் அக்பருக்கு பிடிக்கவில்லை. இங்கே அவர்கள் காதலை அரசன் சந்திரன் வெறுக்கிறான்அனார்கலியை உயிரோடு சமாதி வைக்க முயற்சிக்கிறார் அக்பர். அதையே செய்ய நினைக்கிறான் மன்னன் சந்திரன். இரண்டிலும் போர் சதி இரண்டும் வருகின்றன. மொகலே ஆசாம் வெளியாகி இந்தியாவெங்கும் வெற்றிகரமாக ஒடிக்கொண்டிருந்த போது லாங்கின் படங்கள் ஜெர்மனியில் வெளியாகி மிக பெரிய வெற்றியை பெற்றன.மொகலே ஆசாம் படத்தை கலரில் தயாரிக்க விரும்பி இயலாமல் கறுப்புவெள்ளையில் படமாக்கினார்கள். ஆனால் லாங் முழுப்படத்தையும் ஈஸ்ட்மென் கலரிலே படமாக்கினார். லாங் இந்திய மனதின் கதை சொல்லும் தன்மையை சரியாக உள்வாங்கியிருக்கிறார். படத்தின் இசையும், பிரம்மாண்டமான அரங்க அமைப்பும் பின்னாளில் பல ராஜ்கபூர் மற்றும் குருதத் படங்களின் அரங்குகளுக்கு முன்மாதிரியாக இருந்திருக்கின்றன.ஜெர்மனிய நவ சினிமாவின் முன்னோடி இயக்குனர் ப்ரிட்ஜ் லாங். இருண்ட உலகின் சித்திரங்கள் என்று வகைபடுத்தபடும் இவரது படங்களின் பாதிப்பு ஹிட்ச்காக், துவங்கி  ஸ்பீல்பெர்க், பீட்டர் ஜாக்சன், லூகாஸ், கேமரூன் என பலரிடம் காணப்படுகிறது.குறிப்பாக இவர் படங்களில் வடிவமைக்கபட்ட அரங்க நிர்மாணங்களின் பிரம்மாண்டமும், எளிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விசித்திரமான ஒளிவிநோதங்களை உருவாக்கி காட்டும் முறையுமே  இன்று லார்ட் ஆப் தி ரிங்ஸ் மற்றும் ஏலியன்ஸ் வகை படங்களுக்கு முன்உதாரணமாக இருக்கின்றன.1890ல் வியன்னாவில் பிறந்த ப்ரிட்ஜ் லாங் சில ஆண்டுகாலம் பொறியியல் படித்தார். பின்பு கலையில் ஆர்வமாகி ஒவியம் பயின்றார். ஜெர்மனிய ஸ்டுடியோக்களில் உதவியாளாக பணியாற்ற துவங்கி சில ஆண்டுகளிலே திறமையான இயக்குனராக உருவாகினார். நாஜி அரசு இவரது படத்தை தடை செய்தது. அத்துடன் இவரை கோயபல்ஸ் உருப்படியில்லாத இயக்குனர் என்று மிரட்டவும் துவங்கினார்.  தன்னை சிறையில் அடைத்துவிடுவார்களோ என்று பயந்த ப்ரிட்ஜ் லாங் இரவோடு இரவாக ஜெர்மனியில் இருந்து தப்பி பாரீஸ் போய் சேர்ந்தார். கையில் காசில்லாமல் அலைந்து திரிந்து மறுபடியும் பாரீஸில் படங்களை இயக்க துவங்கினார். அங்கிருந்து  பயணித்து அமெரிக்கா சென்று  1936ல் ஹாலிவுட்டின் எம்ஜிஎம் ஸ்டுடியோவில் சேர்ந்து படங்களை இயக்க துவங்கினார். இந்தியாவில் அவர் படமாக்கியபோது இங்குள்ள படப்பிடிப்பு அரங்குகளின் போதாமையை உணர்ந்திருக்கிறார். அதே நேரம் சினிமா மீது இந்திய மக்கள் கொண்டுள்ள மோகத்தையும் துல்லியமாக உணர்ந்திருக்கிறார்தன்னுடைய திரைப்படங்களுக்கு முக்கிய ஆதாரம் திரைக்கதையே. அதை உருவாக்குவதையே தனது பிரதான சவாலாக சொல்லும் லாங் தனது படங்களுக்கான திரைக்கதைகளை அவரது மனைவியும் எழுத்தாளருமான தியோ வான் ஹர்போவுடன் இணைந்து உருவாக்கியிருக்கிறார்.தன்னால் தப்பித்துக் கொள்ள முடியாத சூழல் ஒன்றிற்குள் மாட்டிக் கொள்ளும் ஒருவன் எப்படி அதை எதிர்கொள்கிறான். அதிலிருந்து எப்படி மீள்கிறான் என்பதே அவரது திரைக்கதையின் பொதுசரடு. லாங் கண்ணாடியையும் அதிலிருந்து வெளிப்படும் பிம்பங்களையும் தனது படங்களின் முக்கிய குறியீடாக வெளிப்படுத்துகிறார்.லாங்கின் எம் திரைப்படம் பெரும்பான்மை உலக சினிமா பார்வையாளர்களின் கவனத்திற்கும் விருப்பத்திற்கும் உள்ளாகியிருக்கிறது. அந்த படம் தந்த அதே உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் இதிலும் நாம் பெற முடிகிறது. லாங்கின் The Tiger of Eschnapur    மற்றும் The Indian Tomb  ஆகிய இரண்டு படங்களை இன்று இந்தியாவில் திரையிட்டாலும் பலத்த வரவேற்பு கிடைக்க கூடும் என்றே தோன்றுகிறது.


**


Fritz Lang


Filmography


·         The Shadow vs. the Thousand Eyes of Dr. Mabuse


·         The Indian Tomb


·         The Tiger of Eschnapur


·         Beyond a Reasonable Doubt


·         While the City Sleeps


·         Moonfleet


·         Human Desire


·         The Big Heat


·         The Blue Gardenia


·         Clash by Night


·         Rancho Notorious


·         Scarlet Street 


·         The Woman in the Window


·         M


·         Spione


·         Dr. Mabuse: The Gambler


·         American Guerrilla in the Philippines 

Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: