தேவதச்சனோடு உரையாடல்.

கவிஞர் தேவதச்சனுடன் கவிதைகள் குறித்த விரிவான உரையாடல் ஒன்றினை நடத்திப் பதிவு செய்திருக்கிறேன். நானும் கவிஞர் மனுஷ்யபுத்திரனும் நான்கு அமர்வுகளாக இந்த உரையாடலை நிகழ்த்தினோம்.

தேவதச்சனின் கவிதைகள் குறித்த எனது கட்டுரைகளுடன் இந்த உரையாடலும் இணைந்து தனிநூலாக வெளியிடப்படவுள்ளது.

அதிலிருந்து சிறுபகுதி

••

எஸ்.ரா: உங்கள் கவிதைகளில் பால்யகாலம் தொடர்ந்து அடையாளப்படுத்தபடுகிறதே. அது வெறும் நினைவுகள் மட்டும் தானா?

தேவதச்சன் – சிறுவயது நினைவுகளின் பங்கு கவிதையில் நிச்சயமாக இருக்கிறது . பத்து வயதுச் சிறுவனுக்கு உடல் என்பது பொருட்படுத்த வேண்டிய ஒன்றில்லை. ஆசைகள் மட்டுமே அவனைத் துரத்திக் கொண்டிருக்கின்றன. சிறுவர்களிடம் நிறைய ரகசியங்கள் இருக்கின்றன அதை வெளியே சொல்ல முடிவதில்லை.

என் கவிதையில் வரும் சிறுவனோ, சிறுமியோ வயதால் மட்டும் சிறுவர்களாக இருப்பதில்லை. உள்வாங்கும் முறையால். உலகோடு கொள்ளும் உறவால் சிறார்களாக நடந்து கொள்கிறார்கள். சிறுவர்களுக்குக் கடந்தகாலம் ஒரு போதும் பிரச்சனையாக இருப்பதில்லை

சிறுவயதென்பது கனவுத் தன்மை பற்றிக் கொண்டிருக்கும் காலம் .உங்களை சுற்றி வெளியில் நடப்பது எதுவும் உங்களைப் பாதிக்காது.. அதுவே என் கவிதைகளிலும் வெளிப்படுகிறது என்னுடைய தன்னிலையை உருவாக்கியதில் சிறுவயதிற்குப் பெரும்பங்கிருக்கிறது.

எஸ்.ரா: இலக்கிய அறிமுகம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

தேவதச்சன் பத்து பனிரெண்டு வயதில் கவிதைகள் அறிமுகமாகின. பாரத நாடு பழம் பெரும் நாடு, நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர் என்ற பாரதியின் கவிதையைக் கத்திக் கத்திப் படித்திருக்கிறேன் திரும்பத் திரும்பப் பாரதியாரைப் படிக்க எனக்குள்ளிருந்த குடும்பப் பையன் உதிர்ந்து போனான். சமூகம் பற்றிய கவனம் உருவானது. கவிதைகளில் ஈடுபாடு உருவாக ஆரம்பித்தது.

எஸ்.ரா : உங்களுடைய கவிதைகளில் தினசரி வாழ்க்கை காட்சிகள் தொடர்ந்து இடம் பெறுகிறதே?

தேவதச்சன்: எனது கவிதைகள் அன்றாடத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது . அன்றாடத்தின் ரகசியத் தன்மையைப் பேசுகிறது அன்றாட உலகம் இடையறாத மாற்றங்களால் ஆனது. தினசரி வாழ்வின் சகல விஷயங்களுடனும் கவிஞன் உரையாடுகிறான் .

இரண்டு தன்னிலைகள் இருக்கின்றன. ஒன்று அன்றாடத்திற்கான தன்னிலை மற்றொன்று நினைவின் தன்னிலை பெரும்பாலும் கவிதை நினைவின் தன்னிலையை இயங்கச் செய்கிறது

அன்றாட வாழ்க்கையை உறையச் செய்வதே எனது கவிதை. ஒரு போதும் நடப்பை அப்படியே நான் எழுதுவதில்லை

மனுஷ்யபுத்திரன் : உங்களுடைய முந்தைய காலக் கவிதைகளில் அறிவின் தாக்கம் ரொம்ப அதிகமாக இருந்ததாகவும், இப்போ அது பின்னுக்குப் போய் உணர்வின் தாக்கம் அதிகமாக இருப்பதாகவும் நினைக்கிறேன். அது உண்மையிலேயே அப்படித்தானா?

தேவதச்சன் : உண்மை. இளைஞனாக இருந்த போது எல்லா விஷயத்தையும் அறிவு, தர்க்கம், தத்துவத்தின் வழியாகவே சந்தித்தேன். அதனோடு மோதி மோதிச் சோர்வடைந்து கொண்டேயிருந்தேன். அந்த இடத்திலிருந்து இப்போது நான் ஷிஃப்ட் ஆகிவிட்டேன். உணர்வுபூர்வமாகவே இப்போது கவிதையை அணுகுகிறேன்

மனுஷ்யபுத்திரன் : உங்கள் வயதின் வழியாக, உங்கள் அனுபவத்தின் வழியாக அந்த மாற்றம் நடக்கிறதா? அல்லது உங்கள் புரிதலே அப்படியாக மாறிவிட்டதா?

தேவதச்சன் : புரிதல்தான். வயதுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

எஸ்.ரா: உங்களுடைய ஆரம்பக் காலக் கவிதைகளில் இருந்த மொழி சார்ந்த இறுக்கம் தற்போது நெகிழ்வுத்தன்மை அடைந்திருக்கிறது. அதற்குக் காரணம், பாடுபொருளை மாற்றியதன் தொடர்ச்சியா? அல்லது மொழியை consicious ஆக வேறு தளத்திற்கு மாற்றுகிறீர்களா?

தேவதச்சன் : அனுபவம் பற்றிய புரிதல் மாறியிருப்பதே இதற்கான காரணம். மொழியை சிறப்பாக கையாள வேண்டும் என மெனக்கெடுவதில்லை. இயல்பான பேச்சுவழக்கையே எழுதுகிறேன்.

மனுஷ்யபுத்திரன் : சமகாலத் தமிழ்க் கவிதை மீது உங்களுக்குத் திருப்தி இருக்கிறதா?

தேவதச்சன் : எல்லா இளம்கவிஞர்களையும் ஆர்வமாகப் படிக்கிறேன். எப்படிக் கவிதை மொழியைக் கையாளுகிறார்கள். கவிஞனுக்கான அகப்பார்வை எப்படியிருக்கிறது. கவிதையின் வடிவத்தை எப்படி முடிவு செய்கிறார்கள் என்பதை உன்னிப்பாக பார்க்கிறேன். நல்ல கவிதைகள் கிடைக்காதா என்ற தாகத்துடன் எப்போதுமே இருக்கிறேன்

எஸ்.ரா. : கவிதை எழுதுகிற அளவிற்கு அது குறித்துத் தீவிரமான உரையாடுபவர்கள் குறைவாக இருக்கிறார்களே. கவிதை குறித்த விமர்சனம் வெகுவாகக் குறைந்துவிட்டதாகக் கருதுகிறீர்களா ?

தேவதச்சன் : அது உண்மை தான். கவிதைகள் குறித்து ஞானக்கூத்தன். பிரமீள், பிரம்மராஜன் போன்றவர்கள் தீவிர உரையாடல்களை உருவாக்கிறார்கள். குற்றாலம் கவிதை பட்டறை நல்ல உதாரணம். இப்போது கவிதை குறித்த உரையாடல்கள் தனிச் சந்திப்பில் நடைபெறுகிறதே அன்றிக் கூடி விவாதிக்கபடுவதில்லை. இந்திய கவிதையுலகில் தமிழ் கவிதையின் இடம் என்னவென்று யாரும் யோசிப்பதில்லை. உலகமயமாக்கலின் விளைவாகக் கவிதையில் என்ன மாற்றங்களை நடந்திருக்கிறது என யாரும் விவாதிப்பதில்லை. கவிதைகள் குறித்து பேசுவதற்கு நிறைய தேவையிருக்கிறது

எஸ்.ரா. : உங்கள் கவிதையில் தொலைவும் அண்மையும் மிக முக்கியமானதாக இருக்கிறது. எல்லாக் கவிதைகளிலும் தொலைவின் மீது வசீகரிக்கப்படுகிறீர்கள். தொலைதூரக் காட்சி, தொலைதூர சத்தம் , இது போலவே அண்மை. குறிப்பாக மிகவும் அண்மை. கவிதையை ஒரு பைனாக்குலரை போலக் கையாளுவதாகக் கொள்ளலாமா.  ?

தேவதச்சன் : வார்த்தை இங்கே லென்ஸாக மாறுகிறது. ஒரு பொருளை நம் புலன்களால் பார்ப்பதற்கும் சொற்களால் பார்ப்பதற்கும் இடையில் வேறுபாடு உள்ளது. சொல்வழியாக அந்தப் பொருளைப் பார்க்கும்போது அதனுடைய பரிமாணம் வேறு வேறாக ஆகிவிடுகிறது.

உங்கள் கண்கள் கூர்மையடைந்து இன்னும் ஆழமாக அந்தப் பொருளைப் பார்க்கிறது. பொருட்களின் தெரியாத அடுக்குகள் எல்லாமே மனிதர்களின் பிரக்ஞைக்குக் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய வருகிறது. அப்படித் தெரியும்போது பொருட்களின் பகுக்கப்படக் கூடியதும், பகுக்கப்படக் கூடாததுமான இரண்டு நிலைக்கும் மாறி மாறிப் பயணம் பண்ணுகிறோம்.  பொதுவாக அப்படிப் பயணம் செய்து களைப்படைந்து விடுகிறார்கள். தத்துவார்த்த ரீதியாகக் களைப்படைந்து, அந்த வேறுபாட்டைக் கண்டு பிடிப்பதை விட அதனோடு எப்படி இருப்பது என்பதைக் கற்றுக் கொள்ளத் தொடங்கிவிடுகிறோம்

எஸ்.ரா. :உங்கள் கவிதைகளில் குற்றநிகழ்வை யாரோ வேடிக்கை பார்க்கிறார்கள். திடுக்கிடுகிறார்கள். ஒதுங்கிப் போகிறார்கள. நீங்கள் குற்றத்தைச் சமூக நிகழ்வாக மட்டும் பார்க்கவில்லையோ என்று தோன்றுகிறது. புறநிகழ்வுகளைக் கவிதைகள் எப்படி எதிர்கொள்கின்றன. பதற்றமுற்ற மனிதனின் குரலில் உங்கள் கவிதை ஒலிப்பதை பற்றி சொல்லுங்களேன்.

தேவதச்சன் : செவ்வியல் இலக்கியங்கள் மகத்தான வரலாற்று நிகழ்வுகளை எழுதும்போது நவீன இலக்கியங்கள் நுண்ணிகழ்வுகளை எழுத துவங்கின. நுண்ணிகழ்வு எது என்றால் சமூகத்தினுடைய வலைப்பின்னல்களால் இணைக்கப்படாமல் உதிரிகளாக இயங்குகிறார்கள் அல்லவா? அவர்களுக்கு நடக்கின்ற எல்லாவற்றையும் நுண்ணிகழ்வு, அதாவது micro events என்று சொல்லலாம்.

நவீன கவிதைகள் தனது தொடக்கக் காலத்தில் புறநிகழ்வுகளை நேரடியாக எதிர்கொள்ளத் தொடங்கியது. அதன் விளைவே உரத்தகவிதைகள்.. இன்று நிகழ்வுகள், நுண்ணிகழ்வுகளாகத் தம்மைப் பிரித்து அடையாளம் கொள்ளத் தொடங்கின. இந்த நுண்ணிகழ்வுகள் உலகம் பற்றிய நமது பார்வையை அடியோடு மாற்றியமைக்கின்றன.

உலகம் யாவையும் தாமுள ஆக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலும் இவை அனைத்தும் ஒரு நொடியில் நடந்து முடிந்துவிடுகிறது.

வரலாற்றிலிருந்து வரலாறின்மைக்கு நகரத் தொடங்கிவிட்டது இவ்வுலகம். இனி, பௌதீக உலகில் வரலாறு கிடையாது. இனி வரலாறு நமது மன அமைப்பில் மட்டுமே இயங்கத் தொடங்கும். இன்றைய கவிதை, நம்மை வரலாற்றின் சுமையிலிருந்து விடுவிக்கிறது. வரலாறு தன் கனத்தை இழக்கத் தொடங்குகிறது.

நுண்ணிகழ்வுகள் பெருநிகழ்வுகளாகப் பெருகுவதை வரலாறு என்றும், பெரு நிகழ்வுகள் நுண்ணிகழ்வுகளாகக் கூர்மையடைவதைக் கவிதை என்றும் கூறலாம்.

நுண்ணிகழ்வுகள் பெருநிகழ்வுகளாக விரிவடையும்போது, கவிதை அதை நுண்ணிகழ்வுகளாக மட்டுமே வைத்திருக்கிறது. அது, அதன் இயல்பு போலும். இந்த நுண்ணிகழ்வுகள் வரலாறுக்கும் தத்துவத்துக்கும் வெளியில் இருக்கிறது. சமூகத்தில் இந்த நுண்ணிகழ்வுகளால் மெல்லிய மாற்றங்கள் நிகழ்ந்தபடியே இருக்கின்றன. இந்த நுண்ணிகழ்வுகள், அன்றாடம் என்ற ஒன்றில்லை என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டே இருக்கின்றன.

சமூகத்தின் நுண்ணிகழ்வுகள், தனிமனிதனின் வாழ்வில் பெருநிகழ்வுகளாக அதிரக் கூடும். உதாரணமாக, ஒரு தனிமனிதன், தனது தனித்தன்மையை observe பண்ணும்போது அது பெருநிகழ்வாக ஆகும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், அவனது கருணையுணர்வு, பெருநிகழ்வாக மாறும்போது இன்றைய காலத்தில் அது ஜனநாயகமாக ஆகிறது

எஸ்.ரா. : உஙகள் கவிதைகளின் தனித்துவம் நாமறிந்த சொற்களை அறியாத தளத்தில் பயன்படுத்துவது. சொற்களை உடைத்து புதிய அர்த்தங்களை உருவாக்குவது. ன்மீ என மீன் திரும்பியதை எழுதியதை சொல்லலாம். உங்கள் கவிதைக்கான மொழியை எப்படித் தேர்வு செய்கிறீர்கள். உருவாக்குகிறீர்கள்.

தேவதச்சன் : ஒரு சொல்லில் மூன்று தன்மை இருக்கின்றன. ஒன்று சித்திரப்படுத்துகின்ற காட்சி. இரண்டாவது ஒலி. அடுத்து அது பயன்படுத்த கூடிய பின்புலம். நான் ஒரு சொல்லில் இருக்கின்ற காட்சித்தன்மையை மட்டும் என் கவிதையில் எடுத்துக்கொள்கிறேன். கவிதைக்கு ஒரு அடிப்படையான தேவையான காட்சிப்படுத்துதல் ஏற்கனவே அந்தச் சொல்லில் இருப்பதால் அந்தளவு காட்சிப்படுத்தலே அந்தக் கவிதைக்குப் போதுமானதாக இருக்கு. அதற்கு மேல் கவிதைக்கு எக்ஸ்ட்ரா எதுவும் தேவையில்லை. இரண்டாவது இந்தக் காட்சிப்படுத்தல் முழுமையான பிறகு சிறப்புச் சொற்களைப் பயன்படுத்தினாலும் சரி, பேச்சு மொழிச் சொற்களைப் பயன்படுத்தினாலும் சரி வேலை முடிந்தவுடன் அந்தச் சொற்கள் விடைபெற்று விடுகிறதல்லவா?

எஸ்.ரா. : உங்களின் கவிதை ஒன்றில் முகரக்கட்ட என்று ஒரு சொல் வருகிறது. அந்தச் சொல்லை வாசித்தவுடன் கவிதையின் இயல்பு சட்டென நெருக்கமாக மாறிவிடுகிறது. இது அறிந்து செயல்படுவது தானா.

தேவதச்சன் : இன்னொரு கவிதையில் விளக்குமாத்துக் கொண்டை என்ற சொல் வரும். முகரக்கட்ட, விளக்குமாத்துக் கொண்ட இதெல்லாம் பாமர மக்கள் பேசக்கூடிய சொற்கள். படிப்பாளிகள் சொல்கிற சொற்கள் இல்ல. ஓர் எளிய இருப்பில் மனிதன் எல்லாப் பெருங்கேள்விகளையும் கேட்டுக் கொண்டே இருக்கிறான்.

என்னுடைய கவிதையில் வருபவர்கள் எல்லாருமே சாமானிய மனிதர்கள் தான். ஒரு சாமானியன் பிரபஞ்சத்தினுடைய பெருங்கேள்வியைச் சந்திக்கும்போது அவனுக்கு வருகின்ற உணர்ச்சிக் கொந்தளிப்பு இருக்கிறதல்லவா? அதனால்தான் அவன் பயன்படுத்துகின்ற சொற்களை நானும் பயன்படுத்துறேன். இந்தச் சொற்களைப் பயன்படுத்தும்போது கவிதை இதை allow பண்ணுமா பண்ணாதா? கவிதைக்கான தகுதி இருக்கா இல்லையா என்ற சிறு சந்தேகம் கூட எனக்குத் தோன்றாது.

முகரக்கட்ட என்ற வார்த்தையில் உள்ள quest ரொம்ப ஆழமானது. தன்னைப் பார்க்க முடியாத கண்ணாடியில் தான் நம்மைப் பார்க்க முடிகிறது என்பது வேடிக்கையாகத் தானே இருக்கிறது

••

Archives
Calendar
November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Subscribe

Enter your email address: