பிரபஞ்சன் விழா

எழுத்துலகில் பிரபஞ்சன் 55 விழா நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிறையப் பார்வையாளர்கள். வெளியூரிலிருந்து நிறைய வாசகர்கள் வந்து குவிந்த காரணத்தால் இருக்கைகள் இல்லாமல் அரங்கில் பலரும் நிற்கும் நிலை ஏற்பட்டதுகாலை
பத்துமணிக்கு புதுவை இளவேனில் எடுத்த பிரபஞ்சன் புகைப்படங்களின் கண்காட்சியை இயக்குனர் கே.வி. ஆனந்த் துவக்கி வைத்தார். இளவேனிலின் கவித்துவமான புகைப்படங்களை வியந்து பாராட்டினார் கே.வி. ஆனந்த்.

சிறப்பு விருந்தினராகக் கவிஞர் கனிமொழி கலந்து கொண்டு பிரபஞ்சனுக்குச் சால்வை அணிவித்துக் கௌரவித்தார்.

காலை முதல்அமர்வில் பேராசிரியர் பஞ்சாங்கம். எழுத்தாளர் அரவிந்தன், எழுத்தாளர் அழகிய பெரியவன் , எழுத்தாளர் பவா. செல்லதுரை ஆகியோர் உரைவழங்கினார்கள். எங்கள் அன்பிற்குரிய எழுத்தாளர் சா.கந்தசாமி தலையேற்று சிறப்புரை வழங்கினார்

தனக்கும் பிரபஞ்சனுக்குமான நட்பையும் புதுவையின் வாழ்க்கையைப் பிரபஞ்சன் பதிவு செய்துள்ள விதம் பற்றியும் பேராசிரியர் பஞ்சாங்கம் அழகாக எடுத்துக் கூறினார்.

பிரபஞ்சனின் முக்கியமான சிறுகதைகளை எடுத்துப் பேசிய எழுத்தாளர் அழகிய பெரியவன் அவரது ஒரு ஊரில் இரண்டு மனிதர்கள் தொகுப்பில் இடம்பெற்றுள்ள சில கதைகளை மேற்கோள் காட்டி தனக்கெனப் பிரபஞ்சன் உருவாக்கிக் கொண்ட யதார்த்தமான எழுத்துபாணியின் சிறப்புகளை அடையாளம் காட்டினார்.

கதைசொல்லியான பவா. செல்லதுரை தனது அழுத்தமான குரலில் பிரபஞ்சனின் ஒரு மனுஷி கதையை விவரித்த விதம் நெகிழச்செய்தது. பாராட்டுகள் பவா.

எழுத்தாளர் அரவிந்தன் பிரபஞ்சன் இதிகாசங்களை அணுகும் விதம் குறித்துப் பேசத்துவங்கி பிரபஞ்சனின் ராமாயணக்கட்டுரைகள் எத்தனை கவித்துவமாக, ராமாயணத்தின் சிறப்புகளை எடுத்துப் பேசுகின்றன எனக் கட்டுரையின் முக்கியப் பகுதிகளை வாசித்துக்காட்டி சிறப்பித்தார்.

அதைத் தொடர்ந்து எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் பிரபஞ்சனைக் கொண்டாடுவோம் என்ற சிறப்புரையை வழங்கினார். பிரபஞ்சனின் பிரம்மம் கதையை அவர் விவரித்துச் சொன்ன விதம் அற்புதம்.

நிகழ்வில் கலந்து கொண்ட அத்தனை பேருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. கல்யாண விருந்து போலச் சாப்பாடு. சைவம். அசைவம் இரண்டுமிருந்தன. வெகு சுவையான இந்த உணவை சேலம். ஆர். ஆர். பிரியாணி தமிழ்செல்வன் அன்புடன் தனது கொடையாக வழங்கினார்.

மதிய அமர்வில் விமர்சகர் முருகேச பாண்டியன் பிரபஞ்சனின் இலக்கிய நண்பர்கள் குறித்துச் சுவாரஸ்யமான உரையை நிகழ்த்தினார்.

அதைத் தொடர்ந்து பிரபஞ்சன் படைப்புகளில் பெண்கள் என்ற தலைப்பில் கவிஞர் தி. பரமேஸ்வரி. எழுத்தாளர். கே.வி. ஷைலஜா, கவிஞர் மனுஷி பாரதி ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.

குறிப்பாகக் கவிஞர் பரமேஸ்வரி மரி எனும் ஆட்டுக்குட்டி சிறுகதையை முன்வைத்து பேசியது சிறப்பாக இருந்தது. அது போலவே கவிஞர் மனுஷி பாரதி பிரபஞ்சனின் பெண்பாத்திரங்கள் அன்பை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் என்பதை அழகாக எடுத்துக்காட்டிப் பேசினார். எழுத்தாளர் கே.வி. ஷைலஜா ஒரு தோழியாகப் பிரபஞ்சனின் சிறப்புகளைக் கூறமுற்பட்டு அவர் பேச்சிலும் எழுத்திலும் பெண்மையை எவ்வாறு போற்றுவார் என்பதை அடையாளம் காட்டினார்.

எழுத்தாளர் அகரமுதல்வன் மதிய அமர்வின் ஒருங்கிணைப்பு பணியை மேற்கொண்டார்.

அடுத்த அமர்வில் பிரபஞ்சன் எனும் ஆளுமை என்ற தலைப்பில்பேச வந்த எழுத்தாளர் திலகவதி தனக்கும் பிரபஞ்சனுக்குமன நட்பை எடுத்துக்கூறி அவர் படைப்புகளின் மேன்மையைச் சுட்டிக்காட்டினார்.

பிரபஞ்சனின் தோழமை குறித்தும் அவர் பெண் எழுத்தாளர்களைக் கொண்டாடும் விதம் குறித்தும் அவரது படைப்புகளின் சிறப்புகள் குறித்தும் எழுத்தாளர் சந்திரா அழகான உரையை நிகழ்த்தினார்.

பிரபஞ்சனின் நாவல்கள் குறித்துப் பேச வந்த எழுத்தாளர் தமயந்தி தனக்குப் பிரபஞ்சனின் சிறுகதைகளையே மிகவும் பிடிக்கும், தான் எழுத வந்ததிற்குப் பிரபஞ்சனே முக்கியக் காரணம் எனக் நன்றிகூறியதோடு அவரது சந்தியா, மற்றும் மானுடம் வெல்லும் நாவலின் நுட்பங்களை எடுத்துக்காட்டிப் பேசினார்.

பிரபஞ்சனின் நாவல்கள் புதுச்சேரி மண்ணின் வரலாற்றிலிருந்து உருவான விதம் பற்றி நிறையத் தகவல்கள், சான்றுகளுடன் பேராசிரியர் ராமகுருநாதன் ஆய்வுரையைப் பகிர்ந்து கொண்டார்

தேநீர் இடைவேளைக்குப் பின்பு மாலை அமர்வு துவங்கியது. அதில் தியேட்டர் லேப் ஜெயராவ் குழுவினர் அப்பாவின் வேஷ்டி நாடகத்தை நிகழ்த்தினார்கள். அதைத்தொடர்ந்து வம்சி இயக்கிய வலி என்ற குறும்படம் திரையிடப்பட்டது. பிரபஞ்சனினின் கருணையினால் தான் சிறுகதையை மையமாகக் கொண்டு உருவாக்கபட்ட சிறந்த குறும்படம்.

வம்சிக்கு எனது மனம் நிரம்பிய அன்பும் வாழ்த்துகளும்

மாலை அமர்வின் துவக்கமாக நான் பிரபஞ்சனின் படைப்புலகம் குறித்து உரை நிகழ்த்தினேன்.

அதைத் தொடர்ந்து திரைக்கலைஞர் சிவக்குமார். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தோழர் நல்லகண்ணு, இயக்குனர் மிஷ்கின், ஒவியர் மணியம் செல்வம், இயக்குனர் மிஷ்கின் நீதிபதி சந்துரு, மொழிபெயர்ப்பாளர் கே.எஸ். இயக்குனர் ராஜு முருகன், ரஷ்யக்கலாச்சார மையத்தின் இயக்குனர் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் மேடைக்கு அழைக்கபட்டார்கள்.

டிஸ்கவரி புக் பேலஸ் சார்பில் பிரபஞ்சன் சிறுகதைகளை முழுத்தொகுப்பு மூன்று தொகுதிளாக வெளியிடப்பட்டது. இதனைத் தோழர் நல்லகண்ணு அவர்கள் வெளியிட வேலூர் லிங்கம். எஸ்.கே.பி. கருணா, பாஸ்கர் சக்தி, கே.வி. ஜெயஸ்ரீ ஆகிய நால்வரும் பெற்றுக் கொண்டு சிறப்பித்தார்கள்.

பிரபஞ்சன் பற்றிய ஆவணப்படம் ஒன்றை வேடியப்பனும் ஒளிப்பதிவாளர் வைட்ஆங்கிள் ரவிசங்கரும் உருவாக்க இருக்கிறார்கள். இதற்கான அறிமுகவிழா நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து பிரபஞ்சன் அவர்களுக்கு நாங்கள் திரட்டிய பத்துலட்சம் ரூபாய் சிறப்பு நிதியை திரைக்கலைஞர் சிவக்குமார் அளித்துப் பெருமைப்படுத்தினார். நிதி அளித்த நல்லோர் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வாழ்த்துரைகள் இடம்பெற்றன.

எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் பேசும்போது கண்கலங்கி  தான் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்வதற்கு பிரபஞ்சன் கதையில் இடம்பெற்ற ஒரு வரிதான் காரணம் என்றார்.

ஆண்களும் பெண்களும் கதையில் `குளிப்பதற்கு மறைவாக ஒரு இடம் தாரும் ஏசுவே` என்ற ஒரு வரி அந்தப் பெண்ணின்,ஏழைகளின் துயரத்தையும் இன்னலையும் உணர்த்தி தன்னை இயக்கத்திற்கு துரத்தியதாக சொன்னார். அரங்கமே நெகிழ்ந்து போனது.

சிறப்புரை வழங்கிய திரைக்கலைஞர் சிவக்குமார் சங்கப்பாடல்களை பேரலைகளின் வீச்சை போல ஆர்ப்பரித்துக் கொட்டிய விதம் அபாரம்.

பிரபஞ்சனின் முதல்கதை தாமரையில் வெளியானதை நினைவுபடுத்தி பேசிய தோழர் நல்லகண்ணு புதுவை இடதுசாரி இயக்கவரலாற்றை ஆவணப்படுத்திய நாவல் எழுதியவர் பிரபஞ்சன் எனப் பாராட்டி அவருக்கு கம்யூனிஸ்ட் இயக்கம் சார்பில் சால்வை அணிவித்து கௌரவித்தார்.

தோழர் நல்லகண்ணு அவர்களின் பண்பும் இலக்கியத்தின் மீதான பற்றும் தலைவணங்கக்கூடியது. அவரது வருகையே நேற்றையே நிகழ்வின் தனிச்சிறப்பு.

புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் இரண்டு மாத காலத்திற்குள் புதுவை மாநிலத்தில் பிரபஞ்சனுக்கு மிகச் சிறப்பாக விழா ஒன்றை எடுப்போம் எனவும் அவரை உரியமுறையில் கௌரவிப்போம் என்றும் அறிவித்தார்.

இயக்குனர் மிஷ்கின் உணர்ச்சிபூர்வமாக பிரபஞ்சனின் நட்பை பாராட்டி மகிழ்ந்தார். நீதிபதி சந்துரு, இயக்குனர் ராஜு முருகன், மொழிபெயர்ப்பாளர் கே. எஸ் ஆகியோர் மிகச்சுருக்கமான உரையை நிகழ்த்தினார்கள்.

விருந்தினர்கள் அனைவருக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

இறுதியாக ஏற்புரை வழங்கிய பிரபஞ்சன் எழுத்தாளனைக் கொண்டாட வேண்டியது பண்பாட்டின் கடமை என்பதைச் சுட்டிக்காட்டி தனது வாழ்க்கைத் துயரங்களை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டார். அன்பையும் நியாய உணர்வையும் வலியுறுத்துவதற்காகவே தான் தொடர்ந்து எழுதி வருவதாகக் குறிப்பிட்டார். அவரது உணர்ச்சிப்பூர்வமான உரை மிக அற்புதமாகயிருந்தது.

எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன். கவிஞர் மனுஷ்யபுத்திரன், கவிஞர் நரன், கவிஞர் ராஜசுந்தரராஜன், கவிஞர் இந்திரன் கவிஞர் சல்மா. கவிஞர்  பிரான்சிஸ் கிருபா, திரைவிமர்சகர் தனஞ்ஜெயன், எழுத்தாளர் கரன்கார்க்கி, எழுத்தாளர் ஜெயராணி, கவிஞர் ஜீவலட்சுமி, வாசகசாலை கார்த்திகேயன், தோழர் செல்வா, தோழர் பாரதி செல்வா, கவிஞர் பாலைவன லாந்தர், தோழர் யாழினி முனுசாமி எழுத்தாளர் ஜீவகரிகாலன். எழுத்தாளர் சுபாஷிணி. எழுத்தாளர் லேனா குமார், ஏர்போர்ட் மணிமாறன். ஐஐடி சசிக்குமார், பேராசிரியர் பாரதி சந்துரு, எழுத்தாளர் சீதா ரவி, கவிஞர் பிருந்தா சாரதி, ஆவணப்பட இயக்குனர் அருண்மொழி, உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டது மகிழ்ச்சியளித்தது.

இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்தியதிற்கு நண்பர்கள் பவா. செல்லதுரை மற்றும் வேடியப்பன் இருவரின் அயராத உழைப்பே முக்கியக் காரணம். அவர்களால் தான் நிதி திரட்டுவது சாத்தியமானது. உணவும் உபசரிப்பும் முறையாக நடைபெற்றது. இருவரின் அர்ப்பணிப்பு மிக்க இந்தப் பணி என்றும் நன்றிக்குரியது. எங்கள் பணிகளுக்கு வழிகாட்டியாக இருந்த சிவக்குமார் அவர்களுக்கு அன்பும் நன்றியும்.

திருவண்ணாமலையிலிருந்து பவா ஐம்பதுக்கும் மேற்பட்ட இலக்கியவாசகர்களை அழைத்துவந்திருந்தார். வேலூர் லிங்கன் தனது நண்பர்களுடன் வந்திருந்தார். செங்கல்பட்டு சாம்டேனியல் தனது நண்பர்களுடன் வந்திருந்தார். இதுபோல ஈரோட்டிலிருந்து தாமோதர் சந்துரு, புதுவையிலிருந்து விசாகன் தனது நண்பர்களுடன் வந்திருந்தார். மதுரை. காஞ்சிபுரம், கடலூர், கோவை என வெளியூர்களிலிருந்து நிறைய வாசகர்கள வந்திருந்தார்கள்.

தமிழின் முக்கிய எழுத்தாளர்கள், கவிஞர்கள், திரையுலகக் கலைஞர்கள், நாடக, ஒவியக்கலைஞர்கள். கல்வித்துறை நண்பர்கள், பத்திரிக்கையாளர்கள். தொலைக்காட்சி மற்றும் இணைய இதழலாளர்கள் எனப் பலரும் வந்து சிறப்பித்தார்கள்.

நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கே வந்து பிரபஞ்சனுக்காக நிதி அளித்த வாசகர்கள் ஏராளம். ஒரு எழுத்தாளனைக் கௌரவிக்க நிதி தாருங்கள் என்ற எங்கள் கோரிக்கையை ஏற்றுத் தங்களால் இயன்ற நிதியை அளித்த நல்லோர் அனைவருக்கும் எங்கள் இதயம் நிரம்பிய நன்றி.

ரஷ்யக் கலாச்சார மைய அரங்கை அளித்து உதவிய தங்கப்பன் அவர்களுக்கும், நிகழ்வை முழுமையாக ஒளிப்பதிவு செய்த ஸ்ருதி டிவி ரத்னத்திற்கும், புத்தக அச்சாகத்தில் உதவி செய்த பிரகாஷிற்கும், அழைப்பிதழ் வடிவமைப்பில் உதவிய மணிவண்ணன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

வருகைத்தந்த எழுத்தாளர்கள், வாசகர்கள், பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் இணையதள நண்பர்களுக்கு எமது நன்றிகள். விரைவில் முழுமையான காணொளிகள் Shrutitv Che மூலமாகப் பகிர்ந்து கொள்ளப்படும்

••

நன்றி

புகைப்படங்கள்

Shrutitv

29.04,2017

Archives
Calendar
June 2018
M T W T F S S
« May    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
Subscribe

Enter your email address: