காதலின் நெருப்பு

ஆஸ்திரேலியப் பழங்குடி இனத்தினை மையமாகக் கொண்ட Tanna என்ற திரைப்படத்தை இரவு பார்த்தேன். படம் Nauvhal மொழியில் உருவாக்கபட்டிருக்கிறது. படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் அனைவரும் பழங்குடி மக்களே.

Ten Canoes என்ற ஆஸ்திரேலியத் திரைப்படத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்பு பார்த்திருக்கிறேன். அற்புதமான படம். Tanna அதை நினைவுபடுத்தியது

படப்பிடிப்புக் குழு ஏழு மாதங்கள் காட்டிற்குள்ளாகவே தங்கி படமாக்கியிருக்கிறார்கள். நடிப்பு என்றால் என்னவென்றே தெரியாத வனவாசிகளுக்குப் பயிற்சி முகாம் நடத்தி அங்கேயே ஒரு கதையை உருவாக்கி திரைக்கதை வடிவம் கொடுத்திருக்கிறார்கள்.

தென்பசிபிக் கடல்பகுதியான Vanuatu நிறையத் தீவுகளைக் கொண்டது. கேப்டன் குக் 1774ல் அங்கே வந்திருக்கிறார். அவரே பழங்குடி மக்கள் கண்ட முதல் ஐரோப்பியர். அதன்பிறகு கிறிஸ்துவ மிஷனரிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அங்கே ஊழியம் செய்ய வந்திருக்கிறார்கள். பழங்குடி மக்கள் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. டன்னாவின் மத்தியபகுதியில் இன்றும் பூர்வகுடிகள் தங்கள் பண்பாடு மாறாமல் வாழ்ந்து வருகிறார்கள்..

வெளியுலகின் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாமல் தனித்துவாழும் பழங்குடிகளின் உலகையே இப்படம் கதைக்களமாகக் கொண்டுள்ளது. இரண்டு இனக்குழுக்களுக்குள் ஏற்படும் பகையும் அதை தீர்க்கும் விதமும் முதன்மையாக விரிகின்றன. அதன் ஊடே ஒரு காதல்கதை மலர்கிறது.

பெருமரங்களும் வழிந்தோடும் அருவிகளும், பெயரறியா பூக்களும், எரிமலையை நோக்கி செல்லும் நீண்டபாதையுமென என வனவாழ்வின் காட்சிகள் நம்மைப் பிரமிக்கவைக்கின்றன.

Vanuatu பிரதேச அழகை வெகுநேர்த்தியாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். படத்தில் பழங்குடி மக்களே நடித்திருப்பதால் அவர்களின் முகபாவங்களும் உணர்ச்சி வெளிப்பாடும் மிக இயல்பாகயிருக்கின்றன.

வாவா என்ற இளம்பெண்ணிற்கும் டெயின் என்ற இளைஞனுக்குமான காதல்கதையே படத்தின் மையஇழை. இரண்டு இனக்குழுவிற்குள் ஏற்படும் சண்டையைத் தீர்க்க வாவாயை மணம் முடித்துக் கொடுக்க முடிவு செய்கிறார்கள். ஆனால் வாவா ஏற்றுக் கொள்ளவில்லை,  காதலனுடன் ஒடிப்போன வாவா என்ன ஆகிறாள் என்பதே படத்தின் முடிவு.

கதையை விடப் படமாக்கபட்ட விதமும் வாவாவின் தங்கையாக வரும் சிறுமியின் துள்ளலான நடிப்பும் அவள் செய்யும் குறும்புத்தனங்களும் ரசிக்க வைக்கின்றன. பழங்குடிமக்களின் இசை, மற்றும் நடனங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒரு வகையில் இப்படம் Yakel tribe பற்றிய ஆவணப்படமே.

சமாதானத்தை நிலைநிறுத்துவதற்காக இரண்டு இனக்குழுக்களுக்குள் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அந்தக் காட்சி மிகவும் முக்கியமானது. இரண்டு இனத் தலைவர்களும் எவ்வாறு பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள் என்பதை விரிவாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். அதில் ஒரு இனக்குழு தலைவனின் அசைவற்ற கண்கள் அவன் சமாதானத்தை விரும்புகிறவனில்லை என்பதை காட்டிக் கொடுக்கின்றன.

பின்பு வாவா ஒடிப்போனதை அறிந்து அவளைக் கொல்ல கூட்டமாக அலைவதும், வாவா தன் காதலனுடன் எரிமலையின் பின்னால் ஒளிந்து கொள்வதும், அவளைக் காப்பாற்ற அவளது குடும்பம் இரவில் அலைந்து திரிவதும், அவளை பெயர் சொல்லி அழைத்து கூக்குரலிடுவதும் நம்மைக் கலங்கச் செய்கின்றன.

இப்படம் சிறந்த அயல்மொழி படத்திற்கான ஆஸ்கார் விருதிற்குச் சிபாரிசு செய்யப்பட்டது. ஆனால் விருது கிடைக்கவில்லை. வெனிஸ் திரைப்படவிழாவில் கலந்து கொண்டு விருது பெற்றிருக்கிறது.

பழங்குடி இனத்தலைவன் தனது பேரனுக்கு அவனுக்குரிய நிலத்தை, உரிய தாவரத்தை அடையாளம் காட்டுவதும், பழிவாங்க நினைப்பவன் ஒருபோதும் தலைவனாக முடியாது என அறிவுரை கூறுவதும், தன்னை விலக்கிவைக்கும் ஊரை விட்டு வெளியேறும் டெயினின் மனநிலையும் சிறப்பாக காட்சிப்படுத்தபட்டிருக்கின்றன.

வாவாவின் அழகும் அவள் காதலனிடம் எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொள்வது எனக்கேட்கும் போது டெயின் ஐம்பது எனச்சொல்ல அவள் முகத்தில் பீறிடும் வெட்கமும், இரவில் அவனுக்காக வீட்டை விட்டு வெளியேறி வரும் போது ஏற்படும் கலக்கமும்  நடிப்பின் உச்சமென்பேன்.

காதல் திருமணத்தைப் பழங்குடி மக்கள் அங்கீகரிப்பதுடன் படம் நிறைவுபெறுகிறது. அது எளிய முடிவில்லை. மகத்தான மாற்றம். அதை இரண்டு இனக்குழுக்களும் அங்கீகரிக்கிறார்கள். படத்தின் ஊடாகக் கிறிஸ்துவமயமாக்கபட்ட பழங்குடிகள் எப்படி வாழ்கிறார்கள் எனக்காட்டியது சரியானதொரு விமர்சனம்.

கண்ணாடி பரப்பு போன்று தெளித்த கடலும் கொந்தளிக்கும் எரிமலையும் பசுமைபீறிடும் மலைத்தொடருமாகப் படம் விரிய விரிய நாம் இன்னொரு உலகில் சஞ்சரிக்கத் துவங்குகிறோம். அதுவும் தகிக்கும் சென்னையின் கோடை இரவில் இப்படத்தைக் காணும் போது அடையும் சந்தோஷம் அளவில்லாதது.

ஆஸ்திரேலியத் திரைப்படங்கள் குறித்து நாம் அதிகம் கவனம் கொள்வதில்லை. ஆனால் Backtrack,. Red Dog: True Blue, The Hunter போலச் சமீபமாகப் பல அற்புதமான திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. Sherpa என்ற ஆவணப்படமும் முக்கியமானதே .

••

Archives
Calendar
December 2017
M T W T F S S
« Nov    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: