புதிய சாளரம்

சென்னை டிஎல்எப்பில் இயங்கி வரும் Nationstar Mortgage என்ற அமெரிக்க நிறுவனத்தில் புத்தக வாசிப்பை உருவாக்கும் விதமாக ஒரு சிறப்புக் கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் புத்தக வாசிப்பை அறிமுகப்படுத்த இப்படியொரு கூட்டம் நடப்பது இதுவே முதன்முறை என்றார்கள்.

இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தவர் Nationstar Mortgage ல் பணியாற்றும் நண்பர் நரேந்திரன் . தீவிர இலக்கிய வாசகரான அவரது முயற்சியின் காரணமாகவே நான் அழைக்கப்பட்டேன்.

Nationstar Mortgage அலுவலகம் இதற்கான அனுமதி அளித்ததோடு சிறப்பான ஏற்பாட்டினையும் செய்திருந்தது.

இலக்கியக்கூட்டங்கள். கல்லூரிகள். பள்ளிகளில் உரையாற்றியிருக்கிறேன். ஆனால் இது போன்ற ஒரு கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள் மத்தியில் பேசுவது என்பது புதிய அனுபவமாகவே இருந்தது.

ஆயிரம் பேருக்கும் மேலாக வேலை செய்யும் அலுவலகமது. மதியம் 3 மணிக்கு மேல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள்

விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்று அழைத்திருந்தார்கள். கூட்ட ஆரம்பத்தில் குறைவானவர்களே கலந்து கொண்டார்கள். ஆனால் நான் பேசப்பேச அரங்கு நிரம்பிவிட்டது.  நிறைய பேர் நின்று கொண்டே கூட்டம் கேட்டார்கள்.

கூட்ட அரங்கிலே  டிஸ்கவரி புக் பேலஸ் சிறிய புத்தகக் கண்காட்சி ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தார்கள். இரண்டு மணி நேரத்தில் ஏழாயிரம் ரூபாய்களுக்குப் புத்தகம் விற்பனையானது.

நவீன தமிழ் இலக்கியம் குறித்தும், புத்தகவாசிப்பின் முக்கியத்துவம் குறித்தும், அவசியம் படிக்க வேண்டிய சில புத்தகங்கள்  பற்றியும் பேசினேன்.

வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள் குறைவாகவே இருந்தார்கள். பலருக்கும் தமிழ்புத்தகங்கள் குறித்து எதுவும் தெரியவில்லை. ஆங்கிலத்திலும் கூடத் துப்பறியும் கதைகளைத் தான் அதிகம் தேர்வு செய்து வாசிக்கிறார்கள்.

ஆனால் தமிழ் இலக்கிய உலகை அறிமுகம் செய்து பேசியபிறகு நிறையப் பேர் ஆசையுடன் புத்தகங்களை வாங்கினார்கள். சிலர் படித்துவிட்டு எனக்கு விரிவாக மெயிலும் அனுப்பிவருகிறார்கள்.

பல்லாயிரம் பேர்கள் வேலை செய்யும் டிஎல்எப் ஒரு விநோதவுலகம். அதன் உள்ளே இப்படி இலக்கியத்தை. புத்தகங்களை நேசிக்கும் சிலரை சந்திக்கவும் உரையாற்றவும் முடிந்தது சந்தோஷம் தந்தது.

இனிமேல் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ஒரு எழுத்தாளரை அழைத்துக் கூட்டம் ஏற்பாடு செய்ய இருப்பதாகச் சொன்னார்கள்.

நான் எடுத்துவைத்த முதலடியை தொடர்ந்து முக்கிய எழுத்தாளர்கள் அழைக்கப்பட இருப்பது மகிழ்ச்சியே.

சிறப்பான உபசரிப்புடன், புத்தகங்கள் வாங்கிக் கொள்ளக் கிப்ட்கார்டும் கொடுத்து சிறப்பித்தார்கள்.

கார்ப்பரேட் நிறுவனங்களின் பணியாற்றுகிறவர்களின் பணிச்சுமை அதிகம். சினிமா, இசை இரண்டுமே அவர்களின் பிரதான பொழுதுபோக்கு. அதற்கு வெளியே விருப்பமான புத்தகங்களைத் தேடிப்படிப்பதோடு வாசகவட்டம் ஒன்றை உருவாக்க முயற்சிப்பது வரவேற்க வேண்டிய முயற்சி.

இது போன்ற புதிய கதவுகள் திறக்கப்படும் போது நவீன தமிழ் இலக்கியத்திற்கான வாசகப்பரப்பு விரிவடையும். Nationstar Mortgage அலுவலகத்தில் சிறிய நூலகம் ஒன்றை ஏற்படுத்தவும் நரேந்திரன் முற்பட்டு வருகிறார். இவரைப் போன்றவர்களே இலக்கியவாசிப்பை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்பவர்கள்.

நிகழ்ச்சி முடித்துவிட்டு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

தொலைக்காட்சிகளில் ஏன் புத்தகம் தொடர்பாக ஒரு நிகழ்ச்சி கூட ஒளிபரப்பு செய்வதில்லை..

சினிமா ஆடியோ கேசட் வெளியிட்டீனைக் கூட ஒளிபரப்பும் தொலைக்காட்சிகள் புத்தக வெளியீட்டுவிழா பற்றிய செய்தியை கூட ஏன் இருட்டடிப்பு செய்கிறார்கள்,

ஆடியோ புத்தகங்கள் தமிழில் உள்ளதா,

ஏன் ஈபுக் வெளியீட்டில் கவனம் செலுத்துவதில்லை.

சென்னையில் நடைபெறும் இலக்கியக்கூட்டங்களைத் தெரிந்து கொள்ள ஏதாவது ஒரு இணையதளமிருக்கிறதா எனப் பல்வேறு கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

புதிய திரைப்படம் வந்தால் அதற்கு டிக்கெட் எடுத்து தந்து அனுப்பி வைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் புத்தகங்கள் மீது ஏன் அக்கறை காட்டுவதில்லை என்று கேட்டேன்.

சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் ஆபத்து இல்லையா என ஒருவர் சப்தமாகச் சொல்லி சிரித்தார். உண்மை அது தானே.

டிஎல்எப் வளாகத்தினுள் பல்வேறுவகையான கார்ப்பரேட் அலுவலகங்கள் இயங்குகின்றன. இரண்டு லட்சம் பேருக்கும் அதிகமாக வேலை செய்கிறார்கள் . அதற்குள் உணவகம். பேங்க், பரிசுப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் என யாவும் இருக்கின்றன. ஆனால் புத்தகக் கடைகளோ, பத்திரிக்கைகள் விற்கும் கடையோ எதுவும் கிடையாது.

இவ்வளவு ஏன் தமிழகத்தில் அண்ணா பல்கலைகழகம் உள்ளிட்ட எத்தனையோ பெரிய கல்வி நிறுவனங்கள் உள்ளன. அதில் ஒன்றில் கூடப் புத்தகக் கடை கிடையாது. பின்பு எப்படிப் புத்தகங்கள் அறிமுகமாகும் எனப் பேசிக் கொண்டிருந்தேன்.

இணையத்தின் வழியே புத்தக வாசிப்பை பரவலாக்குவதற்கு உருவாக்குவதற்குத் தாங்கள் உதவுவதாகச் சொன்னார்கள் . வீடு திரும்பி வரும் போது மிகுந்த மனநிறைவாக இருந்தது.

நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த நரேந்திரனுக்கும் அவரது நண்பர்களுக்கும் மனம் நிரம்பிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

***

Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: