எழுத்தில் வாழ்பவர்கள்

ஒவியர்கள், எழுத்தாளர்கள், இசை மற்றும் நடனக்கலைஞர்களின் வாழ்க்கையை விவரிக்கும் ஆங்கிலப் படங்கள் நிறைய இருக்கின்றன. ஆனால் ஒரு பதிப்பாசிரியரின் வாழ்க்கையை, அவரது இலக்கிய ஆர்வத்தை பற்றிப் படம் எதுவும் வெளியானதில்லை.  அவ்வகையில் GENIUS தனித்துவமான படமே.

Michael Grandage இயக்கியுள்ள இப்படம் Max Perkins என்ற Scribners பதிப்பக எடிட்டருக்கும் தாமஸ் வுல்ப் என்ற அமெரிக்க எழுத்தாளருக்குமான உறவைப் பற்றியது.  அமெரிக்க இலக்கியத்தின் நிகரற்ற நாவலாசிரியர் தாமஸ் வுல்ப் என்று புகழ்ந்து போற்றுகிறார் வில்லியம் பாக்னர். தாமஸ் வுல்ப்பின் எழுத்துவகையைப் பின்தொடர்ந்தவர்களாக ரே பிராட்பரி, பிலிப் ராத் போன்ற எழுத்தாளர்களைக் குறிப்பிடுகிறார்கள்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற நாவலாசிரியர்களான ஹெமிங்வே, ஸ்காட் பிட்ஜெரால்ட் போன்றவர்களை அறிமுகப்படுத்தியவர் மாக்ஸ் பெர்கின்ஸ். தீவிர இலக்கிய ஆர்வம் கொண்ட மாக்ஸ் ஸ்கிரிப்னர்ஸ் பதிப்பகத்தில் எடிட்டராக வேலைக்குச் சேர்ந்தவுடன் புதிய எழுத்தாளர்களைக் கண்டறியத் துவங்கினார். இவரது அர்ப்பணிப்பு மிக்க தேடலின் காரணமாகவே அமெரிக்க இலக்கியத்தில் புத்தொளி பரவியது.

இலக்கியப் பிரதிகளைச் செழுமைப்படுத்த அவசியம் ஒரு எடிட்டர் தேவை. அப்படியொருவரைப் பற்றித் தமிழ் பதிப்புத்துறை அதிகம் கண்டுகொள்வதேயில்லை. க்ரியா பதிப்பகம்  முறையான எடிட்டர் குழுவுடன் செயல்படுகிறது. நான் அறிந்தவரை க்ரியா ராமகிருஷ்ணன் தமிழின் மிகச்சிறந்த எடிட்டர்.

டி.எஸ்.எலியட், ராபர்ட்டோ கலாசோ போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்கள் எடிட்டராகப் பணியாற்றியிருக்கிறார்கள். மாக்ஸ் பெர்கின்ஸ் எழுத்தாளரில்லை. ஆனால் மிக நுண்மையான இலக்கியவாசகர். அப்படியான ஒருவரே புதிய படைப்புகளை மதிப்பிடவும் செம்மைப்படுத்தவும் முடியும். தனது பதிப்புலக அனுபவத்தில் மாக்ஸ் நீண்ட அனுபவம் கொண்டவர்.

A. Scott Berg எழுதிய Max Perkins: Editor of Genius என்ற புத்தகத்தை அடிப்படையாக் கொண்டு இப்படம் உருவாக்கபட்டிருக்கிறது. இப்புத்தகத்தை முன்னதாக வாசித்திருக்கிறேன். படத்திற்கும் புத்தகத்திற்குமான இடைவெளி மிகக்குறைவு. மிக நேர்த்தியாகத் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்கள்.

கையெழுத்துப் பிரதிகளைப் படித்துத் திருத்தம் செய்யும் ஒருவரை பற்றி எப்படி ஒன்றரை மணி நேரப்படம் உருவாக்கமுடியும். அதில் என்ன காட்டிவிடமுடியும் என்பது ஒரு சவால். அதை மிகத்திறமையான திரைக்கதையின் வழியே சாதித்திருக்கிறார்கள்

படத்தின் துவக்கத்தில் மாக்ஸ் ஒரு கையெழுத்துப்பிரதியோடு தனது வீட்டிற்கு ரயில்பயணம் மேற்கொள்கிறார். ரயிலில் உட்கார்ந்தவுடன் கையெழுத்துப் பிரதியை வாசிக்கத் துவங்குகிறார். முதல்வரியே அவரை உள்ளிழுத்துக் கொள்கிறது. அந்த வரியை வாசித்தவுடன் அவரது முகத்தில் வெளிப்படும் உணர்ச்சிகள் அற்புதம். அக் கையெழுத்துப் பிரதியை வாசித்தபடியே பயணம் செய்கிறார். வீட்டிற்குத் திரும்பியும் இரவெல்லாம் வாசிக்கிறார்.

வெளியிட வேண்டாம் என பதிப்பகம்  ஒதுக்கிய ஒரு இளம் எழுத்தாளரின் முதல்நாவலது.

அந்த நாவல் மாக்ஸிற்கு மிகவும் பிடித்துப் போகிறது. மாக்ஸின் குடும்பமே இலக்கிய ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அவரது மனைவி நாடகத்தில் ஈடுபாடு கொண்டவள். அவருக்கு ஐந்து மகள்கள். அனைவரும் படிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள்.  அவர்கள் தாமஸ்வுல்போடு உணவு மேஜையில் உரையாடும் காட்சி மிகவும் சுவாரஸ்யமானது.

சில நாட்களில் தாமஸ் வுல்ப் என்ற அந்த இளம் எழுத்தாளன் மாக்ஸை சந்திக்க வருகிறான். தன்னுடைய நாவலை அவர் நிராகரித்தாலும் பரவாயில்லை. புகழ்பெற்ற எழுத்தாளர்களை உருவாக்கிய மனிதரை ஒருமுறை பார்த்து போகவே வந்ததாகக் கூறுகிறான். அவனது கவித்துவமான பேச்சு. அதிலிருக்கும் வேகம், துடிப்பு மாக்ஸை மிகவும் கவர்ந்துவிடுகிறது.

அவனது நாவலை வெளியிடுவதாக ஒத்துக் கொண்டு முன்பணம் தருகிறார். ஆனால் ஆயிரம் பக்கங்களுக்கு மேலுள்ள கையெழுத்துப்பிரதியை திருத்திச் சுருக்க வேண்டும் என்கிறார். அவனும் ஒத்துக் கொள்கிறான்

இந்தப் பணி எப்படி நடைபெறுகிறது. தாமஸ் வுல்ப் எவ்வாறு புகழ்பெறுகிறான். அவனது அடுத்த நாவலை இரவு பகலாக எப்படி பெர்கின்ஸ் எடிட் செய்கிறார் என அவர்களுக்குள் ஏற்பட்ட நட்பையும் அன்பையும் பிரிவையும் படம் விவரிக்கிறது.

படத்தின் ஊடாக ஹெமிங்வேயும், பிட்ஜெரால்டும் கதாபாத்திரங்களாக வருகிறார்கள். குறிப்பாகப் பிட்ஜெரால்ட் போதையிலிருந்து மீண்டு தனது புதிய படைப்பை உருவாக்க முயற்சிப்பதும். அவரது மனநலமற்ற மனைவியின் முன்பாகத் தாமஸ் வுல்ப் அவரை அவமதிக்கும் காட்சியும் சிறப்பானவை.

அக்காட்சிக்குப் பிறகு பெர்கின்ஸ் தாமஸ் வுல்பிடம் சொல்கிறார். நீ ஒரு நாளில் ஐந்தாயிரம் வார்த்தைகள் எழுதக்கூடும். ஆனால் பிட்ஜெரால்ட் ஐம்பது வார்த்தைகள் எழுதவே சிரமப்படுகிறான். அவன் மகத்தான எழுத்தாளன். அவனது தவிப்பை நீ புரிந்து கொள்ளாமல் ஏளனம் செய்கிறாய். எழுத்தில் வெளிப்படும் நுண்ணுர்வு உன்னிடமில்லை. உன்னை விட ஆயிரம் மடங்கு சிறப்பானவன் பிட்ஜெரால்ட். அதிகப் பக்கங்கள் எழுதுவதால் மட்டும் ஒருவன் பெரிய எழுத்தாளன் ஆகிவிட முடியாது எனக் கண்டிக்கிறார்.

தாமஸ்வுல்ப் தனது தவறை உணர்ந்து கொள்கிறான். மறுநாள் பிட்ஜெரால்டினைத் தேடிப் போய் மன்னிப்புக் கேட்கிறான்.  அப்போது பிட்ஜெரால்ட் தனது பக்கத்து வீட்டில் ஒரு நடிகையிருக்கிறாள். அவள் ஒத்திகை பார்ப்பதாகச் சொல்லி அடிக்கடி கூச்சலிடுவாள். கத்துவாள். சிரிப்பாள். தாங்கமுடியாத இம்மையது. ஆனால் அதைச் சகித்துக் கொண்டு தான் வாழ்கிறேன், எழுதுகிறேன் எனச்சொல்லுகிறார்.

உலகம் அப்படிப்பட்டது தான். எழுத்தாளன் விரும்பியதை உலகம் அவனுக்குத் தருவதில்லை. நெருக்கடிகளுக்குள். சொந்த வாழ்வின் அவலத்திற்குள். பொருளாதாரச் சிரமத்திற்குள் தான் அவன் மகத்தான படைப்பை எழுதிக் கொண்டிருக்கிறான் என்பதற்கு இதைவிடச் சிறந்த எடுத்துக்காட்டு வேறு கிடையாது.

படத்தின் ஒரு காட்சியில் எழுத்தாளர்களுக்குத் தனிமையே கிடையாது.அவர்கள் கதாபாத்திரங்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். அதனால் தான் வெளியுலகின் இயல்பும் வேட்கையும் அவர்களுக்கு வசீகரமாகயில்லை என ஒரு கதாபாத்திரம் கூறுகிறது. உண்மை. உலகில் எல்லா எழுத்தாளர்களும் மானசீகமாக ஏதாவது ஒரு கதாபாத்திரத்தைப் பற்றி சிந்தித்தபடியோ, உருவாக்கியபடியோ, உடனிருப்பதாக நினைத்தபடியோ தான் வாழ்கிறார்கள். அன்னா கரீனினாவும் டால்ஸ்டாயின் மகள் தானே. அவளை வேறு எப்படி புரிந்து கொள்ள முடியும்.

தாமஸ் வுல்பை தனது சொந்தமகனைப் போல நேசிக்கிறார் பெர்கின்ஸ். ஒரு காட்சியில் அதை மாக்ஸின் மனைவியே சுட்டிக்காட்டுகிறாள். ஆனால் வுல்ப் அதைப் புரிந்து கொள்ளவில்லை. தனது படைப்புகளைத் திருத்தி நாசம் செய்துவிட்டார் எனக் குற்றம் சாட்டுகிறான். தனக்குக் கிடைத்துள்ள புகழ் மாக்ஸ் போட்ட பிச்சை எனச் சிலர் சொல்கிறார்கள் எனக் கோபம் கொள்கிறான்.

மாக்ஸ் தனது அன்பை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. ஒரு எடிட்டர் எப்போதும் வாசகனை மட்டுமே மனதில் கொண்டு செயலாற்றுகிறவன். எழுத்தாளனுக்குத் தான் எல்லாப் புகழும் கிடைக்கப் போகின்றன என்று அறிந்து செயல்படுகிறவன். தன்னை முன்னிருத்திக் கொள்ளாத உழைப்பாளி என மாக்ஸ் குறிப்பிடுகிறார். அது முற்றிலும் உண்மை

தாமஸ்வுல்ப் ஒரு இளம் எழுத்தாளனாக அறிமுகமாகி ஆயிரக்கணக்கில் விற்கும் தனது நாவலின் வழியே புகழ்பெற்ற இலக்கியவாதியாகிறான். அடுத்த நாவலை பல்லாயிரம் பக்கங்கள் கொண்டதாக எழுதிக் கொண்டு வருகிறான். எழுத்தாளன் பேராசை கொண்டவன். மொத்த உலகையும் தனது எழுத்திற்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்ற வேட்கைமிக்கவன் என்பது வுல்பின் செயல்பாடுகளில் துல்லியமாக வெளிப்படுகிறது.

அத்தனை ஆயிரம் பக்கங்களில் இருந்து ஒரு நாவலை உருவாக்க பெர்கின்ஸ் போராடுகிறார். இதற்கு ஊடாகத் தினமும் புதிது புதிதாக எழுதி தள்ளிக் கொண்டேயிருக்கிறான் தாமஸ்வுல்ப். நின்ற நிலையில் பிரிட்ஜ் மீது காகிதங்களை வைத்து பென்சிலால் வேகவேகமாக எழுதி தள்ளும் காட்சியொன்றிருக்கிறது. அற்புதம்.

பெர்கின்ஸ் கையெழுத்துப்பிரதியைப் படித்துத் திருத்தம் செய்து சலித்துப் போகிறார். அவரைச் சந்தோஷப்படுத்த ஜாஸ் இசைநிகழ்ச்சி ஒன்றிற்கு அழைத்துப் போகிறான் தாமஸ் வுல்ப். தன்னுடைய உலகை அவர் புரிந்து கொள்ளும் போது தான் தன் நாவலை புரிந்து கொள்ள முடியும் என்கிறான். அவனது சொந்த வாழ்வின் நீட்சியே அவனது நாவல்கள்.

அக்காட்சியில் பெர்கின்ஸ் ஜாஸ் இசையை ரசிக்கிறார். சேர்ந்து குடிக்கிறார். சந்தோஷமாகச் சிரிக்கிறார். இக்காட்சி ஒன்றே அவர் சிரிக்கக் கூடிய காட்சி. மற்ற நேரங்களில் படித்துக் கொண்டும் திருத்திக் கொண்டும் வேலை செய்தபடியுமிருக்கிறார். Colin Firth மாக்ஸ் பெர்கின்ஸாகச் சிறப்பாக நடித்திருக்கிறார். நிஜ மாக்ஸ் போன்ற உருவ ஒற்றுமையும் ஆச்சரியமூட்டுகிறது.

தனது நாவலின் வரிகளை மாக்ஸ் பெர்கின்ஸ் திருத்தம் செய்து நீக்கும் போது கோபத்தில் தாமஸ்வுல்ப் கத்துகிறான்

“நல்லவேளை உங்களிடம் டால்ஸ்டாய் சிக்கிக் கொள்ளவில்லை. ஒரு வேளை மாட்டியிருந்தால் மாபெரும் நாவலான வார் அண்ட் பீஸ் வெளியாகியிருக்காது “

தாமஸ்வுல்பின் கோபத்தைப் பொருட்படுத்தாமல் மாக்ஸ் அவனது நாவலை திருத்தம் செய்கிறார். செம்மைப்படுத்தி சுருக்கி வெளியிடுகிறார். அந்த நாவல் மிகப்பெரிய வெற்றியடைகிறது.

தாமஸ்வுல்ப் அமெரிக்க இலக்கியத்தின் புதிய நாயகனாகக் கொண்டாடப்படுகிறான். பணமும் புகழும் சேர்கின்றன. ஐரோப்பிய சுற்றுலா மேற்கொள்கிறான். ஊர் திரும்பும் அவனை மாக்ஸ் வரவேற்கிறார். தன் எழுத்தைப் போலவே வேகமும் கட்டுப்பாடற்ற சுதந்திரமும் கொண்டவனாகத் தாமஸ் வுல்ப் நடந்து கொள்கிறான். அவர்களுக்குள் மனவேற்றுமை உருவாகிறது. பிரிந்துவிடுகிறார்கள்.

ஒரு நாள் மாக்ஸின் மகள் இப்போது ஏன் தாமஸ் வுல்ப் நம் வீட்டிற்கு வருவதேயில்லை என்று கேட்கிறாள். அதற்கு, இனி அவன் வரமாட்டான் எனக் கூறும் பெர்கின்ஸ் மகளை மடியில் அமர்த்தி அவனது நாவலை வாசித்துக் காட்டுகிறார். எழுத்தாளன் தன்னை விட்டுப் போய்விடலாம். ஆனால் அவனது எழுத்து தன்னைவிட்டுப் போய்விடாது என்று பெர்கின்ஸ் சுட்டிக்காட்டும் இடத்தில் என்னை மீறி கண்ணீர் கசிந்தது .

படத்தின் இறுதிக்காட்சியில் தனக்குத் தாமஸ் வுல்ப் எழுதிய கடித்தை வாசிப்பதற்கு முன்பு அறைக்கதவை பெர்கின்ஸ் எழுந்து மூடுகிறார். அவரது மனநிலை எப்படியிருக்கிறது என்பதற்கு அதுவே சாட்சி. பென்சிலால் எழுதப்பட்ட அந்தக் கடிதத்தை அவர் வாசிக்கும் காட்சி மறக்கமுடியாதது

எழுத்தாளின் மனவுலகை இப்படம் சிறப்பாக சித்தரிக்கிறது. குறிப்பாக, உறவுகளில் ஏற்படும் கொந்தளிப்பையும், கடந்தகாலத்தின் வலியை நிகழ்காலத்தின் சந்தோஷங்களால் சரிசெய்துவிடமுடியாது என்ற தவிப்பையும், பதிப்புலகின் அர்ப்பணிப்பு மிக்க செயல்பாட்டினையும், உலகை சந்தோஷம் கொள்ளச் செய்யும் எழுத்தாளன் தீராத்தனிமையில், சிரமத்தில் பீடிக்கப்பட்டிருக்கிறான் என்ற உண்மையை அடையாளம் காட்டிய விதத்தில் இப்படம் மிகவும் முக்கியமானது

ரயிலேறுவதற்காக மாக்ஸ் வரும் காட்சிகள் அற்புதமாக படமாக்கபட்டிருக்கின்றன. Jude Law தாமஸ் வுல்பாகவும் Nicole Kidman  அவனது காதலியாகவும் அருமையாக நடித்திருக்கிறார்கள்

ஒரு காட்சியில் நிகோல் கிட்மேன் மாக்ஸிடம் தாமஸ் வுல்ப் ஒருவருக்கு ஒரு புத்தகத்தை சமர்ப்பணம் செய்கிறான் என்றால் அவரது உறவைத் துண்டித்து விடப்போகிறான் என்று அர்த்தம். முதல் புத்தகம் எனக்கு அர்ப்பணிக்கபட்டது. இரண்டாவது உங்களுக்கு அர்ப்பணிக்கபட்டிருக்கிறது என்கிறாள்.

சமர்ப்பணம் என்பது அன்பால் மட்டுமே அடையாளப்படுத்தக்கூடியதில்லை என்ற உண்மை முகத்தில் அறைகிறது.

அமெரிக்க இலக்கியங்களை விரும்பி வாசித்தவன் என்ற முறையில் GENIUS எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மற்றவர்களை இவ்வளவு கவருமா எனத்தெரியவில்லை.

படம் பார்த்த உத்வேகத்தில் தாமஸ்வுல்ப்பை மீண்டும் வாசிக்க கையில் எடுத்தேன்.

மாக்ஸிற்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட தாமஸ்வுல்பின் OF TIME AND THE RIVER நாவலின் சமர்ப்பண வாசகங்கள் வுல்பின் கோபத்தை, இயலாமையை, பெர்கின்ஸின் மீதான அன்பை, மதிப்பை அழகாக வெளிப்படுத்துகின்றன.

தாமஸ் வுல்ப் பற்றித் தமிழில் யாரும் கட்டுரை எழுதியிருக்கிறார்களா எனத் தெரியவில்லை. ஆனால் யுத்த தேவதையின் திருமுக மண்டலம் என்ற சிறுகதை ஒன்றை புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்.

எழுத்தாளர் ஜி. நாகராஜனுக்குத் தாமஸ் வுல்பை மிகவும் பிடிக்கும் என்றொரு குறிப்பை எங்கோ வாசித்திருக்கிறேன். யோசித்துப் பார்த்தால் ஜி.என் போன்ற வாழ்க்கையை வாழ்ந்தவரே தாமஸ் வுல்ப். இருவரும் அற்ப ஆயுளில் மறைந்து போனவர்கள். ஜி.நாகராஜன் பற்றியும் Genius போல ஒரு படத்தை உருவாக்கமுடியும். ஆனால் தமிழ் சினிமாவில் யாருக்கு அந்த ஆசையும் தைரியமும் இருக்கப் போகிறது.

••

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: