காமரூபத்தில் உலவும் நிழல்கள்

ஞானபீடப்பரிசு பெற்ற அஸ்ஸாமிய எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமி. இவரது தென்காமரூபத்தின் கதை என்ற நாவல் 2011ல் வெளியாகியுள்ளது. சாகித்திய அகாதமி இதனை வெளியிட்டுள்ளது.

தென்காமரூபத்தின் கதையைத் தமிழில் மொழிபெயர்ப்பு செய்துள்ளவர் அ. மாரியப்பன். இவர் தில்லி பல்கலைகழகத்தில் தமிழ்பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார்.

அஸ்ஸாமியர்களால் தங்களின் அன்புக்குரிய பாய்தேவ் (மூத்த சகோதரி) என்று அழைக்கப்பட்டவர் இந்திரா கோஸ்வாமி என்ற மாமோனி ராய்சோம் கோஸ்வாமி

இவர் இரவீந்திரபாரதி பல்கலைகழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார், அஸ்ஸாம் ரத்னா, சாகித்ய அகாதமி விருது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார். மத்திய அரசு பத்மஸ்ரீபட்டம் அளிக்க முன்வந்த போது தனக்குக் காலதாமதமாக அளிக்கபடும் அந்த விருதை ஏற்கமுடியாது என மறுத்துவிட்டார். தடைசெய்யப்பட்ட உல்ஃபா எனப்படும் அசாம் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும் மத்திய அரசிற்கும் இடையில் அமைதித்தூதுவராகப் பணியாற்றியிருக்கிறார். இவரது முயற்சிகளால் மக்கள் அமைதிக்குழு உருவாக்கபட்டது.

காமரூபம் அசாமின் இயற்கை வளமிக்க மாவட்டமாகும். அமரங்கா என்ற சிற்றூரில் பிராமணக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் இந்திரா. ஏகசரணத் தர்மம் எனும் பெயரில் தீவிர வைணவத்தைப் போதிக்கும் சத்திராக்கள் அஸ்ஸாம் முழுவதும் பரவலாகக் காணப்படுகின்றன. அதில் அதிகார்களாக இருந்தது இந்திராவின் குடும்பம்.

இந்திரா ஷில்லாங்கின் பைன் மவுண்ட் பள்ளியில் தன்னுடைய பள்ளிக்கல்வியையும், கௌஹாத்தி காட்டன் கல்லூரியில் அஸ்ஸாம் இலக்கியத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டமும் பெற்றார். கல்லூரி காலத்திலேயே, இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. தில்லி பல்கலைக்கழகத்தில் அஸ்ஸாம் மொழி விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்த இந்திரா பின்பு அதன் துறைத் தலைவராகச் செயல்பட்டார்.

1962-இல் பாலம் கட்டும் வேலைக்காக அஸ்ஸாம் வந்திருந்த, மைசூரைச் சேர்ந்த மாதவன் ராயசோம் ஐயங்கார் என்ற என்ஜினியரை காதல் திருமணம் செய்து கொண்டார். பின்பு கணவருடன்வேலை நிமித்தம் காஷ்மீருக்கு இடம்பெயர்ந்தார் இந்திரா. காஷ்மீரில் சாலை விபத்து ஒன்றில் கணவர் இறந்து போனார். இது அவரது வாழ்வின் மறக்க முடியாத சோகம். விதவை வாழ்க்கை அவரை முடக்கிப்போட்டது. அதிலிருந்து மெல்ல மீண்டெழுந்து எழுத்தில் அதிகக் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அப்படி உருவானதே அவரது முக்கிய இலக்கியப்படைப்புகள்

இவரது சுயசரிதை An unfinished Autobiography என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இதில் ஒளிவு மறைவின்றித் தனது இளமைபருவத்தை, காதலை, காமத்தை, தனது கணவரின் மறைவிற்குப் பிறகு விதவையாக வாழ்ந்த நாட்களின் வேதனைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். இதற்காக இந்திரா கடுமையாக விமர்சிக்கபட்டார். கமலாதாஸின் என் கதையைப் போலவே இந்தச் சுயசரிதையும் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானது.

திருமணத்திற்கு முன்பு தனக்கு ஏற்பட்ட பாலியல் உந்துதல்களையும் அதற்காகத் தான் வீட்டில் தண்டிக்கப்பட்டதையும் தம் வீட்டிற்கு அருகிலிருந்த கிரினோலின் அருவியில் பாய்ந்து தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டதையும், திருமணத்திற்குப் பிறகு மேஜர் சந்து என்பவருடன் தனக்கு ஏற்பட்ட காதல் நெருக்கத்தைப் பற்றியும் வெளிப்படையாகப் பதிவு செய்திருக்கிறார் இந்திரா கோஸ்வாமி.

விதவையாக இருந்த நாட்களில் உறக்கமில்லாமல் போகவே தான் அதிகம் தூக்க மாத்திரைகளை உட்கொண்டதையும், பல்வேறு சாமியார்களைத் தேடிப்போய் மனநிம்மதி தேடியதையும், சக அலுவலர்கள் நண்பர்கள் சிலர் தன்னைக் காதலித்த விஷயத்தையும் அதில் சிலருடன் தான் படுக்கையைப் பகிர்ந்து கொண்டதையும் பகிரங்கமாக எழுதி தனது மனக்கொந்தளிப்புகளை நேர்மையாக ஆவணப்படுத்தியிருக்கிறார் இந்திரா கோஸ்வாமி.

பதிமூன்று நாவல்களையும் ஏழு சிறுகதை தொகுப்புகளையும் ஒரு சுயசரிதை நூலையும் ஒரு கவிதை தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார்.

மத்திய பிரதேசத்தின் கட்டிடத் தொழிலாளர் பிரச்சினைகளை மையமாக வைத்து இவர் எழுதிய The Rusted Sword என்ற நாவலுக்காக 1983ஆம் ஆண்டுச் சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலம் பிருந்தாவனுக்குச் முனைவர் பட்ட ஆய்விற்காகச் சென்ற இந்திரா, அங்கு விதவை இல்லங்கள் செயல்படும் முறை பற்றியும் வறுமை மற்றும் பாலியல் சுரண்டல்கள் குறித்தும் விரிவாக ஆராய்ந்து அதனை Blue Necked Braja என்ற நாவலாக எழுதினார். இந்நாவல் கிருஷ்ணன் புகழப்படும் பிருந்தாவனத்தின் கொடூரமான மறுமுகத்தை வெளிப்படுத்தியது. இதன் காரணமாகக் கடுமையான சர்ச்சைகள் உருவாகின.

டெல்லியில் நடைபெற்ற சீக்கிய கலவரத்தை முன்வைத்து இவர் எழுதிய Pages Stained With Blood and Dust நாவல் குறிப்பிடத்தக்க ஒன்று

The Man from Chinnamasta நாவல் அசாமிலுள்ள காமாக்யா கோவிலில் மிருகங்களைப் பலியிடும் ஆயிரம் ஆண்டுப் பழக்கத்தைக் கடுமையாக விமரிசிக்கிறது. இந்நாவல் தொடராக வெளிவந்த போது, இந்திரா கோஸ்வாமி கடுமையான மிரட்டல்களைச் சந்தித்தார். அவர் அஸ்ஸாமிற்குள் நுழைய அனுமதிக்கமாட்டோம் எனத் தாந்திரீகர்கள் எச்சரிக்கை செய்தார்கள்.

இந்தி மொழியின் துளசி ராமாயணத்தையும், அஸ்ஸாம் மொழியின் மாதவ ராமாயணத்தையும் ஒப்பிட்டு, “இராமாயணம் – கங்கையிலிருந்து பிரம்மபுத்திராவுக்கு’ எனும் ஆய்வு நூலை எழுதியிருக்கிறார். இது சர்வதேச அளவில் கவனம் பெற்ற ஆய்வாகும்

அவரது வாரிசு என்ற சிறுகதையில் வறுமையில் வாடும் பிராமணப்பெண் ஒருத்தி தனது கணவனின வற்புத்தலால் வசதியான ஒருவனுக்குப் பிள்ளையில்லை என்பதால் அவனுடன் கூடிக் கர்ப்பமாகி பிள்ளை பெற்றுதர சம்மதிக்கிறாள்.

ஆனால் கர்ப்பம் வளரும் நாளில் அவன் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவன் என்பதை அறிந்து தனது கர்ப்பத்தைக் கலைத்து விடுகிறாள். ரத்தமும் சதையுமான அந்தப் பிண்டத்தை அந்த மனிதன் புலம்பியபடியே புதைப்பதோடு கதை முடிகிறது. சாதியக்கொடுமை எவ்வளவு அழுத்தமாகப் புரையோடிப்போயிருக்கிறது என்பதை இக்கதை வெளிப்படுத்துகிறது

இது போலவே வெற்றுடல் என்ற சிறுகதையில் சுடுகாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட பிணம் ஒன்றைக் காணும் வெட்டியானின் மகள் இத்தனை காலம் தன் காதலை மறைத்துக் கொண்டு வாழ்ந்துவிட்டதை உணர்ந்து இப்போது தன் காதலன் இறந்துவிட்டான். இது அவனது பிணம் இனி தைரியமாக அந்த உடலை தான் தீண்டலாம். யாரும் தன்னைத் தண்டிக்கமாட்டார்கள், எனக் கட்டித் தழுவுகிறாள்.

பெண்கள் உடலைப் பாவப்பொருளாகக் கருதவேண்டும் என்றே மதக்கட்டுபாடுகள் கூறுகின்றன. ஆனால் பெண் உடல் என்பது ஆசைகளும் கனவுகளும் காமமும் உழைப்பும் கொண்டது. பெண் வீட்டுவேலைகள் செய்யும் இயந்திரமில்லை. அவள் உயிருள்ள மனுஷி. தனது ஆசைகளை அவள் வெளிப்படுத்த எது தடையாக இருந்தாலும் கடந்து போய் அதை அடைவாள் என்று இந்திரா தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார். அதைத் தான் அவரது எழுத்தும் முன்னிறுத்துகிறது

••

அஸ்ஸாமின் வைஷ்ணவ மடங்கள் மிகவும் ஆசாரமானவை. சத்திரா என அந்த மடங்களை அழைக்கிறார்கள். இந்தச் சத்திராவிற்கு நிறைய நிலங்கள் அஹோம் மன்னர்களால் தானமாக அளிக்கபட்டிருந்தன. அதைச் சத்திராதிகார்கள் நிர்வகித்து வந்தார்கள். அப்படி ஒரு அதிகார் குடும்பத்தின் கதையைத் தான் இந்நாவல் விவரிக்கிறது.

அதிகார் அல்லது கொஸைன் சத்திராவின் தலைவர். இவர் சமயத்தலைவராக மட்டுமின்றிச் சமூக அதிகாரமும் கொண்டவர். ஏராளமான நிலங்களுக்கு உரிமையாளர். இவரைக் கடவுளைப் போலவே திருத்தொண்டர்கள் கருதினார்கள்.

பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் கொடை நிலங்கள் மீதான சட்டங்களில் செய்த மாற்றமும் சுதந்திரத்தின்பின்பு உருவான நிலச்சீர்த்திருத்த சட்டமும் சத்திராவின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன.

ஒரு காலத்தில் மிகவும் செல்வசெழிப்போடு வாழ்ந்து மெல்ல வீழ்ச்சியடைந்த கொஸைன்களின் கடைசிக்காலத்தைச் சுற்றியே நாவல் சுழல்கிறது. இதனை வாசிக்கும் போது தமிழகத்து ஜமீன்தார்களின் வீழ்ச்சியும் கடைசிகாலமுமே நினைவிற்கு வந்தன.

கொஷைன்கள் தாழ்த்தப்பட்ட மக்களை அடித்து உதைத்து அவமதித்தார்கள். காலமாற்றத்தில் உழைக்கும் மக்கள் சத்திராவிற்கு எதிராகப் போராடி நிலத்தைத் தாங்களே உரிமை கொண்ட போது அதற்கு எதிராகக் கொஷைன்கள் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டார்கள். இதன்விளைவாகக் கம்யூனிச இயக்கம் மக்களிடையே வேகமாகப் பரவி கிராமம் தோறும் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைகள் உருவாகின. இந்தச் சூழலை தான் நாவல் மையமாக விவரிக்கிறது. நாவலின் முடிவில் இந்திரநாத் கொல்லபடுவதுடன் நிலச்சீர்திருத்த சட்டம் அமுலுக்கு வந்து சத்திராவின் வீழ்ச்சி உறுதி செய்யப்படுகிறது

தென்காமரூபத்தின் கதை சத்திராவின் கதையை மட்டும் கூறவில்லை.கொஷைன்கள் செயல்பட்டார்கள் என்பதை ஒரு தளத்திலும். மத, சாதியக்கட்டுபாடுகள் விதவைகளை எவ்வாறு அடக்கி ஒடுக்கின என்பதை இன்னொரு தளத்திலும். அபின் பழக்கம் ஏழை எளிய மக்களை எப்படிப் போதை அடிமைகளாக்கியது என்பதை இன்னொரு தளத்திலும் விவரிக்கிறது.

நூறு வருஷங்களுக்கு முந்தைய அஸ்ஸாமின் இயற்கை வளமும், கிராமப்புற வாழ்க்கையும் சடங்குகளும் வைஷ்ணவ வழிபாடும். தாழ்த்தப்பட்ட மக்களின் வறுமையும் பால்யவிவாகமும் அழுத்தமாக இந்த நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நாவல் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. நந்திதா தாஸ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்

இந்திரா கோஸ்வாமியின் சிறப்பு அவரது கவித்துவமான உரைநடை. வண்ணங்களும் வாசனையும் கொண்டது, நுண்மையான விவரிப்பின் மூலம் விதவிதமான உடைகள் உணவு வகைகள் பறவைகள், பழங்கள், பூக்கள், நாட்டார் கதைகள். பாடல்கள், நம்பிக்கைகளை உணர்ச்சிப்பூர்வமாக எழுதியிருக்கிறார். பாட்டி கதை சொல்லுவது போலக் கடந்தகாலச் சம்பவங்கள், நம்பிக்கைகள் பலவற்றைக் கதையின் ஊடே சுவாரஸ்யமாக விவரிக்கிறார். குறிப்பாக ஜெர்மன் சாகிப்பின் வேட்டை, கிரிபாலா உடும்புகறிச் சமைப்பது. பிராமணர்கள் ஆட்டுகறிக்காகச் சண்டையிடுவது. மதம் பிடித்த யானையை இந்திரநாத் சந்திப்பது ஆகியவை மறக்கமுடியாத காட்சிகள்.

மரங்களைச்சுற்றிப்படர்ந்திருந்த வெற்றிலைக் கொடிகள் இலைகளற்று மொட்டையாக இருந்தன. அது உலர்ந்த மனிதக்குடல்கள் கமுகமரங்களைச் சுற்றிப் படர்ந்திருப்பது போலத் தென்பட்டது. (பக் 26)

அவளுடைய இடுப்பில் காணப்பட்ட மடிப்பு மரத்தை நல்லபாம்பு பின்னியிருக்கும் காட்சியை அவனுக்கு நினைவுபடுத்தியது. (பக் 33)

அந்தப் பெண்ணின் நினைவு புதிதாகத் தோண்டிய கிணற்றைச்சுற்றியிருக்கும் ஈரமான நெகிழ்வான மண் போலப் புதுமலர்ச்சியோடு இருந்தது (பக் 36)

மேமாதம் விதவைப்பெண்கள் அமோதி நோன்பு நோற்கும் காலம். இக்காலத்தில் பூமிப்பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்படும் என்பது ஐதீகம் (பக் 38)

காற்றில் அபின்வாடையோடு வெற்றிலையை வதக்கும் வாடையும் யானைச்சாணியின் வாடையும் கலந்து வந்தது. (பக் 51)

அவள் உடல் தீயில் பாதி வெந்து அழிந்தபிறகும் இளம்மூங்கிலைப்போல மிருதுவாகவும் அழகாகவும் இருந்தன (பக் 63)

சூரியன் ஒரு பெரிய கனிந்த பூசணிப்பழம் போலக் காட்சியளித்துக் கொண்டிருந்தது (பக்275)

அஸ்ஸாமின் முக்கியப்பிரச்சனையான அபின் பழக்கம் எப்படி உருவானது. தனது வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளப் பிரிட்டீஷ் அரசு அஸ்ஸாம் மக்களை எவ்வாறு ஓபியம் புகைக்கும் அடிமைகளாக மாற்றியதுஎன்பதை நாவலின் ஊடே இந்திரா கோஸ்வாமி விரிவாக விளக்குகிறார்.

முந்தைய காலங்களில் சிதையில் எரிக்கபடும் பெண்ணிற்கு அபின் கொடுப்பது வழக்கமாக இருந்தது. வலிநீக்கும் மருந்தாகப் பயன்பட்ட அபினி மெல்ல போதை பொருளாக மாறியது. அபினை மருந்துப்பொருளாகப் பயன்படுத்தியதால் மலைப்பகுதிகளில் பாப்பிசெடிகள் அதிகம் வளர்க்கப்பட்டன. பின்பு அபின் போதை பொருளாக உருமாறியதும் ரகசியமாக அபின் விற்பனை மையங்கள் உருவாகின. இதை அறிந்த பிரிட்டீஷ் அரசு அபின் விற்பனையை முறைப்படுத்தி லாபம் சம்பாதிக்கத் துவங்கியது.

அபின் விற்கும் உரிமை கோரி விண்ணப்பம் செய்த அத்தனை பேருக்கும் உடனடியாக உரிமம் வழங்கப்பட்டது. இதனால் அபினி புகைக்கும் கொட்டகைகள் நாடு முழுவதும் உருவாகின. நாள் முழுவதும் புகைக்குழலில் அபினியை இழுத்தபடியே மயங்கிகிடக்கத் துவங்கிய மக்கள் நோயுற்று இளவயதிலே இறந்து போனார்கள். பலர் பைத்தியமாக மாறினார்கள். பெண்களும் இதில் அடக்கம். இதனால் அபினி பழக்கத்திலிருந்து மக்களை மீட்க மறுவாழ்வு மையங்கள் உருவாக்கபட்டன. அபினி கடத்துபவர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஆனால் பிரிட்டீஷ் அரசின் ஆதரவு இருந்த காரணத்தால் அபினி மையங்களைத் தடுக்கமுடியவில்லை. பர்மாவிற்கும் மலேயாவிற்கும் அபின் கடத்தப்பட்டது.

இந்த நாவலின் இந்திரநாத் தனது ஊரில் முந்நூற்று ஐம்பது பேர் வசிப்பதாகவும் அதில் இருநூற்றுஐம்பது பேருக்கு அபின் பழக்கம் இருப்பதாகவும் கூறுகிறான். அமரங்கா பகுதியில் வீசும் காற்றில் கூட அபின் நாற்றம் கலந்திருந்தது என்கிறார் இந்திரா.

இந்திரநாத்தின் வழியே கதை சொல்லப்பட்ட போதும் நாவலின் முக்கியக் கதாபாத்திரங்களாக இருப்பவர்கள் மூன்று பெண்கள். மூவரும் விதவைகள். இவர்கள் வழியே ஆணாதிக்கம் மற்றும் ஜாதியக்கட்டுபாடுகள், மதச்சடங்குகள் விதவையை எப்படி அடக்கி ஒடுக்கி வதைத்தன என்பதைத் துல்லியமாக, விவரித்திருக்கிறார். அவரது சொந்தவாழ்க்கை அனுபவங்களே இதற்கான ஆதாரங்கள்.

அஸ்ஸாமில் பெண்கள் வயதுக்கு வருவதற்கு முன்பாகவே திருமணம் செய்து கொடுத்துவிடும் வழக்கமிருந்தது. ஒருவேளை பெண்கள் வயதுக்கு வந்துவிட்டால் அதைக் குடும்பத்தினர் ரகசியமாக மறைத்து விடுவார்கள். இதனால் பெண்கள் வயதுக்கு வந்துவிட்டார்களா எனக் கண்டறிவதற்காகவே அவர்கள் மலம் கழிக்கப்போகும் போது உளவு பார்க்கும் சில பெண்கள் உடன் செல்வார்கள், அவர்கள் எங்காவது உதிரக்கறை இருக்கிறதா எனப் பரிசோதனை செய்வார்கள். ஒருவேளை உதிரப்போக்கு இருப்பது தெரிந்துவிட்டால் ஊர்முழுவதும் அதைத் தம்பட்டம் அடித்து அந்தக் குடும்பத்தை அவமானப்படுத்திவிடுவார்கள். அதன்பிறகு அந்தப் பெண்ணிற்குத் திருமணமே நடக்காது.

இந்த நாவலில் ஈலிமான் என்ற ஏழைச்சிறுமி பூப்படைந்த விஷயத்தை வெளியே தெரியாமல் மறைப்பதற்காக ஒரு கிழவி இந்திரநாத்திடம் உதவி கேட்டு வருகிறாள். அவளை அபின் உண்ணும் கூச்பிஹார் கிழவன் ஒருவனுக்குக் கட்டிவைக்கத் திட்டமிட்டிருப்பதைப் பற்றி அவள் வருத்தமாகக் கூறுகிறாள். இந்திரநாத்தை அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்கிறாள்

மாத ஒழுக்கோடு நிற்கும் ஈலிமானை கண்ட போது இந்திரநாத்தின் மனதில் என்றோ கேட்ட ஒரு சமஸ்கிருத ஸ்லோகம் ஒலிக்கிறது. அது அவனது சிறுவயதில் மாதவிலக்கு ஏற்பட்டு தீட்டாக இருந்த அம்மாவை ஒடிப்போய்க் கட்டிப்பிடித்துவிட்டான். இதற்காக அம்மா ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருந்தாள். பிறகு குடும்பப் புரோகிதரை அழைத்துவந்து பரிகாரம் செய்யப்பட்டது. அன்று ஒலித்த ஸ்லோகமது.

கிரிபாலா, துர்கா. சாரூ கொசைனீ என்ற மூன்று பெண்களும் மூன்றுவிதமாக வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள், வசதியான குடும்பத்து பெண்ணாக இருந்த போதும் கிரிபாலா விதவைகளுக்குத் தரப்படும் உப்பில்லாத உணவும் பத்தியசாப்பாடும் மட்டுமே சாப்பிட கட்டாயப்படுத்தபடுகிறாள். அவளது கணவன் அபின் அடிமையாக இருந்ததோடு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளஉறவு வைத்திருந்தை அவள் அறிவாள். அப்படிபட்ட ஒரு கணவன் இறந்து போனதற்காகத் தான் வாழ்நாள் முழுவதும் விதவை கோலம் பூண்டு உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு நடைப்பிணம் போல ஏன் வாழ வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறாள்.

காமம் நாவலின் முக்கியக் கருப்பொருளாக விளக்குகிறது, மதம்பிடித்த யானை ஒன்று அலைந்து திரிவதும் கிரிபாலா காமவசப்படுவதும் இணையாகச் சித்தரிக்கபடுகிறது.

கொஸைனி பெண்கள் உடம்பில் ஒடும் ரத்தத்தில் காமதுடிப்பு அதிகமிருக்கிறது என்பதைப் பற்றிக் கூறும் கிரிபாலா இந்த உடம்பை ஒருமுறை அனுபவித்துபார, அப்போது இதன் அருமை தெரியும் என மாற்கிடம் சொல்கிறாள். பலாமரத்திலிருந்து பழுத்தபலா தானே விழுந்து உள்ளிருந்து சுளைகள் வெடித்துச் சிதறுவதாக இந்திரா எழுதுவது காமத்தின் குறியீடே.

விதவையான கிரிபாலா தன் கணவன் வீட்டிலிருந்து தாயின் வீட்டிற்குத் திரும்பி வரும் போது அவளுடன் துணைக்கு யாரும் வரவில்லை. கிரிபாலாவின் வீட்டில் உள்ள பணிப்பெண்கள் கூட அவளைக் கேலி பேசுகிறார்கள். சமையல் அறைக்குள் அவள் நுழைவதற்குத் தடைவிதிக்கபடுகிறது. விதவையான அவள் தொட்டால் மீன்சுவை கசப்பாக மாறிவிடும் என நம்புகிறார்கள்.

இருட்டறையில் அவள் முடங்கிக் கிடக்க வேண்டும் என்கிறாள் அவளது தாய். ஒரு முறை அவர்கள் வீட்டில் விருந்திற்காக மாமிசம் சமைக்கபடும் போது கிரிபாலா அதை ரகசியமாக எடுத்து சாப்பிட்டுவிடுகிறாள். இதற்காக அவள் கடுமையாகத் தண்டிக்கபடுகிறாள். அவமானத்தில் அப்படியே இறந்து போய்விட்டால் நிம்மதியாக இருக்கும் என நினைக்கிறாள் கிரிபாலா.

விதவையான துர்கா அவளுக்கு நேர் எதிரானவள். எந்த மறுப்பும் இன்றி ஆசாரமான குடும்பத்தில் விதவைகள் என்ன கட்டுபாடுகளை ஏற்று நடக்க வேண்டுமோ அத்தனையும் ஏற்றுக் கொள்கிறாள். அதன் காரணமாக அவள் அடையும் சிரமங்களை,வேதனைகளைக் கூட வெளிப்படையாகப் பேசுவதில்லை.

சாரு கொசைனீ குழந்தையற்ற விதவை. அவள் மிகுந்த கோபக்காரி. பலநேரங்களில் அவள் தனக்குதானே பேசிக் கொள்கிறாள். அவளுக்கும் காம உணர்ச்சிகள் இருக்கின்றன. உறங்குகின்ற ஆணை அவள் ரகசியமாக ரசித்துப் பார்க்கிறாள். மகிதாருடன் உறவு கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறாள், திருமணமாகி கணவனுடன் வசித்த போது ஒருமுறை தன் வீட்டிற்கு வந்த மந்திரவாதி மருத்துவரான விஷ்ணு ஒஜாவின் அழகில் மயங்கி அவன் கண்கள் தன்னைத் தீண்டியதால் தனது மார்புக்காம்புகள் விறைத்துக் கொண்டதாக உணருகிறாள். ஆனால் ஆச்சாரமான வைஷ்ணவக் குடும்பத்தின் கட்டுபாடுகளும் நியமங்களும் அவளை ஒடுக்கி வைத்திருந்தன.

அஸ்ஸார்க் மாதத்தில் நான்கு நாட்கள் பூமிக்கு மாதவிடாய் ஏற்படுவதாக மக்கள் நம்புகிறார்கள். அந்த நாட்களில் பூமியை தோண்டக்கூடாது என்பது ஐதீகம். அந்த நேரத்தில் விதவைகள் அமோதி சடங்கை மேற்கொள்கிறார்கள், தொல்சடங்கு ஒன்றினை நினைவூட்டுவதாகவே அந்த நம்பிக்கை விவரிக்கபடுகிறது. விதவைகளைப் பூரிக்கு அழைத்துப்போய் நீத்தார்சடங்குகள் செய்யும் புரோகிதர் ஊர்தேடி வந்து ஆள் பிடிக்கிறான். முன்பு போல விதவைகள் ஆர்வம் காட்டுவதில்லை எனச் சலித்துக் கொள்கிறான்.

ஆட்டை உயிரோடு புதைத்து மூச்சுத் திணறிச் சாகடிப்பது, யானை வணிகர்களுக்குள் ஏற்படும் ஒப்பந்தம், பாம்பு வகைகள். திருமணச்சடங்குகள், காமரூபத்திற்கு உருளைகிழங்கு வெளிநாட்டு பொருளாக அறிமுகமான விதம், பிணங்களைத் தின்னும் ஆற்றுமீன் பற்றிய குறிப்பு, யானைக்கு வரும் நோய்கள், ஆவி உறையும் மூங்கில்மரங்கள் என நாவல் தென்காமரூபத்தின் நாட்டார்வழக்காற்றியல் ஆவணமாகவும் விளங்குகிறது.

வடகிழக்கு மாநிலங்களில் மிஷனரிகள் தீவிரமான கிறிஸ்துவப் பிரச்சாரத்தில் ஈடுபாட்டார்கள் இதனால் அதிக அளவில் மதமாற்றங்கள் ஏற்பட்டன. இந்த நாவலிலும் அசாமிற்குக் கிறிஸ்துவ மிஷனரியாக வந்த மாற்கின் கதை விவரிக்கபடுகிறது.

அவன் பழைய ஏடுகளைச் சேகரிக்க வந்தவனாக அறிமுகமாகிறான். பாம்பு கடித்த கிரிபாலாவை அவன் மருத்துவம் செய்து காப்பாற்றுகிறான். அதன் வழியே அவன் மீது கிரிபாலாவிற்கு ஈர்ப்பு உருவாகிறது. தனது அடக்கமுடியாத காம உணர்ச்சிகளுக்கு அவன் வடிகாலாக இருப்பான் என நினைக்கிறாள் கிரிபாலா, ஆகவே தானே அவனைத் தேடிப்போகிறாள். தன்னை நரகத்திலிருந்து காப்பாற்றும்படி கெஞ்சுகிறாள். அவர்களுக்குள் ரகசிய உறவு ஏற்படுகிறது.

ஒருநாள் மாற்கோடு தனித்திருக்கும் போது கிரிபாலா பிடிபடுகிறாள். வெளியே இழுத்துவரப்பட்டுப் பாவத்திற்கான பரிகாரச்சடங்கு செய்ய நிர்பந்திக்கப்படுகிறாள். அந்தச் சடங்கில் குடிசையில் எரியும் நெருப்பில் தன்னை மாய்த்துக் கொள்கிறாள் கிரிபாலா. அவளது மரணம் அதுவரை அவள் அடைந்த அவமானத்திலிருந்து விடுதலை தருவது போலவே அமைகிறது.

சத்திராவின் அதிகார்கள் தங்களின் பெருமிதத்தைக் காட்டிக் கொள்ள யானை வைத்திருந்தார்கள். இந்த யானைகள் சிலநேரங்களில் கடினமான வேலைகளைச் செய்யவும் பயன்படுத்தபட்டன. திருமணத்தின் போது யானையில் பவனிவருவது அவர்களின் கௌவரத்தின் அடையாளம். பழகிய யானைகளைக் கொண்டு காட்டுயானைகளைப் பிடித்து விற்பதையும் அதிகார்கள் வழக்கமாக வைத்திருந்தார்கள். பிடித்து வரப்பட்ட யானைகளுக்குப் பயிற்சி தரப்படுவதற்காக யானை மஹால் இருந்தது.

நாவல் முழுவதும் யானையைப் பிடிப்பது, பழக்குவது, விற்பது பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன, நாவலில் யானைக்கு மதம்பிடித்துப் போவதும் செல்லரித்துப் போன அம்பாரியும் சத்திரா குடும்பத்தின் வீழ்ச்சியின் அடையாளமாக முன்வைக்கபடுகிறது. யானையின் இயல்பு பற்றியும் பாகன் மீது அதற்குள்ள பாசம் குறித்தும் மதம்பிடிக்கும் போது அதன் காதுகளின் அடியில் கிராம்பு வைக்கும் பழக்கம் பற்றியும் இந்திரா வியப்பூட்டும் விதமாக எழுதியிருக்கிறார்

நாவலின் உன்னதத் தருணம் மதம்பிடித்த யானையைக் கொல்வதற்காக ஒரு வேட்டைக்காரன் அழைத்துவரப்படுவது. அதை இந்திரநாத் எதிர்கொள்ளும் விதமுமாகும், காவியத்தன்மையுடன் இந்தபக்கங்கள் எழுதப்பட்டுள்ளன. தன்விருப்பத்திற்குரிய யானை கொல்லப்படுவதற்கு இந்திரநாத் அனுமதி தருகிறான். அவ்வளவு தான் வாழ்க்கை, எதையும் யாராலும் காப்பாற்றி வைத்திருக்க முடியாது என்ற உண்மை அவன் முகத்தில் அறைவது போலச் சொல்லப்படுகிறது. அதை ஏற்றுக் கொள்வது எளிதானதில்லை. இந்திரநாத் அதை எதிர்கொண்டு வேதனையுடன் கடந்து போகிறான். நாவலின் உச்சம் இந்த அத்தியாயமே.

தென்காமரூபக்கதை முழுவதும் புறக்கணிப்பின் வலி அழுத்தமாக முன்வைக்கபடுகிறது. கம்யூனிசத்தின் வருகை, நிலப்போராட்டங்கள், காலனி ஆதிக்கத்தின் பாதிப்புகள் எனப் பரந்த தளத்தில் நாவலை கட்டமைத்திருக்கிறார் இந்திரா. இதன்வழியே இன்றைய அஸ்ஸாமிய அரசியல் பிர்ச்சனையின் வேர்கள் எங்கே புதையுண்டிருக்கின்றன என்று அடையாளம் காட்டுகிறார்

சந்ததம் வந்த பெண் உணர்ச்சிவேகத்தில் தன்னை மறந்து கூச்சலிடுவதைப் போலக் கதை ஆவேசமாகச் சொல்லபடுகிறது. அதே நேரம் இந்திரநாத் வழியாகத் தன்னால் எவ்விதமாகவும் தடுக்கமுடியாதபடி காலமாற்றம் வீழ்ச்சியை நிகழ்த்தியே தீரும் என்பதையும் அடையாளம் காட்டுகிறது. இந்திரநாத் நவீன காலத்தின் மனநிலை கொண்ட மரபான மனிதராகச் சித்தரிக்கபடுகிறார். ஒருவேளை அது இந்திராவின் தந்தையின் சாயலோ என்னவோ.

அஸ்ஸாமிய இலக்கியத்தின் ஒப்பற்ற எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமி என்பதற்கு இந்த நாவல் சிறந்த சான்று. மொழிபெயர்ப்பின் சரளம் வாசிப்பில் நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. இலக்கியத்தின் வழியே இந்தியாவை ஒன்றிணைக்கும் சாகித்ய அகாதமியின் வெளியீடுகள் மிகுந்த பாராட்டிற்குரியவை.

2009ல் நோயுற்று கல்கத்தா மருத்துவமனையில் கோமா நிலையில் இருந்துமீளாமலே இந்திரா கோஸ்வாமி இறந்து போனார். அவரது மரணத்தின்பிறகு கண்கள் தானமாக அளிக்கபட்டன.

இருத்தல் இருத்தலின்மையைச் சுட்டிக்காட்டுகிறது எனத் தாவோ கூறுகிறது. இந்நாவல் மேற்கொள்வதும் அதையே.

••

Archives
Calendar
November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Subscribe

Enter your email address: