சொல்லிய கதை


இரண்டு நாட்களின் முன்பு சேலத்தில் உள்ள ஹெலிக்ஸ் சிறப்பு பள்ளிக்கு சென்றிருந்தேன்.


வேடிக்கவுண்டர் காலனியில் இப்பள்ளி உள்ளது. அது டிஸ்லெக்சியாவால் பாதிக்கபட்ட குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி . தாரே ஜமீன்பரில் வருகின்ற சிறுவனை போன்றவர்களே இப்பள்ளி மாணவர்கள்.  இப்பள்ளியை செந்தில்குமார் நிர்வகித்துவருகிறார்.


இப்பள்ளியின் பாடத்திட்டங்களும் கற்று தரும் முறைகளும் தனித்துவமானவை. செந்தில் இஸ்ரேலில் மனநலவியல் பயின்றவர். கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்காக அவர் மேற்கொண்டுவரும் சேவை மிகுந்த பாராட்டிற்கு உரியது.


இந்த பள்ளி மாணவர்களுக்காக ஒரு நாள் கதை சொல்லல் பயிலரங்கம் போன்ற நிகழ்வை நடத்தினேன். இந்த நிகழ்வில் காலையில் மாணவர்களுக்கு நான் கதை சொன்னேன். அத்துடன் அவர்களையும் கதை சொல்ல வைத்தேன். கற்றல் குறைபாடு கொண்டவர்கள் என்ற ஒதுக்கபட்ட இந்த சிறுவர்கள் கதை சொல்லும் போது மிக தனித்துவமிக்கவர்களாக இருந்தார்கள். அவர்களது கற்பனை மிக உயரியது.அத்துடன் அங்கு பணியாற்றிவரும் ஆசிரியர்களுக்கு கதை சொல்லுதல் வழியாக எப்படி கல்வி புகட்ட முடியும் என்பதை பற்றி விரிவாக விவாதித்தேன். கதை சொல்லுதல் ஒரு தனித்த அறிதல் முறை. அதன்வழியாகவே நாம் எந்த பாடத்தையும் கற்றுதர முடியும்.
இந்த சிறப்பு பள்ளியில் ஐந்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் பணியாற்றுகிறார். ஆகவே மாணவர்கள் மீதான கவனமும் அக்கறையும் மிக உயர்வாக இருந்தது.மாணவர்களுக்கு கதை சொல்லுவது மிக சவாலான செயல். நான் ஐம்பதிற்கும் மேற்பட்ட பள்ளிகளில் கதை சொல்லியிருக்கிறேன். ஆகவே அது எனக்கு விருப்பமான ஒன்றாகவே இருந்துவருகிறது. கதை சொல்லுதல் ஒரு அரிய கலை. அதற்கு மாணவர்களின் மனநிலையும் வேடிக்கையாக கதைசொல்லும் தன்மையும் வேண்டும். அத்துடன் விதவிதமான கதைகள் கைவசமிருக்க வேண்டும். பலூன்கள் பொம்மைகள், துணிகளை கொண்டும் கதை சொல்ல முடியும்.அன்று மாணவர்கள் சொன்ன கதைகள் என்னை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தின. ஒரு மாணவன் முன்பு ஒரு காலத்தில் ஒன்பது பூமிகள் இருந்தன. அவை ஒவ்வொன்றாக சுருங்கி மறைந்து போய்விட்டன. இப்போது ஒரேயொரு பூமி மட்டுமே இருக்கிறது என்று ஒரு கதை சொன்னான். மற்றொரு சிறுவன் செடிகள் மழை பெய்யும் போது என்ன பேசிக் கொள்கின்றன என்று கதை சொன்னான். இப்படி அங்கிருந்த ஐம்பது மாணவர்களும் ஐந்து பிரிவுகளாக பிரிந்து கொண்டு கதை சொல்லி அசத்தினார்கள்.அதே மாணவர்களை மதிய உணவின் பிறகு கதை எழுத சொன்னேன். பத்திற்கும் மேற்பட்ட சிறந்த கதைகளை எழுதியிருந்தார்கள். அதில் ஒரு மாணவன் தன் சொந்த வாழ்க்கையை ஒரு கதையாக எழுதியதோடு அது தன் சொந்த வாழ்க்கை என்றும் மறக்காமல் குறிப்பிட்டிருந்தான். மாணவர்கள் சொன்ன கதைகளின் பிரதான தொனி பகடி செய்வதே. அவர்கள் உலகை எப்படி கேலி செய்கிறார்கள் என்பதிலிருந்து அவர்களின் கற்பனை பிறக்கிறது.


அன்று ஹெலிக்ஸ் பள்ளியின் ஆசிரியர்களுடன் உரையாடிய போது வகுப்பறையின் பிரச்சனைகளை பற்றி மிக ஆழமாக தெரிந்து கொள்ள முடிந்தது. இன்று எதை கற்று தரும்போது அதை ஏன் கற்று தருகிறோம் என்ற கேள்வியும் அதற்கானபதிலும் மிக முக்கியமானது என்பதை அன்று  நடந்த அந்த விவாதத்தின் போது உணர முடிந்தது.கற்றல் குறைபாடு கொண்டவர்களுக்கான சிறப்பு பள்ளிகளுக்கு என்று தனியாக கற்றுதரும் முறைகளும் ஆசிரியர்களும் மிக அவசியம். அது இன்றும் தமிழகத்தில் அடையாளம் கண்டு கொள்ளப்படவேயில்லை.  ஆனால் இன்றும் கிராமப்புறங்களில் கற்றல் குறைபாடு கொண்ட சிறார்கள் அதிகமிருக்கிறார்கள்.
 


அடுத்த நாள் சேலம் நகரின் வீதிகள் சந்துகள் என்று நண்பர் சிபிசெல்வனுடன் சுற்றியலைந்தேன். நகரம் அப்படியே இருக்கிறது. மாற்றங்கள் மிக குறைவாக உள்ள நகரம் சேலம் மட்டுமே என நினைக்கிறேன். சேலத்திலிருந்து பத்து பதினைந்து கிலோமீட்டர் தூரம் தள்ளி சென்றவுடன் கிராம வாழ்வு துவங்கிவிடுகிறது. நான் சென்ற அன்று ஒரு கிராமத்தில் சந்தை நரைடபெற்றத. அந்த சந்தையின் பரபரப்பான காட்சியும் அங்கு கிடைக்கும் உள்ளுர் பண்டங்களும் நீண்ட நாட்களின் பிறகு மிக சந்தோஷமாக உணர வைத்தது.


சேலம் நகரை முக்கிய மையமாக கொண்டு இது வரை விரிவாக யாரும் எழுதியதில்லை. ஆனால் எழுதுவதற்கு இங்கே நிறைய கொட்டிகிடக்கிறது.  சேலத்தின் பழைய மார்டன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோ இருந்த இடத்தில் போய் நின்று வந்தேன். எத்தனை படங்கள். எவ்வளவு கலைஞர்கள் வந்த போன இடம் அது. இன்று தொகுப்புவீடுகள் கொண்ட புறநகரமாக மாறியிருக்கிறது.  சேலத்தில் பழமையான சில நூலகங்கள் மற்றும் சைவ உணவகங்கள் இருக்கின்றன. அதை அப்படியே காப்பாற்றி வருகிறார்கள். அங்கு உள்ள உணவு மேஜைகள், உணவின் ருசி யாவும் தனிச்சிறப்பாக இருக்கின்றன. சேலம் நகரை சுற்றியுள்ள மலைகளும் அதன் மௌனமும் நம் பார்வையால் புரிந்து கொள்ள முடியாதது. மலைகளை புரிந்து கொள்ள நாம் அதோடு உறவு கொள்வது அவசியம். ஒரு பறவையோடு நட்பு கொள்வதை போன்றதே மலைகளின் நட்பும்.மாலைநேரம் தாராமங்கலம் கோவிலுக்கு சென்றிருந்தேன். பத்து முறைகளுக்கும் மேலாக அங்கே போயிருக்கிறேன். ஆனால் அன்று மங்கிய வெளிச்சத்தில் தனிமையில் அந்த கோவிலும் அதில் எரியும் தீபங்களும். அந்த மஞ்சள் வெளிச்சத்தில் கண்ட ரதி மன்மதன் சிற்பங்களும் அற்புதமாக இருந்தன. தாராமங்கலத்தின் ரதி சிற்பம் தனித்து பார்த்து கொண்டே இருக்க வேண்டியது. கல்லில் வெளிப்படும் புன்னகையும் நளினமும் அசாத்தியமானது.


சிற்பக்கலையில் தாராமங்கலம் ஒரு தனித்துவம்.  அதை முழுமையாக அனுபவிக்க ஒரு நாள் அந்த கோவிலில் செலவிட வேண்டும். அன்று பிரகாரத்தில் உட்கார்ந்து கொண்ட போது ஏகாந்தமான காற்றும் அமைதியும் காலம் கரைந்து பின்னோக்கி போய்விட்டதை போன்றிருந்தது. பிரகாரத்தில் அமர்ந்திருப்பது போன்ற அலாதிதன்மை வேறு எங்கும் கிடைப்பதில்லை. அன்று மனம் ததும்பிட கோவிலை விட்டு எழுந்து வெளியேற மனதில்லாமல் இருந்தேன்.சேலம் நகரின் பின்னிரவு குளிர் ஆளை போலவே முதுகில் தட்ட கூடியது. இரண்டுமணிக்கு பைக்கில் நகரில் அலைந்த போது சாத்திய கடைகள், அவசரமாக கடந்து செல்லும் மனிதர்கள் தாண்டி ஒரு தேநீர் கடையை கூட காணமுடியவில்லை. ஆனால் அந்த குளிர் நிமிசங்களில் நுரையீரலில் நிரம்பி உடலை நடுக்க துவங்கியது.


அறைக்கு திரும்பி தூங்க ஆரம்பித்த போது சேலம் நகரிற்கு பதினைந்து வயதில் முதன்முறையாக வந்த நினைவு கொப்பளிக்க துவங்கியது. அந்த சிறுவனின் கண்கள் எனக்குள்ளாக அன்றிரவும் விழித்து கொண்டிருப்பது போலவே தோன்றியது. நான் அந்த நாளை மறந்து போயிருக்க கூடும். ஆனால் என்னை இந்த நகரம் அறிந்தே வைத்திருக்கும் என்று தோன்றியது.மறுநாள் ரயில் ஏறும்வரை சேலம் மேகதிட்டுகள் போல தனித்தனியான அனுபவங்களுடன் மிதந்து கொண்டேயிருந்தது. ரயில்நிலையம் வந்து ரயிலில் ஏறியதும் மனது தானே சென்னையை நினைத்து கொள்ள துவங்கிவிடுகிறது. என் கண்முன்னே சேலம் ஒளிர்ந்து கொண்டிருந்தது. ஆனால் அதை முந்தி மனது விடிகாலை சென்னையின் காட்சியை தானே வரித்து கொள்ள ஆரம்பித்திருந்தது.


விடிகாலை நாலு மணிக்கு ரயிலை விட்டு இறங்கி சென்ட்ரலில் இருந்துவெளியே வந்த போது சென்னையின் கைகள் என்னை பற்றிக் கொண்டன. வீடு திரும்பும்போது சென்னை என் கிராமத்தை விடவும் சிறிய ஊர் என்று ஏனோ தோன்றியது. 
  

Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: