வேலூர் லிங்கம்

தஸ்தாயெவ்ஸ்கியைத் தீவிரமாக வாசிப்பவர்கள் பலர் இருக்ககூடும். ஆனால் வேலூர் லிங்கம் அளவிற்குத் தஸ்தாயெவ்ஸ்கியை ஒருவர் நேசிக்க முடியுமா என்பது சந்தேகமே.

40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீவிர இலக்கியவாசிப்பில் ஈடுபட்டு வரும் இவர் தற்போது ஒய்வு பெற்று வேலூரில் வசிக்கிறார். தமிழின் முக்கிய எழுத்தாளர்கள் அனைவருக்கும் நண்பர். இலக்கியவிழாக்களைத் தேடித்தேடி கலந்து கொள்ளக்கூடியவர்.

அவரது வீட்டிற்குச் சமீபத்தில் சென்றிருந்தேன். வீட்டின் முகப்பில், ஹாலில், அறைகளில். மாடியில் என எங்கும் புத்தகங்கள். நூலகத்தில் கூட இவ்வளவு சிறந்த புத்தகங்கள் இருக்குமா என வியப்பாக இருந்தது.  தமிழிலும் ஆங்கிலத்திலும் ஏராளமாக வாங்கி வாசித்திருக்கிறார். பாரதியும் சேகுவேராவும் அவரது ஆதர்சங்கள். கர்நாடகாவின் கோலாரில் வளர்ந்த லிங்கம்விவசாயத்துறையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்.

தஸ்தாயெவ்ஸ்கியை தனது கடவுளாகக் கருதக்கூடியவர் லிங்கம். அவரது வீட்டில் ஒரு மேஜையில் தஸ்தாயெவ்ஸ்கியின் புகைப்படம்  உள்ளது. அருகில் அவரது மனைவி அன்னாவின் புகைப்படம். அதன் அடியில் தஸ்தாயெவ்ஸ்கியின் புத்தகங்கள். சமீபத்தில் வெளியான Richard Pevear and Larissa Volokhonsky மொழியாக்கத்தில் வெளியான தஸ்தாயெவ்ஸ்கி நாவல்கள் வரை அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு நாளும் காலையில் தஸ்தாயெவ்ஸ்கிக்கு ரோஜாப்பூக்களைப் போட்டு வணங்குகிறார் லிங்கம். தனது பயணத்தில் எப்போதும் தஸ்தாயெவ்ஸ்கியின் புத்தகங்களைத் துணைக்கு வைத்திருக்கிறார். தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்கள் ஒவ்வொன்றையும் நாற்பது ஐம்பது முறை வாசித்துள்ளதாக கூறுகிறார்.

தஸ்தாயெவ்ஸ்கியைப் பற்றிப் பேசுவது, அவரைப்படிப்பது, விவாதிப்பது இதுவே தனது வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவதாக கூறுகிறார். செகாவ், டால்ஸ்டாய், கார்க்கி, துர்கனேவ் என ரஷ்ய இலக்கியங்களை நேசிக்கக் கூடியவர் லிங்கம். அவர்களில் தஸ்தாயெவ்ஸ்கியே அவரது கடவுள். குறிப்பாகக் கரமசோவ் சகோதரர்கள் நாவலைப் பற்றி லிங்கம் பேசுவதைக் கேட்டுக் கொண்டேயிருக்கலாம்.  கடவுள் நம்பிக்கை குறித்தும். மனித மனதின் நுண்மைகளை பற்றியும் தஸ்தாயெவ்ஸ்கியை போல ஒருவர் எழுதியதேயில்லை என வியந்து வியந்து கூறுகிறார்.

ஒரு எழுத்தாளனை எவ்வாறு ஆழ்ந்து வாசிக்கவும் ஆராதிக்கவும் வேண்டும் என்பதற்கு லிங்கனின் வாசிப்பே முன்னுதாரணம்.

ரஷ்ய இலக்கியங்களை நேசிக்கின்றவன் என்ற முறையில் லிங்கனை வியந்து பார்க்கிறேன். உண்மையில் ரஷ்ய அரசாங்கம் இவரைப் போன்றவர்களைக் கௌரவிக்க வேண்டும்.

சமீபத்தில் வெளியான தமிழ் நாவல்கள். சிறுகதைகள், கவிதைகள் வரை தேடித்தேடி வாசித்து அது குறித்துச் சம்பந்தப்பட்ட எழுத்தாளரை அழைத்துப் பாராட்டக்கூடியவர் லிங்கன். வண்ணதாசனுடன், வண்ணநிலவனுடன் நெருக்கமான நட்பு கொண்டவர். இவ்வளவு படித்தும் ஒரு வரி கூட எதையும் எழுதியதில்லை.  தான் புத்தகங்களை நேசிப்பவன். இலக்கியவாசகன், அதுவே போதுமானது எனக்கூறுகிறார் லிங்கம்

இவரைப் போன்றவர்களே இலக்கியம் தொடர்ந்து இயங்க காரணமாக இருக்கிறார்கள்.

அவ்வகையில் வேலூர் லிங்கனின் நட்பைப் பெருமையாகக் கருதுகிறேன்

Archives
Calendar
May 2018
M T W T F S S
« Apr    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Subscribe

Enter your email address: