எஸ்.வி.ஆர் எனும் மகத்தான ஆளுமை

தோழர் எஸ்.வி. ராஜதுரை  உலக இலக்கியம் சார்ந்து எழுதியுள்ள கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ள கல் தெய்வம், சாட்சி சொல்ல ஒரு மரம், பார்வையிழத்தலும் பார்த்தலும், ஆகிய மூன்று புத்தகங்களும் மிக முக்கியமானவை. அவற்றை சமீபமாக ஒருசேர வாசித்தேன்.  அற்புதமான கட்டுரைகள்.

தமிழ் அறிவுலகத்திற்கு எஸ்.வி.ஆர் செய்துள்ள பங்களிப்பு அளப்பரியது. ரஷ்யப் புரட்சி : இலக்கியச் சாட்சியம், அந்நியமாதல். பெரியார் : ஆகஸ்ட் 15 உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

எஸ்.வி.ஆரின் இலக்கியவாசிப்புப் பிரமிப்பூட்டக்கூடியது. சர்வதேச இலக்கியங்களைத் தேடித்தேடி வாசிக்ககூடியவர். குறிப்பாக, நாவல்கள். கவிதைகள் மீது விருப்பம் அதிகம். உலகப்புகழ்பெற்ற நாவல்கள். கவிதைத்தொகுதிகளைத் தொடர்ந்து வாசித்தும் பேசியும் மொழியாக்கம் செய்தும் வரும் அவரது நூலகத்தில் பல அரிய புத்தகங்கள் உள்ளன.

இத்தாலிய நாவலாசிரியர் Elena Ferrante நாவல்களை வாசித்து வியந்து அவரைப்பற்றிக் கட்டுரை எழுதியிருக்கிறார். எலினா பற்றி எழுதப்பட்ட ஒரே கட்டுரை எஸ்.வி.ஆருடையதே.

இது போலத் தஸ்தாயெவ்ஸ்கி, டால்ஸ்டாய், துர்கனேவ், அன்னா அக்மதேவா, உம்பர்த்தோ ஈகோ, ஜோஸ் சரமாகோ, குந்தர் கிராஸ், மிலன் குந்தேரா, இதாலோ கால்வினோ, வோலோ சோயிங்கா, கார்லோஸ் புயந்தஸ், நெருதா, ஆக்டோவியா பாஸ், லோசா, கொர்த்தசார், ருல்போ, யஹுதா அமிக்காய், முகமது தார்வீஸ், எட்வரட் ஸைத், சார்த்தர் எனப் பல்வேறு முக்கிய இலக்கிய ஆளுமைகள், அவரது படைப்புகள் குறித்து விரிவான விமர்சனங்களை எழுதியிருக்கிறார்.

எஸ்.வி. ஆரின் பங்களிப்பை ஆறு தளங்களில் வகைப்படுத்தலாம்

1) பெரியார் மற்றும் அம்பேத்கர் பற்றிய அவரது ஆய்வுகள். கட்டுரைகள். தோழர் வ. கீதாவுடன் இணைந்து மேற்கொண்டுள்ளார் (தமிழிலும் ஆங்கிலத்திலும் )

2) சமகால அரசியல், பண்பாட்டுப் பிரச்சனைகள், சர்ச்சைகள் குறித்த கட்டுரைகள். (தமிழிலும் ஆங்கிலத்திலும் )

3) கம்யூனிச சிந்தனைகள், அரசியல் நிலைப்பாடுகள், களச்செயல்பாடுகள். சர்வதேச அரசியல் மற்றும் தத்துவார்த்த கட்டுரைகள். மார்க்சிய சிந்தனைகள், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை உள்ளிட்ட மொழியாக்கங்கள்

4) உலக இலக்கிய அறிமுகக் கட்டுரைகள். விமர்சனங்கள், மொழியாக்கங்கள்.

5) ஈழத்தமிழர் பிரச்சனை சார்ந்த விரிவான கட்டுரைகள் மனித உரிமைப்பிரச்சனைகள். குறிப்பாக மரணதண்டனை, அகதிகள், சிறைக்கொடுமைகள் சார்ந்த ஆய்வுகள். கட்டுரைகள். உரைகள். களச்செயல்பாடுகள்,

6) தமிழகக் கலை இலக்கிய அரசியல் பண்பாட்டுக் கட்டுரைகள். ஆய்வுகள், மறுப்புக் கட்டுரைகள், இனி இலக்கிய இதழ், திராவிட இயக்க ஆய்வுகள்.

இந்த ஒவ்வொரு தளத்திலும் எஸ்.வி.ஆரின் கட்டுரைகள் மிக முக்கியமானவை. மார்க்ஸ், லெனின் நூல்கள் தொகுதிவாரியாக வெளியானது போல எஸ்.வி.ஆருக்கும் வெளியிடப்பட வேண்டியது அவசியம்.

தீவிர அரசியல்செயல்பாட்டாளராக இயங்கிய போதும் தொடர்ந்து இலக்கியங்களை ஆழ்ந்து பயின்று வருகிறார். அவர் ஆரம்பக் காலங்களில் சில சிறுகதைகள் எழுதியிருக்கிறார். ஆனால் அதைத் தொடரவில்லை. எஸ்.வி.ஆர் தனது வாழ்க்கை அனுபவத்தை விரிவாக எழுத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

உலக இலக்கியங்களில் யாரை எதற்காக வாசிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள எஸ்.வி.ஆருடன் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தால் போதும். மழையெனக் கொட்டித் தீர்த்துவிடுவார். அவர் வாசித்துள்ள பல புத்தகங்கள் இந்தியாவில் எவரிடமும் கிடையாது என்பதுடன் அவற்றை எழுத்தாளர்கள் கூட அறிந்திருக்க மாட்டார்கள் என்பதே உண்மை.

தமிழிலும் ஆங்கிலத்திலும் இடையுறாமல் வாசித்து எழுதியும் வரும் எஸ். வி ஆரின் விமர்சனப் பார்வை மிகக்கூர்மையானது. நோபல் பரிசு பெற்ற படைப்பாளியாக இருந்தாலும் கறாரான மதிப்பீடுகள். அளவுகளின் வழியே படைப்புகளை விமர்சனம் செய்யக்கூடியவர். அதே நேரம் வெறும் யதார்த்தவாத எழுத்துகளை மட்டுமின்றிப் பரிசோதனைபடைப்புகள், மேஜிகல் ரியலிசம், பின்நவீனத்துவம், உள்ளிட்ட பல்வேறு இலக்கிய வகைமைகளை விருப்பத்துடன் படிப்பதுடன் வியந்து பாராட்டவும் கூடியவர். மார்க்வெஸ், ஈகோ பற்றி அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது அவர்களை எவ்வளவு நுட்பமாக வாசித்திருக்கிறார் எனப் பிரமிப்பாகத் தோன்றும்.

எஸ்.வி. ஆரின் விருப்பத்திற்குரிய நாவலாசிரியர் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ஜோஸ் சரமாகோ (Jose Saramago) . இவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர். இவரது முக்கியப் படைப்புகள் குறித்து எஸ்.வி.ஆர் விரிவான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அவையே கல் தெய்வம், சாட்சி சொல்ல ஒரு மரம், பார்வையிழத்தலும் பார்த்தலும் ஆகிய மூன்று நூல்களில் பிரதானமாக இடம்பெற்றுள்ளன.

1995ல் சரமாகோ எழுதிய “கல் தெப்பம்” (The Stone Raft), சமகாலத்திய முக்கிய அரசியல் நாவலாகும். ஐரோப்பாவின் பைரீனி பகுதியில் ஒரு நாள் எதிர்பாராமல் சாலையில் சிறிய கோடு போல விரிசல் ஏற்படுகிறது. அதைக்கண்டு ஒரு நாய் ஊளையிடுகிறது. அரசாங்கம் இந்த விரிசலை பெரிதாக எடுத்துக்கொள்வதேயில்லை. ஆனால் விரிசல் வளர ஆரம்பிக்கிறது. முடிவில் அந்தச் சிறிய விரிசலால் ஒரு பகுதி நிலம் துண்டிக்கபட்டு கல் தெப்பம் மிதந்துப்போவது போலத் தனியே மிதந்து செல்லத்துவங்கிவிடுகிறது.

அந்தக் கல்தெப்பத்தில் மூன்று ஆண்களும், இரண்டு பெண்களும், ஒரு நாயும் மாட்டிக்கொள்கிறார்கள். துண்டிக்கபடுகிற நிலம் என்பதைக் குறியீடாகக் கொண்டு சமகால ஐரோப்பிய அரசியல் வரலாற்றை எழுதுகிறார் சரமாகோ.

இது போலவே இவரது பார்வையின்மை நாவலில் மருத்துவர் ஒருவருக்குக் காலையில் எழுந்தவுடன் திடீரெனப் பார்வை குறைவு ஏற்படுகிறது. முந்திய இரவு இது போலத் திடீரெனக் கண்பார்வை குறைவு ஏற்பட்ட ஒருவருக்கு அவர் சிகிட்சை அளித்திருந்தார். அந்நகரில் திடீர் பார்வைகுறைவால் பலரும். அவதிப்படுகிறார்கள்.

ஏன் ஒரு நகரில் திடீரெனப் பார்வையின்மை பரவுகிறது எனப் புரியவில்லை. பார்த்தல். பார்வையிழத்தல் என்பது வெறும் உடல் இயக்கம் சார்ந்த விஷயம் மட்டுமில்லை, அது ஒரு சமூகப்பிரச்சனை. எனச் சுட்டிக்காட்டுகிறார் சரமாகோ.

இது போலச் சரமாகோவின் The Elephant’s Journey என்ற நாவல் இந்தியாவில் இருந்து ஸ்பெயினுக்கு அனுப்பிவைக்கபட்ட ஒரு யானையின் பயணத்தைப் பேசுகிறது. 1551-ம் ஆண்டு ஸ்பெயின் மன்னர் திருமணப்பரிசாக யானை ஒன்றை அளிக்கிறார். லிஸ்பனில் இருந்து வியன்னா வரை பனிப்பிரதேசத்தில் கொண்டு செல்லப்பட்ட இந்திய யானையின் அவலக் கதையை இந்நாவல் விவரிக்கிறது.

இது போல அறியப்படாத தீவு என்ற குறுநாவலில் அறியப்படாத தீவைத் தேடி செல்ல அரசனிடம் படகு கேட்கிறான் ஒருவன். அவனும் படகொன்றை தருகிறான். அவனுடன் ஒரு பணி பெண்ணும் சேர்ந்து கொள்கிறாள். இவரும் அறியப்படாத தீவை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதே கதை

சரமாகோவின் நாவல்கள் குறீட்டுதளத்தில் சமகால அரசியலை, அதிகாரப்போட்டியினை, மானுடத்துயரைப் பேசக்கூடியவை. அதுவே எஸ்.வி.ஆரை வசீகரிக்கின்றன.

இலக்கியம் எவ்வாறு சமூகப்பிரச்சனைகளைக் கையாள வேண்டும். வரலாற்றை மீள் ஆய்வு செய்ய வேண்டும் என்பதற்குச் சரமாகோவின் எழுத்துகள் சான்றாகத் தோன்றுகின்றன.

கேப்ரியல் கார்சியா மார்க்வெஸிலிருந்து முற்றிலும் மாறுபட்டது சரமாகோவின் எழுத்துமுறை, தனித்துவமான, அடர்த்தியான எழுத்து. முடிவில்லாத நீண்டவாசகங்கள், கவித்துவமான உரையாடல்கள். முன்பின்னாக நகரும் கதைசொல்லும் பாணி என அவரது எழுத்துவகை மிகப்புதுமையானது.

எழுத்தாளர்களை மட்டுமின்றிச் சார்த்தர். அல்தூசர். கிராம்சி, ரோசா லக்சம்பர்க், பூர்தியே என இடதுசாரி சிந்தனையாளர்கள் பலரையும் தமிழில் சிறப்பாக அறிமுகம் செய்து அவர்களின் தேவையும் முக்கியத்துவமும் பற்றி எஸ்.வி.ஆர் எழுதியிருக்கிறார்

சமீபத்தில் இஸ்ரேலியக் கவிஞர் யஹுதா அமிசாய் பற்றி உயிர் எழுத்து இதழில் சிறப்பான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். எஸ்.வி. ஆரின் படைப்புகளுக்குக் களம் அமைத்து கொடுத்து உயிரெழுத்துச் செய்து வரும் பணி பாராட்டிற்குரியது. சுதிர் செந்திலுக்கு அன்பும் நன்றியும்.

சொல்லுக்கும் செயலுக்குமிடையே இடைவெளியில்லாதது எஸ்.வி.ஆரின் வாழ்க்கை. சமூக நிதிக்கான போராட்டங்கள், ஈழத் தமிழர்களின் போராட்டம், மனித உரிமைப் பாதுகாப்பு, மரணத் தண்டனை எதிர்ப்பு இயக்கம், மத அடிப்படைவாதங்களுக்கெனப் போராட்டம் என அனைத்திலும் முதற்குரலாக விளங்கியவர் எஸ்.வி. ஆர் . ஆழ்ந்த அழகியல் உணர்வும் இசை நாட்டமும், பன்முகப்பட்ட உரையாடலும் கொண்டவர்.

பீதோவன், மொசார்ட், பாஹ், வாக்னர் என மேற்கத்திய இசையின் மேதைகளை ஆழ்ந்து ரசிக்ககூடியவர். அதே நேரம் நாட்டுப்புற இசை, ராக், மற்றும் ஜாஸ் இசையினையும் ரசித்துக் கேட்க கூடியவர் எஸ்.வி. ஆர். அவரது சேமிப்பில் மிகச்சிறந்த இசைத்தகடுகள் உள்ளன.

எஸ்.வி.ஆர் ஒரு விளையாட்டு ரசிகர். அவரும் துணைவியார் சகுவும் விம்பிள்டன் போட்டிகளைக் காண தொலைக்காட்சி முன்பாகப் பரபரப்பாகக் காத்திருப்பதையும் காணும் போது வியப்பாக இருக்கும். கனிவும் பேரன்பும் நிறைந்தது எஸ்.வி.ஆரின் குடும்பம்.

அரசியல்களத்தில் தீவிர இடதுசாரியாகச் செயல்பட்டு வரும் எஸ்.வி. ஆர் போலீஸ் அடக்குமுறை, சிறை. சித்ரவதை என எண்ணிக்கையற்ற துன்புறுத்தல்கள், தொந்தரவுகளைச் சந்தித்தவர். ஆனால் அது குறித்துப் பொதுவெளியில் ஒரு போதும் பேசி பச்சாதாபம் தேடுகிறவரில்லை. நெருக்கமான நண்பர்களிடம் இவற்றைப் பகிர்ந்து கொள்ளும் போதும் உணர்ச்சிமிகாமல் பகிர்ந்து கொள்ளக்கூடியவர். இன்றுவரை தீவிரமான அரசியல் செயல்பாட்டாளராகவே தொடர்ந்து வருகிறார்

ஆறு மாதங்களுக்கு முன்பு கோத்தரிகியில் அவரது வீட்டிற்குக் குடும்பத்துடன் சென்றிருந்தேன். பகல் முழுவதும் பேசிக் கொண்டிருந்தோம். எனது இடக்கை நாவலை அவருக்குக் கொடுத்தேன். ஆச்சரியம் ஒரு இரவிற்குள் அந்த நாவலை படித்து முடித்ததோடு, அதில் திருத்தங்களும் போட்டிருந்தார்.

எஸ்.வி.ஆர் மிகச்சிறந்த எடிட்டர். தமிழிலும் ஆங்கிலத்திலும் அவரது புலமை அபாரமானது. ஒரு பிரதியை அவரளவிற்கு உன்னிப்பாக எடிட் செய்பவர்களைக் காண்பது அரிது. மிகச்சிறந்த இலக்கிய ரசனை கொண்டவர் என்பதால் அவர் நாவலில் குறிப்பிட்டிருந்த திருத்தங்களைக் காணும் போது ஆஹா இதை நாவல் வெளியாவதற்கு முன்பு செய்யத் தவறிவிட்டோமே எனத்தோன்றியது.

நானூறு பக்கங்களுக்கும் அதிகமான ஒரு நாவலை எப்படி இரவிற்குள் படித்து முடித்தீர்கள் எனக்கேட்டேன்

அதற்காகத் தான் உங்களை ஏழு மணிக்கெல்லாம் அனுப்பிவிட்டேன். புதிய நாவலை பார்த்தால் மனது பரபரப்பாகிவிடும். இரவு பதினோறு மணி வரை படித்தேன். காலையில் ஆறு மணிக்கு எழுந்து ஒன்பது மணி வரை படித்தேன். நீங்கள் வருவதற்குள் படித்து முடித்துவிடவேண்டும் என்று மனதில் முடிவு செய்து கொண்டேன். நல்லவேளை நீங்கள் பத்து மணிக்கு தான வந்தீர்கள் எனச்சொல்லி சிரித்தார்

அதைக் கேட்கும் போது மனது நெகிழ்ந்து போனது. எத்தனையோ பேருக்கு எனது நாவலை படிக்கக் கொடுத்திருக்கிறேன். சிலர் ஆண்டுகள் ஆனாலும் கிணற்றில் போட்ட கல்லை போலிருப்பார்கள். ஆனால் ஒரு எழுத்தாளன் தரும் நாவலை இரவே படித்து மறுநாள் அவனுடன் உரையாட வேண்டும் என்ற மனது எஸ்.வி. ஆரை தவிர வேறு யாருக்கும் இருக்காது. நான் என்றில்லை தனக்கு விருப்பமான எழுத்தாளர்கள் எல்லோரையும் கொண்டாடக் கூடியவர் எஸ்.வி. ஆர். அதே நேரம் தனக்குப் பிடிக்கவில்லை என்றால் முகத்திற்கு நேராகக் கடுமையாக விமர்சனங்களையும் முன்வைக்கக் கூடியவர்

“மார்க்ஸியவாதியா இருந்தாலும் மார்க்ஸியத்தைத் தாண்டி எல்லா விஷயங்களையும் தெரிஞ்சுக்கணும்னு நெனைக்கிறவன்; எதிர் கருத்து கொண்டவங்ககிட்டயும் கத்துக்க முடியும்னு நம்புறவன். இந்தக் கத்துக்குற எண்ணம்தான், வாசிப்பு இல்லாத ஒரு நாளைக்கூடக் கற்பனை செய்ய முடியாத ஒரு பிணைப்பைப் புத்தகங்களோடு எனக்கு உருவாக்கியிருக்கு. கண்ணுல அறுவைச் சிகிச்சை செஞ்சுக்கிட்ட பின்னாடி, வாசிக்கிறது ரொம்பச் சிரமமாத்தான் இருக்கு. ஆனாலும், உருப்பெருக்காடியை வெச்சுப் படிக்கிறேன். படிக்காம இருக்க முடியலை. படிப்பு என்பது ஒவ்வொரு நாளும் புதுசாயிட்டிருக்குற உலகத்தை மேலும் புதுசா பார்க்குறதுக்கான ஜன்னல் மாதிரி. நான் கருத்தியல் சார்ந்து இயங்குபவன் என்றாலும்கூடப் படைப்பிலக்கியங்களின் மீதுதான் ஈடுபாடு அதிகம். உலகத்தைப் பற்றி, வாழ்க்கையைப் பற்றிப் படைப்பிலக்கியங்கள்தான் நுட்பமாக நமக்குச் சொல்லுதுங்கிறது“ என ஒரு நேர்காணலில் எஸ்.வி.ஆர் குறிப்பிடுவது முற்றிலும் உண்மை

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக எஸ்.வி. ஆரோடு பழகி வருகிறேன். அறையில்லாமல் நானும் கோணங்கியும் சென்னையைச் சுற்றி வந்த நாட்களில் எத்தனையோ முறை எஸ்.வி. ஆர் உணவு கொடுத்து உலகின் மிகச்சிறந்த இசைத்தட்டுகளைக் கேட்க வைத்து, நல்ல புத்தகங்களைப் படிக்கக் கொடுத்து, கைச்செலவிற்குப் பணமும் கொடுத்து எப்போது வேண்டுமனாலும் வீட்டிற்கு வாருங்கள் எனப் புன்னகையுடன் அனுப்பி வைத்திருக்கிறார் . கோத்தகரியில் இன்றும் அவரது வீடு நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் திறந்தேயிருக்கிறது. உபசரிப்பும், அன்பும் பெருகிக் கொண்டேயிருக்கிறது.

முதுமையிலும் எஸ்.வி.ஆர் தொடர்ந்து வாசித்துக் கொண்டேயிருக்கிறார். தனக்குப் பிடித்த புத்தகங்கள், சினிமா, இசை, விளையாட்டு, அரசியல்செயல்பாடு என உற்சாகமாக இயங்கி வருகிறார். அவரே எனது ஆதர்சம். வழிகாட்டி. ஆசான்.

எஸ்.வி.ஆரின் தோழமை வாழ்நாளில் நான் அடைந்த பாக்கியம். அவரது படைப்புகளைத் தேடி வாசிப்பதுடன் அது குறித்து விரிவாக எழுதவும் பேசவும் கொண்டாடவும் வேண்டியது தமிழ் சமூகத்தின் கடமை என்றே சொல்வேன்.

••

Archives
Calendar
November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Subscribe

Enter your email address: