சிதறி வீழ்ந்த நட்சத்திரம்.


காசியபனின் அசடு தமிழ் நாவல்களில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.  இந்த நாவல் 1978ல் வெளியானது. பதினைந்து வருசத்தின் பிறகு இதன் மறுபதிப்பு 1994ம் ஆண்டு விருட்சம் பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டது  இப்பதிப்பிற்கு முன்னுரை எழுதியிருக்கிறார் நகுலன்.காசியபன் என்ற புனைபெயர் கொண்ட குளத்து 53வது வயதில் தான் எழுத துவங்கினார். அவரது முகமது கதைகள் கணையாழில் வெளியாகி பரந்த வாசகர் கவனத்தைப் பெற்றது. முகமது என்ற ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் பல்வேறு கதைகளில் தோன்றிமறைவது முன்னோடியான இலக்கிய முயற்சி. அவரது முதல் நாவல் அசடு.


காசியபனின் தேர்ந்த எழுத்துமுறை நாவலின் கதை சொல்லலை உன்னதமாக்கியிருக்கிறது. 123 பக்கத்திற்கு  இது ஒரு மனிதனின் வாழ்க்கை முழுமையாக விவரிக்கிறது. கணேசன் என்ற அந்த ஹோட்டல் பணியாளன் வாழ்வில் தோற்று போனவன். ஆனால் அது குறித்து அவனிடம் அதிக புகார்கள் இல்லை. அவன் கயிறு அறுபட்ட பட்டம் போல காற்று கொண்டு செல்லும் திசையெல்லாம் அலைந்து திரிகிறான். பிரம்மாண்டமான நாவல்கள் தரும் மனவெழுச்சிக்கு சற்றும் குறைவில்லாதது அசடு. ஒருவகையில் அசடு நாவலில் வரும் கணேசன் காம்யூவின் அந்நியன் நாவலில் வரும் மெர்சோவிற்கு நிகரானவன். இருப்பு தான் இருவரது தடுமாற்றம். தத்தளிப்பு.


காசியபன் அதிகம் கவனம் பெறாமலே போய்விட்ட மிக சிறந்த எழுத்தாளர். திருவனந்தபுரத்தில் வசித்த அவர் தத்துவம் படித்தவர். எல்.ஐ.சியில் பணியாற்றியவர். சில வருசங்கள் மதுரையில் வேலை செய்திருக்கிறார். பிறகு கேரளாவில். ஆரம்ப கல்வியை கேரளாவில் படித்தால் மலையாளம் மிக நன்றாக வரும். அத்துடன் வடமொழி, ஆங்கிலம் இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர். டால்ஸ்டாய், டாஸ்டாயெவ்ஸ்கி துவங்கி பன்னாட்டு இலக்கியங்களை ஆழ்ந்து படித்து தெளிவுற்றவர். தமிழில் அவர் மிகவும் விரும்பி படித்த இருவர் மௌனியும் க.நா.சுவும். பேசாத மரங்கள் என்ற கவிதை தொகுதியும் கிரகங்கள்,  வீழ்ந்தவர்கள்  இவரது பிற நாவல்கள்.


கணேசனைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதாயின் அவன் சாமர்த்தியமற்றவன். அதனால் அசடாக கருதபடுகிறான். சாமர்த்தியம் என்ற சொல்லின் உள்ளே திறமை என்பதையை தாண்டிய தந்திரம் ஒன்று உள்ளது. அதை உருவாக்கிக் கொள்வதன் வழியே வாழ்வில் வெற்றியை அடைவதே பெரும்பான்மையினரின் குறிக்கோள். அதில் பலர் வெற்றி பெறுகிறார்கள். பலர் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கணேசன் சாமர்த்தியத்தை கற்றுக் கொள்ளவேயில்லை. கவனமாக விலக்கிப் போகிறான்.


அவன் வாழ்வைப் பரிகசிக்கிறான். அதனிடமிருந்து எதையும் அவன் யாசிக்கவில்லை. பல நேரங்களில் தெரிந்தே தோற்றுப்போகிறான். அதற்கு நிறைய மனத்துணிச்சல் வேண்டும். மற்றொன்று வாழ்வை கண்டு பயங்கொள்ளாத போராட்ட குணம் வேண்டும். இரண்டும் அவனிடமிருக்கிறது.


அதை அவன் தனது லௌகீக வாழ்க்கைக்கு உரியதாக மாற்றிக் கொள்ளவில்லை. அதற்கான எத்தனிப்பே அவனிடம் இல்லை. அந்த வகையில் அவன் ஒரு துறவி. ஆனால் வாழ்க்கை நெருக்கடிக்களுக்குள்ளாகவே அவன் தன் துறவுத்தன்மையை அடைந்துவிட்டான். அதை ஒரு போதும் வெளிப்படுத்திக்  கொள்ளவில்லை.


கணேசனின் கதையை அவன் மறைவிற்கு பிறகு அவனது ஒன்றுவிட்ட தம்பி சொல்வது போலவே நாவல் துவங்குகிறது. நாவலின் இந்தக் கதை சொல்லும் முறை இடைவெட்டாக கணேசன் வாழ்க்கையையும் கதை சொல்லியின் வாழ்க்கையும் ஒன்று கலக்கிறது. சுயசரிதைத் தன்மை மிக்க கதை போல தெரிந்தாலும் புனைவின் வழியே இந்த சுயசரிதை தன்மை  தொடர்ந்து கலைக்கபடுகிறது.


 கணேசன் சிறுவயதில் அம்மாவை இழந்தவன். அப்பா மறுமணம் செய்து கொண்டதால் பாட்டி வீட்டிற்கு வந்துவிடுகிறான். பாட்டிக்கு அவன் தாயில்லாத பிள்ளை என்று செல்லம். கணேசனுக்கு படிப்பில் ஆர்வமில்லை. ஆற்றில் குளிப்பதும் மணலில் விளையாடுவதும் தான் விருப்பம். அவன் மீன்பிடிக்கும் சிறுவர்களுடன் நட்பாக பழகுகிறான். அவன் மீது பாட்டிக்கு சொல்லமுடியாத ப்ரியம். அது ஏன் என்று எவருக்குமே புரியவில்லை. அவனது தாத்தா அவனுக்கு பூணூல் கல்யாணம் செய்து அழகு பார்க்கிறார். பாட்டியின் எதிர்பாராத மரணம் அவனை நிர்கதி ஆக்குகிறது. அவன் வேறுவழியில்லாமல் அப்பா வீட்டிற்கு போகிறான்.


அங்கே சித்தி அவனை மிகவும் பாரபட்சமாக நடத்துகிறாள். சித்தி பிள்ளைகள் அவனோடு ஒட்டுவதேயில்லை. ஆனால் அதை ஒரு போதும் கணேசன் குற்றம் சொல்வதேயில்லை. ஒரு நாள் வீட்டை விட்டு ஒடத்துவங்குகிறான். அந்த ஒட்டம் அவன் சாவு வரை நிற்கவேயில்லை. அவனுக்கு தான் என்ன செய்து பிழைப்பது என்று தெரியவில்லை.


காசி துவங்கி கல்கத்தா. ஹைதராபாத், பூனா என்று எங்கெங்கோ அலைந்து ஹோட்டல்களில் வேலை செய்கிறான். சில நாட்கள் ஒரு இரும்பு சாமான் செய்யும் பட்டறையில் வேலை பார்க்கிறான். சில வாரம் ஜவுளிக்கடை வேலை. ஆனால் எதிலும் இருப்பு கொள்ளமுடியவில்லை. அவனது சுபாவம் அப்படி. அவனுக்கு முதுகுவளைந்து வேலை செய்யத் தெரியாது. யாரிடமும் இணக்கமாக பேசவும் தெரியாது. ஹோட்டலுக்கு சாப்பிட வந்தவர்களை இஷ்டமானால் சாப்பிடு இல்லாவிட்டால் எழுந்து போய்விடு என்று கத்துவான்.


ஆனால் அவனை ஹோட்டல் ஊழியர்கள் துவங்கி ரிக்ஷாகாரர்கள், பிச்சைகார்கள், இரவுகாவலாளிகள். சாலையோர கடைவைத்திருப்பவர் என்று பலருக்கும் பிடித்திருக்கிறது. அவன் மீது அன்பாக இருக்கிறார்கள். அவன் கஷ்டமான நேரங்களில் தம்பிக்கு கடிதம் எழுதி பணம் கேட்கிறான். அதை மறக்காமல் உடனே திருப்பியும் அனுப்பிவிடுகிறான். இப்படியாக தோற்றுக்கொண்டே போய் முடிவில் அவன் மதுரைக்கு வந்து சேர்கிறான்


மதுரையின் மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றிய வீதிகள், அழகர் திருவிழா, மதுரையின் சிறிய சந்துகள், உணவகங்கள் என்று நாவல் விவரிக்கும் மதுரையின் சித்திரம் அற்புதமானது. காசியபன் நகரின் சித்திரங்களை கோட்டோவியம் போல உயிருள்ளதாக வரைந்து காட்டுகிறார். நாவலின் மையப்படிமம் போல மதுரை நகரம் வருகிறது. அதிலும் அங்குள்ள சைவ உணவகங்கள் அதை நடத்தும் பாலக்காட்டு ஐயர்கள். அங்கு வேலைக்கு வந்துள்ள மலையாளிகள்  என்று மதுரைக்கு பிழைக்க வந்த எளிய மனிதர்களை நாவல் மிக அழகாக சுட்டிக்காட்டுகிறது


பிழைப்பதற்காக கோவலனே மதுரைக்கு வந்து சேர்ந்திருக்கிறான். அந்த வழியில் நானும் வந்துவிட்டேன் என்று சொல்லும் கணேசன், கல்பாத்தி ஆண்டி ஐயர் ஹோட்டலில் வேலைக்கு சேர்த்து கொள்கிறான். அது கூட அவனாக கேட்டு பெறவில்லை. அவனது கோலத்தை கண்ட ஐயர் அவராகவே கடையில் வேலைக்கு சேர்த்து கொள்கிறார். அவனால் அந்த கடை வேலையை ஒழுங்காக செய்ய முடியவில்லை. ஆனாலும் அவன் மேல் உள்ள ப்ரியத்தால் அவனை கடையில் வைத்திருக்கிறார் ஐயர்.


பல வருசத்திற்குப் பிறகு ஒரு நாள் அவனது அப்பா பிச்சைகார கோலத்தில் வந்து சேர்கிறார். தம்பி வீட்டில் இருப்பதை அறிந்து அவரை பார்க்க போகிறான் கணேசன். அப்போது கணேசனும் அவனது அப்பாவும் பேசிக் கொள்ளும் இடம் வருகிறது. தமிழ் நாவல்களில் இவ்வளவு கச்சிதமாக, பரஸ்பர மனவெறுப்பை உமிழும் காட்சி வேறு எதையும் வாசித்தேயில்லை.


பிச்சைகாரன் போல மெலிந்து ஆளே உருக்குலைந்து போய் நிற்கும் அப்பாவிடம் கணேசன் கேட்கும் முதல்கேள்வியே எங்கே வந்தீர் ஒய் என்பதே.  அவர் தயக்கத்துடன உன்னையெல்லாம் பாத்துட்டு போகலாம்னு தான் என்கிறார். உடனே கணேசன்  என்னை உனக்கு என்ன பார்வை ஒய், உங்க பிள்ளை சுப்புடு தானே என்கிறான். அவர் உடனே நீரும் பிள்ளை தானே .உன்னை பார்க்கபடாதா என்று ஆதங்கபடுகிறார். ஊர்ல போய் என்ன பண்ண போறீர் அங்கே யாரு இருக்கா. எங்கே தங்குவீர் என்று கேட்க அவர் உறவினர்கள தன்னைக் கவனித்து கொள்வார்கள் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார். உடனே பட்டால் தான் பாப்பானுக்கு புத்திவரும். போய் பாரும் என்று எகத்தாளமாக பதில் தருகிறான் கணேசன்.


இருவருமே கடந்தகால கசப்பின் சுவையை மறக்க முடியவில்லை. ஆனால் இவ்வளவு கடுமை கொண்ட கணேசன் அப்பாவை மீனாட்சி தரிசனத்திற்காக கோவிலுக்கு கூட்டிப் போகிறான்.  திரும்பி வரும் போது அவருக்கு புதுவேஷ்டியும் ஒரு டிரங் பெட்டியும் வாங்கித் தருகிறான்.  பிறகு தம்பியிடம் ஆதங்கமாக சொல்கிறான்


சினேகமா இருக்க வேண்டிய வயசிலே நானும் சினேகமாக இருக்கிலே அவரும் இருக்கிலே. நான் ஒரு விதமா திண்டாடுறேன். அவர் வேறு ஒரு விதமாக என்று குறிப்பிடுகிறான்.


இந்த வாசகம் போன்ற ஒன்றையே  தஸ்தாயெவ்ஸ்கி அவரது அப்பாவைப் பற்றியும் குறிப்பிடுகிறார். கரமசோவ் சகோதர்களில் வரும் தகப்பன் கரசோவ் போலவே இந்த அப்பா கதாபாத்திரம் இருக்கிறது. அல்யோஷா போலவே கணேசன் இருக்கிறான். அவனது அண்ணன் இவானை நினைவுபடுத்துகிறான்.
கணேசன் மணந்து கொள்ளும் பெண்ணான சாவித்ரி கூட குருஷ்கா என்ற பெண் கதாபாத்திரத்தின் சாயலில் தான் இருக்கிறாள். இது ஒப்பீடு அல்ல. மாறாக இந்த கதாபாத்திரங்கள் மனதில் உடனே தஸ்தாயெவ்ஸ்கியின் கதாபாத்திரங்களை நினைவுபடுத்துகிறார்கள்.  காசியபன் தஸ்தாயெவ்ஸ்கி மீது தீவிரமான ஈடுபாடு கொண்டவர்


அசடு நாவலில் அவரது அப்பா பிச்சைகார கோலத்தில் வந்து நிற்கும் போது ஒரு ஆளின் சிரிப்பை வைத்து அவர் யார் என்று கண்டுபிடித்து விடலாம் என்ற தஸ்தாயெவ்ஸ்கியின் வரி மேற்கோளாக காட்டப்படுகிறது. அல்யோஷாவிற்கு இருப்பது போன்றே கணேசனுக்கும் ஆழமான இறைநம்பிக்கையிருக்கிறது. அது அன்பிலிருந்து உருவாவது. அவன் வாழ்வில் தோற்று நசிந்து போன நிலையில் ஞானப்பானை என்ற வேதாந்த நூலை விருப்பத்துடன் படிக்கிறான்.


கணேசனின் செய்கை பலநேரங்களில் தஸ்தாயெவ்ஸ்கியின் வேறுவேறு கதாநாயகர்களை நினைவுபடுத்துகிறது. தஸ்தாயெவ்ஸ்கியின் நாயகர்கள் தனது வீழ்ச்சிக்கு காரணமாக தன்னையன்றி வேறு ஒருவரையும் ஒருபோதும் நினைப்பதேயில்லை. அது போலவே உலகின் மீதான தன்னுடைய ஈர்ப்பையும் நம்பிக்கையையும் அவர்கள் கைவிடுவதுமில்லை. கணேசன் அது போன்ற ஒரு கதாபாத்திரமே.


அவனுக்கும் தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கைக்கு நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவரும் அப்பாவின் அன்பிற்காக ஏங்குபவர்கள். அப்பாவின் அன்பு கிடைக்காமல் இறந்து போன அம்மாவைப் பற்றி நினைத்து கொள்பவர்கள். சொந்த சகோதர்கள் மீது அன்பு கொள்ள முடியவில்லையே என்று கசிந்து அழுபவர்கள். தன்னைக் காதலிக்கும் பெண் தன்னை ஏமாற்றிய போதும் அவளை விட்டுப் பிரிய முடியாமல் வேதனை கொள்கிறவர்கள். இப்படி நிறைய ஒற்றுமைகள்.


ஆனால் தஸ்தாயெவ்ஸ்கியின் நாயகர்களுக்கு வரும் மனக்கொந்தளிப்பு கணேசனிடம் இல்லை. அவன் தனது இடையுறாத பயணத்தின் வழியே தன் இருப்பு வெறும் நீர்குமிழ்மட்டுமே. அது அழுகு காட்டி அழிந்துவிடக்கூடியது என்பதை  அறிந்து கொண்டிருக்கிறான். ஒருவகையில் அவனது இலக்கற்ற பயணம் அவனை ஆறுதல் படுத்துகிறது. முன்அறியாத மனிதர்களை அவன் நேசிக்கிறான். அவர்களும் கணேசனை நேசிக்கிறார்கள். ஆனால் தன்னை எவராவது பராமரிக்க துவங்கும் போது அது கணேசனை அமுக்க துவங்கிவிடுகிறது. அதிலிருந்து தப்பி வெளியேறி ஒடுகிறான்.


நாவலின் துவக்க பகுதியில் சாலையில் செத்து நாறிக் கொண்டிருக்கும் எலியின் சித்திரம் ஒன்று இடம் பெறுகிறது. வாகனங்களைக் கடந்து ஒடிய எலி ஒன்றை காகங்கள் ஒன்று சேர்ந்து கொத்தி கொத்தி உடலை துண்டாக்குகின்றன. முடிவில் எலி தோலும் சதையுமாக பியந்து தெருவில் நாறிக்கிடக்கிறது. கடந்த காலத்தில் எலி தன்னால் ஆன மட்டும் ஆட்டங்களை ஆடியிருக்க கூடும். நிறைய திருட்டுதனங்களைக் செய்திருக்க கூடும். சாவின் முன்னால் அதன் கடந்த காலம் அர்த்தமற்று போய்விடுகிறது என்ற குறிப்பு வருகிறது. அந்த எலி தான் கணேசன். அவன் வாழ்க்கை காகங்கள் துரத்தி கொல்லும் எலியை போன்றதே. ஒரு இடத்தில் கணேசனே அதையும் சொல்கிறான்.


வாழ்க்கையில் நாம் செய்யும் அத்தனை பாவங்களும் ஆட்டபாட்டங்களும் செத்தபிறகு நம்மோடு மறைந்துவிடுகின்றன என்று. அவனது வேதாந்தம் படிப்பில் உருவானதில்லை. மாறாக வாழ்க்கை அவனுக்கு கற்று தருகிறது.


ஒரு இடத்திலும் வேர்விட முடியாத அவனுக்கு திருமணம்பேசி முடிக்கபடுகிறது. கல்யாண நாளிலே பெண்ணின் குடும்பம் மிக மோசமானது என்று எச்சரிக்கிறார் கல்பாத்தி ஆண்டி ஐயர். கணேசன் அதை பெரிதாக எண்ணவில்லை. திருமணமாகி கிராமத்திலே ஹோட்டல் நடத்துகிறான். அவனுக்கு குழந்தை பிறக்கிறது. அதைப்பற்றி கேட்கும் தம்பியிடம் கல்யாணம் பண்ணிகிட்டா எது நடந்தாலும் நடக்காட்டியும் குழந்தை பெறந்துவிடும். அதில் சந்தோஷப்பட என்னயிருக்கிறது என்கிறான். தன் மனைவிக்கு அடுத்த ஆண்களுடன் கள்ளஉறவு இருக்கிறது என்று தெரிந்தும் அவள் மீது பாசம் காட்டுகிறான். காமம் அவனை அவள் முன்பாக மண்டியிட செய்கிறது. அதற்காக அவனே மன வருத்தம் கொள்கிறான்.


பிறகு  மனைவியை அழைத்து கொண்டு வந்து மதுரையிலே ஹோட்டல் பணியாளராக வேலை செய்கிறான். அங்கும் மனைவியின் கள்ளஉறவு தொடர்கிறது. அதை சகித்து கொள்ள முடியவில்லை. ஹோட்டல் வேலையை விட்டு வீடு மாற்றுகிறான். மனைவி போட்டு தரும் இட்லி வடை பஜ்ஜிகளை தெரு தெருவாக கூவி விற்கிறான். அந்த வேலையும் நிலைபெறவில்லை.
அவனால் தன்னை சுகமாக வாழ வைக்க முடியாது என்று ஒரு நாள் மனைவி வேறு ஒரு ஆளோடு ஒடிப்போய்விடுகிறாள். இனிமேல் வாழ்வில் என்னபிடிப்பு இருக்கிறது என்று கணேசன் தனியே வாழ ஆரம்பிக்கிறான். சில நாட்களில் திரும்பவும் கல்கத்தாவிற்கு போய்விடுகிறான். அங்கிருந்து காசி பூனா என்று சுற்றியலைகிறான். உடல்நலமற்று வீழ்கிறான். கவனிப்பார் யாருமில்லாத மனத்துயர் அவனைப் பற்றிக் கொள்கிறது.


வயோதிக தோற்றம் போலாகி ஒரு நாள் கொச்சியில் வசிக்கும் தம்பியை தேடி வருகிறான். அந்தக் கோலத்தில் கணேசனை காண தம்பிக்கு மனம் பதறுகிறது. வீட்டிலே தங்க வைக்கிறான். தம்பி பிள்ளைகளுக்கு கணேசனை ரொம்பவும் பிடித்துபோய்விடுகிறது. அவர்கள் வீட்டிலே சில காலம் இருக்கிறான். பிறகு ஒரு நாள் தான் ஊருக்கு போவதாக பணம் வாங்கி கொண்டு உள்ளுரிலே சுற்றியலைகிறான். அவனது மனதை ஒருவரும் புரிந்து கொள்ள முடியவேயில்லை. கடைசியாக மதுரைக்கு வருகிறான். கடைநிலைமனிதர்களுடன் ஒன்று சேர்ந்து அலைகிறான். கிடைத்தை சாப்பிடுகிறான். தன்னை அழித்து கொள்ள துவங்குகிறான்.


ஒரு நாள் நோய் முற்றிய நிலையில் ஆண்டி ஐயர் கடைக்கு போகிறான். அவனை மருத்துவமனைக்கு கொண்டு போய் சிகிட்சை செய்கிறார்கள். குணமாகி வெளிவந்து சில நாட்கள் கல்யாண வீடுகளுக்கு சமையல் வேலை செய்ய போகிறான்.


பின்னொரு நாளிரவு அவன் ஒரு கடையின் வெளியே அரைவேஷ்டியை போர்த்திக் கொண்டு உறங்குவதுபோல செத்துகிடக்கிறான். ஆண்டி ஐயரே அவனை தூக்கி கொண்டு போய் தத்தனேரி மயானத்தில் காரியம் செய்கிறார். கோவலனை போன்ற துர்மரணம் தான் இதுவும். ஆனால் கணேசனுக்காக அழுவதற்கு யாருமேயில்லை.


அவன் வாழ்வின் கசப்பை முழுமையாக குடித்து களிம்பேறியிருந்தான். இந்த மரணம் கூட ஒரு வருசத்தின் பிறகு தற்செயலாக குருவாயூர் கோவிலில் வைத்து கணேசனின் தம்பிக்கு ஆண்டி ஐயரின் மருமகன் வழியாக நினைவு கொள்ள படுகிறது


தன்னுடைய அப்பா இறந்து போனதை நாலைந்து மாதம் கழிந்து சந்தோஷமாக வந்து கணேசன் சொல்வது போன்ற ஒரு காட்சி நாவலில் உள்ளது. அவன் வாழ்வும் அப்படியே முடிந்து போய்விடுகிறது. அவனை நினைவு கொள்ளும் ஆண்டி ஐயரின் மருமகன் பாவம் நல்லவன் என்கிறான். கணேசன் தன் வாழ்நாளில் சம்பாத்தித்து அது மட்டுமே.


நாவலின் இடைவெட்டாக காயங்குளம் என்ற சித்தபிரமை கொண்ட ஒருவன பாடிக் கொண்டேயிருக்கிறான்.அவன் பாடல் வாழ்க்கை வெறும் மாயை என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டேயிருக்கிறது. நாவல் அந்த பாடலை முடிவிலும் நினைவு கொள்ள வைக்கிறது


அசடு நாவலின் தனித்துவத்திற்கு முக்கிய காரணம் அதை சொல்ல வந்த காசியபன் கணேசனை அவனது இயல்பான பலவீனங்களுடன் உருவாக்கியது. மற்றொன்று அவன் எங்கும் எதையும் போதிப்பதில்லை. அவன் தனது பாடுகளை நேரடியாக எதிர்கொள்கிறான். வேதனைபட்டு கடந்து போகிறான். வாசிக்கும் நாம் கணேசனுக்காக கண்ணீர் விடுகிறோம். நாவலை வாசித்து முடிக்கும் போது வாசகன் அடையும் துயரம் ஆழ்ந்த வடு போன்று என்றும் உடனிருக்க கூடியது.


காசியபனின் சிறப்பு அவர் எழுத்தில் உருவாகும் மெல்லிய கேலியான தொனி , அது அற்புதமானது .இதே கேலியை நகுலனிடம் கவனித்திருக்கிறேன். ஆ. மாதவனிடம் கூட இருக்கிறது. காசியபனிடம் அது சற்று தூக்கலாகவே இருக்கிறது. ஒருவேளை அது திருவனந்தபுரத்தின் விசேச இயல்புகளில் ஒன்றாக இக்கேலி இருக்ககூடுமோ என்றும் தோன்றியது. கணேசனை பற்றி விவரிக்கும் போது அவர் தேர்வு செய்யும் சொற்களும் விவரணையும் விசேசமானவை. அதுபோலவே உரையாடல்கள் நாவல் முழுவதும் சிறப்பாக கையாளப்பட்டிருக்கின்றன.


நாவல் மூன்று காலகட்டங்களை விரிவாக விவரிக்கிறது. ஒன்று கணேசனின் பால்யகாலம். அங்கே கணேசன்  செல்லபிள்ளை.அவனை சுற்றி நடக்கும் உலகை அவன் புரிந்து கொள்வதேயில்லை. மாறாக அதன் செழுமைக்கு தன்னை ஒப்படைத்து கொள்கிறான். அவனை பார்த்து மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள். விதவிதமான சாப்பிடுகிறான். ஊர் சுற்றுகிறான். எதையும் பயமின்றி செய்து பார்க்கிறான்.


இரண்டாம் நிலை அவனது அலைச்சல்மிக்க வாலிப வயது. எந்த வேலையும் செய்ய லாயக்கிலாதவன்  ஹோட்டலில் சர்வராகிவிடுவான் என்று ஒரு இடத்தில் அவனே குறிப்பிடுகிறான். அவன் இந்தியா முழுவதும் சுற்றிவருகிறான். பசித்த மனிதர்களை பார்த்தபடியே இருக்கிறான். பசி மனிதனின் இயல்பை மாற்றிவிடுவதை அவன் கண்கூடாக காண்கிறான். அந்த பாடம் அவனுக்கு வாழ்க்கையின் மீது பற்றற்ற மனநிலையை உருவாக்கிவிடுகிறது. எதற்காக தான் வேலையை விட்டு போகிறேன் என்று அவன் ஒரு போதும் சொல்வதேயில்லை. அவனால் எங்கும் தேங்கிவிட முடியாது என்றே சொல்கிறது.


ஆற்றோடு வளர்ந்தவன் என்பாதல் அந்த குணம் வந்துவிட்டதோ என்றும் தோன்றுகிறது. அவன் ஒடிக் கொண்டேயிருக்கிறான். யாரும் அவனை துரத்தவில்லை. ஆனால்ஒடிக் கொண்டேயிருக்கிறான். அந்த ஒட்டம் அவனை பல இடங்களில் காலைவாறிவிடுகிறது. அவனாக விரும்பி சில இடங்களில் ஒய்வு கொள்கிறான்.


அவனால் மனிதர்களை அவர்களது சகல பலவீனங்களுடன் ரசிக்கவும் புரிந்து கொள்ளவும் முடிகிறது. அதை அவன் மற்றவர்களிடம் இருந்து எதிர்ப்பார்க்கிறான். அங்கே தான் கணேசன் தோற்று போக துவங்குகிறான். உலகின் பார்வையில் சம்பாதிக்கத் தெரியாதவன் அசடே. அவன் நிறைய பொய் பேசவும் தந்திரங்களை கையாளவும் தெரிந்திருக்கவில்லை. சமையலறை பல்லி போல கரிப்புகைக்குள் ஒட்டிக் கொண்டு கிடைத்ததை சாப்பிட்டு வாழ பழகிவிட்டிருக்கிறான்.


அவன் ஆசைப்பட்ட ஒன்றே ஒன்று அவனது திருமணம். அது கூட உடலின் தூண்டுதலால் தான். காமம் அவனை எளிதாக ஜெயித்துவிடுகிறது. பிறகு அவனது மனைவி முறைகேடான உறவுகளில் ஈடுபடுவதை அவனால் தடுக்கமுடியவில்லை. ஆனால் அவளை வெறுக்கவில்லை. மாறாக அவளை எப்படியாவது தன்னைப் புரிந்து கொள்ள வைக்க போராடுகிறான். தம்பி வீட்டில் தன்மனைவியை அழகர் கோவில் திருவிழா பார்க்க அழைத்து வரும் ஒரு நிகழ்வு நாவலில் உள்ளது. அது தான் மதுரையில் நடைபெறும் அழகர்கோவில் விழா பற்றிய மிக முக்கியமான இலக்கியபதிவு.


அந்த இரவு நாவலின் கொந்தளிப்பான இரவு. இரவில் சிதிறி வீழும் நட்சத்திரம் ஒன்றை போல அது விவரிக்கபடுகிறது. மதுரையின் பூர்வீகமான காலத்தின் மிச்சம் பீறிடுகிறதோ என்று கூட தோன்றுகிறது.  கணேசன் அத்தனை கொண்டாட்டம் களிப்பு யாவின் இடையிலும் ஆறாத துயர் கொண்டேயிருக்கிறான். மனைவியின் துரோகம் அவனை ஆள்கொல்லி நோய் போல அரிக்க துவங்குகிறது.


மூன்றாவது நிலை மனைவி அவனை பிரிந்துபோய்விட்ட நிலையில் போக்கிடம் புரியாமல் தடுமாறி அலையும் கணேசனின் நோயுற்ற காலம். அது அவன் விரும்பி சிதைவதை காட்சிபடுத்துகிறது. கணேசன்  கடவுளின் கருணையை ஒரு போதும் எதிர்பார்க்கவேயில்லை. மாறாக தனது வலி தானே தனக்கு ஏற்படுத்திக் கொண்டது. தன் தகப்பன் அப்படி தான் அழிந்தான். தானும் அவன் வழியே செல்கிறேன் என்று சொல்வது போன்றேயிருக்கிறது


நாவலின் ஊடாக கன்யாகுமரி மாவட்டத்தின் கரமனை கிராமமும் அதன் வளமையான இயற்கை சூழலும், ஆறும் அக்ரஹாரத்து வீடுகளும் அங்கு வாழ்ந்தவர்களின் ஆசைகள், கனவுகளும் துல்லியமாக விவரிக்கபடுகின்றன. தெப்பம் ஒன்றில் மிதந்து செல்வது போல நாவல் முன்பின்னாக நகர்ந்தபடியே இருக்கிறது. சம்பவங்களை கதை சொல்லி வளர்த்து எடுப்பதில்லை. மாறாக ஏதோ ஒரு புள்ளியில் சொல்ல துவங்கி அங்கிருந்து வளர்த்து செல்கிறார். பின்பு இன்னொரு புள்ளியில் துண்டித்துவிடுகிறார். ஆக இந்த நாவல் ஒரே நேரத்தில் கணேசன் கதையை சொல்வது போன்ற அவன் அண்ணன் வாழ்வையும் விவரிக்கிறது.


வெற்றி பெற்றவர்களை மட்டுமே வாழ்க்கை எப்போதும் கொண்டாடுகிறது. தோல்வியுற்றவர்கள் மறக்கடிக்கபட்டு விடுகிறார்கள் என்று கசப்புணர்விலிருந்தே நாவல் துவங்குகிறது. கணேசன் தமிழ் நாவல் உலகின் மறக்க முடியாத கதாபாத்திரம். நாவலின் ஒரு இடத்தில் அப்பா சிறுவயதில் ஏதோ திட்டுவார்.  ஆனால் என்ன திட்டுவார் என்று மறந்துபோய்விட்டது என்ற வரி இடம்பெறுகிறது.


இது முக்கியமான பதிவு. பால்யத்தில் நடைபெற்ற பலசம்பவங்கள் வெறும்காட்சிகளாகவே மனதில் தங்கிவிடுகின்றன. அப்போது நடைபெற்ற உரையாடல்கள் நம்மிடம் தங்குவதேயில்லை. மனம் அதற்காக எப்போதும் ஏங்கவே செய்கிறது. இன்னொரு விதமாக சொல்வதாயின் அப்பா பேசியதை எழுதுவது போன்றே அவர்பேச மறந்து போனதையும் எழுத வேண்டிய அவசியமிருக்கிறது.


நாவலில் கணேசன் சொல்லாத பலவும் மறைமுகமாக சுட்டிகாட்டபடுகிறது. அதை கணேசன் சொல்ல தயங்குகிறான். மறைத்து கொள்கிறான். மறந்து போக முயற்சிக்கிறான். ஆனால் யாரோ அவன் மறைக்க விரும்பியதை திரும்ப திரும்ப நினைவுபடுத்தியயே இருக்கிறார்கள். காற்றில் புகை கரைவது போல கணேசன் இருப்பு நம் கண்முன்னே கரைந்து போவதை நாம் காணமுடிகிறது. அதுவே நாவலின் மிகப்பெரிய வெற்றி.


2004ம் ஆண்டு தனது எண்பத்தைந்தாவது வயதில் காசியபன் இறந்த செய்தி கணேசனின் மரணம் போலவே வெறும் தகவலாக மட்டுமே தோன்றி மறைந்து போனது தான் தமிழ் சூழலின் தலைவிதி.


அசடு கொண்டாப்பட வேண்டிய மிக முக்கிய நவீனநாவல். நமது கவனிமின்மை அதை கண்டுகொள்ளாமல் ஒதுக்கி வைத்திருக்கிறது. மறுவாசிப்பு வழியே இந்த நாவல் உன்னதமான புத்தெùழுச்சியை அடையும் என்றே நம்புகிறேன். அதை சாத்தியமாக்குவது நம் கையில் தானிருக்கிறது.
**

Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Subscribe

Enter your email address: