நட்சத்திரங்களுக்கு இடையே

அந்த்வான் து செந்த் எக்சுபெரி மிகச் சிறந்த பிரெஞ்சு எழுத்தாளர். இவர் எழுதிய குட்டி இளவரசன் எனக்கு மிகவும் பிடித்த நாவல், பலமுறை வாசித்திருக்கிறேன். அந்த நாவலின் ஊற்றுக்கண்ணைப் போன்றுள்ளது காற்று, மணல், நட்சத்திரங்கள் என்ற எக்சுபெரியின் விமானப்பயணம் பற்றிய நூல்.

சமீபத்தில் க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ள இப்புத்தகம் குட்டிஇளவரசனை விடவும் சிறப்பானது. வெ. ஸ்ரீராம் வெகுஅற்புதமாக மொழியாக்கம் செய்துள்ளார். பிரெஞ்சிலிருந்து நேரடியாகத் தமிழிற்கு மொழியாக்கம் செய்துவருபவர் வெ. ஸ்ரீராம். இவரது சேவையைப் பாராட்டி ஃப்ரான்ஸ் அரசு செவாலியே விருது அளித்துச் சிறப்பித்துள்ளது. தனது மொழிபெயர்ப்புகளின் வழியே தமிழ் இலக்கியத்திற்குப் பெரும் கொடை அளித்துள்ளார் வெ. ஸ்ரீராம்.

க்ரியா பதிப்பகம் சர்வதேச தரத்தில் நூல்களை வெளியிடக்கூடியது. க்ரியா ராமகிருஷ்ணன் மொழிபெயர்ப்புகளைக் கவனம் எடுத்து சரிபார்த்து சிறப்பாகப் பதிப்பிப்பவர். ஆல்பெர் காம்யு, ழான்-போல் சார்த்ர். ஷார்ல் போத்லெர், பியரெத் ஃப்லுசியோ, எக்சுபெரி, ழாக் ப்ரெவெர், விக்தோர் ஹ்யூகோ, எனப் பிரெஞ்சு இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகளைத் தமிழுக்குக் கொண்டு வந்த பெருமை க்ரியாவிற்கு உரியதே.

பள்ளி, கல்லூரி, இலக்கியக்கூட்டங்கள் என நிறைய இடங்களில்  குட்டி இளவரசன் பற்றிப் பேசியிருக்கிறேன். தமிழில் அதிகம் வாசிக்கபட்ட மொழிபெயர்ப்பு நாவல்களில் குட்டி இளவரசன் முக்கியமானது.

1944ல் விமானவிபத்தில் காணாமல் போய்விட்ட எக்சுபெரியை பிரான்சு தேசம் பல ஆண்டுகளாகத் தேடிவந்தது. முடிவில் 2004ல் அவரது உடைந்த விமானத்தின் துண்டினை கடலில் கண்டறிந்தார்கள். அதன்பிறகே அவரது மரணம் உறுதிசெய்யப்பட்டது, இது பற்றிக் கூட வெ.ஸ்ரீராம் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

அந்த்வான் து செந்த் எக்சுபெரி Southern Mail, Night Flight, Flight to Arras ,The Little Prince ஆகிய நான்கு நாவல்களை எழுதியிருக்கிறார். இதில் Southern Mail, Night Flight, The Little Prince மூன்றும் திரைப்படமாக வெளிவந்துள்ளன. Flight to Arras நாஜி படையின் குண்டுவீச்சுகளுக்கு ஊடே உயிரைப் பணயம் வைத்து பறக்கும் விமானியின் சாகசக் கதையை விவரிக்கிறது.

1935ம் ஆண்டு எக்சுபெரி விமானவிபத்தில் சஹாரா பாலைவனத்தில் மாட்டிக் கொண்டார். காப்பாற்ற யாருமில்லாமல் அவரும் நண்பரும் போராடினார்கள். அந்த விபத்து எப்படி ஏற்பட்டது. பாலைவனத்தில் தாங்கள் அடைந்த அனுபவம் எவ்வாறு இருந்தது. தனது விமானி வாழ்க்கையில் எதையெல்லாம் கற்றுக் கொண்டேன் என்பதையே காற்று மணல் நட்சத்திரங்கள் நூலில் பிரதானமாக விவரிக்கிறார். இந்நூல் 1939ல் பிரெஞ்சில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது

மேலோட்டமாக இந்நூல் விமானப் பயணத்தைப் பற்றியதாக இருந்தாலும் அதன் அடித்தளத்தில் வாழ்க்கையின் தேடலை, இயற்கையின் அதிசயத்தை, மனிதர்கள் ஏன் தங்களை முழுமையாக உணரவில்லை என்ற ஏக்கத்தையே வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு மனிதனும் ஒரு தனிக் கிரகத்தில் வசிப்பவனாகவே நடந்து கொள்கிறான் என்றே எக்சுபெரி கூறுகிறார்.

பாலைவனத்தில் தனித்துவிடப்படும் போது அவர் முடிவற்ற வெளியை, முடிவற்ற காலத்தை உணருகிறார். ஒரு துறவி ஞானத்தை உணரும் தருணம் போன்ற நிலையது. வேறுபாடுகளைக் கடந்து உலகை ரசிக்கவும் இயற்கையோடு இணைந்து நம்மை புரிந்து கொள்ளவும் உதவி செய்கிறார். முடிவற்ற நட்சத்திரங்களின் ஒளிர்தலை தூய அன்பின் வெளிப்பாடாகவே முன்வைக்கிறார்.

மகத்தான படைப்பாளிகள் தனது சொந்தத் துயரங்களைப் பெரிதாகக் கருதாதவர்கள். அவர்கள் எப்போதும் மானுடகுலத்தின் மீது பேரன்பும் நம்பிக்கையும் கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். டால்ஸ்டாயிடம் காணப்படும் அன்பின் வெளிச்சத்தையே எக்சுபெரியிடமும் காணமுடிகிறது.

காற்று, மணல், நட்சத்திரங்கள் நூலில் பெண்களே கிடையாது. பெண்கள் இல்லாத சிறுகதைகளை எழுத முயன்றவர் ஹெமிங்வே. தற்போது முரகாமி கூட அப்படியொரு சிறுகதை தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். தொலைதூரத்து நட்சத்திரங்களைப் போல எக்சுபெரியின் நினைவில் மட்டுமே பெண்கள் வந்து போகிறார்கள்.

எக்சுபெரி தன் எதிர்காலத்தை முன்னுணர்ந்து கொண்டவரைப் போலவே எழுதிப் போகிறார். அவர் கடலில் முழ்கிச் சாவார் என ஒரு பெண் அவருக்கு ஆருடம் சொன்னதாகவும் அதை அவர் நம்பியதாகவும் ஒரு தகவல் உள்ளது. அது உண்மையா எனத்தெரியாது. ஆனால் அவரது முடிவு அப்படியே அமைந்தது.

தனது சஹாரா பாலைவன அனுபவத்திலிருந்து 1943ல் குட்டி இளவரசனை எக்சுபெரி எழுதியிருக்கிறார். அந்நாவல் அடைந்த வெற்றி மிகப்பெரியது. இதுவரை 300 மொழிகளில் வெளியாகி உலகம் முழுவதுமாக 14 கோடிக்கும் மேல் விற்றிருக்கிறது .

குட்டிஇளவரசன்  நாவலில் வரும் பைலட் எக்சுபெரியே குட்டிஇளவரசனை வாசித்தவர்களுக்குக் காற்று, மணல், நட்சத்திரங்கள் அதன் திறவுகோல் போலிருப்பதை உணருவார்கள்.

காற்று மணல் நட்சத்திரங்களை ஒருமுறை வாசித்துவிட்டுத் திரும்பக் குட்டிஇளவரசனை வாசித்துப் பாருங்கள். முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும். உண்மையும் புனைவும் எந்த அளவு கலந்துள்ளது என்பதை நீங்களே அறிந்து கொள்ள முடியும்.

குட்டி இளவரசன் எழுதிய நாட்களில் எக்சுபெரி தீவிரமனநெருக்கடியில் இருந்தார். அவரது காதல்மனைவி Consueloவுக்கும் அவருக்குமிடையில் தொடர்ந்து சண்டை, சச்சரவு நடந்து வந்தது. தன்னைப் புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்கிறாளே என மிகவும் வேதனை கொண்டிருந்தார். இதைப்பற்றி Paul Webster எழுதியுள்ள Antoine de Saint-Exupéry: The Life and Death of the Little Prince நூல் குறிப்பிடுகிறது.

தன் காதல்மனைவியைத் தான் எக்சுபெரி குட்டிஇளவரசனில் வரும் ரோஜாவாக உருமாற்றுகிறார். தனது கிரகத்திலுள்ள ஒற்றை ரோஜாவை குட்டிஇளவரசன் மிகவும் நேசிக்கிறான். ஆனால் ரோஜா அவனது அன்பைப் புரிந்து கொள்ளாமல் புறக்கணிக்கிறது.

வானிலிருந்து உலகை பார்க்கும் அனுபவம் எப்படியிருக்கும் என்பதை இந்த நூல் மிக அழகாக விவரிக்கிறது. சினிமாவில் ஏரியல் ஷாட் வழியாக உலகைக் காட்டுவது போல எழுத்தின் வழியாகப் பறத்தலின் இன்பத்தை அடையாளம் காட்டுகிறார்.

1926ம் வருடம் லாதே கோயர் விமானநிறுவனத்தில் இளம்விமானியாகப் பணியில் சேருகிறார் எக்சுபெரி. தபால்சேவைக்கான விமானத்தில் முதல்முறையாகப் பறக்க துவங்கும் அனுபவத்திலிருந்து இந்நூல் துவங்குகிறது.

முந்திய இரவு பதற்றத்துடன் காத்திருக்கிறார். சொல்லிக் கொடுக்கபட்ட பாடங்கள் மனதில் வந்து போகின்றன. வரைபடங்கள். குறிப்புகள், பயிற்சி காலத்தில் மேற்கொண்ட பயணம் அத்தனை இருந்தும் மனது தத்தளிக்கிறது. காலையில் அவர் மெல்லிய நடுக்கத்துடனே கிளம்புகிறார். முதற்பயணமது.

ஒருபுறம் வானிலை மாற்றத்தை அறிந்து கொள்ளும் பதற்றம். தொலைந்து போய்விடக்கூடும் என்ற பயம், மறுபுறம் பறவையைப் போல வானை பறந்து கடக்கப்போகிறோம் என்ற ஆசை இரண்டும் ஒன்று சேர்ந்து கொள்கிறது. அந்த முதற்பயண அனுபவத்தைச் சுவைபட விவரித்துள்ளார்.

நட்சத்திரங்களைப் பற்றி இவ்வளவு ரசித்து ரசித்து யாரும் எழுதியிருப்பார்களா எனத்தெரியவில்லை. புத்தகம் முழுவதும் நட்சத்திரங்கள் ஒளிர்ந்து கொண்டேயிருக்கின்றன.

விமானத்தை ஒரு இயந்திரமாகக் கருதாமல் தனது சொந்த சிறகுகளைப் போல நினைக்கிறார் எக்சுபெரி. தன் சிறகை விரித்துக் கடந்து சென்ற போது கண்ட மலைகளை, ஆறுகளை, இயற்கை காட்சிகளை, இரவின் தனிமையை, ஒளிரும் வெளிச்சத்தைக் கவித்துவமாக விவரித்துள்ளார்.

நூலை வாசிக்க வாசிக்க நாம் வானில் பறந்து போகத்துவங்குகிறோம். நட்சத்திரங்களின் நோக்கி நம்மையும் உடன் அழைத்துப் போகிறார். வானத்தின் வண்ணங்களில் கிறங்க செய்து மேகக்கடல்களில் பறக்க வைத்து பூமியின் அழகை வானிலிருந்து பார்க்க வைக்கிறார். மெல்ல நாம் பிரபஞ்சஜீவி என்பதைப் புரிய வைக்கிறார்.

மெல்விலின் மோபிடிக் நாவல் கடற்பயணத்தின் இன்னல்களை, அதிசயத்தை, தனிமையை, சாகசவேட்கையை விரிவாகப் பேசுகிறது. அதை வாசிக்கும் ஒருவன் கடலோடியின் அக புறவுலகை துல்லியமாகப் புரிந்து கொள்ள முடியும். அதற்கு இணையாக விமானியின் உலகம் எப்படிபட்டது. அவன் என்ன அனுபவத்தை அடைகிறான். விமானம் விபத்துக்குள்ளாகும் போது அடையும் நெருக்கடிகள் எத்தகையது என்பதைத் தனது சொந்த அனுபவத்தின் வழியே எக்சுபெரி துல்லியமாக விளக்கி காட்டுகிறார். அவ்வகையில் இந்நூல் மோபிடிக்கிற்கு இணையானதே.

விமானம் ஒட்டுவது என்பது இயற்கையுடன் செய்யும் சமர். இயற்கை அனுமதித்தால் மட்டுமே ஆகாசப்பயணம் சாத்தியம். இயற்கையோ கருணையற்றது. அதன் சீற்றத்தை நம்மால் கணிக்கவும் முடியாது. எதிர்கொண்டு சமாளிக்கவும் முடியாது. ஆகாசம் நம்மை முழுமையாக அனுமதிக்க வேண்டும். அப்போது தான் விமானப்பயணம் சாத்தியம் என்றே எக்சுபெரி குறிப்பிடுகிறார்

எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் பூமியில் தன்னை நேசிப்பவர் தனக்காகக் காத்திருக்கிறார். நாம் வீடு திரும்ப வேண்டும் என்ற எண்ணமே விமானியின் ஆதார உணர்வு. அவன் நட்சத்திர கூட்டங்களுக்கு ஊடே பறக்கும் போது எங்கோ தொலைவில் இருளில் தன் மனைவி,குழந்தைகள் உறங்கிக் கொண்டிருப்பார்கள் என்ற நினைப்போடு தான் செல்கிறான். உறவின் இருப்பே அவனை வழிநடத்துகிறது. அதையே எக்சுபெரியும் சுட்டிக்காட்டுகிறார்

கியோமே என்ற விமானி பனிப்புயலில் சிக்கி ஆண்டிஸ் மலையில் விமானவிபத்து ஏற்பட்டு மாட்டிக் கொள்கிறார். அவர் தப்பிவந்த கதையை எக்சுபெரி விவரிக்கும் போது நாம் ஆசையோடு கியோமேவின் கைகளைப் பற்றிக் கொள்ளத் தோன்றுகிறது. உயிர்பிழைத்தல் எவ்வளவு பெரிய போராட்டம். எவ்வளவு மகத்தான செயல். இதற்குச் சிறந்த உதாரணம் கியோமே.

கியோமே ஒரு இடத்தில் சொல்கிறார்

மூன்று நாட்கள் பட்டினியாகப் பனிமலையில் நடந்து திரிந்த போது சிந்திப்பதை தவிர்க்க துவங்கினேன். மனவலிமை வேண்டும் என்றால் கடந்த காலத்தை நினைக்கக் கூடாது. மனது முழுவதும் நம்பிக்கையை நிரப்பிக் கொண்டு நடக்க வேண்டும்.

தளர்ந்து போய் நடக்க முடியாத நிலையில் தனது பலஹீனமான இதயத்திடம் கியோமே பேசுகிறார். எப்படியாவது நீ தொடர்ந்து செயல்படு. என்னைக் கைவிட்டுவிடாதே எனக் கெஞ்சுகிறார். இதயத்தின் குரலை கேட்டபடியே நடக்கிறார். தன்னை மீறிய சக்தி ஒன்றை தனக்குள்ளிருக்கிறது என்பதைக் கண்டுகொள்கிறார். அதுவே அவரைக் காப்பாற்றுகிறது.

ஒரு அத்தியாய முடிவில் நீர்பரப்பிலிருந்து விமானம் டேக் ஆப் ஆவதை செடியிலிருந்து மலரைப்பறிப்பதை போல நளினமான செயலாகக் குறிப்பிடுகிறார் எக்சுபெரி. இன்னொரு இடத்தில் புயற்சீற்றம் வரப்போவதை பற்றி அவருக்குத் தும்பிகள் முன்னறிவிப்புச் செய்கின்றன. தும்பிகளுக்கு நன்றி சொல்கிறார்.

பாலைவனத்தில் விமானம் வீழ்ந்த போது மரணத்தின் பிடியில் மாட்டிக் கொள்கிறார். அவரது. கண்முன்னே கானல்காட்சிகள் தோன்றி மறைகின்றன. உணர்ச்சிபீறிடும் அந்தப் பக்கங்களை வாசிக்கும் போது திரைப்படம் காண்பது போலக் காட்சிகள் கண்முன்னே கடந்து போகின்றன

வாழ்வின் அர்த்தம் பற்றி எக்சுபெரி கூறும் வரிகள் தத்துவார்த்தமானவை. அடிக்கோடிட்டு படிக்க வேண்டிய வரிகள் ஏராளமிருக்கின்றன.

புவியீர்ப்பு விசைக்கும் காதலைப்போலவே ஒரு இறையாண்மை இருப்பதாகத் தோன்றியது.

பாலைவனம் ஏன் வெறுமையாகவும் நிசப்தமாகவும் இருக்கிறதென்றால் தற்காலிக காதலர்களுக்கு அது தன்னை அளிப்பதில்லை.

பாலைவனம் என்பது உங்களை நோக்கி நிரந்தரமாக நடந்து வந்து கொண்டேயிருக்கும் ஒரு கடவுள்.

நிலவுடன் தொடர்பு கொண்டிருக்கும் ஏரி தனக்குள் ஒளிந்திருக்கும் பாராம்பரியத்தை வெளிப்படுத்துகிறது

இப்படி நூலில் கவித்துவமாக ஏராளமான வரிகள் கொட்டிக் கிடக்கின்றன.

காற்று, மணல் நட்சத்திரங்கள் நூலை வாசிப்பது ரெக்கை விரித்துப் பறப்பதற்குச் சமமான அனுபவம். அவசியம் வாசியுங்கள். வானிலிருந்து நீங்களும் உலகைக் காணுவீர்கள்

••

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: