பகற்திருடர்கள் சங்கம்

அந்த இடத்தைக் கண்டுபிடிப்பது சுலபமானதாகயில்லை. வைத்தியர் பலராமன் தெரு என்ற ஒன்றே அங்கேயில்லை. பிறகு எப்படி 424 என்ற கதவிலக்கத்தைக் கண்டுபிடிக்கமுடியும். எட்டரை மணியிலிருந்து நான் தேனாம்பேட்டைக்குள் சுற்றிக் கொண்டேயிருந்தேன்.

தேனாம்பேட்டைக்குள் இன்னும் ஒரு கிராமத்தின் மிச்சம் போல இருக்கிற தெருக்கள் இருக்கின்றன. வீதியில் எருமை மாடுகள் நடமாடுகின்றன. வேப்பமரங்களும், அம்மன் கோவில்களும் மோர்விற்பவர்களும் சுண்ணாம்புகல் விற்பவர்களும், தேள்கடிக்கு பச்சிலை மருந்துகட்டுபவர்களும் இன்றுமிருக்கிறார்கள் பழைய டிரிடில் பிரஸ், நாடி ஜோதிடம் பார்க்கிறவர்கள். தட்டுபிரியாணிகடை, ரப்பர் ஸ்டாம்பு செய்பவர்கள், பன்றி இறைச்சிகடைகள், சந்தனவில்லை தயாரிப்பவர்கள் எனத் தேனாம்பேட்டை விசித்திரமானதொரு உலகம்.

நெருக்கடியான சந்திற்குள் பள்ளிக்கூடங்கள் இயங்குகின்றன. சைக்கிளில் போய்வருகிறவர்கள் இன்றும் அதிகமிருக்கிறார்கள். நிறையத் தெருக்களின் பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. என்னிடம் இருந்த முகவரியில் வைத்தியர் பலராமன் தெரு என்று தானிருக்கிறது. யாரைக்கேட்டாலும் அந்த முகவரி தெரியவில்லை. வீதிக்குள்ளிருந்த பெட்டிக்கடை ஒன்றில் சிகரெட் வாங்கியபடியே விசாரித்தேன்

“வைத்தியர் பலராமன் தெருவா. அது பேரை மாத்தியாச்சி. இப்படிப் போயி லெப்ட்ல ரெண்டாவது சந்து“ என அடையாளம் காட்டினார்

நல்லவேளை கண்டுபிடித்துவிட்டேன் எனச் சந்தோஷத்துடன் சில்லறையை வாங்கியபடியே நடக்க ஆரம்பித்தேன். சைக்கிள் மட்டுமே போய்வரக்கூடிய சந்து. வழியிலிருந்த சுவர்களில் நிறையப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்றில் கூலிங்கிளாஸ் அணிந்த முகம் தெரிந்தது.

கதவிலக்கம் 424 மாடியிலிருந்தது. சிமெண்ட்படிகளில் ஏறி மேலே சென்றேன். படி முழுவதும் வேப்பிலைகள் உதிர்ந்து கிடந்தன. படிகள் முடிந்த இடத்தில் தெற்கு பார்த்த ஒரு அறை. பழைய மருந்து குடோன்களில் ஒன்றாக இருந்திருக்கக் கூடும் என்பது போன்ற வாசனை. அறை பூட்டப்பட்டிருந்தது அதன் வெளியே மரநாற்காலி ஒன்று மேஜையுடன் காணப்பட்டது. அதில் விசிட்டர்புக் ஒன்றிருந்தது.

சுவரை ஒட்டி வெளிறிப் போன ஒரு சோபா. இரண்டு மடக்கு நாற்காலிகள். பெயர்பலகையோ, அறிவிப்பு பலகையோ எதுவுமில்லை. மேஜையில் கிடந்த ரிஜிஸ்தர் நோட்டை எடுத்து புரட்டி அதில் கையெழுத்திட்டேன். கடந்த ஆறுமாதங்களில் பார்வையாளர்களாக யாரும் வந்திருக்கவில்லை. ஒருவேளை அலுவலக நேரம் இனிமேல் தான் துவங்க கூடும் எனச் சோபாவில் உட்கார்ந்திருந்தேன். சில நிமிசங்களில் ஒரு வயதானவர் கையில் சுருட்டிய தினசரி பேப்பருடன் வந்து நின்றார்.

அவர் என்னைப் பார்த்து மெலிதாகச் சிரித்தபடியே “பத்தரை மணிக்கு தான் ஆபிஸ் திறப்பாங்க. யாரைப் பாக்கணும்“ எனக்கேட்டார்

“தற்காலம் பத்திரிக்கையில் இருந்து வர்றேன்“ என அடையாள அட்டையை எடுத்து நீட்டினேன்.

அவர் அந்த அடையாள அட்டையை ஏறிட்டு கூடப் பார்க்கவில்லை. பூட்டியிருந்த கதவை திறந்து அவர் மட்டுமே உள்ளே சென்றார். உள்ளிருந்து பக்தி பாடல் ஒலிக்கத் துவங்கியது. சில நிமிஷங்களுக்குப் பிறகு அவர் வெளியே வந்து “உங்க பேரை இதுல எழுதுங்க“ என்றார்

“ஏற்கனவே எழுதிட்டேன்“ எனக்காட்டினேன்.

அவர் தனது மரநாற்காலியில் போய் உட்கார்ந்து கொண்டார்

நான் அவரிடம் தயங்கியபடியே கேட்டேன்

“இது பகற்திருடர்கள் சங்கம் தானே“

“ஆமாம்“ எனத் தலையாட்டினார்

“போர்டு எதுவும் இல்லையே“ எனக்கேட்டேன்

“போர்டு வச்சிகிடுறதுல்லே. மெம்பர்ஸ்க்கு எங்க இடம் தெரியும். வெளியாட்கள் யாரு வரப்போறா“ எனக்கேட்டார்

“உங்க சங்கத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க“ எனக்கேட்டேன்

“அவ்வளவா டீடெயில்ஸ் தெரியாது தம்பி. இதை ஆரம்பிச்சி 300 வருஷத்துக்கு மேல இருக்கும்னு சொல்றாங்க. உலகம் பூரா கிளைகள் இருக்கு. சிட்டியில மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகள் இருக்கு“.

“யாரு உங்க மெம்பர்ஸ்“

“பணம் கட்டி சேரவேண்டியதில்லை. நாங்களே அவங்க செய்யுற திருட்டை பார்த்து மெம்பரா ஆக்கிகிடுவோம். அதுல திறமைக்கு ஏற்ப பதவி கிடைக்கும். சிலர் வேகமா தலைவர் ஆகிடுவாங்க. “

“பகற்திருடர்கள்ன்னா யாரு“

“பகற்திருடனை வரையறை பண்ணமுடியாது தம்பி. ராத்திருடனுக்கு ஒரு உருவம் இருக்கு. ஆனா பகற்திருடனுக்கு உருவம் கிடையாது. யாரா வேணும்னாலும் இருக்கலாம். எந்த வேலையில் வேண்டுமானாலும் இருக்கலாம். அதிகாரிகள், அரசியல்வாதிகள். பிரபலங்கள்னு நிறையப் பேர் மெம்பரா இருக்காங்க. ஆளை பாத்து அடையாளம் கண்டுபிடிக்கமுடியாது. “

“எதுக்காக இப்படி ஒரு சங்கம் வச்சிருக்கீங்க“

“ எங்களுக்கும் பிரச்சனைகள் வருதுல்லே அதான் கவுன்சிலிங் பண்றதுக்கு. சட்டஉதவிகள் செய்றதுக்கு. சங்கம் தேவைப்படுது. எங்க மெம்பர்ஸ்ல நிறையப் பேர் பக்திமான்கள். அதனால் நிறையக் கோவில்களில் அன்னதானம் போடுறோம். அறக்கட்டளைகள் நடத்துறோம். நாங்க மட்டும் இல்லே உலகம் பூரா எங்க மெம்பர்ஸ் நிறையச் சேரிட்டீ பண்ணிகிட்டு இருக்காங்க. பகற்திருடர்கள் இல்லாத நாடு ஏது தம்பி. உலகம் இப்போ ஒண்ணாகிடுச்சில்லே“ என்றார்

“நீங்க என்ன வேலைப்பாக்குறீங்க“

“வாலன்டரி சர்வீஸ். பகற்திருடர்கள் கூட இருந்தா நமக்குத் தேவையானது எல்லாம் கிடைச்சிரும். நான் வேலையை விட்டு இங்க வந்து பத்தொன்பது வருஷமாகிருச்சி. சிட்டில மூணு வீடு வாங்கியிருக்கேன். ஊர்ல சொந்த வீடு கட்டியிருக்கேன். எல்லாம் இவங்க தயவு தான். ஆமா இந்த அட்ரஸ் எப்படிக் கிடைச்சது. “

“போட்டோகிராபர் ராமமூர்த்திக் குடுத்தார்“

“அவரா. நம்ம சங்கத்துக்கு வேண்டியவர் தான். பகற்திருடர்கள் எல்லோரும் போட்டோ பிடிச்சிகிடுறதுக்கு ரொம்ப ஆசைப்படுவாங்க. அவங்க வீட்ல போயி பாருங்க. கட்டாயம் ஆள் உயர போட்டோ இருக்கும், விதவிதமான போட்டோ பிடிச்சி வச்சிகிடுவாங்க“ எனச்சிரித்தார்

“உங்க ஆண்டுமலர் மாதிரி ஏதாவது இருக்கா“ எனக்கேட்டேன்

“இருங்க வர்றேன்“ என அவர் உள்ளே போய்ப் பெரிய டெலிபோன் டைரக்டரி போலிருந்த ஒன்றை கொண்டுவந்து கொடுத்தார். அகர வரிசை படி பெயர்கள் புகைப்படங்களுடன் இருந்தன

“இப்படி பேரு போட்டோ போடுறது பிரச்சனை வராதா“ எனக்கேட்டேன்

“ஒரு பிரச்சனையும் ஆகாது. ஜனங்களுக்கு யாரு பகற்திருடன்னு நல்லா தெரியும். ராத்திரி வர்ற திருட்டுபயலை நினைச்சி தான் அவங்க பயப்படுவாங்க. எங்களை டீல் பண்ணிபழகிட்டாங்க. இது இந்தியாவில எங்க மெம்பர்ஸ் பற்றின டைரக்டரி. இது ஒரு வால்யூம். இப்படி நிறைய வால்யும்ஸ் இருக்கு. ஒவ்வொரு நாடும் இப்படி ஒரு டைரக்டரி வச்சிருப்பாங்க. புதுசு புதுசா மெம்பர்ஸ் அதிகமாகிட்டே போறதாலே சமாளிக்க முடியலை அதான் இப்போ டைரக்டரிய இன்டர்நெட்டுல மாற்றிட்டாங்க. “

கையிலிருந்த டைரக்டரியை புரட்டினேன். நான் அறிந்த பல பிரபலங்கள். கேள்விபட்டவர்கள். முக்கிய நபர்கள் பலரும் அதிலிருந்தார்கள். பல்வேறு துறைகளில் பல்வேறு நிலைகளில் உள்ள அந்த உறுப்பினர்களைக் கண்டு திகைப்பாக இருந்தது.

அப்போது யாரோ படியேறி வரும் சப்தம் கேட்டது

பெரியவர் என்னிடம் சொன்னார்.

“எங்க செகரெட்டரி சோமசுந்தரம் வர்றாரு“

நான் கையிலிருந்த டைரக்டரியை கிழே வைத்துவிட்டு திரும்பினேன். எழுபது வயது மதிக்கத்தக்க ஒருவர் வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்திருந்தார். கறுப்பு கண்ணாடி. கையில் பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் ஸ்டிக். வலக்கையில் தங்க கடிகாரம். வெள்ளை நிற செருப்பு. அவர் யாரோ வெளியாள் இருப்பதை உணர்ந்தவரை போலக் கேட்டார்

“சம்பந்தம் யாரு வந்திருக்கா. மெம்பரா“

“இல்லைய்யா . ரிப்போட்டர்“ என்றார் சம்பந்தம்

“எந்த பத்திரிக்கை“ எனக்கேட்டபடியே அவர் தனது செருப்பை அவிழ்த்துவிட்டார்

“தற்காலம் சார்“ என்றேன்

“எங்க ஆபீஸ்“ எனக்கேட்டார் சோமசுந்தரம்

“குரோம்பேட்டே“ என்றேன்

“ஒனர் யாரு “

“அறிவரசன் “

“அவரு நம்ம மெம்பர் தான். உள்ளே வாங்க“ என்றார் சோமசுந்தரம்

அவரைப்பின்தொடர்ந்தபடியே உள்ளே போனேன். அறைக்கதவு மட்டும் தான் பழையதாக இருந்தது. உள்ளே நுழைந்தால் ஒரு கண்ணாடி தடுப்பு. அதன் உள்ளே காஷ்மீர் கம்பளம் விரிக்கபட்ட தரை சுவரில் மிகப்பெரிய டெலிவிஷன். தேக்குமரத்தில் செய்த பெரிய மேஜை. பெரிய குஷன் வைத்த சுழல்நாற்காலி. மேஜையில் ஒரு புத்தர்சிலை. அறையின் உள்ளே ஒரு பக்கம் 27 இன்ச் ஸ்கிரீன் உள்ள கம்ப்யூட்டர். ரோஸ்கலர் சேர். அதையொட்டி ஒரு காபிமெஷின். விருந்தினர்கள் அமர்வதற்கான விலையுர்ந்த டபுள்குஷன் சோபா. ஒரு பக்கம் சுவர் முழுவதும் பழைய, புதிய நிர்வாகிகளின் புகைப்படங்கள்.

சோமசுந்தரம் தனது சுழல்நாற்காலியில் போய் உட்கார்ந்து கொண்டபடி கேட்டார்

“எதுக்காக இந்த இன்டர்வியூ“

“பத்திரிக்கையில வார ஒரு ஸ்பெஷல் ஸ்டோரி போடுறோம் சார். அதான் இந்த வாரம் வித்தியாசமா இருக்கும்னு நம்ம சங்கம் பற்றிப் போடலாம்னு நினைச்சேன். “

“நான் அதைக்கேக்கலை. இன்டர்வியூ போட்டா உங்களுக்கு எவ்வளவு காசு கிடைக்கும்“ என்றார் சோமசுந்தரம்

“தனியா இதுக்குப் பணம் கிடைக்காது சார் ,மாசம் சம்பளம் ஒன்பதாயிரம் தர்றாங்க. “

“குறைவா சம்பளம் வாங்குறவன் தான் நீதி நியாயம்னு பேசிகிட்டு இருப்பான். உங்களுக்கே ரெண்டுலட்சம் சம்பளம் குடுத்தா இப்படி என்னைத் தேடி வந்து நின்னுகிட்டு இருப்பீங்களா“ எனக்கேட்டார் சோமசுந்தரம்

என்ன பதில் சொல்வது எனத்தெரியவில்லை. அமைதியாக இருந்தேன். அவர் சிரித்தபடியே சொன்னார்

“தம்பி திருட்டுங்கிறது ஒரு திறமை. அது எல்லோர்கிட்டயும் இருக்கு. சிலர் அதை முழுசா பயன்படுத்துறாங்க. சிலர் பயந்து பயந்து பயன்படுத்துறாங்க. யாரையும் ஏமாற்றினதேயில்லேனு ஒரு ஆளை சொல்ல சொல்லுங்க பார்ப்போம்“

“கரெக்ட் சார் “என்றேன்.

“என்னை எடுத்துக்கோங்க. கவர்மெண்ட் சர்வீஸ்ல தான் இருந்தேன். நான் செய்த திருட்டை பற்றி ஆயிரம் கம்ப்ளெயிண்ட் போயிருக்கு. ஆனா ஒரு நடவடிக்கை எடுக்கலையே. பீஸ்புல்லா ரிடயர்ட் ஆகி இப்போ சங்க செயலாளரா இருக்கேன். நிறையச் சொத்து இருக்கு. பிள்ளைகள் அமெரிக்காவுல இருக்காங்க. ஒரே பிரச்சனை பிளட் சுகர் ஜாஸ்தி ஆகி கண்ணு போயிருச்சி. அதுவும் ஒருவகைக்கு நல்லது. பகற்திருடர்களோட பழகுறதுக்கு எதுக்குக் கண்ணு, சொல்லுங்க“

“இந்த சங்கம் எத்தனை வருஷமா இயங்குது“

“எப்படியும் முந்நூறு வருஷமிருக்கும். இதையும் வெள்ளைக்காரன் தான் ஆரம்பிச்சி வச்சான். அதுக்கு முன்னாடியும் பல ஆயிரம் வருஷமா பகற்திருடர்கள் இருந்தாங்க. ஆனா அவங்களை ஒண்ணு சேர்க்கணும்னு வெள்ளைக்காரனுக்கு மட்டும் தான் தெரிஞ்சது. அவன் மகா புத்திசாலி, கௌரவ பட்டம் கொடுத்து பகற்திருடர்களை கனவான் ஆக்கினது அவன் தானே “

“உங்க சங்கம் எந்த மாதிரியா செயல்படுது“

“அதை வெளிப்டையா சொல்ல முடியாது தம்பி. ஒன்றிரண்டு விஷயங்களைச் சொல்றேன். பகற்திருடர்கள்கிட்ட நிறையப் பணம் இருந்தாலும் அவங்களுக்குப் பாராட்டுக் கிடைக்கிறது கஷ்டம். அதனாலே அவர்கள் பெயர்ல நாங்களே கதை கவிதை எழுதி புத்தகம் போட்டு விருது குடுக்குறோம். பகற்திருடர்களுக்குத் துதிபாடிகள் உருவாக்கி தர்றோம் சிலருக்கு டாக்டர் பட்டம் வாங்கிக் குடுக்குறோம். ஒரு சிலர் சிலை வைக்க ஆசைப்படுவாங்க. அவங்க சிலையை வச்சி அதை ஒரு விழாவா கொண்டாடுறோம். சில பகற்திருடர்கள் தாராள மனசு கொண்டவர்கள். அதனாலே அவர்கள் பெயராலே உதவி தொகைகள் தர்றோம். நலிந்த கலைஞர்களுக்கு விருது, பணஉதவி செய்றோம். எங்களோட நோக்கம் பகற்திருடன்கிறது ஒரு ஆள் இல்லை. அது ஒரு அடையாளம்னு இந்த உலகத்துக்குப் புரிய வைக்குறது தான்“

“நல்லநோக்கம் சார். நீங்க சொல்லுறது நூறு சதவீத உண்மை. கிரேக்கத்துல கூட இப்படி எல்லாம் நடந்துருக்குனு படிச்சிருக்கேன்“ என்றேன்

“பார்த்தீங்க உங்களை மாதிரி படிச்ச ஆட்களுக்குத் தான் எங்களை ரொம்பப் பிடிச்சி போகுது. கிரேக்கத்துல மட்டும் இல்லை. அமெரிக்கா. ஐரோப்பா, ஆஸ்திரேலியா எங்கே வேணும்னாலும் எடுத்துக்கோங்க பகற்திருடர்களுக்கு எப்பவும் மரியாதை இருக்கதான் செய்யுது. ஒன்றிரண்டு பேர் அப்படியிப்படி பேசுவாங்க. அது இருக்கத்தானே செய்யும்“ என்றார் சோமசுந்தரம்

“இந்த ஆபீஸ் வெளியே பார்க்க பழசா இருக்கு. உள்ளே செம மார்டனா இருக்கே. எதுக்குச் சார்“

“இது தான் பகற்திருடர்களோட சிறப்பு. வெளியே அவங்க பணக்காரங்க மாதிரி தெரியமாட்டாங்க. சாதாரணப் பைக். கார். வீடு தான் வச்சிருப்பாங்க. ஆனா உள்ளே போயிட்டா உலகமே மாறிடும். எங்க மெம்பர் ஒருத்தர் தங்கத்துல டைனிங் டேபிள் வச்சிருக்கார்ன்னா பாத்துக்கோங்க“

“பகற்திருடர்களோட முக்கியமான பிரச்சனை என்னனு சொல்லுங்க“

“பொறாமை. ஒரு பகற்திருடன் இன்னொரு பகற்திருடனை பாத்துப் பொறாமைபடுறான். அதனால பல பிரச்சனைகள் உருவாகுது. பகற்திருடர்கள் எல்லாச் சந்தோஷங்களையும் வேகவேகமா அனுபவிச்சிருறாங்க. அதனாலே உலகம் சலிப்பா போயிருது. சந்தோஷத்தை தேடி வெளிநாட்டிற்குப் போக வேண்டிய சூழல் ஏற்படுது. அதுல டயம் வேஸ்ட் ஆயிடுது. பகற்திருடர்கள்ல சிலர் எவ்வளவு பணம் இருந்தாலும் தன் உருவத்தை மாற்றிகிட முடியலையேனு கவலைப்படுறாங்க. சிலர் வயதாவதை நிறுத்தமுடியலைனு வருத்தப்படுறாங்க. இப்படி ஆயிரம் இருக்கு“

“பகற்திருடர்களோ குடும்ப வாழ்க்கையைப் பற்றி “

“பகற்திருடர்களோட குடும்பம் அவர்களைக் குற்றம் சொல்றதேயில்லை. நல்லா அனுபவிக்கிறாங்க. பகற்திருடர்கள் பலருக்கும் ரெண்டு பெண்டாட்டி இருக்கு. சிலருக்கு மூணு நாலு கூட இருக்கு. உறவினர் மத்தியில அவர் ஒரு லட்சிய புருஷனா மாறிடுறார். யாருக்காவது காலேஜ் சீட் வாங்கிக் குடுக்கணும்னா அவரைத் தான் தேடி வர்றாங்க. ஒரே பிரச்சனை யாராவது ஒருத்தருக்கு நோய் வந்துகிட்டே இருக்கு. அது தான் ஏன்னு புரியலை“

“பகற்திருடர்களோட சிறப்புனு எதைக்குறிப்பிடுவீங்க“

“சிரிப்பு. அவங்க எல்லோருடைய சிரிப்பும் ஒண்ணு போலத் தான் இருக்கும். அதை உங்களாலே மறக்கமுடியாது. அது வெறும் சிரிப்பில்லை. தன்னை யாரும் எதுவும் பண்ணமுடியாதுங்கிற கர்வம். “

“பகற்திருடர்களுக்குப் பிடிச்ச விஷயம் எது“

“வம்பு பேசுவது. வம்பு பேசுற இன்பம் இருக்கிறதே அதற்கு நிகரே கிடையாது. “

“அரசாங்கம் உங்களை அங்கீகரிக்கிறதா“

“என்ன இப்படிக் கேட்டுவீட்டீர்கள். அரசாங்கம் தான் எங்களை அதிகம் ஆதரிக்கிறது. தனியார் துறைகளில் பகற்திருட்டில் ஈடுபடுகிறவர்கள் தண்டிக்கபடுவார்கள். ஆனால் அரசாங்கத்தில் அப்படியில்லை. பதவிஉயர்வு வேகமாகக் கிடைத்துக் கொண்டேயிருக்கும்“

“கடைசியா ஒரு கேள்வி பகற்திருடர்கள் எதைப் பாத்து பயப்படுகிறார்கள்“

“தன்னை பார்த்து தான். தன்னைப் பார்த்து பயப்படாத திருடனே கிடையாது. ஆனா அதை அவன் காட்டிகிட மாட்டான். அவன் ஒரு நாள் தன்னைக் கையாள தெரியாத ஆளா மாறிப்போயிடுவான். அதோட அவன் சேப்டர் க்ளோஸ்“

அவர்கள் பேசிக் கொண்டிருந்த போது அந்த அறைக்குள் ஒரு வயதான பெண் வருவது தெரிந்தது. நூறு கிலோவிற்கும் அதிகமான எடை கொண்ட பெண். பருத்த தொடைகள் உரச நடந்துவந்து சோபாவில் உட்கார்ந்து கொண்டார். படியேறி வந்த பெருமூச்சு ஏறி இறங்கிக் கொண்டிருந்தது.

“இவங்க தான் எங்க பொருளார் கிளாரா சாம்சன்“ எனச் சொன்னார் பெரியவர். நான் திரும்பி அந்தப் பெண்ணைப் பார்த்து வணங்கினேன். அவர் பருத்த கைகளைத் தூக்கி வணக்கம் சொன்னார்

“இவங்க ரிடயர்ட் ஐஏஎஸ்“ எனச்சொன்னார் சோமசுந்தரம்

பகற்திருடர்கள் சங்கத்தில் ஆண் என்ன, பெண் என்ன என நினைத்தபடியே “நீங்க எதுக்கும்மா இந்தச் சங்கத்துல வேலை செய்யுறீங்க“ எனக் கிளாரா சாம்சனிடம் கேட்டேன்

அந்தப் பெண்மணி நுனி நாக்கு ஆங்கிலத்தில் எந்தப் பிரஸ் எனக்கேட்டார். நான் தற்காலம் எனச்சொன்னேன். அவர் தனக்குத் தமிழ் அவ்வளவாக வராது என்றபடியே ஆங்கிலத்தில் பதில் சொல்ல ஆரம்பித்தார்

“என்னோட நாலெட்ஜ் வேஸ்ட் ஆககூடாதுனு சர்வீஸ் பண்ணிகிட்டு இருக்கேன். நான் என் ஹஸ்பெண்ட் ரெண்டு பேரும் இதோட மெம்பர்ஸ். வோல்டு பூரா எங்க மெம்பர்ஸ் இருக்காங்க. மத்த சொசைட்டி மாதிரியில்லை. இதுல இருக்கிறவங்கல்ல நிறையப் பேரு ரொம்பப் படிச்சவங்க. பெரிய பொசிசன்ல் இருக்கிறவங்க. “

“இந்த சங்கத்துல பெண்கள் எப்படி நடத்தப்படுறாங்க. அதைப் பற்றிச் சொல்லுங்க“

“இந்த உலகத்துலயே பெண்களைச் சமமா நடத்துறது எங்க சங்கம் மட்டும் தான். பகற்திருடர்கள்லே ஆண் பெண் வித்தியாசமே கிடையாது. போத் ஆர் ஈகுவல். “

“இன்றைய இளைஞர்களுக்கு நீங்க ஏதாவது அறிவுரை சொல்ல ஆசைப்படுறீங்களா“

“டோண்ட் வேஸ்ட் யுவர் டைம். கஷ்டப்பட்டுப் படிச்சி வேலையில சேர்த்து படிப்படியா முன்னேறி ஒழுக்கமா வாழலாம்னு முட்டாள்தனமா நினைக்காதீங்க. எந்த வேலை கிடைச்சாலும் அதுல எப்படிக் காசு அடிக்கிறதுனு பாருங்க. எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணம் அடிங்க. உங்களைக் காப்பாற்ற போறது பணம் மட்டும் தான். நாளைக்கு நாம சுவாசிக்கிற காத்துக்குக் கூடக் காசு கொடுக்க வேண்டியது வரும். பி கேர்புல்“

“இவ்வளவு வேலை செய்துகிட்டு இருக்க நீங்க ஏன் இப்படி ஒரு சந்துக்குள்ளே ஆபீஸ் வச்சிருக்கீங்க“

“தட் இஸ் டிரெடிசன். எளிமை தான் எங்களோட பலம். எந்தப் பகல் திருடனும் தன்கிட்ட பணமிருக்கேனு தங்கத்துல சட்டை போட்டுகிடுறதில்லை. வி ஆர் சிம்பிள். “

யாரிடமிருந்தோ போன் வந்தது. சோமசுந்தரம் தனது ஐபோனை எடுத்து பேச ஆரம்பித்தார். கிளாரா சாம்சன் ஐமேக்கை ஆன் செய்து மெயிலில் எதையோ தேட ஆரம்பித்தாள்

“அடுத்தவாரம் இந்தக் கவர்ஸ்டோரி வரும் தேங்ஸ் சார். போட்டோ எடுத்துகிடலாமா“ எனக்கேட்டேன்

அவர் சிரித்தபடியே சொன்னார்

“சங்க ரூல் அதுக்கு இடம் கொடுக்காது. நாங்க ப்ரீ சர்வீஸ் பண்ணுறோம். எங்களுக்கு எதுக்குப் பப்ளிசிட்டி“

,ஒன் மினிட்என அவர் ஒரு முதலை வடிவ கீசெயின் ஒன்றை பரிசாகத் தந்தார்

“வி லவ் க்ரோகடைல்ஸ். அதைக் காப்பாற்ற நாங்க மூவ்மெண்ட்ஸ் நடத்திகிட்டு இருக்கோம். “

கீசெயினை வாங்கிக் கொண்டு வெளியே வந்தேன். திடீரென நான் ஒரு உதவாக்கரை, பிழைக்கத் தெரியாத முட்டாள். என இயலாமை விஸ்வரூபம் எடுத்து என்னை அழுத்தி குள்ளஉருவம் போலாக்கிவிட்டதாக உணர்ந்தேன். சந்தர்ப்பதை காசாக்கி கொள்ளத் தெரிந்தவர்கள் மட்டுமே வாழும் உலகில் எதற்காக இப்படிப் பத்திரிக்கை உண்மை என அலைகிறேன். திருடியோ, திருடர்களைச் சார்ந்தோ மட்டும் தான் வாழ முடியுமா. குழப்பமாக இருந்தது

அவசரமாக டீக்கடையைத் தேடிப்போய் ஒரு சிகரெட்டை பற்றவைத்தபடியே டீக்குடித்தேன்

எதிரே குப்பை தொட்டி அருகே ஒரு கிழவன் இருப்பது கண்ணில்பட்டது. அழுக்கேறிய உடையுடன் தகரகுவளை ஒன்றில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தான். கடந்து செல்லும் யாரோ ஒருவர் அவனுக்கு ஒரு ரூபாய் காசை பிச்சையாகப் போட்டுவிட்டுப் போனார்கள். கிழவன் அந்தக் காசை எடுத்துக் குப்பை தொட்டியை வீசி எறிந்தபடியே சொன்னான்

குப்பைமேட்டுல வாழுறவன் எல்லாம் பிச்சைக்காரனில்லை. உன் காசு எனக்கு எதுக்குடா மசிரு. அதைக் கொண்டு போய்க் குப்பைல போடு. எந்த மயிரானையும் நம்பி நான் வாழலை, புரியுதா

அவனது கோபம் என்னைக் கவர்ந்தது. பகற்திருடர்களைச் சங்கத்தைப் பற்றிய செய்தியைவிட இவனைப்பற்றியே ஒரு கவர் ஸ்டோரி போடலாம் என அவனைச் செல்போனில் புகைப்படம் எடுத்தேன்.

அவன் என்னை முறைத்தபடியே திட்டினான்

“அடுத்தவனை ஏச்சுப் பிழைக்காதடா கம்மனாட்டி“

அவன் சொன்னது உண்மை. அவனைப்பற்றிக் கவர்ஸ்டோரி போட்டால் எனக்குக் காசு கிடைக்கும். பாராட்டுகள் கிடைக்கும். ஆனால் அவனுக்கு ஒரு பயனும் ஏற்படாது. திடீரெனக் குற்றவுணர்ச்சி அதிகமாகிப்போனது. அந்தக் கிழவனின் தைரியம் ஏன் எனக்கு வரவில்லை, இப்படி ஒரு வார்த்தையை அந்தப் பகற்திருடர்கள் சங்க செகரெட்டரியிடம் ஏன் சொல்லமுடியாமல் போனது

அப்போது தெருநாய் ஒன்று சாலையில் செல்லும் ஆட்டோ பார்த்து குரைத்தபடியே ஒடியது,

அவன் ஒரு சிறுகல்லை எடுத்து நாய் மீது எறிந்தபடியே சொன்னான்

“எதை பாத்து குரைக்கணும்னு தெரியலையே நாயே. ஏன் இப்படி லோல்படுறே“

அவன் அதை எனக்காகவே சொன்னது போலவே பட்டது.

முதலை வடிவ கீசெயினைத் தூக்கி குப்பையில் எறிந்தேன்.

••

அந்திமழை இதழில் வெளியான சிறுகதை

09.07.2017

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: