இரவு விளக்குகள்

விடிகாலை நாலு மணிக்கு உறக்கம் கலைந்து எழுந்து கொண்டேன். அறையில் ஒரேயொரு இரவு விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. இரவு விளக்குகள் நம் உறக்கத்தை உற்று பார்த்தபடியே இருக்கின்றன. இந்த இரவில் உலகில் எத்தனை ஆயிரமாயிரம் இரவு விளக்குகள் விழித்து கொண்டிருக்கும். அவை என்ன காண்கின்றன. இரவு விளக்குகள் தன் ஒளியை தானே  முகத்திரையிட்டு ஒளித்து கொள்கின்றன. அவை நம் உறக்கத்தின் துணைவன் போலும். 

பொதுவில் இரவு விளக்குகள் அதிகம் நம் கவனத்தை கவராதவை. அதன் வெளிச்சத்தில் அறை நிற மாற்றம் கொண்டுவிடுகிறது. சிறுவயதில் பச்சை நிற இரவு விளக்கு வெளிச்சத்தில் கைரேகைகளை உற்று பார்த்து கொண்டிருப்பேன். அதுவும் பச்சை நிறமாக இருக்கும். விரல் நகங்கள் கூட பச்சையாக இருப்பது எத்தனை வசீகரமாகயிருக்கிறது. அருகில் உறங்கி கொண்டிருப்பவர்கள். போர்வை தலையணைகள், அறைச்சுவர் மின்விசிறி என அத்தனையும் பச்சை நிறத்தில் இருப்பது விசித்திரமாக இருக்கும். ஒற்றை கண்ணால் உலகை யாரோ பார்த்து கொண்டிருப்பது போலதானிருக்கிறது இரவு விளக்கின் வெளிச்சம்அந்த நாட்களில் இரவு விளக்கு பெயர் அறியாத ஒரு பழம் போலவே இருக்கும். அதை கடித்து தின்ன முடியாதா என்று கூட நினைத்திருக்கிறேன். 

வெட்டவெளியில் உறங்குவதற்கே பதின்வயதில் பழகியிருந்தேன். அதனால் திறந்த வானின் அடியில் படுத்து உறங்கும் போது நட்சத்திரங்கள் அலைந்து கொண்டிருப்பதை காணமுடியும். தேவதைகளின் கண்கள் தான் நட்சத்திரங்களாக நம்மை பார்த்து கொண்டிருக்கின்றன என்று ஒரு ரஷ்ய கதையை படித்திருக்கிறேன்.

ஆகவே வானை உற்று நோக்கும்போது இத்தனை தேவதைகள்நம்மை பார்த்து கொண்டிருக்கிறார்களா என்று தோன்றும். இரவு நீள நீள தூரத்தில் இருந்த ஆகாசம் நம் கைதொடும் அருகே வந்துவிட்டதோ எனும்படியாக தோன்றும். ஆகாசம் ஒரு பேரியக்கம். அது தொடர்ந்து விந்தைகைள நடத்திக் கொண்டேயிருக்கும். இன்று நமது படுக்கை அறைகளுக்குள் நட்சத்திரங்கள் வருவதில்லை. 

இரவு விளக்குகள் நமது காதிற்கு கேட்காத எதையோ முணுமுணுக்கின்றன. ஒருவேளை அது தனக்கு தானே எதையோ பேசிக் கொள்கிறது போலும். சிறுமியின் விரல்களை போலவே அதன் வெளிச்சமிருக்கிறது. எத்தனை மிருது. எத்தனை ஈர்ப்பு

மனம் ஏதேதோ அறைகளில் நான் கண்ட இரவு விளக்குகளை பற்றியே நினைத்து கொண்டிருந்தது.

இரவை கடந்து செல்வதற்கு உறக்கம் என்ற ஒரே படகு மட்டுமே இருக்கிறது. அது முடிவில்லாமல் யாவர் அறைகளிலும் மிதந்து சென்றபடியே இருக்கிறது.

இரவின் பேராற்றில் உறக்கம் என்னும் அந்த படகு சலனமில்லாமல் நீந்தி போகிறது. 

இரவு விளக்குகள் நாம் தின்ன முடியாத பழங்கள்.

வெளியூர் பயணத்தில் தங்கும் வேறு வேறு அறைகள் திகைப்பூட்டும் போது இரவு விளக்குகள் மட்டுமே நம்மை ஆசுவாசப்படுத்தி சாந்தம் கொள்ள வைக்கின்றன.

அணைக்க மறந்த இரவு விளக்குகள் பகலில் வெகு கூச்சத்துடன் ஒடுங்கி போய் நிற்கின்றன. அது ஒரு வகை புறக்கணிப்பு. கைவிடல்.

பசித்த வயிறுடன் உறக்கம் பீடிக்கபட்ட மனிதனின் வெறித்து பார்க்கும் கண்களை போல இருக்கின்றன இரவு விளக்குகள் என்று அன்னா அக்மதேவாவின்ஒரு வரி நினைவிற்கு வருகிறது.

நோய்மையுற்ற சிறுமியின் வெளிறிய உதடுகளை போலிருக்கிறது இரவு விளக்கின் வெளிச்சம் என்ற லோர்க்காவின் கவிதை வரியும் நினைவில் எழுகிறது

இரண்டும் முற்றான உண்மை என்பதை என் இரவு விளக்கில் உணர்கிறேன். 

கவிஞர்கள் உலகின் விந்தைகளை கண்டுபிடிக்கிறார்கள். அடையாளம் காட்டுகிறார்கள். உருமாற்றுகிறார்கள்.

உலகின் மூத்த கவிகளை நினைவு கொண்டபடியே படுக்கையில் இருந்து வெளியே வருகிறேன்.

இரவு மீதமிருக்கிறது. மனதில் என்றோ படித்த கவிதைகள் வழிந்து ஒட துவங்குகின்றன

***Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
March 2018
M T W T F S S
« Feb    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Subscribe

Enter your email address: