நாரத ராமாயணம்.


புதுமைபித்தனின் நாரத ராமாயணம் மொத்தம் 46 பக்கங்களே கொண்டது. இந்நூல் வெளியாகி அறுபம் வருசங்களுக்கும் மேலாகிறது. புதுமைபித்தனின் சிறுகதைகள், இலக்கிய கட்டுரைகள் கொண்டாப்பட்ட அளவில் நாரத ராமாயணம் பெரிதாக கொண்டாடப்படவில்லை. அப்படி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் என்று கூட பலரும் அறிந்திருக்கவில்லை. புதுமைபித்தனின் பகடி எழுத்தின் உன்னதம் இதுவே என்பேன்.இது வெறுமனே ராமாயணத்தை கேலி செய்யும் ஒரு புனைவுமட்டுமில்லை. மாறாக ராமாயணத்தை முன்வைத்து புதுமைபித்தன் கலாச்சார அரசியலை விமர்சனம் செய்கிறார். இந்திய கலாச்சாரத்தில் இதிகாசங்கள் உருவாக்கி வைத்துள்ள புனிதபிம்பங்களை உடைத்து எறிகிறார். அதே நேரம் நவீன புனைவின் வழியாக  எப்படி இதிகாச கதை உருமாற்றம் கொள்கிறது என்பதற்கும் நாரத ராமாயணம் சாட்சி போலிருக்கிறது.


ராமாயணப் பாவைக்கூத்து நிகழ்ச்சிகளை என் பால்யவயதில் பலமுறை பார்த்திருக்கிறேன். பத்து நாட்கள் ஊரிலே தங்கி பாவைகூத்து நிகழ்த்துவார்கள். பொம்மலாட்டத்தில் ஒருவகையிது. தோலில் சித்திரங்கள் வரைந்து அதை விளக்கு வெளிச்சத்தில் காட்டி நிழல் உருவங்களாக திரையில் தோன்றும். பாவைகூத்தின் பிரதான கதை ராமாயணமே.  ராமாயணக்கதையை புத்தகவடிவில் படித்தவர்கள் பத்து சதவீதம் கூட இருக்கமாட்டார்கள். பெரும்பாலும் வாய்மொழியாக சொல்லி கேட்டது. நிகழ்த்து கலைகளாக நடத்தும் போது பார்த்து அறிந்தது போன்றே இதிகாசம் எளிய மனிதனை சென்று சேர்ந்திருக்கிறது.


முந்நூறுக்கும் மேற்பட்ட ராமாயண வடிவங்கள் இருப்பதாக ஏ.ஜே.ராமானுஜம் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார். சமண ராமாயணம் கூடயிருக்கிறது. இந்தியாவிலே பல்வேறு வகைப்பட்ட ராமாயண வேறுபாடுகள் காணகிடைக்கின்றன. நாம் வாசித்து அறிந்த ராமாயணப்பிரதியிலிருந்து பாவைகூத்தின் ராமாயணம் முற்றிலும் மாறுப்பட்டது. இது எளிய மக்களுக்கான கதைவடிவமாக உருமாறியிருக்கிறது. இங்கே ராமனின் தெய்வாம்சம் மட்டும் பெரிதாக முன்வைக்கபடுவதில்லை. மாறாக ராமனும் சாதாரண மனிதனே என்பதையே முதன்மைபடுத்துகிறது. மனைவியை இழந்த ஆணின் துக்கமாகவே கதை நீள்கிறது.பாவைகூத்தில் ராமாயண கதாபாத்திரங்கள் தொடர்ந்து கேலி செய்யபடுகின்றன பொதுவாக நாட்டார்கலைவடிங்கள் யாவிலும் புனிதங்களை கேலி செய்கின்றன. அதன் ஒருபகுதியாகவே இதையும் பார்க்கிறேன்.


பாவை கூத்தில் சீதையும் ராமன் பஞ்சவடிக்கு செல்கிறான். அங்கே அவர்கள் பரண் அமைத்து வசிக்கிறார்கள். காட்டில் ராமன் தனியே அலைந்து திரிகிறான். அப்போது உச்சிகுடுமி ஊழை மூக்கன் என்ற இரண்டு நகைச்சுவை கதாபாத்திரங்களை சந்திக்கிறான். அவர்கள்  ராமன் வரும்வழியில் காலை நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்கள். ராமன் தனக்கு வழிவிட வேண்டும் என்று கேட்டும் அவர்கள் வழியை விடுவதில்லை. முடிந்தால் என் காலை தாண்டிபார் என்று சவால்விடுவார்கள். ராமன் எதற்கு வீண்சண்டை என்றதும் ஏ ராமா.. உன் உடம்பை பாரு ஒரே வெண்ணை, ஒரே கொழுப்பு. நீ பயந்து போய் ஊரை விட்டு வந்தவன் என்று கேலி செய்வார்கள்.


ராமன் அவர்களோடு சண்டை போடுவதில்லை. மாறாக சிரிப்பான். அவர்கள் வம்புசண்டைக்கு இழுக்க முற்சிப்பார்கள். அந்த காட்சியில் ராமன் மீதான அத்தனை புனிதங்களும் விமர்சிக்கபடும்.


அதே போலவே  சூர்ப்பனகையின் மூக்கை அறுத்த போது காட்டிற்குள் நுழைந்த இரண்டு போலீஸ்காரர்கள் சூர்ப்பனகையை விசாரணை செய்கிறார்கள். அவள் ராவணன் தங்கை என்றதும் பெரிய இடத்து விவகாரம் எப்ஐஆரை மாத்திபோடு என்பார்கள். உடனே லட்சுமணன் தான் ராமனின் தம்பி என்றதும் இது அதை விட பெரிய இடம். கேúஸ பதியாதே என்று போலீஸ்காரர்கள் தடுமாறுவார்கள். முடிவாக ஒரு போலீஸ்காரன் சூர்ப்பனகையிடம் கோர்ட் கேஸ்னு அலைஞ்சா பத்து வருசமாகிடும். நீ உன் அண்ணனிடம் போய் நியாயம் கேள் என்று அனுப்பிவிடுகிறான். இப்படி நாட்டார்கதை மரபான காவியகதை சொல்லும் முறையை குறுக்கீடு செய்து உடைப்பதுடன் புதிய கதை சொல்லும் முறை ஒன்றை அதற்கு மாற்றாக பொருத்துகின்றன.


சமகாலம் செவ்வியல் பிரதியின் உள்ளே எப்படி நுழைகிறது என்பதற்கு நாட்டார் கதைமரபில் நிறைய சாட்சிகள் உள்ளன. பக்தப்பிரகலாதன் நாடகத்தில்  லீலாவதிக்கு பிரவசம் பார்க்க வந்த தாதி தான் இப்போது தான் சதாம் உசேன் மனைவிக்கு பிரசவம் பார்த்து விட்டு வருவதாகவும் அங்கே அமெரிக்காகாரன் தொல்லை தாங்கமுடியலை என்று சொல்லி கேலி செய்கிறாள்.


புதுமைபித்தனின் நாரதராமாயணம் இது போன்ற சங்கேத குரல் ஒன்றையே முன்வைக்கிறது. தமிழக அரசியலில் ராமாயணம் வெறும் இலக்கியப்பிரதி என்பதை தாண்டிய முக்கியத்துவம் கொண்டது. திராவிட இயக்கம் ராமாயணபிரதிகளை தீயிட்டு கொளுத்தவேண்டும் என்று பிரச்சாரம் செய்தது. கடவுள் மறுப்பு கொள்கையில் தீவிரம் கொண்டோர் ராவணகாவியம் எழுதினார்கள். அண்ணாதுரை கம்பரசம் எழுதி கம்பனை கடுமையாக விமர்சித்தார். இன்னொரு பக்கம் டிகேசி கம்பன் பாடல்களை ரசித்து அதை தனி இலக்கியவகையாக உருவாக்கினார். ராமாயணம் நடந்தகதையா? எழுதப்பட்ட காவியமா? புனிதநூலா? இதிகாசமா? என்ற சர்ச்சைகள் இன்றும் இந்தியாவெங்கும் முடிவற்று தொடர்கின்றன. நீதிமன்றம் வரை சென்று முடிவற்ற வழக்குகள் நடக்கின்றன.


நவீன இலக்கியத்தின் வருகை இதிகாசங்களை புதிய கண்ணோட்டத்தில் புதிய வெளிச்சத்தில் பார்க்க செய்தது. மறுபிரதிகள் நிறைய உருவாக துவங்கின.  அதிலும் குறிப்பாக மகாபாரதம் மற்றும் ராமாயண கதாபாத்திரங்களை விமர்சனம் செய்வதும் அவர்களது செயலுக்கான புதிய நியாயங்கள், புதிய கண்ணோட்டங்களை உருவாக்குவதையும் மேற்கொண்டது.


அதிகம் கவனம் கொள்ளப்படாத லட்சுமணன் மனைவி ஊர்மிளை பற்றி வங்களாத்தில் நாவல் எழுதப்பட்டிருக்கிறது. பீமன் பார்வையில் மகாபாரத்தை பார்க்கும்படி எம.டி. வாசுதேவன் நாயர் நாவல் எழுதியிருக்கிறார். நான் உப பாண்டவம் என மகாபாரதத்தை புதிய கதையாடல் வழியாக உருமாற்றம் செய்திருக்கிறேன்


தமிழில் ராமாயணம் இலக்கியபிரதி தாண்டி நிகழ்த்துகலைகள் கதைபாடல்கள் என பல வடிவம் கொண்டிருக்கிறது. நவீன கவிதையில் கூட நகுலன் ஐந்து மூன்று என்று விபீஷணன் கும்பர்கணன் பற்றி நீள்கவிதை எழுதியிருக்கிறார். மலையாளம், தெலுங்கு ஹிந்தி என்று பலமொழிகளிலும் ராமாயணம் மீதான மறுவாசிப்பும் அதிலிருந்து உருவான புனைகதைகளும் நிறைய எழுதப்பட்டிருக்கின்றன. அயோனி என்று வோல்கா எழுதிய சீதையை பற்றிய நவீன கதை மிக முக்கியமானது.  ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தோனேஷியாவில் ராமாயணக்கதையின் முற்றிலும் மாறுப்பட்ட பிரதிகள் காணப்படுகின்றன. சமண மதம் சைன ராமாயணம் என்ற பிரதியை வைத்திருக்கிறது. இது போலவே ராமாயணக்கதையை அடிப்படையாக கொண்ட ஒவியமரபும் கதைபாடல் மரபும் ,இந்தியாவெங்கும் காணப்படுகின்றன. தமிழ்நாட்டில் கூட திருபுவனம் கோவிலில் ராமாயணக்கதை  வரிசை வரிசையாக சிற்பமாக உருவாக்கபட்டிருக்கிறது.


இதிகாசங்கள் யாவுமே நினைவு தொகுப்புகள் தான். அவை உருமாறிக் கொண்டேயிருக்கின்றன. ஒவ்வொரு காலமும் அதற்கான சில விசயங்களை இதிகாசத்தின் உள்ளே சொருகிவிடுகிறது. சிலவற்றை நீக்கியும் விடுகிறது. ஒவ்வொரு காலத்தின் இதிகாசத்தின் ஏதோவொரு பகுதி முக்கிய கவனம் பெறுகிறது. சில பகுதிகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. இதிகாசம்  சதா வளர்ந்து கொண்டேயிருக்கும் பேரியக்கம்.. அவை கதைகளின் வழியாக ஒரு நிலப்பரப்பின் நினைவுதொகுப்பை கொண்டிருக்கின்றன.புதுமைபித்தன் அகலிகையை பற்றிய புதிய கண்ணோட்டத்துடன் ஒரு சிறுகதையை எழுதியிருக்கிறார். அதிலே அவருக்கு காவியங்களின் புனித தன்மையை விமர்சிக்கும் ஒரு கலகக்குரல் இருப்பதை காணமுடிகிறது. கு.அழகிரிசாமி திரிவேணிசங்கமம் என்ற கதையில் ராமனை பற்றி எழுதும் போது அடையும் நெகிழ்ச்சியும் உவகையும் புதுமைபித்தனிடம் காணமுடிவதில்லை. புதுமைபித்தன் எதையும் கேலி செய்ய கூடியவர். அந்த கேலி வெற்று சிரிப்பல்ல. மாறாக அது விமர்சனம். உள்ளார்ந்த கோபம். மற்றும் அது சார்ந்த அரசியலை விமர்சிக்கும் குறியீடு.


நாரத ராமாயணம் அந்த வகையில் மிக முக்கியமான ஒரு பதிவு. இன்று பின்நவீனத்துவ கதை சொல்லல் கதையின் வடிவம் மற்றும் சொல்முறையை முக்கியமாக கொள்கிறது. அதிலும் பாலிம்சஸ்ட் எனப்படும் ஒன்றின் மேல் மற்றொன்றாக நினைவுகளை எழுதிக்காட்டும் முறைகளை சிறப்பாக கொண்டாடுகிறது. பிரதியின் மீதான பிரதி என்பதே பின்நவீனத்துவ கதை சொல்லில் முக்கியம். போர்ஹேயின் சிறுகதைகளை அதற்கு உதாரணமாக சொல்லலாம். அவர் டான்குவிகாத்தேயை புதிய கதையாக உருமாற்றி காட்டுகிறார்.  அது போலவே அல்முட்டாசிம், டிலான் உக்பார் போன்ற சிறுகதைகளும் பிரதியின் மீதான புனைவுபிரதிகளே.


ராமாயணம் போலவே ஒரு பிரதி சீனாவில் பழைய ஏடாக கண்டு எடுக்கபட்டது என்று கதையை சொல்லத் துவங்கும் புதுமைபித்தன். இந்த நூலில் நாரதர் முக்கிய கதாபாத்திரமாக இருப்பதால் அது நாரதராமாயணம் என்று அடையாளம் காட்டுகிறார். பாதி ஏடுகள் சிதைந்து போயிருப்பதால் அதை முழுமையாக அறிய முடியவில்லை என்பதோடு அதை தன்னால் முடிந்தமட்டும் சீனமொழியில் இருந்து தமிழில் மொழிபெயர்த்து தந்திருப்பதாக தெரிவிக்கிறார். இந்த மொழிபெயர்ப்பாளர் குறிப்பிலே தமிழர்கள் நூலின் காலத்தை கணிப்பதில் வல்லவர்கள் என்பதால் அவர்கள் தனது நாரதராமாயணத்தை எந்த காலத்தின் பிரதி என்று முடிவு செய்யட்டும் என்று பகடி செய்கிறார். அது தமிழ் அறிஞர்கள் மீதான சாட்டையடியாகும்


நாரத ராமாயணம் வாய்விட்டு சிரிக்க வைக்கும் ஒரு இலக்கியபிரதி. வரிக்கு வரி கேலி. கிண்டல். எழுதி தேர்ந்த கையால் உருவான அசல் படைப்பு. ராமனது காலம் துவங்கி காலனிய இந்தியா வரையான நினைவுகளையே இந்த நூல் பேசுகிறது. தனது கடந்தகாலம் அறியாத ஒரு சமூகம் எப்படி உருவாகிறது என்பதை சுட்டிகாட்டும் அதே வேளையில் காலம் எப்படி உருமாற்றுகிறது என்பதையும் அடையாளம் காட்டுகிறது. இன்று இப்பிரதியை வாசிக்கையில் பெர்ட்டோலூசியின் லாஸ்ட் எம்பரர் படம் நிறைய இடங்களில் நினைவிற்கு வருகிறது.


நாரத ராமாயணத்தில் வரும் ஸ்ரீராமன் அவதாரமில்லை. வயதான ஒரு மனிதன். அதுவும் சாகசங்கள் செய்து முடித்து இன்று அந்த பழைய பசுமையான நினைவுகளை மட்டுமே நினைத்து கொண்டு தனிமையில் வாழ்பவர். அவருக்கு பொழுது போகவில்லை மனைவி அவரை மதிப்பதில்லை. தம்பிகள் பிரிந்து அவரவர் வாழ்க்கையை பார்த்து போய்விட்டார்கள். மனைவி தன்னை எப்போதுமே இளக்காரமாக நினைக்கிறாள் என்று உள்ளுற வருத்தம் கொண்ட ராமன் எப்படியாவது இன்னொரு முறை தனது வில்திறனை காட்டி தோள் தினவு தீர்க்க ஏதாவது வீரசாகசம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்.


இதே ஆசை ஹனுமனிடமும் இருக்கிறது. அவனுக்கு கடந்தகால நினைவுகள் இப்போது துல்லியமாக இல்லை. யாரை யார் கொன்றார்கள் என்பதில் நிறைய தடுமாற்றங்கள் இருக்கின்றன. ஆகவே அவனும் இன்னொரு வீரசாகசத்திற்காக ஏங்குகிறான்.


ஆகவே அவர்கள் வயதான சீதையை அழைத்து கொண்டு காட்டிற்கு போக திட்டமிடுகிறார்கள்.  தெற்கே உள்ள அரக்கர்களை முற்றிலும் அழித்துவிட்டதால் வடக்கே மிச்சம் உள்ள அரக்கர்களை கொல்வது என்று முடிவு செய்து தன் மனைவியை அழைத்து கொண்டு ராமன் புறப்பட திட்டமிடுகிறான். சீதை வரமறுக்கிறாள்.அங்கே மனஸ்தாபம் என்ற வாய்க்கால் மெல்ல வளர்ந்து பெரிதாகிவிட்டது. எனபுதுமைபித்தனின் ஒரு வரி இடம்பெறுகிறது. காவியத்தை போலவே உயர்ந்த கவித்துவமிக்க வரியது. 


தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உடன்வரும்படிய சீதையை ராமன் உத்தரவு இடுகிறார். பயணம் ஏற்பாடாகிறது. லட்சுமணன் இந்த முறை துணைக்கு வரவில்லை. அனுமன் மட்டுமே உடன் கிளம்புகிறான். அவர்கள் ஒரு வனத்திற்குப் போகிறார்கள். அங்கே லட்சுமணன் இல்லாத காரணத்தால் பர்ணசாலை அமைக்க அனுமனுக்கு தெரியவில்லை.


சீதை கடுங்குளிரில் நடுங்குகிறாள். அவளை ஏதாவது அரக்கன் வந்து தூக்கிப் போகட்டும் என்று மறைந்திருந்து ராமன் கண்காணிக்கிறான். ஒரு அரக்கனும் வரவேயில்லை. சீதை ஆத்திரம் கொண்டு திட்டுகிறாள். ராமன் மனம் வெதும்பி தற்கொலை செய்து கொண்டுவிடலாமா என்று சரயூ ஆற்றில் குதிக்க அங்கே தண்ணீர் அதிகமில்லை. இப்படி பகடி மேல்பகடியாக விரியும்பிரதி தலைமுறைகளை தாண்டி நீளும்போது மெல்ல பகடி மறைந்து வரலாறு எப்படி உருவாகிறது. யார் அதிகாரத்தை கைப்பற்றுகிறார்கள். வீழ்ச்சி ஒரு குடும்பத்தை என்ன செய்கிறது என்று ஆழ்ந்த வேதனையூட்டும் பிரதியாகிறது. அதுவே புதுமைபித்தனின் உயர்ந்த எழுத்தின் சாட்சியம்.


ராமன் கதையை எப்போது விவரிக்கும் போதும் பட்டாபிசேகத்தோடு முடித்து கொள்வதே கதைமரபு. உத்திர ராமாயணம் போன்ற பிரதிகள் சீதையை ராமன் சந்தேகம் கொண்டு வனவாசம் அனுப்பியது. அங்கே ராமனின் பிள்ளைகளான லவன் குசன் பிறந்து வளர்ந்ததை பற்றியும். அவர்களுக்கும் ராமனுக்குமான உறவை பேசுகின்றன. ஆனால் அதை இந்திய சமூகம் உத்ர ராமாயணத்தை பெரிதாக கவனம் கொள்ளவேயில்லை


நாரதராமாயணம்  ராமனின் முதுமையில் துவங்கி சமகாலம் வரை நீள்கிறது. வம்சாவழியின் கதையை சொல்வதாக நீண்டு காலனிஆட்சி எப்படி துவக்கியது. அதன் காரணமாக நடைபெற்ற மாற்றங்கள். ஏற்பட்ட தனிமனித வீழ்ச்சிகள், அதன் துயரை பகடியாக விவரிக்கிறது. சிரிப்பின் உச்சம் அழுகை என்பார்கள். நாரத ராமயணத்தை வாசித்து முடிக்கையில் அடையும் சந்தோஷத்துடன் இழப்பின் வலியும் ஒன்று சேர்கிறது.


உடல் உபாதைகளின் முன்பு புனிதர்கள் கூட தோற்று போகிறார்கள். இது எல்லா காலத்திலும் கண்முன்னே நடைபெறுகிறது. அது தான் புதுமைபித்தன்  நாரத ராமாயணம் அடையாளங்காட்டும் புள்ளியுமாகும்.
***

Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: