மனசாட்சியின் பாலம்

 


வாழ்வின் சுவாரஸ்யங்களில் ஒன்று எதிர்பாராமை. யார் யாரை எப்போது சந்தித்து கொள்வார். ஒரு மனிதன் எப்போது வாழ்வில் முன்னேறுவான். எப்போது வீழ்ச்சியடைவான். சாவு எப்படி எப்போது நேரும் என்று எதிர்பாராமையின் கிளைகளிலிருந்தே பல நாவல்கள் பிறக்கின்றன


குறிப்பாக இறை நம்பிக்கைக்கு ஆழமான காரணம் எதிர்பாராமையை சந்திக்க வேண்டிய தைரியமும் நம்பிக்கையும் இல்லாததே . வாழ்வு முன்கூட்டி தீர்மானிக்கபட்ட ஒரு வரைபடம் அதிலிருந்து ஒரு துளி கூட மாற்றம் ஏற்பட்டுவிட முடியாது என்று நம்பும் ஒரு தத்துவமும் வாழ்வு எந்த அர்த்தமும் அற்றது. வாழ்வதன் வழியாக நாம் தான் அதற்கு தனித்துவத்தை வழங்குகிறோம் என்று இன்னொரு கருத்தும் எப்போதுமேயிருந்து வருகின்றது.


தத்துவ சார்புடைய நாவல்கள் என்று வகைப்படுத்தபடும் சித்தார்த்தா, நார்சிஸ் அண்ட் கோல்ட்மென். ஜோர்பா தி கிரேக் போன்ற நாவல்கள் மானுட அக விடுதலையை முன்வைத்து வாழ்வை ஆராய்கின்றன. அந்த வகையில் தான்டர்ன் ஒயில்டரின் The Bridge of San Luis Rey  நாவல் கடவுளுக்கும் மனிதனுக்குமான உறவையும் , வாழ்வின் புதிர்தன்மையையும் விவரிக்கிறது.  1927 ம் ஆண்டு வெளியான இந்த நாவல் இன்று வரை ஆழ்ந்த வாசிப்பிற்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகின்றது.


இந்த நூற்றாண்டின் சிறந்த 100 நாவல்களில் ஒன்றாக பலராலும் பட்டியலிடப்பட்ட ஒயில்டரின் நாவல் நிஜ சம்பவம் ஒன்றை அடிப்படையாக கொண்டது.


பெரு நாட்டில் உள்ள செயிண்ட் லுயிஸ் ரே பாலம் மிக புராதனமானது. லிமா என்ற நகரின் வெளியில் இரண்டு மலைகளுக்கு நடுவில் அமைக்கப்பட்ட இந்த தொங்கு பாலத்தை ஒவ்வொரு நாளும் பல நூறு பயணிகள் கடந்து வந்தனர். 1714 ஆண்டு ஒரு நாள் இந்த பாலம் அறுந்து விழுந்து பாலத்தை கடக்க முயன்ற ஐந்து பேர் பள்ளதாக்கினுள் விழுந்து இறந்து போயினர்.


இந்த நிஜசம்பவத்தை அடிப்படையாக கொண்டு இறந்து போன ஐந்து பேரின் வாழ்விற்குள்ளும் ஏதாவது பொதுதன்மை, மறைமுகமான தொடர்பு இருக்கிறதா ? எதற்காக அவர்கள் ஐந்து பேர் மட்டும் இறந்து போனார்கள். கடவுள் இந்த ஐவரையும் சாகடிப்பதன் வழியாக எதை தெரியப்படுத்த விரும்புகிறார் என்று அந்த சம்பவத்தின் சாட்சியாக இருந்த ஜெனோபர் என்ற மதபோதகர் ஆராய துவங்குகிறார்


விபத்து என்பது தற்செயலானதல்ல. அது கடவுளின் விருப்பம். எதற்காக இந்த விபத்து நடைபெற்றது. அதில் மரணம் அடைந்தவர்களின் பாவங்களுக்கு கிடைத்த தண்டனை தான் அந்த சம்பவமா என்று ஜெனோபர் ஆராய துவங்குகிறார்.  ஒருவருக்கொருவர் அறிமுகமற்ற, விபத்தில் இறந்து போன ஐந்து பேரின் சொந்த வாழ்வையும் அவர் தேடி திரிந்து சேகரிக்க துவங்குகிறார். அவர்கள் எது போன்றதொரு வாழ்வை மேற்கொண்டார்கள். சாவதற்கு முந்திய நாள் அவர்கள் எப்படியிருந்தார்கள் என்று துல்லியமாக விசாரணை மேற்கொள்கிறார்.


கடவுள் மனித வாழ்வோடு விளையாடுகிறார். மனித நம்பிக்கைகளை வலுவூட்டுவதற்காகவே இது போன்ற சம்பவங்களை ஏற்படுத்துகிறார் என்று நம்பும் ஜெனோபர் தனது விசாரணையை ஒரு புத்தகமாக எழுதி அதை ஆர்ஷ்பிஷப்பிடம் சமர்ப்பிக்கிறார். தலைமை குருவோ இது ஒரு அபத்தமான கற்பனை. கடவுள் மனிதர்களை சோதிப்பதோ, நம்பிக்கை ஏற்படுத்தும் படியாக கட்டாயப்படுத்துவதோ இல்லை. இது ஒரு தற்செயல் என்று அந்த விசாரணையை  தள்ளி எறிகிறார்.


ஜெனோபருக்கு இறந்து போன ஐந்து பேரின் வாழ்விற்கும் ஊடாக உள்ள ஒற்றுமைகள் மிக முக்கியமானதாக தெரிகிறது. இவர்களின் வழியாக கடவுள் உலகிற்கு ஒரு செய்தியை அனுப்பியிருக்கிறார். அந்த செய்தி மிக முக்கியமானது என்று நம்புகிறார். முடிவில் ஐவரும் நெருக்கடியான வாழ்க்கை இடர்பாடுகளிலிருந்து இந்த சாவின் வழியாக விடுவிக்கபட்டிருக்கிறார் என்ற உண்மையை புரிந்து கொள்கிறார்.


மரணம் அவர்களுக்கு கிடைத்த தண்டனை அல்ல விடுதலை என்ற உண்மையை அவர் தெரியப்படுத்தும் போது அது கேலிக்குள்ளாக படுகிறது


தான்டெர்ன் ஒயில்ட்ரின் இந்த நாவல் ஐந்து வெவ்வேறு கதாபாத்திரங்களையும் அவர்களது வாழ்வையும் விசாரணை செய்கிறது. அந்த ஐவரையும் இணைக்கும் புள்ளியாக உள்ளது சென் லுயிஸ் ரே பாலம். ஒரு வகையில் இந்த பாலம் என்பது ஒரு குறியீடு. மனசாட்சி தான் இந்த பாலமாக உருக்கொண்டிருக்கிறது. இன்றைய மனிதன் தனது மனசாட்சியின் மீது நம்பிக்கையற்றவனாக இருக்கிறான். தீமைகள் அவனை ஊசலாட வைக்கின்றன. வாழ்வின் உண்மையான அர்த்ததை அறிந்து கொள்ளாமல் மனிதர்கள் தங்கள் இச்சைகளின் பின்னால் அலைந்து திரிகிறார்கள் என்பதை உணர செய்வதற்காக ஒயில்டர் இந்த நாவலில் தீவிரமான தத்துவார்த்த விசாரணையை மேற்கொள்கிறார்.


இந்த நாவலை உலகின் மிக முக்கிய நாவலாக அடையாளப்படுத்துவது நாவலின் வடிவம் மற்றும் கதை சொல்லும் முறை. குறிப்பாக நாவலின் ஊடாக வரும் பாலமும் ஜெனோபர் என்ற மதகுருவின் விசாரணையின் வழியாக வெளிப்படும் கதாபாத்திரங்களும் அக நெருக்கடியை எதிர்கொள்வதற்கான தத்தளிப்பும் ஆன்மீக தேடுதல் அற்ற மனிதர்களின் நெருக்கடியான வாழ்வும் விரிவாக எழுதப்பட்டிருக்கின்றன.


விதிவசம் என்று ஒதுக்கி வைக்கபட்ட ஒன்றை விஞ்ஞானப்பூர்வமான விசாரணையின் வழியாக உள்ளோடிக்கொண்டிருக்கும் அர்தத்தையும் ஒழுங்கையும் விவரிக்க முயல்கிறார் ஒயில்டர்.


`Either we live by accident and die by accident, or we live by plan and die by plan.` என்பதே இந்த நாவலின் மையப்புள்ளி. மார்கெசா (Marquesa de Montemayor  )  பெபிடா, (  Pepita  )   எஸ்தபன்  மற்றும் அவனது சகோதரன்  மேனுவல் ( Esteban & Manuel      )  அங்கிள் பியோ (Uncle Pio  )  டான் ஜிமே  (Don Jaime ) மற்றும் மார்கெசாவின் மகள் கிளாரா, மேனுவல் காதலிக்கும்  காமிலா என்ற நடிகை என்று நாவல் முக்கிய கதாபத்திரங்களை சுற்றியே கதை புனையப்பட்டிருக்கிறது.


குறிப்பாக மார்கெசா எனப்படும் மார்க்கெஸ் டி மாண்டெமர் என்ற பெண்மணி தன் மகளின் மீது மிகுந்த அன்பு கொண்டவள். மகள் தாயின் மூச்சு திணற வைக்கும் அன்பை தாங்க முடியாமல் ஸ்பெயினுக்கு சென்று விடுகிறாள். பிரிந்து சென்ற மகளுக்காக மார்கெசா தொடர்ந்து கடிதங்கள் எழுதிக் கொண்டேயிருக்கிறாள். இந்த எல்லா கடிதங்களிலும் பிரிவு துயர் அவளை எப்படி வாட்டுகிறது. எந்த அளவு அவள் தன் பெண்ணை நேசிக்கிறாள் என்ற விவரணை உள்ளது.


இந்த கடிதங்களின் வழியாக அவள் தன்னை பற்றிய பெருமைகளையே வெளிப்படுத்துகிறாள். அதில் துளியளவு கூட உண்மையில்லை என்பதை அவள் உணர்வதேயில்லை. இவளுக்கு கடிதங்கள் எதற்கும் மகள் பதில் போடுவதேயில்லை. இந்நிலையில் மார்கெசாவின் தனிமையை போக்கி கொள்வதற்காக அவளுக்கு துணையாக வந்து சேர்கிறாள் பெபிடா என்ற வேலைக்கார சிறுமி. அநாதையான அந்த சிறுமி பாசத்திற்காக ஏங்குகிறாள்.


அவளது வருகை மார்கெசாவின் தான் எந்த அளவு சுயநலமிக்கவளாக இருந்திருக்கிறோம் என்பதை உணர செய்கிறது. குறிப்பாக பெபிடா எழுதும் ஒரு கடிதம் மார்கெசாவின் மனதை வெகுவாக மாற்றிவிடுகிறது. இந்த நிலையில் அவள் பெபிடாவை தன் மகளை போல வளர்த்து படிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்கிறாள். இதே நேரம் ஸ்பெயின் உள்ள தனது மகள் கர்ப்பம் அடைந்திருக்கிறாள் என்ற தகவல் அறிந்தவுடன் சுகமாக பிள்ளை பெற வேண்டும் என்பதற்காக ஒரு புனிதபயணம் மேற்கொள்கிறாள். அதற்காக அவள் பெபிடாவை துணைக்கு அழைத்து செல்கிறாள். அவர்கள் பயணத்தின் வழியில் பாலத்திலிருந்து விழுந்து உயிரை விடுகிறார்கள்


இன்னொரு பக்கம் இரட்டையர்களில் ஒருவனாக எஸ்தபானிற்கும் அவனது சகோதரனுக்குமான உறவு விளக்கபடுகிறது. மேனுவல் என்ற அவனது சகோதரன் ஒரு  காமிலா என்ற நடிகையை காதலிக்கிறான். அதை பிடிக்காத எஸ்தபான் சகோதரனுடன் சண்டையிடுகிறான்.


எஸ்தபானிற்கு தன் சகோதரனின் இயல்புகள் பிடிக்காமலே போகின்றன. மிகவும் சுயநலமிக்கவனாக மாறிப்போன எஸ்தபான் திடீரென தற்கொலை செய்து கொண்டுவிட்ட தனது சகோதரனின் நிலை கண்டு உடைந்து போகிறான். அதிலிருந்து மனமீட்சி கொள்வதற்காக  கடற்பயணம் மேற்கொள்கிறான். லிமா துறைமுகத்திற்கு கப்பல் வந்து சேர்ந்த போது அவன் பாலத்தை கடந்து செல்ல முயன்று அவனும் பாலம் முறிந்த காரணத்தால் விழுந்து சாகிறான்


காமிலா என்ற நடிகையோ  உயர்குடி பிரபுக்களோடு பழகுவதாலும் விருந்தில் கலந்து கொள்வதாலும் அகமகிழ்ச்சி ஏற்பட்டுவிடும் என்று நம்புகிறவளாக இருக்கிறாள். ஆனால் அது பொய் என்று அவளே உணர துவங்குகிறாள்.  அக நெருக்கடியோடு பொய்யாக சிரித்து பேசி மகிழ்வித்து பார்வையாளர்களை ஏமாற்றி கொண்டிருக்கிறோம் என்ற நம்பிக்கை கொண்டவளாக இருக்கிறாள். இவளை நடிகையாக்கி வழிகாட்டி வரும் அங்கிள் பியோ அவளது மனச்சோர்வை போக்கி அவளை கொஞ்சம் கொஞ்சமாக தயார் செய்கிறார்.


அங்கிள் பியோ தான் காமிலோவின் தகப்பன் என்பது போன்ற மறைமுக குறிப்பு நாவலில் வெளியாகிறது. ஆனால் அது நேரடியாக வெளிப்படுத்தபடுவதில்லை. மாறாக பியோ காட்டும் அன்பு தகப்பனின் நேசத்தை போலவே இருக்கிறது. பனிரெண்டு வயதில் காமிலோவை ஒரு நடிகையாக்கி காட்டுவது என்று முடிவு செய்த பியோ அதற்காக அவளை அழகியாக்கி கொஞ்சம் கொஞ்சமாக அவளை புகழின் உச்சிக்கு கொண்டு செல்கிறான்


வெவ்வேறு இடங்களில் பயணம் செய்து புகழ்பெற்ற காமிலோ லிமா நகருக்கு வந்து சேர்கிறாள். அங்கே டான் ஆண்டரஸின் காதலில் விழுகிறாள். இது பியோவிற்கு பிடிக்கவில்லை. ஒரு வேளை அவள் தன்னிடமிருந்து பிரிந்து போய்விடுவாளோ என்று கூட பயப்படுகிறார். ஆனால் அந்த உறவின் காரணமாக அவள் ஒரு மகனை பெத்து எடுக்கிறாள். ஆனால் காலமாற்றத்தில் அவள் அம்மை நோய் தாக்கி உடல்அழகை இழந்து விடுகிறாள். இனிமேல் தன்னால் நடிக்க முடியாது என்று ஒதுங்கி கொள்ளும் அவளுக்கு தன்னை காதலித்து அற்ப ஆயுளில் இறந்து போன மேனுவலின் நினைவுகள் அரித்து தின்கின்றன. அத்தோடு இனி தன் வாழ்விற்கு என்ன அர்த்தமிருக்கின்றது என்று புரியாமல் அவள் புலம்புகிறாள்.


அவளது மகன் டான் ஜிமே சிறுவயதிலே நோயுற்றவனாகயிருக்கிறான். வலிப்பு நோயின் காரணமாக ஆள் மெலிந்து ஒடுங்கி போனவனாகயிருக்கிறான். தனது தவறுகள் தான் அவனை நோயாக பற்றி கொண்டிருக்கின்றன என்று கமிலா நம்புகிறாள். அவரன வளர்த்து பெரியவனாக்குவது தனது வேலை என்று ஏற்றுக் கொள்ளும் அங்கிள் பியோ அவனை அழைத்து கொண்டு இந்த பாலத்தை கடந்து செல்கிறார். பாலம் முறிவு ஏற்பட்டு அவரும் சிறுவன் டான் ஜிமேவும் அதே இடத்தில் இறந்து போகிறார்


இந்த ஐந்து கதாபாத்திரங்களும் வாழும் காலத்தில் மிதமிஞ்சிய நெருக்கடி கொண்டிருந்தார்கள். அவர்கள் அன்பிற்காக ஏங்கி கொண்டிருந்தார்கள். இந்த விபத்து அவர்களை நெருக்கடியிலிருந்து விடுதலை செய்திருக்கிறது என்ற உண்மையை ஜெனோபர் முடிவில் அறிந்து கொள்கிறார்.


வாழ்விற்கும் சாவிற்குமான இடைவெளியாக பாலம் என்ற குறியீடு உள்ளது.அது போலவே நாவலின் பிரதான உருவகமாக வெளிப்படுவது நாடக அரங்கம். வாழ்க்கை ஒரு அரங்கம் போல எண்ணிக்கையற்ற தனித்தனி நிகழ்வுகளால் நிரம்பியது என்ற உண்மை நாவல் முழுவதும் வெளிப்படுத்தபடுகிறது


நாவல் முழுவதும் வாழ்க்கையின் எதிர்பாரத தருணங்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்த கேள்விகள் விரவிக்கிடக்கின்றன. மனித வாழ்வின் அகநெருக்கடிக்கான காரணங்களை தேடும் இந்த நாவல் சமகால நாவல்களில் மிக தனித்துமானதாக உள்ளது.


அமெரிக்காவின் விஸ்கான்சினில்  1897 ஆண்டு பிறந்த தான்டெர்ன் ஒயில்டர் சிறுவயதை ஹாங்காங்கிலும் சீனாவிலும் கழித்தார். இவரது அப்பா அரசு துôதுவராக பணியாற்றியதால் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் நிலை ஏற்பட்டது. வளர்ந்து கல்லுôரிபடிப்பை முடிந்த ஒயில்டர் சில காலம் ராணுவ சேவையை மேற்கொண்டார்.


ஆரம்ப நாட்களில் நாடகங்கள் எழுதுவதில் ஆர்வம் கொண்டிருந்த ஒயில்டர்1926   ஆண்டு The Cabala    என்ற நாவலை எழுதி வெளியிட்டார். அதன் பிறகு 1928 ஆண்டு  The Bridge of San Luis Rey    நாவல் ஒயில்டருக்கு மிக பெரிய பெயரை பெற்று தந்தது. புக்கர் பரிசு பெற்றதோடு மூன்று லட்சம் பிரதிகள் விற்பனையானது. அதன் பிறகு சினிமா நாடகம் ஒபரா என்று பல்வேறுவகையான வடிவங்களில் இந்த நாவல் மாற்றம் கண்டிருக்கிறது.


இந்த நாவல் ராபர்டி நீரோ நடித்து  வெளியாகி பரவலான வரவேற்பை பெற்றது. 1975 ஆண்டு அமெரிக்காவில் மரணமடைந்த ஒயில்டர் நவீன அமெரிக்க இலக்கியத்தின் முன்னோடியாக அறியப்படுகிறார்.


அமெரிக்காவின் செப்டம்பர் 11 நிகழ்வை ஒட்டி தான்டர்னின் இந்த நாவல் மறுபடியும் மிகுந்த கவனத்திற்கு உள்ளானது. விபத்தில் இறந்து போனவர்களுக்குள் என்ன ஒற்றுமையிருக்கிறது. அந்த விபத்தில் உயிர்பிழைத்தவர்கள் என்னென்ன காரணங்களால் உயிர் பிழைத்தார்கள் என்று ஒயில்டரின் நாவலை போலவே விசாரணைகள் நடைபெற்றன. செப்டம்பர் 11ன் நினைவாக 11 திரைப்படங்கள் உருவாக்கபட்ட அதில் ஒன்று ஒயில்டரின் நாவலை நினைவுவூட்டும் வடிவத்திலே படமாக்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


ஒரு மனிதன் தன் வாழ்நாளில் என்ன நன்மைகளை மேற்கொள்கிறான். எது போன்ற ஒரு வாழ்க்கையை நடத்துகிறான். அவனது நடவடிக்கைகள் யாரை பாதிக்கின்றன என்று ஜெனோபர் நாவலின் ஆரம்பத்தில் தனது விசாரணைக்கான அடிப்படை அம்சங்களாக கூறுகிறார். இது நாவலில் வரும் ஐந்து கதாபாத்திரங்களுக்கு மட்டுமல்லாது சமகாலத்தில் நடைபெறும் பல சம்பவங்களுக்கும் பொருத்தகூடியதாகவே உள்ளது


***

Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: