இடக்கை– நூல் விமர்சனம்

- கணேஷ் பாபு  சிங்கப்பூர்

வரலாற்றின் நீண்ட பயணத்தில், மனிதன் அதிகமும் நம்பிக்கைவைத்திருந்தது நீதியின் மீதுதான். சமூகமாக மனிதன் வாழத் துவங்கியதிலிருந்து அவன் தனது வாழ்வின் காப்பாக நீதியைத்தான் நம்பிவந்திருக்கிறான். அதே சமயம் அவன் அச்சம் கொண்டது, நீதியை கையாள்பவர்களிடமும், நீதியை தீர்மானிப்பவர்களிடமும்தான். இந்தப் புள்ளியில்தான் அதிகாரம் என்ற மாபெரும் சக்தியை மனிதன் எதிர்கொள்ள நேர்கிறது. தான் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் நீதியை செலுத்தக்கூடிய கரங்கள் அதிகாரம் என்ற பீடத்தில்தான் நிலைகொண்டுள்ளது என்று அறியநேர்கையில் மனித மனதில் ஒருவித அச்சமும் அவநம்பிக்கையும் ஊற்றெடுக்கிறது.

நீதி தேவதை அளிக்கும் நீதியைச் செயல்படுத்த உருவாக்கப்பட்ட அதிகாரம் என்ற கருவி, அநீதியை ஊக்குவிக்கும்போது மனிதனின் போத மனம் திகைக்கிறது. அதுவரை அவன் நம்பி வந்த தர்க்கமும், அறமும், பேரிலக்கியங்களும் தன் கண்ணெதிரில் செயலற்றுப் போய் மண்ணில் அமிழும் அந்த தருணத்தில் மனிதன் கைவிடப்பட்ட குழந்தையைப் போல கதியற்றவனாகிறான். நீதி செயல்படும் விதத்தை அவனது தர்க்கமனத்தால் அள்ள முடியவில்லை. எது எளிமையானது என்றும் நேரடியானது என்றும் அதுவரை நம்பி வந்தானோ அது அப்படியல்ல என்று அறிய நேர்கையில் அவன் மேலும் முன்னால் நகர்வதற்கு திசைகளற்று தவிக்கிறான். இன்னொரு மனிதனின் கருணையே தன் வாழ்வையும் விதியையும் தீர்மானிக்கப்போகிறது என்று அறியும்போது அவன் அதுவரை நீதியின்பால் வைத்திருந்த நம்பிக்கை சரியத் துவங்குகிறது.

எஸ். ராமகிருஷ்ணனின் “இடக்கை”, காட்டும் உலகத்தை ஒற்றைச் சொல்லில் அடைக்கமுடியாது. நீதி மறுக்கப்பட்டவர்களின் உலகினுள்ளே நம்மை அழைத்துச் சென்று நிறுத்தும் அவர், மறுபக்கம் நீதியைத் தன் கட்டுக்குள் வைத்திருந்தவர்களாக நினைத்திருந்த மன்னர்களின் கோர முடிவையும் காட்டிச் செல்கிறார். இந்த நாவல் காட்டும் மனிதர்களின் நிலை, அவர்களின் நிராதரவான வாழ்வின் வலிகள் வாசகனை அமைதியிழக்கச் செய்கின்றன. ஏன் ஒரு சிலருக்கு வாழ்க்கை இவ்விதம் அமைந்து போகிறது என்ற பதிலற்ற கேள்வியின் முன் வாசகனை நிறுத்திவிட்டுப் போய்விடுகிறார் எஸ். ராமகிருஷ்ணன். நீதி என்ற விழுமியத்தையும், அதைச் செயல்படுத்தும் மன்னர்களையும், அவர்களால் தங்கள் வாழ்வையே இழக்கும் சாமானியர்களையும் மாறி மாறி நாவல் ஆராய்ந்து கொண்டேயிருக்கிறது. வரலாற்றின் நீண்ட பாதையில், நீதி மறுக்கப்பட்டவர்கள் ஏன் சாமானிய மனிதர்களாகவே இருக்கிறார்கள், அதிகாரிகளும் பணமும் செல்வாக்கும் படைத்த மற்றவர்களும் ஏன் நீதிக்காக காத்திருக்க வேண்டியிருக்கவில்லை? சாமானியனின் குடும்பம் மட்டும் ஏன் அநீதியின் சுழலில் சிதறி மறைகிறது? அதிகாரம் ஏன் துரோகம் மற்றும் அவநம்பிக்கையைத் தன் நிழல்களாகக் கூடவே வைத்திருக்கிறது? நாட்டை ஆளும் பேரரசனின் எளிமையான இறுதி விருப்பம்கூட ஏன் நிறைவேறாமல் போகிறது? என்ற பல்வேறு கேள்விகளினூடே நாவல் பயணிக்கிறது.

நாவலை ஒரு தீபத்தோடு ஒப்பிட்டால் அதன் பல்வேறு திரிகளாக வெவ்வேறு மனிதர்களின் அவல வாழ்க்கை துக்கத்தில் ஒளிர்கின்றன.பேரரசர் ஔரங்கசீப்பின் மரணத்தைத் தொடர்ந்து வட இந்தியாவில் ஏற்பட்ட ஒரு கொந்தளிப்பான நிலைமையை நாவல் களமாகக் கொள்ளும் அதே சமயம் அந்தக் கொந்தளிப்பான காலகட்டத்தில் நீதியும் கருணையும் மறுக்கப்பட்ட சாமானியர்களின் துயரத்தினுள்ளும் ஆழ்ந்து செல்கிறது.

நாவலின் முதல் அத்தியாயம் பேரரசர் ஔரங்கசீப் தன்னுடைய மரணத் தருவாயில் தான் அதுவரை வாழ்ந்த வாழ்வை நினைவில் ஓட்டிப் பார்ப்பதோடு துவங்குகிறது. மரணப் படுக்கையிலிருந்து கடந்த காலத்தைப் பார்க்கையில் அவருக்கு தான் செய்த தவறுகள் யாவும் தெளிவாகப் புலப்படுகின்றன. ஆனால் மீண்டும் அக்காலத்துக்குள் சென்று அவற்றை சரி செய்ய முடியாது. நீதியைப் பற்றியும், அதிகாரத்தைப் பற்றியும், வாழ்வின் நித்தியமின்மையைப் பற்றியும் ஆழ்ந்து சிந்தித்தபடி தன்னுடைய கடைசி இரவைக் கழிக்கிறார் ஔரங்கசீப். நாவலின் இந்த முதல் அத்தியாயம் முழுக்க தத்துவமும், கவித்துவமும் கலந்த வாக்கியங்கள் வரிசை கட்டி நிற்கினறன. பேனாவால் அடிக்கோடிட்டபடியேதான் வாசிக்க முடியும் என்ற வகையிலான வாக்கியங்கள். நாவலின் செல்திசையை அழுத்தமாக அறிவித்துவிடுகிறது,உயர்கவித்துவம் நிரம்பிய இந்த ஆரம்ப அத்தியாயம்.

நாவலின் முக்கியமான கதாபாத்திரம் தூமகேது. எவ்வித முக்கியமுமற்ற சாதாரண மனிதர்கள்தான் நீதியின் புறக்கணிப்புக்குத் தொடர்ந்து ஆளாகிக் கொண்டேயிருக்கிறார்கள் என்பதை சரித்திரம் தொடர்ந்து நினைவூட்டியபடியே இருக்கிறது. இந்த நாவலிலும் தூமகேது என்ற சாதாரணன், ஆட்டு தோலை விற்றுப் பிழைப்பு நடத்தி வருபவன்,பொய்யான திருட்டுக் குற்றச்சாட்டினால் தன் குடும்பத்தைப் பிரிந்து காலா என்ற சிறைக் கொட்டடியில் அடைபடுகிறான். அவனைக் காவலர்கள் கைது செய்து அழைத்துச் செல்கையில் தெருவில் இருந்த ஒருவரும் அவனுக்காகப் பரிந்து பேசவில்லை. ஆனால், ஒரு தெருநாய் அந்தக் காவலர்களைப் பார்த்து குறைக்கிறது. அந்த தெரு நாயை அவன் நன்றியோடு பார்த்தான் என்ற வரி வருகிறது. மனிதனின் புறக்கணிப்பட்ட நிலையின் ஒரு யதார்த்தச் சித்திரம் இது.

சத்கரை ஆள்பவன் பிஷாட மன்னன். அவன் ஒரு கோமாளி. தான்தோன்றித்தனமாக தீர்ப்புகளை வழங்கக் கூடியவன். எதையும் ஆராயாமல், புத்தியைச் செலவிடாமல், அந்தந்த கணத்தில் அவனுக்குத் தோன்றக்கூடிய விசித்திரமானதும் முட்டாள்தனமானதுமான பல தீர்ப்புகளை வழங்கக்கூடியவன். மனிதர்களை,‘அதிகாரம்’ என்ற வாளின் கூர்மையால் மிரட்டிவைத்திருப்பவன். அவனுடன் இருப்பவர்களும் அவனது அதிகாரத்தின் நிழலில் நீடிக்க ஆசைப்பட்டு, அவனைப் பொய்யாகப் பாராட்டி அவனது முட்டாள்தனமான தீர்ப்புகளை ஊக்குவிக்கிறார்கள். ஒருநாளில் இரண்டே தீர்ப்பை மட்டுமே வழங்கக்கூடியவன். அதில் ஒன்று தூக்குத் தண்டனை. மற்றது விடுதலை. அதுதான் அவனது கணக்கு. குற்றம் சாட்டப்பட்டவர்கள், கைதானவர்கள் என அத்தனை பேரையும் “காலா” என்ற திறந்தவெளிச் சிறைச்சாலையில் அடைத்து வைத்திருந்தான் இந்த பிஷாட மன்னன். குற்ற வழக்குகள் விசாரிக்கப்படாமலேயே பல குற்றவாளிகள் அந்தத் திறந்தவெளிச் சிறைச்சாலையில் மரணமடைந்திருக்கின்றனர். பல நிரபராதிகள் விசாரணைக்கு அழைக்கப்படாமலேயே தங்கள் வாழ்நாளை அதில் கழித்திருக்கிறார்கள். “காலா” ஒரு கொடுமையான இடம். தூமகேது,அந்தக் காலாவிலேயே தன் வாழ்வின் பெரும்பகுதியைக் கழித்து, பின்னர் ஒரு எதிர்பாராத தருணத்தில் அதிலிருந்து தப்பிவந்து, தன் மனைவி குழந்தைகளைத் தேடி பல ஊர்களிலும் சுற்றித் திரிந்து கடைசி வரை தன் குடும்பத்தைக் கண்டுபிடிக்காமல் ஏமாற்றத்திலும் நிராசையிலுமாக அவன் வாழ்வு முடிகிறது.

ஔரங்கசீப்பின் நம்பிக்கைக்குரிய பணிப்பெண்ணான “அஜ்யா பேகம்” என்ற அரவாணியின் கதை துயர்மிக்கது. பேரரசனின் நம்பிக்கைகுரியவளாக இருந்த ஒரே காரணத்திற்காக அவரது வாரிசுகளின் கோபத்துக்கு ஆளாகி சித்திரவதைப்பட்டு இறந்து போகிறாள். ஔரங்கசீப் தன் கையாலேயே தைத்த குல்லா பல்வேறு நபர்களிடம் சிக்கி கடைசியில் தூமகேதுவிடம் வருகிறது. அந்த குல்லா பேரரசன் ஔரங்கசீப் தன் கையால் தைத்தது என்ற ரகசியம் தெரியாமல், சேர வேண்டியவரது கைகளில் சிக்காமல் அலைகிறது. ஔரங்கசீப்பின் நிராசையின் குறியீடாகவும், அநீதியிழைப்பவர்களின் அதிகாரமெல்லாம் கடைசியில் எப்படி முடிந்து போகும் என்பதன் குறியீடாகவும் அந்தக் குல்லாவைக் காண முடிகிறது.

எவ்வளவு வறிய குடும்பமாக இருந்தாலும் அந்த குடும்பத் தலைவன் இல்லாமல் போனால் அந்தக் குடும்பம் என்னவாகும் என்பதன் சித்திரம் தூமகேதுவை இழந்த அவனது குடும்பத்தின் தவிப்பின் மூலம் காட்டப்பட்டிருக்கிறது. தூமகேதுவின் மனைவி நளா, எப்போதும் வறுமையிலும் புறக்கணிப்பிலும் அல்லலுறும் பெண்களின் ஒரு பிரதிநிதியாக நாவலில் வருகிறாள். அவளுக்குப் போக்கிடம் என எதுவுமில்லை. தன் ஒரு பிள்ளையைச் சாகக் கொடுத்துவிட்டு மிச்சமிருக்கும் பிள்ளைகளோடு ஊரை விலக்கிப் போகிறாள் அவள். படுத்த படுக்கையாக இருக்கும் தூமகேதுவின் தந்தையை அவள் கூட்டிச்செல்லவில்லை. பார்வையின்மையாலும்,முதுமையின் தளர்ச்சியாலும், புறக்கணிப்பினாலும் அவர் அநாதையாக இறந்துபோகிறார். ஒரு குல்லாவிற்கு கிடைக்கும் ஆதரவு கூட இந்த மனிதருக்குக் கிடைக்கவில்லை. அநீதியின் உதடுகள் ஊதுகுழலால் ஊதி ஊதி தூமகேதுக் குடும்பத்தின் வறுமைத்தீயை வளர்த்திவிட்டு அக்குடும்பத்தையே அந்தத் தீயில் பொசுக்கிவிடுகிறது.

யமுனை நதியோரத்தில் வசிக்கும் சம்பு தனக்கு முறையற்ற வழியில் கிடைத்த பெருஞ்செல்வத்தினால் பெருவணிகனாகிறான். குற்ற உணர்ச்சியால் தவித்துக் கொண்டேயிருக்கும் அவன், தன்னுடைய கடற்பயணத்தில் புயலில் சிக்க கடலில் இறந்து போகிறான். இறப்பதற்கு சில நாட்கள் முன் அவனும் அவனது கப்பலில் இருந்தவர்களும் ஒரு அதிசயக் காட்சியைக் காண்கிறார்கள். வானில் உள்ள நட்சத்திரங்களெல்லாம் ஒவ்வொன்றாக கடலில் உதிரும் விசித்திரமான காட்சி அது. கடலும் சிறிது சிறிதாக மேலெழுகிறது. “வானும் கடலும் கூடுகின்றன” என்று அந்தக் காட்சியை வர்ணிக்கிறார் ஆசிரியர். அந்தக் கவித்துவமான, மாய வசீகர இரவுக் காட்சி, செல்மா லாகர்லாவின்“தேவமலர்” கதையின், கிறிஸ்துமஸுக்கு முதல் நாள் இரவில் ஒளிரும் காட்டின் காட்சியை நினைவுபடுத்தியது.

நீதியைப் பற்றிய விவாதம் ஒன்றினூடாக இந்நாவலில் ஒரு குட்டிக் கதை சொல்லப்படுகிறது. ஒரு புழு தனக்கான நீதி வேண்டி அரச சபையிடம் போராடி கடைசியில் கடவுளையே அழைத்து வந்து தனக்கான நீதியைப் பெறுகிறது. இந்தக் கதை எஸ். ராமகிருஷ்ணன் “எனது இந்தியா” நூலில் எழுதிய ஒரு கட்டுரையை நினைவு படுத்தியது. பிரெஞ்சு அரசாங்கத்திடம் தன் தந்தை நைநியா பிள்ளைக்கு நீதி வேண்டி, குருவப்பா என்பவர் பாரீஸ் வரை சென்று, மதம் மாறி, மன்னரின் சபையில் பெரும்போராட்டத்திற்குப் பின்னர் தனக்கான நீதியைப் பெறும் சம்பவம்தான் அது. வெறும் ஒரு கதை எனப் புறக்கணித்துவிட முடியாதது அந்தக் குட்டிப் புழுவின் கதை. அந்தப் புழு, அதிகாரமற்ற மனிதனின் குறியீடு. அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சாதாரண மனிதர்கள் யாவரும் புழுவைப் போன்றவர்களாய்த்தான் தெரிகிறார்கள்.

ஒரு நல்ல நாவலின் பலம் அதன் சமநிலை. நீதி மறுக்கப்பட்டு அலைக்கழியும் சாமானியர்களின் கதையைச் சொல்லும் அதே சமயம், அவர்களை அந்நிலைக்கு ஆளாக்கிய அராஜக மன்னர்களுக்கு நேரும் கோர முடிவையும் நாவல் காட்டுகிறது ஔரங்கசீப்புக்கு கோர முடிவு எதுவும் நேரவில்லை என்றாலும் தன்னுடைய கடைசி காலத்தில் தன்னிடம் அன்பு கொண்டவர்கள் எவருமின்றி, அன்புக்காக ஏங்கியும் அதேசமயம் தன் பிள்ளைகளால் தனக்கு சாவு நேர்ந்துவிடக்கூடாது என்ற பதைபதைப்புடனே சாகிறார். அவரது கடைசி ஆசை கூட நிறைவேறவில்லை. நாவலில், யமுனை நதிப் படகோட்டி ஒருவன் தனக்கிருக்கும் சந்தோசமும் நிம்மதியும் கூட பேரரசன் ஔரங்கசீப்புக்கு இருக்காது என்கிறான். அதுவே நிஜமாகவும் இருக்கிறது.

தன் மக்களைத் துன்பத்தில் ஆழ்த்திய பிஷாட மன்னனின் (இவன் முகலாய அரசன் துக்ளக்கை நினைவுபடுத்தும் ஒரு கதாபாத்திரமாகவும் இருக்கிறான்) முடிவும் மிகவும் கோரமானதாக இருக்கிறது. நாவலில் தூமகேதுவின் மனைவி நளா ஒரு நாயிடம் சொல்கிறாள், “கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரது தண்டனையிலிருந்து எவரும் தப்பிக்கமுடியாது”. ஔரங்கசீப், பிஷாட மன்னன் போன்றவர்களின் முடிவைப் பார்க்கும்போது நளா சொல்வது உண்மைதான் என்பதை உணரமுடிகிறது. அதே சமயம் இந்த மன்னர்களால் பாதிக்கப்பட்ட சாமானிய மனிதர்களுக்கு கடவுள் சொல்லப்போகும் பதிலென்ன என்னும் கேள்வியையும் நாவல் எழுப்புகிறது.

நாவல் காட்டும் பல படிமங்கள் வாசகனை நாவலின் ஆழத்துக்குள் சட்டென்று இழுத்துச் செல்வதை உணரலாம். மண்ணால் ஆன பெண், ஆட்டுத் தோல், ஔரங்கசீப் தன் கையால் தைத்த குல்லா, காலா நகர் என படிமங்கள் இந்த நாவல் முழுக்க அலையடிக்கின்றன.

எஸ்.ராமகிருஷ்ணனின் துல்லியமான சித்தரிப்பு நாவலின் பெரும் பலம். அரண்மனை அந்தப்புரம் எப்படியிருக்கும், அங்கு யார் யாரெல்லாம் இருப்பார்கள், அந்தப்புரத்தின் அன்றாட நிகழ்வுகள் என்னென்ன போன்ற விபரங்களையெல்லாம் துல்லியமாக நாவலின் எட்டாம் அத்தியாயத்தில் தருகிறார். “அந்தப்புரம்” என்பது உண்மையில் தனியான ஒரு உலகம். அந்த உலகத்தின் வரைபடத்தையே வார்த்தைகளில் விவரித்திருக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன். இந்த விபரங்களையெல்லாம் சேகரிக்க அவர் எத்தனை பயணங்களை மேற்கொண்டிருப்பார், எத்தனை நூல்களை வாசித்திருப்பார் என்று நினைக்கையில் அவரது உழைப்பின் பிரம்மாண்டத்தை அறிய முடிகிறது.

அதுபோலவே, ஔரங்கசீப்பின் அந்தரங்க அறை பற்றிய குறிப்புகள், மன்னர் போருக்குப் புறப்படும்போது செய்யும் தயாரிப்புகள், படை நகர்வு எப்படியிருக்கும், யார் யாரெல்லாம் மன்னருடன் போருக்குப் புறப்படுவார்கள் போன்ற விரிவான குறிப்புகளும் நாவலில் இடம்பெறுகின்றன. தமிழ் நாவல்களில் மன்னர்களின் அந்தப்புரம் மற்றும் மன்னர்களின் படைநகர்வைப் பற்றிய உண்மையானதும்,விரிவானதுமான குறிப்புகள் இடம்பெறுவது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன்.

“இடக்கை” என்ற தலைப்பே வசீகரமானதாக இருக்கிறது. இடக்கை என்ற அந்தப் படிமம் நாவல் முழுக்க தன்னை வலுவாக நிறுவிக்கொண்டே வருகிறது. மனிதனின் வலக்கைக்கு இருக்கும் முக்கியத்துவம் இடக்கைக்கு இல்லை. ஆனால், சத்தமேயில்லாமல் மனிதனை அன்றாடம் சுத்தப்படுத்திக் கொண்டிருப்பது அவனது இடக்கைதான். ஆட்சியாளர்களுக்கு சாமானியன், என்றும் இடக்கைதான். அவனது குரல் ஆட்சியாளர்களுக்கு ஒருபொழுதும் கேட்பதேயில்லை. அவனுக்கு வேண்டிய நீதியும் அவனுக்குக் கிடைப்பதில்லை. நீதியை வேண்டி, நீதியின் தரிசனத்துக்காக காலத்தின் படிக்கட்டுகளில் இன்றளவும் எத்தனையோ பேர் காத்திருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் பெருமூச்சின் சப்தத்தை இந்த நாவல் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது என்பதுதான் இந்த நாவலை நவீன தமிழ் நாவல்களில் முக்கியமானதாக ஆக்குகிறது.

**

Archives
Calendar
March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: