அழைக்கும் நிழல்


இரண்டு மாதங்களின் முன்பு காரில் பெங்களுருக்கு சென்று கொண்டிருந்தேன். வேலூரை தாண்டியதும் வழக்கமான பிரதான சாலையில் செல்லாமல் சிறுநகரங்களின் வழியில் போகலாம் என்று தோன்றியது. பிரதான சாலையை விட்டு விலகிய பாதையில் செல்ல துவங்கினேன்.புதிய நான்குவழி சாலைகள் எல்லா ஊர்களையும் விலக்கி தனியே சென்று கொண்டிருக்கிறது. எந்த ஊரை கடந்துசெல்கிறோம் என்று கூட தெரிவதில்லை. அன்று நான் சென்ற பாதை சீராக இல்லை. ஆனால் சிறியதும் பெரியதுமான ஊர்கள். வீடுகள், ,  பரபரப்பான மனித இயக்கங்கள். புழுதி படிந்த வீதிகள் , சாலையோர புளியமரங்கள். சைக்களில் பனைநொங்கு விற்பவனிடம் பதநீர் வாங்கி குடித்தபடி  உயிர்துடிப்பான சூழலோடு  பயணம் செய்வது பிடித்திருந்தது.


பயணத்தின் போது காற்றை நெருக்கமாக உணர்வது போல வேறு எங்குமே உணரமுடிவதில்லை. காற்று நம் முகத்தை கொஞ்சுகிறது. கலைத்து விளையாடுகிறது. கிள்ளிவிடுகிறது. நிறைய நேரம் கண்களை பொத்திவிட முயற்சிப்பது போல கண்ணாமூச்சிகாட்டுகிறது. சட்டென கோபமானது போல முகத்தில் அறைந்து ஆவேசமாகிறது.


அதிலும் கார் வேகமாகும் போது காற்று கூடவே வேகமாகி ஒலமிடுகிறது. பாதி திறந்த காரின் கதவுவழியாக காற்று குபுகுபுவென நிறைகிறது. காற்றில் படபடக்கும் காகிதம் போலவே உணர்ந்தேன். சாலையெங்கும் காற்றின் வெளி. மாநகர நெருக்கடியில் காற்று அடிக்கிறது என்ற உணர்வே பெரும்பாலும் இருக்காது. இங்கோ காற்று அதன் உச்சவேகத்தில் நடனமாடிக் கொண்டிருக்கிறது.


வெயில் ஏறிய நாள். சாலைகளில் வெயில் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது. காற்று வெயிலை அள்ளிக் கொண்டு வந்து முகத்தில் பூசுகிறது. தாகமாகிறது. கைகள் தானே தண்ணீரை தேடி குடிக்கின்றன. காற்று தானும் சேர்ந்து தண்ணீரை குடிக்க பிடுங்குவது போல முயற்சிக்கிறது. உதட்டிலிருந்து வழியும் தண்ணீர் சிதறி உடலெங்கும் ஒடும்போது தானாக சிரிப்பு பீறிடுகிறது.  உடைகளுக்குள் காற்று புகுந்து கொண்டு எறும்பு ஊர்வதை போல உணர செய்கிறது.


அதிக வாகன இயக்கமில்லாத சாலை என்பதால் பயணதனிமையை முழுமையாக உணர முடிந்தது. தூரத்து வீடுகள், தூரத்து மின்சார கம்பங்கள், தூரத்து மேகங்கள் யாவும் எப்போதுமே அழகாக இருக்கின்றன. தொலைவில் நிழல்போல தெரியும் ஆண்பெண்கள் கூட பேரழகாகவே தெரிகிறார்கள்.


சாலையின் மேற்கு பகுதியில் ஒரு மலை தெரிகிறது. அது உயர்ந்து தனித்திருக்கிறது. பாறைகள் உருண்டுவிழுந்துவிடுவதுபோன்றே உறைந்து நிற்கின்றன. அசைவில்லாத தென்னை மரம் ஒன்று சாலையை விட்டு தனித்து நிற்கிறது. சாலை ஒடுகிறது. கானல் வழிய முன்பின்னாக ஒடுகிறது. பழைய சாலைகள் கைவிடப்பட்டு புதிய சாலைகளை வெறித்து பார்த்தபடி இருக்கின்றன. புளிய மரத்தடியில் சாத்தி வைக்கப்பட்ட சைக்கிள் ஒன்று தானும் இயற்கையாக முளைத்திருப்பது போன்றே இருந்தது. முதன்முறையாக சைக்கிளை காண்பது போல ஆச்சரியத்துடன் அதை பார்த்து கொண்டிருந்தேன்.


மழையில்லாத காலம். ஆகவே எங்கும் நீர்தடமேயில்லை. காற்றில் ஈரமேயில்லை. வெக்கையை வாறி அடிக்கிறது காற்று. மலை காற்றில் அசைவதில்லை. மாறாக அது காற்றை அனுமதிக்கிறது. பாறைகள் காற்றால் நெகிழ்வு கொள்கின்றன. பகல்நேரத்து ஆகாசம் பறவைகள் இன்றி விருதாவாக இருக்கிறது.கார் மேற்காக சென்று திரும்புடத்தில் வயல்வெளியின் பின்னால்  ஒரு ஆலமரத்தை பார்த்தேன். விழுதுகள் அடர்ந்து நிழல் விரிய அது சாலையைக் கடந்து போகின்றன ஒவ்வொருவரையும் கை தட்டி அழைப்பது போலவே இருந்தது. விருட்சத்தின் ஒசை ஒருவரது காதிலும் விழவில்லை போலும். யாரும் அதை காண்பதற்காக நின்று போகவேயில்லை. ஆனால் எனக்கு அதை அருகில் போய் காணவேண்டும் போலிருந்தது.இறங்கி நடந்து சென்றேன். காய்ந்து ஒடுங்கிய தும்பை செடிகள் கொண்ட வயற்பரப்பு. தரைகிணறு ஒன்று உலர்ந்து போயிருந்தது. நடந்து மரத்தின் அருகாமையில் போய் நின்றேன். யாரோ நீண்ட நாள் பழகிய மனிதரை காண்பது போன்ற நெருக்கம். இனம்புரியாத அன்பு. மரத்தின் நிழல் தட்டாம்பூச்சி போல அசைந்து மெல்லிய படபடப்புடன் அசைந்து கொண்டிருந்ததுமிக பழமையான மரமது என்பது விழுதுகளை கண்ட போது தெரிந்தது. எவ்வளவு பெரிய நிழல். எத்தனை அழகு. என்ன ஒரு சாந்தம். எவ்வளவு பேரமைதி.  நிழலின் உள்ளே போய் நின்றவுடன் மரம் தன் குளிர்ச்சியால் நெற்றியை உடலை தடவிவிட்டது. மரத்தின் நிழலை தவிர வேறு எதுவும் ஏன் இப்படி வசீகரம் தருவதேயில்லை.எவ்வளவு ஆயிரம் முறை கண்டிருந்தாலும் சேர்ந்து முயங்கி அனுபவித்திருந்தாலும் மரங்களின் நிழல் தரும் நெருக்கமும் குளிர்ச்சியும் போல வேறு எதையும் நான்  உணர்ந்தேயில்லை. மரத்தை தரையில் வீழ்த்துகிறது நிழல் என்று முன்பு ஒரு முறை தோன்றியது. அது நிஜம் தானில்லையா.எல்லா நிழலுக்கு மறுபக்கம் ஒன்றிருக்கிறது. அது தான் இந்த வசீகரத்திற்கான காரணம் என்று மனது தானே எதையோ கற்பனை செய்து கொள்கிறது. யாரும் கற்றுக் கொடுக்காமலே நிழலை ரசிக்க நாம் பழகியிருக்கிறோம் என்பது தான் உண்மை.மர நிழல் உண்மையில் ஒரு விளையாட்டு. அது மாறிக் கொண்டேயிருக்கிறது.  தண்ணீரின் மீது எறிந்த சில்லோடுகள் பொய்தவளையாகி போவது போல விளையாட்டு காட்டுமே அது போலவே வெளிச்சம் நிழலின் மீது ரகசியமாக பாய்ந்து தத்தி தத்தி போகிறது. சில நேரம் நிழல் வெயில் துளையிட அனுமதிக்கிறது. சில நேரம் துளிவெயில் கூட தரை இறங்கிவிடாமல் தடுத்துவிடுகின்றன.தன்னுடைய நிழல் தான் அவை என்று இலைகள் ஒரு போதும் பெருமைபேசிக் கொள்வதில்லை. மர நிழலில் ஒரு சாம்பல் நிற வண்டு கிறங்கி போய் கிடக்கிறது. அதன் மீது விரல்படும் போது கூட அசைவில்லை. இப்படி மனிதனால் நிழலில் கிறங்கி கிடக்க முடியாது.


முன்பு எப்போதோ தூத்துக்குடி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பார்த்திருக்கிறேன். பகல் பத்தரை மணியிருக்கும் கம்மாய்கரையோரம் வேம்பு அடர்ந்திருந்தது. அந்த வேம்பின் நிழலில் பாயை விரித்து ஆங்காங்கே ஆட்கள் படுத்துக்கிடந்தார்கள். குளிர்ச்சியான நீர்சுனையின் மீது படுத்துகிடப்பதை போல அந்த முகங்களில் ஒடுங்கிய சிரிப்பு அப்பியிருந்தது. பகலெங்கும் ஆட்கள் மரத்தடியிலே படுத்தே கிடந்தார்கள். அது அவர்களை தாதியை போல சேர்த்து அணைத்து ஆற்றுபடுத்துகிறது என்று தோன்றியது.ஆலமரத்தை சுற்றி வந்தேன். காலி மதுப்புட்டிகளும், அழுக்கு காகிதங்களும், உலர்ந்த இலைகளும் கிழிந்து எறிந்த சீட்டுகட்டின் இஸ்பேட் ஒன்றும், காலி சிகரெட் பெட்டிகளும் இறைந்து கிடந்தன. இதற்கு தான் பயன்படுகிறது போலும்.
மரத்தடியில் ஒரு நாள் பகல் முழுவதையும் கழிப்பது என்பது இன்று எவருக்கும் விருப்பமானதில்லை. என் பால்யத்தில் வேம்படியில் எத்தனையோ நாட்களின் பகலை கடந்திருக்கிறேன். கையில் ஒரு புத்தகத்துடன் கட்டிலை போட்டு படுத்துக் கொண்டு இலையசைவதோடு பக்கங்கள் புரண்டு கொண்டிருக்கும்.. அது தனி சந்தோஷம்.எல்லா கிராமங்களிலும் ஆலமரங்கள் இருப்பதில்லை. ஆலமரம் இல்லாத ஊர்க்காரர்கள் அதை எங்கே கண்டாலும் வியப்போடு நெருங்கி வந்து பார்ப்பார்கள். தங்கள் ஊருக்கு இந்த மரத்தை கொண்டு போய்விட முடியாதா என்று ஆதங்கம் கொள்வார்கள். விழுதை ஒடித்து கொண்டு போவார்கள். ஆனால் ஒரு மரத்தை வளர்த்து எடுப்பது எளிதானதில்லை.உண்மையில் மரங்களை பற்றி நமக்கு எதுவும் தெரியாது. அதன் பெயர் தெரியும். பெரியதாக அல்லது சிறியதாக இருக்கிறது என்று தெரியும். அது பழம் தருமா? இல்லை. அதை வெட்டி பயன்படுத்தலாமா என்ற யோசனைகள் நமக்குள் எப்போதும் உண்டு. ஆனால் மரத்தடியில் நிற்கும் மனிதன் அது விதையாக இருந்த போது எப்படியிருந்தது. எந்த கைகள் இந்த விதையை ஊன்றின. எந்த மனிதன் இதற்கு தண்ணீர்ஊற்றினான். காற்றை மழையை வெயிலை இது எப்படி எதிர்கொண்டது. யாரெல்லாம் இதன் அடியில் தங்கி போனார்கள். எவரது ரகசியங்கள் இந்த மரத்தோடு புதைந்து போயிருக்கிறது என்று எதுவும் தெரியாது. அதை பற்றி நாம் யோசிப்பது கூட இல்லை.


ஒவ்வொரு ஊரிலும் பறவைகள் வந்து உட்காராத மரங்கள் சில இருக்கின்றன. அதில் ஏன் பறவைகள் ஒரு போதும் அமர்வதேயில்லை என்று யோசித்திருக்கிறேன். பறவைகளை எப்படி வரவழைப்பது. மரத்தோடு பறவைகளுக்கு என்ன கோபம்.ஆலமரத்தின் இலைகள் காற்றில் மெல்லிய சலசலப்பு கொண்டவை. அவை யாரோ கேசத்தை கோதிவிடுவது போன்ற கூச்சத்தை தருகின்றன. எல்லா மரங்களிலும் என்னை வியப்பூட்டுவது. அதன் கிளைகளே. எப்படி இந்த வளைவு நெளிவுகள். பின்னல்கள். ஒரு கிளை போல இன்னொரு கிளை இருப்பதேயில்லை. கிளைகளின் நளினமும் நேர்த்தியும் தான் மரத்தை அழகாக்குகின்றன.மரத்தில் ஏறி விளையாடுவதை இன்றுள்ள சிறார்கள் அறிந்திருக்கவில்லை. என் பள்ளிநாட்களில் மரமேறுவது தான் ஒரே விளையாட்டு. ஊரில் ஏறாத மரங்களே இல்லை. மரம் உராய்ந்து ஏற்பட்ட சிராய்ப்புகள் நினைவில் அப்படியே இருக்கின்றனபால்யத்தில் மிக உயரமாக உள்ள கொடுக்காய்புளி மரத்தின் மீது  ஏறி நின்று கொண்டு பார்க்கையில் தொலைதூர ரயில் நிலையமும் சாலையும் அதில் செல்லும் லாரிகளும் தென்படும். அந்த லாரி டிரைவர்களுக்கு இங்கிருந்தே கைகாட்டி வாழ்த்து சொல்வேன். மரங்களின் மீது ஏறியதும் ஊர் சிறியதாகிவிடுகிறது. வீடுகள். வீதிகள், சைக்கிள்கள் என யாவும் விளையாட்டு பொம்மைகள் போலாகிவிடும் விந்தை மிகுந்த சந்தோஷம் தரக்கூடியது.ஆலமரத்தின் நிழலடியில் நின்று கொண்டிருந்தேன். நிழல் ஒரு பெருங்குளம் போலவும் அதன் உள்ளே தனியே நான் நீந்திக் கொண்டிருப்பது போன்றும் உணர்ந்தேன். எங்கோ, பெயர் அறியாத இந்த ஊரில் உள்ள ஆலமரத்திற்கும் எனக்கும் என்ன உறவு. அது ஏன் என்னை அழைத்து இளைப்பாறுதல் தருகிறது. ஒருவேளை இதை காண்பதற்காக தான் இந்த பயணமா? வெயில் வடியும் வரை அங்கேயே இருந்தேன்.சொட்டு சொட்டாக நிழல் மனதில் விழுந்து நிரம்ப துவங்கியது. நீண்ட நேரத்தின் பிறகு அங்கிருந்து விடைபெறும் என்னோடு ஆலமரத்தின் நிழல் கூடவே வருவது போலிருந்தது. பெங்களுர் சென்று தங்கிய இரவில் கூட படுக்கையின் மீது ஆலமரத்தின் நிழல் விரிந்திருப்பதாகவே நினைத்தேன். அன்று என் கனவில் ஆலமரத்தின் நிழல்கள் விழுதுகளாகி தொங்க அதை பிடித்து மிகுந்த சந்தோஷத்துடன் ஊசலாடிக் கொண்டிருந்தேன்.பயணத்தில் எப்போதும் அருகாமையை விட தொலைவே வியப்பளிக்கிறது. தொலைவு தரும் மயக்கம் ஒரு போதும் தீராததுதானில்லையா?
**

Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Subscribe

Enter your email address: