மௌனப்பனி.

2007ம் ஆண்டிற்கான தேசிய விருது பட்டியலில் சிறந்த முதல்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவாளர் விருது உள்ளிட்ட விருதுகளையும் ஒசியான் விருது உள்ளிட்ட 18 முக்கிய விருதுகளை பெற்றுள்ள ஊழ்ர்க்ஷ்ங்ய்  சமீபத்தில் நான் பார்த்த படங்களில் மிக முக்கியமானதாகும்.சிவாஜி சந்திரபூஷன் இயக்கத்தில் உருவான இப்படம் இமயமலையின் பனிசூழ்ந்த தனிமையில் வாழும் ஒரு குடும்பத்தின் கதையை விவரிக்கிறது. படத்தை முழுமையாக கறுப்பு வெள்ளையில் உருவாக்கியிருக்கிறார்கள் என்பதே இதன் தனிச்சிறப்பு
தற்செயலாக இந்த படத்தின் சிறிய முன்னோட்டம் ஒன்றினை இணையத்தில் கண்டேன். உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவலை அது உருவாக்கியது.


ஹிந்தி திரைப்படங்களில் வில்லான புகழ்பெற்ற டேனி டிஜோங்பா இதில் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். மிக குறைவான கதாபாத்திரங்கள். தனிமனிதனின் வாழ்வை ராணுவ நெருக்கடிகள் எப்படி பாதிக்கின்றது என்பதே கதைசரடு. இமயமலை தான் படத்தின் பிரதான கதாபாத்திரம். கண்கொள்ள முடியாதபடி இயற்கை ததும்பி வழிகிறது.


கர்மா  இமயமலையின் பனிகொட்டும் எல்லைப்பகுதியில் உள்ள சிறிய கிராமத்தில்  வசித்து வருகிறார். பனி பொழிவின் காரணமாக பாதைகள் அடிக்கடி மூடப்பட்டுவிடுவதால் அங்கே மனித நடமாட்டமே கிடையாது. அவர்கள் வீடு மட்டுமே தனித்திருக்கிறது. அந்த வீடும் கூட இரவில் பனிமூடி கொள்கிறது. ஒவ்வொரு நாளும் அவர்கள் இயற்கையோடு போராடியபடியே வாழ்கிறார்கள்.


கர்மா இமயமலையில் விளையும் பழங்களில் இருந்து ஜாம் தயாரித்து விற்பதை தொழிலாக கொண்டிருக்கிறான். அவனது மகள் லஸ்யா. மகன் கோமா. மனைவியை இழந்த கர்மா தனித்து வாழ்கிறான். அவனிடம் ஜாம் தயாரிக்கும் அரவை இயந்திரம் ஒன்று உள்ளது. அது பனியால் இறுக்கமடைந்துவிடுகிறது. தினமும் அதை இயக்க போராடுகிறான் கர்மா. முன்பு போல அவனது விற்பனை அதிகமாக இல்லை. இயற்கையான உணவில் மக்கள் அக்கறையற்று போய்விட்டதாக அவன் உணர்கிறான். அவனுக்கு கடன் கொடுத்துள்ள சர்மா கடனை கேட்டு நெருக்கிக் கொண்டிருக்கிறான்.


அதை எப்படியாவது அடைத்துவிட வேண்டும் என்று கர்மா தொடர்ந்து முயற்சிக்கிறான் அவனது ஒரே  மகள் லஸ்யா துடிப்பானவள்.  இயற்கையை மிகவும் ரசிக்க கூடியவள்.  பனிப்பாதைகளில் அவள் பனிக்குருவி போல  விரும்பியபடி சுற்றியலைகிறாள். படத்தின் துவக்கமாக வரும் அந்த காட்சிகள் நிலக்காட்சி ஒவியம் போலவே படமாக்கபட்டிருக்கின்றன.


ஒரு நாள் அவர்களது வீட்டின் அருகேயுள்ள பூர்வீக நிலத்தில் எல்லை பாதுகாப்பிற்காக ராணுவம் கூடாரமடிக்க துவங்குகிறது. இதனால் கடனுக்கு தங்கள் நிலத்தை விற்க முடியாத நிலை உருவாகிறது. இன்னொரு பக்கம் ராணுவத்தால் தங்கள் இயல்புஉலகம் சிதைந்துவிடுமோ என்று அப்பாவும் மகளும் அச்சமடைகிறார்கள். தன் மகளுக்கு திருமணம் செய்துவைத்துவிட்டால் நிம்மதியாகிவிடலாம் என்று முயற்சிக்கிறான் கர்மா. மகளோ பதினெட்டு வயதான போதும் விளையாட்டு பெண்ணாகவே இருக்கிறாள்.


ராணுவ காரணங்களை காட்டி கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் தினசரி நடவடிக்கைகள் தடுக்கபடுகின்றன. தங்கள் அனுமதியில்லாமல் அவர்கள் வெளியே செல்ல கூடாது என்று ராணுவத்தால் தடுக்கபடுகிறார்கள். கர்மாவின் வீடு பாதுகாப்பு காரணங்களுக்கு இடையூறாக இருக்கிறது என்று ராணுவம் கட்டாயப்படுத்துகிறது. கர்மாவிற்கும் அவளது மகளிற்கும் தங்களது தனிமையை அகவாழ்க்கையை சிதைத்து அங்கிருந்து அப்புறபடுத்த முயற்சிக்கும்  ராணுவத்திற்குமான நெருக்கடியும் தத்தளிப்புமே படமாக விரிகிறது.


படம் முழுவதும் லடாக் பகுதியில் படமாக்கபட்டிருக்கிறது. இமயமலையின் பதினைந்தாயிரம் அடி உயரத்தில் கொட்டும் பனியில்  செட் அமைத்து அங்கேயே தங்கி படமாக்கியிருக்கிறார்கள். இதை படமாக்கிய விதத்தை விவரிக்கும் போது அதுவே தனிப்படம்போலிருக்கிறது. கேமிரா மற்றும் ஒலிப்பதிவு கருவிகள் பனியில் உறைந்து போய்விடுகின்றன. பனிபொழிவு தாங்கமுடியாமல் ஆட்கள் நடுங்குகிறார்கள். நோய்மையுறுகிறார்கள். கடுமையான மனஅழுத்தமும் சோர்வும் ஏற்படுகிறது. அத்தனையும் தாண்டி படக்குழுவினர் தொடர்ந்து வேலை செய்கிறார்கள்.


படம் லடாக் மொழியிலும் வெளியாகி உள்ளது. தங்கள் மொழியில் தங்கள் ஊரில் படம்பிடிக்கபட்டதை காண மக்கள் திரண்டுவருகிறார்கள். லடாக் மொழியில் கதாபாத்திரங்கள் பேசி நடித்துள்ளதற்கு நன்றி தெரிவிக்கிறார்கள்.


படம் பார்த்து முடியும் போது நம் மனதெங்கும் பனியும் குளிரும் நிரம்பிவிடுகிறது. கதைப்படம் என்பது மறந்து ஆவணப்படம் போலவே இருக்கிறது. மைனஸ் 25 டிகிரி குளிரது. அதில் கேமிரா கூடவே ஒடுகிறது. பனியோடு சேர்ந்து சரிகிறது. உருகுகியோடுகிறது. காற்றில் மிதக்கும் இலை போல லயத்துடன் சேர்ந்து செல்கிறது. குளிர்காற்று நம் காதை தொடுகிறது. உடலை துவள செய்கிறது. சங்கர்ராமனின் ஒளிப்பதிவு மிக அற்புதமானது.


மலையேறுவதிலும் புகைப்பட கலையிலும் ஆர்வம் கொண்ட சந்திரபூஷன் ஒரு விளம்பர பட இயக்குனர். பலமுறை இமயமலையில் மலையேற்றம் செய்த அவர் இப்படியொரு கதையை உருவாக்கி படமாக்க இரண்டு ஆண்டுகாலம் தயாரிப்பாளரை தேடி அலைந்து  தோற்று போய் முடிவில் தானே தயாரிப்பிலும் இறங்கியிருக்கிறார். டேனியின் 150 படமிது. அவரது மிக சிறந்த நடிப்பும் இதுவே.
**  

Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
December 2017
M T W T F S S
« Nov    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: