கோமாளியும் கதை சொல்லியும்

பள்ளிச் சிறுவர்களுக்கு கதை சொல்வது பெரிய சவால். பேசத் தெரிந்த எவரும் எந்த இலக்கிய கூட்டத்திலும் எளிதாகப் பேசி மேற்கோள்கள் காட்டி கைதட்டு வாங்கி விட முடியும். ஆனால் குழந்தைகளுக்கு கதை சொல்வது அப்படியானதில்லை. அதற்கு நிறைய கதைகளும், சுவாரஸ்யமான கதை சொல்லும் தன்மையும், பகடியும், நகைச்சுவையும், கேட்பவரை அதிகம் கதை சொல்ல வைக்கும் திறனும் தேவை.  இத்தனையிலும் முக்கியமானது தன்னைத் தானே கேலி செய்து கொள்ள தெரிந்திருக்க வேண்டும் என்பதே,


கற்றல் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளிகள் நம்மிடம் அதிகமில்லை. கற்றல் குறைபாடு ஒரு முக்கிய பிரச்சனையாகவே இன்னமும் பொருட்படுத்தபடவில்லை.  கிறுக்கலாக எழுதுவது,  எண்கள் தலைகீழாக நடனமாடுவது, படிப்பதில் பிரச்சனை,  ஒரு குறிப்பிட்ட விஷயம் மறந்து போய்விடுவது என்று பல்வேறு விதமான கற்றல் குறைபாடு கொண்ட  சிறார்கள் அடையாளம் கண்டு கொள்ளபடாமலே இருக்கிறார்கள்


அவர்களுக்கெனத் தனியான பாடத்திட்டங்கள் கற்பிக்கும் முறைகள். சிறப்பு பள்ளிகள் இருக்கின்றன. அங்கே கற்றுத் தருதலில் முக்கியமான வழி முறை கதை சொல்வது.  கற்றல் குறைபாடு கொண்ட சிறார்கள் கதை சொல்வதிலும் கேட்பதிலும் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். அதை நானே நேரில் கண்டேன்.


என்ன கதை சொல்வது என்று எந்தத் திட்டமும் இல்லாமல்  சென்றிருந்தேன். மாணவர்களிடம் உங்களில் கதை தெரியாதவர் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டேன். சில மாணவர்கள் தனக்கு கதையே தெரியாது என்று கையைத் தூக்கினார்கள். அதில் ஆறு வயது சிறுவன் ஒருவன் தலைகவிழ்ந்தபடியே தனக்கு ஒரு கதை கூட தெரியாது என்று ஆதங்கத்துடன் சொன்னான்.


நான் அவனை அருகில் வரவழைத்து இல்லையே உனக்கு கதை தெரியும் என்று உன்னுடைய கண்கள் சொல்கிறதே என்று சொன்னேன். அவன் திகைப்போடு இல்லையே என்றான். இல்லை உன் வலது கண்ணில் ஒரு கதையும் இடது கண்ணில் இன்னொரு கதையும் மிதந்து கொண்டிருக்கிறது. அதை நான் படித்துக் காட்டட்டுமா என்று  கேட்டேன். பையன் மெதுவாக சிரித்தான்.


என் அருகில் வா என்று சொல்லிவிட்டு அவன் கண்களை உற்று கவனிக்கத் துவங்கியது போல நானாக ஒரு சிங்கத்தின் கதையை சொல்லத் துவங்கினேன். ஒரு கண்ணிற்கு கதை சொல்லி முடித்தவுடன் அந்த சிறுவன் பலத்த சிரிப்புடன் நான் ஒரு கதை சொல்லவா என்று  முன்வந்தான்.


சொல்லு கேட்கலாம் என்றதும் அந்தப் பையன் ஒரு நாள் வானத்தில் இருந்து மழை பெய்ய ஆரம்பிச்சது. அப்போ பூமியில் உள்ள செடிகள் எல்லாம் நனையாம எப்படி இருக்கிறதுனு தெரியாம பயப்பட ஆரம்பிச்சது. ஒரு செடி இன்னொரு செடிகிட்டே மழை பெய்றப்போ கண்ணை மூடிக்கோ அப்புறம் பயமே இருக்காதுனு. சொன்னது அப்புறம் நிறைய மழை பெஞ்சது. மின்னல் கூட அடிச்சது மழைல நனைஞ்சி செடிக்கு சளிபிடிச்சிகிடுச்சி. அது தும்மல் போட்டுச்சி. அதனாலே ஸ்கூலுக்கே போகலை. அவ்வளவு தான் கதை என்று சொன்னான்.


கற்பனை தான் கதையின் ஆதாரம். அந்தச் சிறுவன் நான் சொன்ன கதையிலிருந்து உடனே ஒரு கதையை கற்பனை செய்ய  துவங்கிவிட்டான். அதை வளர்த்துக் கொண்டு போகத் தெரியவில்லை. ஆகவே உடனே அதை முடித்து கொண்டுவிட்டான்.  கதை சொல்லும் விருப்பமும் அசாத்தியமான கற்பனையும்  அந்த சிறுவனிடம் இருந்தது. மிக நன்றாக கதை சொல்கிறான் என்று கைதட்டி பாராட்டு தெரிவித்தபோது அவன் முகம் அளவற்ற மலர்ச்சியில் பொங்கியது.


அவனது ஆசிரியை அந்தப் பையன் வகுப்பில் யாரோடும் பேசவே மாட்டான். எது கேட்டாலும் பதிலும் சொல்லவே மாட்டான். இன்று அவன் இவ்வளவு ஆசையாக கதை சொன்னது சந்தோஷமாக இருக்கிறது என்றார்.


யோசித்து பார்க்கையில் கதை அந்தச் சிறுவனின் மனதை திறக்கும் சாவியாக இருந்திருக்கிறது. எவருக்கும் பால்யத்தில் கேட்ட கதைகள் எளிதாக மறக்க கூடியதில்லை. ஆகவே குழந்தைகளுக்கு கதை சொல்வதும் அவர்களை கதை சொல்ல வைப்பதும் மிக அவசியமான தேவை.


அவனைப் போலவே கற்றல் குறைபாடு கொண்டவருக்கான சிறப்பு பள்ளியில் இருந்த அத்தனை சிறுவர்களுக்கு கதை சொன்னார்கள். கதை எழுதினார்கள். ஒரு நாள் முழுவதும் ஆசிரியர் மாணவர் என்று பேதமில்லாமல் பள்ளி கதையில் முழ்கி திளைத்தது. வருடத்தில் இப்படி ஒரு கதைநாள் எல்லா பள்ளிகளுக்கும் தேவை என்றே தோன்றியது.


இன்று பெரும்பான்மை வகுப்பறைகள் தண்டனைக் கூடங்களை போல மாணவர்களை பயமுறுத்துவதற்கு காரணம் பள்ளியில் சிரிப்பதற்கு சாத்தியமேயில்லை. கற்றுதருதல் மிகக் கடுமையாக இருக்கிறது. சர்க்கஸ்வித்தைகாரர்கள் மிருகங்களை பழக்குவதை போல பாடத்தை மனப்பாடம் செய்ய மாணவர்களை  பழக்குகிறார்கள். தண்டனை தருகிறார்கள். அடிக்கு பயந்து யானையே முக்காலியில் ஏறி நடனமாடும் போது மாணவர்கள் எம்மாத்திரம்.


கற்றுத் தருவதை ஏன் வேடிக்கையான உத்திகள், கலைகள் கொண்டு கற்பிக்க கூடாது.  அந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுடன் இது பற்றி கலந்துரையாடல் செய்தேன். அப்போது ஒரு ஆசிரியை கதை சொல்வதை மாணவர்கள் கேலி செய்கிறார்கள். ராவணனுக்கு பத்து தலையிருக்கிறது என்று கதை சொன்னதும் ஒரு மாணவன் அவர் எப்படி பாத்ரூம் போவார் என்று கேட்டு வகுப்பையே சிரிக்க வைத்துவிட்டான். அவனை எப்படிச் சமாளிப்பது  என்று தெரியவில்லை  அதனால் கதை சொல்வதையே நிறுத்திவிட்டேன் என்றார்.


கதைகளை கேள்விகேட்பதும் மறுப்பதும் தர்க்கம் செய்வதும் யாவருக்குமே விருப்பமான செயல். கதைகளுக்கு கால்கைகள் இல்லாமல் இருக்காலம் ஆனால் அதற்கு இதயம் இருக்கிறது. அது துடித்துக் கொண்டுதானிருக்கிறது. அதனால் கதை கேட்டதும் நாம் அழுதுவிடுகிறோம் என்றேன். ஆசிரியர்கள் அந்த பதிலில் திருப்தி கொள்ளவில்லை. அவர்களின் ஒரே கவலை கதை கேட்டால் சிறுவன் எப்படி மார்க் வாங்குவான். எப்படி அவன் உயர்கல்விக்கு போவான். என்பதே


எல்லா வகுப்புகளையும் கதையாக்க நான் சொல்லவில்லை, விளையாட்டை போல, இசைப் பயிற்சியை போல  கதை சொல்லுதலை ஒரு தனிவகுப்பாக நடத்துங்கள். கதை எழுத வையுங்கள்.  அதற்காக சிறப்புபயிற்சி முகாம்களை நடத்துங்கள், தனியே கதைகள் மட்டுமேயான ஒரு பாடப்புத்தகம் வையுங்கள் என்றேன். மரபாகவே நமது கல்விமுறையில் கதை சொல்லுதல் முக்கிய இடம் பெற்றிருந்தது. இந்த நூற்றாண்டில் தான் அந்த முறைகள் பெரும்பாலும் கைவிடப்பட்டுவிட்டன.    


நடனக்கலைஞர், பாடகர், நடிகர் போல நம்மிடமே கதை சொல்பவர் என்று தனியான கலைஞர்கள்  நம்மிடம் இல்லை. அப்படி உருவாவதற்கு எவரும் முன்வருவதுமில்லை. உண்மையில் கதை சொல்லிகளின் தேவை இன்று அதிகமாகவே உள்ளது.


தொழில்முறை கதை சொல்லிகள் உலகெங்கும் இருக்கிறார்கள். அவர்கள் அதை ஒரு நிகழ்வாகவே நடத்துகிறார்கள். ஜப்பானின் புகழ்பெற்ற கதை சொல்லும் கலையான ரகூகோ நிகழ்ச்சி ஒன்றினை சில ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் பார்த்தேன். ரகூகோ என்றால் உதிரும் வார்த்தைகள் என்று பொருள்.


மேடையில் ஒரேயொரு கதை சொல்லி உட்கார்ந்திருக்கிறார். அவரது கையில் ஒரு காகித விசிறி உள்ளது. அவரது பின்னால் ஒரு திரைச்சீலை காணப்படுகிறது. உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்து கொள்ளாமலே அவர் மிக மிக வேடிக்கையான கதை ஒன்றினை சொல்லி சபையை வாய் ஒயவிடாமல் சிரிக்க வைக்கிறார். ஆயிரம் வருச பழமையாக கதை சொல்லும் கதையது.


அன்று நான் பார்த்த நிகழ்விலும் கதை சொல்லி தேர்ந்த நடிகரை போன்ற முகபாவங்களுடன், குரலை ஏற்றி இறக்கி மூன்று பேர் பேசுவது போன்று கதை சொல்லிக் கொண்டே போனார். சபை கைதட்டி ஆரவாரமாக கேட்டது. இது போன்று ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் பூர்வ கதைகளை எடுத்து சொல்லும் கதை சொல்லிகள் இருக்கிறார்கள்.


அவர்கள் சிறார்களுக்காக பயிற்சி முகாம்களை நடத்துகிறார்கள். பூங்காக்கள், கலையரங்குகளில் தனியே நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். கதை சொல்பவர்கள் சித்திர சுருள்களையோ பொம்மைகளையோ,அல்லது சிறுசிறு உருவ அட்டைகளை கொண்டோ கதை சொல்கிறார்கள். விரலில் சிறிய பொம்மைகளை மாட்டிக் கொண்டு கதை சொன்ன ஒரு மெக்ஸிக பெண்ணை சந்தித்திருக்கிறேன். அவள் அந்த பொம்மைகளை இயக்கும் விதம் அதி அற்புதமாக இருந்தது.


கதை சொல்லும் கலை வெறும் பொழுது போக்கிற்கானது மட்டுமில்லை. கதைகளின் வழியே எதையும் எளிதாக கற்று தர முடியும். புரியாத கணிதம் முதல் வானவியல் வரை அத்தனை துறை சார்ந்தும் கதைகள் இருக்கின்றன.


கதைகள் நமது கடந்தகாலத்தின் நினைவு திரட்டுகள். மக்கள் வாழ்ந்து அறிந்து கொண்ட ஞானமே கதையாகிறது. அதனால் தான் இந்திய கதை சொல்லும்முறையில் தெனாலி ராமன், பீர்பால்  பரமார்த்தகுரு என்று தன்னை கேலி செய்து கொள்ளும் கதாபாத்திரங்கள் முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். அவர்களது வேடிக்கைகளின் பின்னால் வாழ்வின் அரிய உண்மை எப்போதுமே சேர்ந்தேயிருக்கிறது.


ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்களுடன் இரண்டு பேர் முக்கியமாகவும் தேவைபடுகிறார்கள் . ஒருவர் கோமாளி மற்றவர் கதை சொல்லி. காரணம் இந்த இருவரும் கற்று தருவதை வேடிக்கையாக செய்ய கூடியவர்கள். மாணவர்களோடு எளிதில் கலந்துவிடக்கூடியவர்கள். அவர்கள் சிரிக்க வைப்பதன் வழியே எதையும் எளிமையாக புரிய வைத்துவிடுகிறார்கள்.


ஆரம்ப கல்வியில் குழந்தைகளுக்கு நாட்டம் உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு இவர்கள் இருவருமே அடிப்படை தேவையானவர்கள்.  நான் அறிந்தவரை இதுவரை எந்த பள்ளியிலும் கோமாளியோ, கதை சொல்லியோ தனித்து இருப்பதாக தெரியவில்லை. அவர்களின் தேவையே கூட இன்னமும் முழுமையாக உணர்ந்து கொள்ளப்படவில்லை.


பாடப்புத்தகங்களை மாற்றி எழுதுவதால் மட்டும் கல்வியில் மாற்றம் வந்துவிடாது. கற்றுதரும் முறைகளில் மாற்றம் தேவை. அதற்கு எளிய வழி கதை சொல்வதே. இன்றுள்ள முக்கிய பிரச்சனை பெற்றோர்களுக்கு கதைகள் தெரியாது. அத்துடன் அவர்கள் கதை சொல்வதிலும் கேட்பதிலும் விருப்பம் கொள்ளவில்லை என்பதே. ஆகவே மாற்றம் வீட்டில் துவங்கி பள்ளியில் செயல்பட்டால் மட்டுமே கதை சொல்லல் ஒரு கற்றல் முறையாக உருவெடுக்க கூடும்.


**


 

Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: