கொலைக்குப் பின்னால்

இந்தியாவின் புகழ்பெற்ற இயற்கையியலாளர் மா.கிருஷ்ணன் எழுதிய கதிரேசன் செட்டியாரின் காதல் என்ற துப்பறியும் நாவல் 1996ம் வெளியானது. பதிமூன்று வருசங்களுக்கு மேலாகியும் உரிய கவனமற்று போன அந்த நாவல் 2009ம் வருசம் புதிய பதிப்புக் கண்டிருக்கிறது.

மா. கிருஷ்ணன் தமிழின் முன்னோடி நாவலாசிரியர் ஆ. மாதவைய்யாவின் மகன். தாவரவியலும் சட்டமும் படித்துவிட்டு சுண்டூர் சமஸ்தானத்தில் பணியாற்றியிருக்கிறார். புகைப்படம் எடுப்பதிலும் ஒவியத்திலும் ஆர்வம் கொண்ட கிருஷ்ணன் ஸ்டேட்ஸ்மென் இதழில் எழுதிய இயற்கையுலகம் பற்றிய கட்டுரைகள் மிக முக்கியமானவை. கானுயிர் வாழ்க்கை பற்றிய கிருஷ்ணனின் கட்டுரைகள் தியோடர் பாஸ்கரன் அவர்களால் தொகுக்கபட்டு மழைக்காலமும் குயிலோசையும் என்ற தலைப்பில் தனிநூலாக வெளியாகி உள்ளது.

தனது அப்பாவை போல நாவல் எழுத வேண்டும் என்ற எண்ணம் கிருஷ்ணனுக்குள் நீண்ட காலமாக இருந்திருக்கக் கூடும். முதிய வயதில் இதை எழுத துவங்கியிருக்கிறார். 1995ம் ஆண்டு எழுத துவங்கிய நாவல் 96ம் ஆண்டு முதற்பதிப்பு வெளியாகியிருக்கிறது. நாவலுக்கு முன்னுரையோ, சிறப்புக் குறிப்புகளோ எதையும் அவர் எழுதவில்லை.

பலவருசங்களுக்கு முன்பாக வடுவூர் துரைச்சாமி அய்யங்காரின் துப்பறியும் நாவல்களை வாசித்திருக்கிறேன். அதன் கதைப்போக்கும், துப்பறியும் முறையும் புகழ்பெற்ற பெரிமேசன், ஷெர்லாக் ஹோம்ஸ் ஆங்கில நாவல்களின் தழுவல்களே,.

மா. கிருஷ்ணனின் நாவல் செவ்வியல் துப்பறியும் கதை மரபை சேர்ந்தது. நேரடியாக கதை கொலையில் துவங்கிவிடுகிறது. கொலையாளி யார், என்ன காரணம் என்பதை ஆராய்வதன் வழியே கதை முடிச்சிட்டு வளர்கிறது. இந்த எளிய கதையைச் சுவாரஸ்யமாக்குவது கிருஷ்ணனின் நுட்பமான விவரிப்புகள் மற்றும் தன்னைச் சுற்றிய வாழ்வின் மீதான ஆழ்ந்த அவதானிப்புகள். கதைக்களமாக அவர் எடுத்துக் கொண்ட கதிரேசன்செட்டியாரின் வாழ்வு இதன் சரியான உதாரணம். ரங்கூன் பினாங்கு என்று வட்டிதொழில் செய்யச்சென்று பெரும்பொருள் ஈட்டி திரும்பி ஊரில் மீதமுள்ள காலத்தைப் போக்க நினைக்கும் செட்டியார்களில் ஒருவராகவே கதிரேசனும் அறிமுகமாகிறார்.

அன்றாட வாழ்வின் உள்ளே புதையுண்டு போயிருக்கும் கடந்த காலமும் அதன் மறக்க முடியாத நினைவுகளுமே. நாவலை வளப்படுத்துகின்றன. எதிர்பாராத திருப்பங்களை உண்டாக்கும் லாவகமும், கதாபாத்திரங்களின் அகஉளைச்சல்களைத் துல்லியமாகச் சித்தரிப்பதிலும் இந்நாவல் வெகு தனித்துவமானதாக உள்ளது.

கதிரேசன் செட்டியார் . பல ஆண்டுகாலம் கல்கத்தா சிங்கப்பூர் என்று தொழில் காரணமாக வாழ்ந்து வந்தவர். தனது ஒய்வுகாலத்தைச் சொந்த ஊரில் கழிக்கலாம் என்று நினைத்துச் சின்னமடை என்ற கிராமத்தில் ஒரு தென்னந்தோப்பை விலைக்கு வாங்கிக் கொண்டு தனியாக வாழ்ந்து வருகிறார். அவரது மனைவி வள்ளியம்மை சில மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்து போய்விடுகிறார். அந்த மனச்சோர்வும் தனிமையுமாக எதிலும் பிடிப்பற்று தனித்து வாழ்ந்து வருகிறார்.

அவரது வீட்டில் சண்முகம் என்ற வேலைக்காரன் பல வருசமாகக் கூடவே இருக்கிறான். சமையல் வேலைக்கு முத்து என்ற சமையற்காரனும் அவனுக்கு உதவி செய்யக் கண்ணம்மா என்ற பணிப்பெண்ணும் இருக்கிறாள். கார் ஒட்டுவதற்காகத் தங்கவேலு என்ற டிரைவர் அவ்வப்போது வந்து போகிறான்.

கதை துவங்கும் போது ஒரு நள்ளிரவில் கதிரேசன் செட்டியார் தூக்கமற்றுப் போய் படுக்கையில் தத்தளிக்கிறார். அவரது வளர்ப்பு நாயை கூடக் காணவில்லை, நாயும் பணியாளரும் எங்கே போனார்கள் என்று தெரியாத குழப்பம் ஏற்படுகிறது . எங்கே தேடுவது என்று புரியாமல் படுக்கையில் உழன்றபடியே மீண்டும் உறங்கிவிடுகிறார்.

விடிகாலை தனது அவுட்ஹசில் வேலையாள் சண்முகம் கொலை செய்யபட்டிருப்பதையும் அவரது வளர்ப்பு நாயும் சேர்த்துக் கொல்லபட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். இந்தக் கொலையே நாவலின் மையப்புள்ளி. இக் கொலையை விசாரிப்பதற்காகத் துரைசாமி என்ற காவல்துறை அதிகாரி வீடு தேடி வருகிறார். அவருடன் முகைதீன், பெருமாள்சாமி என்ற இரண்டு அனுபவம் மிக்கப் போலீஸ்காரர்கள் உடன்வருகிறார்கள்.

அவர்கள் தடயங்களைப் பதிவு செய்கிறார்கள். யார் இந்தக் கொலை செய்தது. ஏன் கொலை நடைபெற்றது என்பதை விசாரிக்கத் துவங்குகிறார்கள். கதை ஒவ்வொரு முடிச்சாக மர்மத்தை வளர்கிறது. பின்பு அந்த மர்மத்தை சுவாரஸ்யமாக அவிழ்க்கிறது.

வீட்டு வேலைக்காரர்கள் விசாரிக்கபடுகிறார்கள். ஒவ்வொருவர் மீதுமாகச் சந்தேகம் உருவாவதும், அவர்கள் இந்தக் கொலையைச் செய்திருக்கக் கூடும் என்றும் கதை வளர்கிறது. மரபான துப்பறியும் நாவல்கள் போன்று எதிர்பாராத தடயங்கள் வழியே மர்மம் அவிழ துவங்குகிறது. 27 அத்யாயங்கள். இருநூற்று இருபத்தியேழு பக்கங்களாக விரியும் நாவல் கடைசிவரை தீர்க்கபடாத மர்மமும் சுவாரஸ்யத்தையும் கொண்டிருப்பது வாசிப்பில் பெரும்மகிழ்ச்சியை உருவாக்குகிறது.

துப்பறியும் நாவல்கள் பொதுவாக அதன் விசித்திரமான பின்புலத்தால் தான் வசீகரமாகின்றன. இந்த நாவலில் சர்க்கஸ் மற்றும் அதில் வேலை செய்தவர்கள் சர்க்கஸ் மூடப்பட்ட பிறகு என்னாவகிறார்கள் என்ற பின்புலம் அழகாகப் பயன்படுத்தபட்டிருக்கிறது. அது போலவே கதை நிகழும் செட்டியாரின் வீடும் அங்குள்ள கதாபாத்திரங்களின் ரகசியமான மனநிலைகளும் துப்பறியும் கதையை வேகமூட்டக்கூட்டுகின்றன.

கதையின் தனிசிறப்பு கதிரேசன் செட்டியாரிடம் வேலை செய்பவர்களின் அகஉலகம். சண்முகம், முத்து கண்ணம்மா, தங்கவேலு என்று ஒவ்வொருவரும் முழுமையாக உருவாக்கபட்டிருக்கிறார்கள். அவர்கள் மற்றவர் அறியாமல் தங்களுக்குள் ஒரு ரகசியத்தை மறைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது வெளிப்பட்டு விடுமோ என்ற தயக்கமும் பயமும் அவர்களிடம் உள்ளது.

அது போலவே கொலையை விசாரணை செய்யும் போலீஸ்காரர்களான பெருமாள்சாமியும் துரைசாமியும் எளிய விஷயங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மர்மத்தை அவிழ்க்கத் துவங்குகிறார்கள். குறிப்பாகக் கோவில் நகை திருட்டில் பிடிபடும் திருடனுக்கும் இக்கொலைக்குமான தொடர்பும், திருட்டு நகைகளை விற்றுவாங்குவதில் உள்ள ஏமாற்றுத்தனங்களும் அவர்களைப் போலீஸ் விசாரிக்கும் முறையும் மிக அற்புதமாக விவரிக்கபட்டிருக்கிறது.

கொலை செய்யப்பட்ட கத்தியும் அது அங்கே எப்படி வந்தது என்பதைப் பற்றிய புதிரை அவர் விவரிக்கும்போது  சுவாரஸ்யமான துப்பறியும் கதையை வாசிக்கும் சந்தோஷம் பெருக்கிடுகிறது.

மா.கிருஷ்ணன் நிறையத் துப்பறியும் நாவல்களை வாசிக்கும் பழக்கம் கொண்டிருக்ககூடும். இவரது கதை சொல்லும் முறை சார்ல்ஸ் டிக்கென்ஸ்ஸின் விவரணைகளும் எட்கர் ஆலன்போவின் இருண்மையும் கொண்டதை போல உருக்கொண்டிருக்கிறது.

கதையில் இடம் பெறும் நாய் கோம்பை என்பதில் துவங்கி. அதை எப்படிப் பழக்குகிறார்கள். அதன் இயல்பு என்ன? அதற்கு என்ன விஷம் கொடுக்கபட்டது என்பதையும் சித்தவைத்தியர் ஒருவரின் வழியே மூலிகைகள் அதன் செயல்பாடுகளை விவரிக்கையிலும் கிருஷ்ணன் தான் ஒரு இயற்கையியலாளர் என்பதை நிருபணம் செய்கிறார்.

துப்பறியும் கதைகளில் உரையாடல்களே நாவலின் போக்கினை உக்கிரப்படுத்தகூடியவை. ஆகவே உரையாடல்களில் ஒவ்வொரு சொற்களும் முக்கியமானவை. அதைக் கிருஷ்ணன் நன்றாக உணர்ந்திருக்கிறார். போலீஸ்காரர்களின் விசாரணையும், வீட்டுவேலைக்காரர்களின் இயல்பான உரையாடல்களும் கச்சிதமாக உருவாக்கபட்டிருக்கின்றன. அதிலிருந்து நாவலின் மர்மங்கள் அவிழத்துவங்குகின்றன.

ஒரு கொலையை விசாரிப்பது என்பது காலத்தினுள் மறுபிரவேசம் செய்வது போன்றதே.  கொலைக்கு பின்னாலுள்ள உண்மையை நோக்கி வாசகனை அழைத்துச் செல்வதே துப்பறியும் கதைகளின் முக்கியச் செயல்பாடு. இந்நாவலிலும் அந்த தேடல் வாசகனை வியப்பூட்டுகிறது.

தமிழில் எழுதப்பட்ட அசலான ஒரு துப்பறியும் நாவலை வாசித்த திருப்தி இந்த நாவலில் கிடைக்கிறது.

இக்கதையை அப்படியே திரைப்படமாக உருவாக்கலாம்.

தரமான பதிப்பில், அழகான வடிவமைப்பில், அவரே வரைத்த சித்திரங்களுடன் வெளியாகி உள்ள கதிரேசன் செட்டியாரின் காதல் தேடி வாசிக்க வேண்டிய முக்கியப் படைப்பாகும்.

**

Archives
Calendar
November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Subscribe

Enter your email address: