எழுதப்படாத கதைகள்

ஆன்டன் செகாவ் தன் வாழ்நாளில் 600க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். மேலும் எழுதவிரும்பிய கதைக்கருக்களைத் தனது நோட்புக்கில் குறித்து வைத்திருக்கிறார். செகாவின் நோட்புக் தனிநூலாக வெளியாகியுள்ளது. சிறுகதை எழுத விரும்புகிறவர்களுக்கு இது ஒரு அற்புதமான துணை நூல்.

குறிப்பாக வித்தியாசமான கதாபாத்திரங்களை எப்படி வாழ்விலிருந்து தேர்வு செய்கிறார், எது போன்ற சம்பவங்களைக் குறித்து வைத்திருக்கிறார் என்பது முக்கியமானது. ஒவியர்கள் தினசரி வாழ்வு குறித்து ஸ்கெட்புக்கில் வரைந்து வைத்திருப்பது போலத் தன் கண்முன்னே கடந்து போன வாழ்வை சிறிய குறிப்புகளாக்கி ஆவணப்படுத்தியிருக்கிறார் செகாவ். நாடகமேடைக்குறிப்புகள். தனிச்சந்திப்புகள். மருத்துவ அனுபவங்கள். நண்பர்களைப் பற்றிய குறிப்புகள் என அவரது டயரியின் மாற்றுவடிவம் போலுள்ளது இந்த நோட்புக்.

லியோ டால்ஸ்டாயிற்கும் செகாவிற்குமான நட்பை பற்றிய குறிப்புகளின் வழியே அவர்களுக்குள் எவ்வளவு ஆழ்ந்த அன்பும் நெருக்கமும் இருந்திருக்கிறது என்பதை நன்றாக உணரமுடிகிறது. இளம் எழுத்தாளர்களை டால்ஸ்டாய் கவனத்துடன் வாசித்திருக்கிறார்.

செகாவ். கார்க்கி போன்ற பலரையும் தனது பண்ணைக்கு அழைத்து விருந்து கொடுத்து அவர்களின் சிறுகதைகள் பற்றிப் பேசி உற்சாகப்படுத்தியிருக்கிறார். செகாவிற்கும் டால்ஸ்டாயின் மகள்களுக்குமிடையே நல்ல நட்பும் நேசமும் இருந்திருக்கிறது. அவர்கள் ஒன்றாக நடைபயிற்சிக்கு போவதை கண்டு டால்ஸ்டாய் சந்தோஷம் அடைந்து தனது டயரியில்  சிறுகுறிப்பாக எழுதி வைத்திருக்கிறார்.

செகாவின் கதைக் குறிப்புகளை வாசிக்கும் போது இன்னும் ஆயிரம் கதைகளை அவரால் எளிதாக எழுதிவிட முடியும் என்றே தோன்றுகிறது.

சிறுகதை எழுதுவது நாவல் எழுதுவதை விடவும் சவாலானது. மொழியை கையாளுவதிலும், கதைகளை விவரிப்பதிலும் மிகுந்த கட்டுபாடும் லயமும் ஒருமையும் தேவை.

சிறுகதை ஆசிரியர்கள் பேராசை கொண்டவர்கள். எதையும் கதையாக்கிவிடமுயற்சிப்பார்கள். அதிலும் குறிப்பாக இளம் சிறுகதை ஆசிரியன்  வேசிகள், திருடர்கள், தற்கொலை, வன்முறை பற்றி எழுதுவதில் எப்போதும் கூடுதல் ஆர்வம் கொண்டிருப்பான். அநேகமாக எல்லா சிறுகதை ஆசிரியர்களும் இந்தக்கதைக்கருக்களை கொண்டு நிச்சயம் ஏதாவது ஒன்றிரண்டு சிறுகதை எழுதியிருப்பார்கள்.

எளிய சம்பவங்களை எழுதுவதே சிரமமானது. புகைப்படம் எடுப்பது போல துல்லியமாக ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கிவிட்டால் மட்டும் போதாது. மாறாக கதாபாத்திரங்களின் உணர்ச்சிநிலைகளை, வெளிப்படுத்தும் முறையை, சொல்லியும் சொல்லாமலும் விடும் இடைவெளிகளை  கச்சிதமாக உருவாக்கிவிட்டால் போதும் கதை தானே உயிர்பெற்றுவிடும்.

கதையின் துவக்கம் என்பது எழுத்தாளனுக்கு தான் முக்கியமானது. வாசகன் கதையின் எந்த வரியில் துவங்குவான் என்பது புதிரே. அது போலவே தான் கதையின் முடிவும். கதை முடிந்தபிறகும் வாசகன் அதை தொடரவே விரும்புகிறான். அதன் மாற்று சாத்தியங்களை மனதில் உருவாக்கி பார்க்கிறேன். கதை அவனளவில் ஒரு தூண்டுதல் மட்டுமே.

செகாவ் எழுதிய பெரும்பான்மை கதைகள் உறவின் சிக்கல்களையே பேசுகின்றன. பெண் கதாபாத்திரங்களே அதிகம்.  ஒரு சிறுகதைகளுக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களை கூட செகாவ் கொண்டுவந்திருக்கிறார்.  செகாவை வாசிப்பது இளம் எழுத்தாளர்களுக்கு சிறந்த பயிற்சி என்றே சொல்வேன்.

இந்த நோட்புக்கில் என்னைக் கவர்ந்தவை ஏராளம்.

தன் வாழ்நாள் முழுவதும் பிரபலங்களுக்கு மொட்டைகடிதம் எழுதுகிற ஒரு ஆளைப்பற்றிய குறிப்பு ஒன்றை செகாவின் பதிவில் வாசித்தேன். கதை எழுத தூண்டுதலான கதைக்கரு.

இது போலவே நாற்பது வருஷங்கள் சமையல்வேலை செய்து வரும் ஒருவன் ஒருமுறை கூடத் தான் சமைத்த உணவை சாப்பிட்டதில்லை என்றொரு கதைக்கருவை குறித்து வைத்திருக்கிறார்.

வீட்டு எஜமானர்கள் இறந்த பிறகும் ஏன் மரம் செழித்து வளருகிறது என்றொரு குறிப்பை வாசித்த போது வியப்பாக இருந்தது.

தோட்டமிடுவதில் செகாவிற்குத் தீவிரமான ஈடுபாடு இருந்தது. விதவிதமான பூச்செடிகளைத் தேர்வு செய்து வளர்த்து வந்தார். அந்தச் செடிகளைப் பற்றிய குறிப்புகளையும் பதிவு செய்திருக்கிறார். ரஷ்ய எழுத்தாளர்களில் துர்கனேவ் தான் தோட்டம் பற்றி அதிகம் எழுதியவர். அவரது நாவல்களில் பூந்தோட்டம் மையக்கதாபாத்திரம் போலவே அமைந்திருக்கும்.

அந்தக் காலத்தில் சிறுகதைகளுக்குப் பத்திரிக்கைகள் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. 1920களில் ஸ்காட் பிட்ஜெரால்ட் ஒரு சிறுகதைக்காக 4000 டாலர்  சன்மானமாகப் பெற்றுள்ளார். 1950களில் ஜான் அப்டைக் ஒரு வருஷத்திற்கு ஐந்து சிறுகதைகளை நியூயார்க்கர் இதழுக்கு எழுதி தந்துவிட்டு தன் ஒரு ஆண்டுக் குடும்பத்திற்கான செலவுக்கான தொகை பெற்றார். பிளேபாயில் இரண்டு சிறுகதைகள் வெளியானால் ஜாலியாக உலகப்பயணம் போய்வரலாம் என்ற நிலை அன்றிருந்தது. செகாவிற்கு ஒரு சிறுகதைக்கு ஆயிரம் ரூபிள் சன்மானமாகக் கிடைத்திருக்கிறது. அது மிகப்பெரிய தொகை.

புகைப்படங்களில் செகாவின் தோற்றம் அலாதியானது. அவர் எப்போதுமே நேரடியாகக் கேமிராவை பார்த்துக் கொண்டிருப்பார். அவரது பார்வையும் தோற்றமும் வெகுவசீகரமானது. நண்பர்களுடன் கூடியிருக்கும் புகைப்படத்தில் கூட அவரது பார்வை நேர்கொண்டதாகவேயிருக்கும். அது போலவே அவரது உடைகளும் கச்சிதமானவை. சிறப்புக் கவனம் எடுத்து உடைகளைத் தேர்வு செய்வதுடன் நேர்த்தியாக அவற்றை அணிவதும் வழக்கம், பிரபலமான ஒவியர்களை அவரது உருவச்சித்திரத்தை வரைந்திருக்கிறார்கள். பத்திரிக்கைகளுக்காக அவரது தோற்றம் கேலிச்சித்திரமாகவும் பலமுறை வரையப்பட்டிருக்கிறது. அவற்றைச் செகாவ் ஆசையோடு சேகரித்து வைத்துக் கொண்டிருந்தார்.

செகாவிடமிருந்து சிறுகதையின் நுட்பங்களை நிறைய கற்றுக் கொள்ளலாம். அதற்காக அவரைத் தேடி வாசியுங்கள்.

Archives
Calendar
November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Subscribe

Enter your email address: