குரசேவாவின் நூறுவயது.


அகிரா குரசேவாவிற்கு இன்று நூறாவது பிறந்த நாள்.  உலக சினிமாவின் தனிப்பெரும் ஆளுமையான குரசேவா 1910ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி பிறந்தவர். தற்செயலாக சில நாட்களுக்கு முன்பு அகிரா குரசேவாவின் வாழ்க்கை வரலாற்று நூலான Something Like An Autobiography  யை ஒரு தகவலுக்காக புரட்டிக் கொண்டிருந்தேன்.  மௌனப்படங்கள் திரையிடும் அரங்குகளில் தனது சகோதரன் பின்னணி இசை அமைப்பவராக வாழ்ந்ததையும் அவரது மரணத்தையும் பற்றிய குரசேவாவின் நினைவுகளை மறுபடி வாசித்தபோது அது தனியே திரைப்படமாக்க வேண்டிய ஒன்று என்று தோன்றியது. குரசேவாவின் எழுத்து அவரது படங்களைப் போலவே கவித்துவமும் ஆழ்ந்த மனநுட்பமும் கொண்டிருக்கிறது.மௌனப்படங்களின் பார்வையாளர்கள், நடிகர்கள், தயாப்பாளர்கள் பற்றிய இலக்கிய பதிவுகள் மிக குறைவே. பத்து வருசங்களுக்கு முன்பு ஒளியை வாசிக்கின்றவன் என்று ஒரு சிறுகதையை நான் எழுதியிருக்கிறேன். அது மௌனப்பட காலத்தில் திரை ஒரமாக நின்றபடியே படத்திற்கு கமெண்ட்ரி கொடுக்கும் ஒருவனைப் பற்றிய கதை. டாக்கியின் வரவு அவனை வேலையில் இருந்து நீக்கிவிடுகிறது. சினிமா பேசுகிறது என்பதை அவனால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. அந்த மனிதனின் வெறுமையும் தத்தளிப்பும் பற்றியதே கதை. 


பெரும்பான்மை இயக்குனர்கள் தனது சொந்த வாழ்வின் சாயல்களை திரைப்படங்களில் அதிகம் பிரதிபலிப்பதுண்டு. அகிரா குரசேவா தனது சுயவாழ்க்கையை அதிகம் வெளிக்காட்டிக் கொண்டரவரில்லை. அவரது குடும்பம், பிள்ளைகள் யாரும் திரையுலகின் புகழ்வெளிச்சத்திற்குள் வரவேயில்லை. அவரது திரைப்படங்கள் தேசத்தின் விருப்பத்தையும் அதன் மாறுதல்களையும் கடந்தகாலத்தையுமே முன்வைத்தன.


ஜப்பானின் கடந்த காலமும் சமகால நெருக்கடிகளுமே  அவரது கதாபாத்திரங்கள் . தனது தேசத்தின் சரித்திரத்தினை, நம்பிக்கைகளை, ஏமாற்றத்தை, தத்தளிப்பை, தனிமனித புறக்கணிப்புகளையே குரசேவா அதிகம் கவனம் கொண்டிருக்கிறார்.குரசேவாவின்  சுயவிருப்பங்களை, ஆளுமையை வெகு அரிதாகவே அவரது படங்கள் பிரதிபலிக்கின்றன


The Films of Akira Kurosawa – Donald Richie  என்ற புத்தகம் குரசேவா பற்றி அறிந்து கொள்வதற்கான மிக முக்கியமான புத்தகம். கலைகள்  மீதான காதலால் ஜப்பான் சென்ற டொனால்டு ரிச்சி குரசேவாவுடன் நெருங்கி பழகி அவரது திரைப்படங்களை நுட்பமாக கற்று அறிந்து ஐநூறு பக்கங்களுக்கும் மேலாக மிக விரிவாக எழுதியிருக்கிறார். ஜப்பானிய சினிமா குறித்த ரிச்சியின் விமர்சனங்களே அதை உலகின் கவனத்திற்கு கொண்டு சென்றன.குரசோவாவின் முக்கியமான படங்களான Rashomon, Seven Samurai, Ikiru, Throne of Blood, Red Beard, Ran, Dreams, Kagemusha, Dersu Uzala, Madadayo இன்றும் தொடர்ந்து திரையிடப்பட்டு காலமாற்றத்தை கடந்து தனக்கென  தனித்த பார்வையாளர்களை கொண்டிருக்கிறது. பல்வேறு கல்விபுலங்களில் இவை பாடமாக கற்பிக்கபடுவதுடன் தொடர்ந்து ஊடகங்களில் விவாதிக்கபட்டும் வருகின்றன.ஏன் குரசோவை நாம் கொண்டாட வேண்டும். குரசேவா சினிமாவிற்கு அறிமுகமான காலத்தில் உலகெங்கும் ஸ்டுடியோக்கள் வணிகமுயற்சியாக சாகச, காதல்கதைகளை படமாக்கி பரபரப்பை ஏற்படுத்தி கொண்டிருந்தன. கேளிக்கை தான் சினிமாவின் பிரதான வேலையாக இருந்தது. மிகையான கதைகள், பகட்டான நடிப்பு என்று திரைப்படம் வெறும் வணிகப்பொருளாகவே கருதப்பட்டது.


ஆனால் சினிமா எல்லா கலைகளையும் போலவே மக்களின் யதார்த்த உலகை. அதன் பிரச்சனைகளை, நெருக்கமாகவும் உண்மையாகவும் பிரதிபலிக்க வேண்டும் என்று ருஷ்ய திரைப்படங்கள் முன்குரல் கொடுத்து கொண்டிருந்தன. அந்த எண்ணத்தின் செயல்வடிவமே குரசேவா. அவர் தனது படங்களின் வழியே ஜப்பானின் கடந்தகாலத்தை மறுஉருவாக்கம் செய்யத் துவங்குகிறார். அவரது படங்கள் உலக திரைப்பட விழாவில் விருதுகளை பெற்றதுடன் திரைப்படம் குறித்த அடிப்படை பார்வைகளையே மாற்றி அமைக்கத் துவங்கியது.  அவரது படங்களில் இருந்து உந்துதல் பெற்ற திரைப்பட இயக்குனர்கள் பட்டியல் மிக பெரியது.


ஜ÷ராசிக் பார்க் படம் பலநூறு கோடிகளை வசூல் செய்து சாதனை செய்த போது அதன் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தன்னை விட மிகப்பெரிய இயக்குனர் அகிரா குரசேவா. அவரது படங்களை பார்த்தே நான் சினிமாவை கற்றுக் கொண்டேன். எனது ஒரே விருப்பம் அவர் விரும்பியபடியே ஒரு படத்தை எனக்காக உருவாக்கி தர வேண்டும் , அவரது ஒரு படத்தை நான் தயாரித்தேன் என்ற பெருமை எனக்கு போதும் என்று சொல்லி செலவை பற்றி கவலையில்லாமல் உருவாக்க சொன்னபடம் தான் Dreams .  ,


ஸ்பீல்பெர்க்கிற்காக குரசேவா உருவாக்கிய இப் படத்தில் பிரபல ஹாலிவுட் இயக்குனர் மார்டின் ஸ்கார்சசி ஒவியர் வான்கோவாக நடித்திருக்கிறார். சினிமா வரலாற்றில் ஒரு மைல்கல் இத்திரைப்படம்.அகிரா குரசேவா சினிமாவிற்கான சில அடிப்படைகளை உருவாக்கியவர். அவரது படங்கள் மனிதனின் ஆதாரப் பிரச்சனைகளை பற்றியவை. காமம், அதிகாரப் போட்டி, பேராசை. வெறுப்பு, பசி, நட்பு, துரோகம் என்று மனித இயல்புகள் மீதான விசாரணையே இப்படங்கள். எல்லா படங்களின் ஆதாரமாகவும் புரிந்து கொள்ளப்படாத அன்பும், கைவிடப்பட்ட தனிமையும், சிக்கலான  ஆண்பெண் உறவும் காதலுமே உள்ளது.


குரசேவாவின் கதாநாயகர்கள் தங்களை தனிமையாக உணர்பவர்கள். அந்த தனிமையை ஏற்றுக் கொள்பவர்கள். தன்னைச் சுற்றிய மனிதர்களின் நலனிற்காக பாடுபவதன் வழியே தங்கள் வாழ்வை அர்த்தப்படுத்தி கொள்பவர்கள். திருடர்கள், ஏமாற்றுகாரர்கள், பேராசை கொண்டவர்கள் அத்தனை பேரையும் குடும்பம் ஒன்று போலவே நடத்துகிறது. ஒருவகையில் அவர்களது குற்றத்திற்கான விதை குடும்பத்தின் மீதான பதற்றத்தில் இருந்தே துவங்குகிறது. சாதுர்யமான பேச்சே. செயல்களோ அவர்கள் கதபாத்திரங்களிடம் அதிகமில்லை. மாறாக அகப்பிரச்சனையே பிரதானம். அது எளியதாக துவங்கி மெல்ல வளர்ந்து அதன் தீவிர நிலையை அடைகிறது. பிரச்சனை சம்பந்தபட்ட மனிதனை விடவும் அவனைச் சுற்றிய உலகை தீவிரமாக தாக்குகிறது. ஹை அண்ட் லோ திரைப்படம் இதற்கு சரியான உதாரணம்.


ஜப்பானின் மரபுக்கலைகள், உடைகள், அலங்காரம், பேச்சுமொழி, உணவு மற்றும் குடிப்பழக்கங்கள் யாவும் குரசேவாவால் மிக கவனமாக திரைப்படங்களில் பயன்படுத்தபட்டுள்ளது அவர் தனக்கான திரைக்கதையை தானே எழுதிக் கொள்ளவில்லை. அதற்கான எழுத்தாளர்களை பயன்படுத்தி கொண்டார். இசையும் படத்தொகுப்பும் அத்தனை கச்சிதமாக அவரது படங்களில் இருந்தன. அவரே படத்தொகுப்பை நேரடியாக மேற்கொள்வது அதற்கு ஒரு காரணம் என்கிறார்கள்.


அதிகமான நடிகர்களை அவர் பயன்படுத்தவில்லை. மாறாக ஒரே நடிகர்களை பல்வேறு விதங்களில் உருமாற்றம் செய்வதில் அவர் தனித்திறன் கொண்டிருந்தார். செவன் சாமுராயில் வரும் தொசிரே முபுனேயும் ரெட் பியர்டில் வரும் தொசிரோ முபுனேயும் ஒரே ஆள் என்பது வியப்பாகவே இருக்கிறது. ரஷோமோனில் சொல்வது போல உண்மை பன்முகத்தன்மை கொண்டது. அதை யார் சொல்கிறார்கள். எதற்கு சொல்கிறார்கள் என்பதே முக்கியம்.


சாமுராய்கள் ஜப்பானிய போர்மரபில் முக்கியமானவர்கள். பாதுகாப்பிற்காகவும், போர்தொழிலுக்குமாக விசேசமாக பயிற்சி பெற்றவர்கள். அவமானத்திற்காக தன்னை அழித்து கொள்கிறவர்கள். சாமுராய்களின் வீரம் நாட்டார்கதைகளாக ஜப்பானில் புகழ்பெற்றிருக்கிறது. ஒரு காலத்தில் பெரும்புகழுடன் இருந்த சாமுராய்கள் காலமாற்றத்தால் தங்களது பெருமை அழிந்து பிழைப்பிற்காக சண்டையிட வேண்டிய காலம் உருவானது. அதை தான் குரசேவா தனது கதையின் முக்கிய பொருளாக எடுத்து கொள்கிறார்


செவன் சாமுராய் படத்தின் முக்கிய பொருள் பசியே. பசி தான் சாமுராய்களை யாருக்காகவோ சண்டையிட சம்மதிக்க வைக்கிறது. படம் முழுவதும் சாப்பாடு பிரதான காரணமாக பேசப்படுகிறது. சாதஉருண்டைகளை சாமுராய்கள் பேராசையுடன் சாப்பிடும் காட்சிகள் இடம்பெறுள்ளது. கிராமத்து விவசாயிகளுக்காக சண்டையிடுவதை தங்களது கௌரவ குறைவாகவே சாமுராய்கள் கருதுகிறார்கள். காரணம் அவர்கள் பிரபுக்களுக்காக சண்டையிடுபவர்கள். முதன்முறையாக பசி அவர்களை எளிய மக்களுக்காக சண்டையிட வைக்கிறது. விருப்பமில்லாமலே கிராமத்திற்கு வருகிறார்கள்.


ஆனால் கிராமம் கொள்ளையர்களால் தொடர்ந்து தாக்கபட்டு பயமும் மரணமுமாக மக்கள் வாழ்ந்து கொண்டிருப்பதன் நிதர்சனமே அவர்களை சண்டையிட வைக்கிறது.  எளியமக்களுக்காக யார் சண்டையிடுகிறார்களோ அவர்ளிடமே ஜப்பானின் ஆன்மா உள்ளது. எளிய மக்கள் தங்கள் பிரச்சனைகளுக்காக தாங்களே தீர்வு செய்து கொள்ளும்படியாக தான் அரசு அமைப்புகள் செயல்பட்டன என்று இயக்குனர் சுட்டிகாட்டுகிறார். இன்னொரு தளம் சாவின் முன்னால் ஏற்படும் காதல். இது குரசேவாவின் பல படங்களில் இடம்பெறும் அம்சம். மரணத்தின் முன்னிலையில் அழியாத காதல் ஒன்று உருவாகிறது. சாவு அதை பிரித்துவிடும்போதும் அந்த காதலும் அதன் தவிப்பும் மறக்கமுடியாத மனநெகிழ்ச்சியை தந்துவிடுகிறது. இது  செவன் சாமுராய், ரஷோமானில் துவங்கி பல படங்களில் இடம் பெறுகிறது.


சாமுராய்கள் கிராமத்திற்கு வரும்போது அந்த கிராமத்தின் தொலைதூர காட்சி ஒன்று படத்தில் இடம்பெறுகிறது. எவ்வளவு அழகான கிராமம். துல்லியமான மேகமும் புகைமூட்டமும் இயற்கையுமாக எங்கோ கனவில் இருந்து துண்டிக்கபட்டது போன்றிருக்கிறது. ஆனால் அந்த அழகின் பின்னால் எத்தனை ஆபத்துகள், போராட்டங்கள் என்று நாம் உணர்வதில்லை.


கிராமம் கொள்ளையர்களுடன் கடைசி யுத்தம் மேற்கொள்ளும் போது அதன் இயல்பே மாறிவிடுகிறது. சாமான்யர்கள் சண்டையிடுகிறார்கள். இரண்டு பக்கமும் ஏராளமாக உயிரிழப்புகள். கொள்ளையர்கள் அழித்து ஒழிக்கபடுகிறார்கள். முடிவில் பிழைத்திருந்த கிராமவாசிகள் என்றைக்கும் போல இயல்பாக வயலில் நாற்றுநடுகிறார்கள். பாட்டு பாடுகிறார்கள். கிராமம் தன் இயல்பிற்கு திரும்புகிறது. தங்களது தோழர்களின் மரணம் உருவாக்கிய வலியோடும் சாமுராய்கள் வாழ்க்கையை பகடி செய்தபடியே கடந்து போகிறார்கள்.


சாமுராய்களை உருவாக்கி அதன்வழியே அதிரடி சாகசங்களை குரசேவா திரையில் சிருஷ்டிக்கவில்லை மாறாக கடந்தகாலத்தின் அத்தனை சாசகங்களுக்கும் காரணமாக இருந்தது மனிதனின் அடிப்படை பிரச்சனைகளை  என்பதில் கவனம் கொள்கிறார். குரசேவாவின் சாமுராய்படங்கள் மனிதனின் பேராசைகள், அகம்பாவம், அதிகார போட்டி இவற்றையே மையம் கொள்கின்றன. சாமுராய்கள் ஒருவரும் நிம்மதியாக இருப்பதில்லை. ஆயுதம் அவர்களை தூங்கவிடாமல் வைத்திருக்கிறது.


தஸ்தாயெவ்ஸ்கி, ஷேக்ஸ்பியர், கார்க்கி என புகழ்பெற்ற இலக்கியவாதிகளின் படைப்புகளை குரசேவா படமாக்கியிருக்கிறார். கிங் லியரை குரசேவா ரான் என்ற பெயரில் படமாக்கியுள்ளார். மெக்பெத்தை த்ரோன் ஆப் ப்ளட் என்று படமாக்கினார். இந்த படங்கள் இலக்கிய வடிவத்திலிருந்து ஒரு திரைப்படம் எப்படி உருமாறும் என்பதற்கான எடுத்துகாட்டுகள்.  அவர் திரையில் ஷேக்ஸ்பியரை அப்படியே நகல் எடுக்கவில்லை. மாறாக எது ஷேக்ஸ்பியரின் ஆதார புள்ளியோ அதைப் புரிந்து கொண்டு ஜப்பானிய கலச்சார சூழலுக்கு ஏற்ப மறுஉருவாக்கம் செய்கிறார். அந்த சவாலே குரசேவாவை முக்கிய இயக்குனராக்குகிறது.


ஷேக்ஸ்பியர் உருவாக்கிய கதாபாத்திரங்களில்  பெண்களே மிக முக்கியமானவர்கள். அவர்களை தனித்து ஆய்வு செய்யும்போது எத்தனை மாறுபட்ட மனஅமைப்புகள் கொண்ட பெண்களை கதாபாத்திரங்களாக உருவாக்கியிருக்கிறார் என்ற வியப்பு ஏற்படுகிறது. அதன் நேர் எதிர்நிலை போன்றவர் தஸ்தாயெவ்ஸ்கி. அவரது ஆண்கதாபாத்திரங்கள் அத்தனை பேரும் முக்கியமானவர்கள். எவரும் எவரை போலவும் இல்லை. அவர்களின் அகசிக்கல்களும் மொழியற்ற வேதனையும் அசலாக பதிவாகியிருக்கிறது. கடவுளின் முன்பு ஆணே மன்றாடுகிறான். பரிதவிக்கிறான். ஆண்களுக்கே கடவுள் தேவைப்படுகிறார். இந்த இரண்டையும் ஒன்றாக எடுத்து கொண்டவர் அகிரா குரசேவா. 


அவர் திரையில் உருவாக்கிய பெண்கள் மிக முக்கியமானவர்கள். அவர்கள் சிறிய கதாபாத்திரங்களாக தோன்றி மறைந்த போதும் மறக்கமுடியாதவர்கள். த்ரோன் ஆப் ப்ளட்டில் வரும் லேடி மெக்பெத் போன்ற கதாபாத்திரத்திற்காக நடித்த பெண் திரையில் ஒரு போதும் கண்ணை இமைப்பதேயில்லை. அவள் பொம்மை போலவே வருகிறாள். அந்த மென்மையான முகத்தில் தான் எத்தனை உக்கிரம். ரத்தம் குடிக்கும் ஆத்திரம்.


அது போலவே குழந்தைகள், ரெட் பியர்ட் படத்தில் ரொட்டி திருட மருத்துவமனைக்குள் வரும் சிறுவன் எத்தனை அற்புதமானவன். அவனை விரட்டி அனுப்புவதும் பசி தானே. ஒரு நாள் அவனது தந்தை உணவில் விஷம்கொடுத்து குடும்பத்தையே தற்கொலை செய்து கொள்ள வைக்கிறார். அதில் தப்பி உயிர்பிழைத்த சிறுவன் மருத்துவமனையில் உலர்ந்த உதடுகளுடன் தாங்கள் வேறு ஊருக்குபோய்விடப்போவதாக சொல்வதும் அவனது சாவை தடுக்கும் பொருட்டு  பெண்கள் கிணற்றில் நின்று கொண்டு சப்தமிடுவதும் ஒரு போதும் மறக்க முடியாத திரைக்காட்சிகள். சிறுவர்களின் கனவுகள் பெரியவர்களின் புறக்கணிப்பால் சிதறடிக்கபடுகின்றன. தங்கள் வயதை மீறி சிறுவர்கள் நடந்து கொள்ள வேண்டிய சூழலே உருவாகிறது என்றே குரசேவா சுட்டிகாட்டுகிறார். அவரது கடைசி திரைப்படம் மதோதயாவும் சிறுவனை பற்றியதாக உள்ளது. அந்த சிறுவன் மாறுபட்டவன். அவன் கற்று கொள்வதன்வழியே மட்டுமே உலகை அறிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறான். அங்கே தான் குரசேவா முதன்முறையாக தனது சொந்த குரல் கொண்ட ஒரு சிறுவனை உருவாக்கியிருக்கிறார். அவன் அகிரா குரசேவா தான்.


தனது திரைப்படங்களின் வழியே குரசேவா கற்றுக்கொடுக்கிறார். வாழ்வின் துக்கங்களையும் வலிகளையும் அவமானங்களையும் நேர் கொண்டு கடந்து செல்லும்படியாக வழிகாட்டுகிறார். சந்தோஷங்கள் அதிகம் நிலைத்திருப்பதில்லை என்பதை சுட்டிகாட்டுகிறார்.  எளிய மனிதர்களை கூட நெருக்கடியே ஏமாற்றுதனம் செய்ய வைக்கிறது. ஆனால் எல்லா மனிதனும் என்றாவது தன்னை உணரக்கூடும். அந்த நிமிசம் அற்புதமானது. அது மகத்தான ஒரு நிலை என்கிறார்.


ஜப்பானின் ஆழ்ந்த நம்பிக்கைகள், ஜப்பானியர்களின் இயல்புகளை குரசேவா உண்மையாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதை கைவிட்டு அவரது கதைகளை மட்டுமே மறுஉருவாக்கம் செய்த ஹாலிவுட் படங்கள் அதிக வரவேற்பில்லாமல் போனதற்கு அதுவே காரணம். குரசேவாவின் திரைப்படங்கள் இன்று வரை புதிய இயக்குனர்களை உத்வேகம் கொள்ள வைத்தபடியே உள்ளன.


வெஸ்டர்ன் திரைப்படங்களை உருவாக்கி சாதனை செய்த செர்ஜியோ லியோன் போன்ற திரைமேதைகள் உருவாவதற்கு குரசேவா தான் காரணமாக இருந்திருக்கிறார். தான் அகிரா குரசேவா படங்களை பார்த்து அதை போல ஒன்றையாவது உருவாக்கிவிட வேண்டும் என்று தான் திரைப்படங்களை உருவாக்க ஆரம்பித்தேன் என்று செர்ஜியோ லியோன் தனது நேர்காணலில் குறிப்பிடுகிறார்.


புகழ்வெளிச்சத்தின் ஊடே அதிகம் கவனம் கொள்ளப்படாத ஆனால் மிக முக்கியமான இரண்டு குரசோவாவின் படங்கள் STRAY DOG, Scandal .  .  இந்த இரண்டையும் நான் பத்திற்கும் மேற்பட்ட முறை பார்த்திருக்கிறேன். அற்புதமான படங்கள்.பத்திரிக்கைகள் தனது விற்பனைக்காக பொய்யான ஒரு செய்தியை உருவாக்கி எப்படி ஒரு பாடகியின் வாழ்க்கையை சிக்கலாக்குகிறது என்பதே ஸ்கேண்டல்  படம். ஒவியரான இசிரோ மலைப்பிரசேதம் ஒன்றில் படம் வரைந்து கொண்டிருக்கிறான். அந்த வழியாக தற்செயலாக வரும் பாடகி மியகோவை தனது பைக்கில் அழைத்து சென்று உதவி செய்கிறான். அழகியான அவளோடு வழியில் ஒரு இடத்தில் தங்குகிறான். அதை ஒரு பத்திரிக்கை புகைப்படக்காரன் ஒளிந்து படமெடுத்து அவர்களுக்குள் காதல் என்று புரளியை கிளப்பிவிடுகிறான்.


அது இருவரையும் பாதிக்க துவங்குகிறது. நகரமே கிசுகிசுவை பற்றி உற்சாகமாக பேசிக் கொள்கிறது. இருவரும் பத்திரிக்கை மீது வழக்கு தொடுக்கிறார்கள். இதனால் கடுப்பான பத்திரிக்கை உடனே அவர்களை பற்றி இன்னும் மோசமாக எழுத துவங்குகிறது.  அதை எப்படி எதிர்கொள்கிறார்கள் ,பொய்செய்திகள் சிலரது வாழ்வை எப்படி புரட்டி போடுகிறது என்பதே படம்


படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் இசிரோவிற்காக வழக்கை நடத்த உள்ள வழக்கறிஞர். அவன் ஒரு ஏமாற்றுகாரன். தோற்றுபோன வழக்கறிஞன். மிதமிஞ்சிய குடிகாரன். அவன் அந்த வழக்கை தான் வெற்றிகரமாக நடத்தி தருவதாக பணம் பறிக்கிறான். பத்திரிக்கை முதலாளிகளிடம் பணம் வாங்கி கொண்டு இசிரோவை அவன் ஏமாற்றுகிறான். இதை அறிந்து கோபமான இசிரோ அவனை தேடி  அவனது வீட்டிற்கு போகிறான். அங்கே உடல்நலமற்று பல மாதங்களாக படுக்கையில் கிடக்கும் வழக்கிறஞரின் மகளை காண்கிறான். நோய்மையுடன் மரணத்தை எதிர்பார்த்தபடியே தனித்து வாழும் அவளது அன்பும் அக்கறையும் இசிரோவை நிலை குலைய செய்கிறது.


அந்த பெண்ணிற்கு உதவி செய்கிறான். அவளுக்காக கிறிஸ்துமஸ் பரிசுகள் வாங்கி தருகிறான். தன்னை ஏமாற்றியவனின் மகள் என்ற போதும் அவளது துயரம் இசிரோவை உலுக்கிவிடுகிறது. அவளுக்காக வழக்கறிஞரை மன்னிக்க தயார் ஆகிறான். வழக்கில் தோற்பதை பற்றி கவலையில்லை என்ற மனநிலை ஏற்பட்டுவிடுகிறது. ஆனால் தன் மகள் மீது கொண்ட அன்பால் வழக்கிறிஞர் முடிவில் நீதிவிசாரணையில் உண்மையை சொல்வதோடு மகளின் துயரத்தை தன்னால் தாங்கி கொள்ள முடியாமல் தான் ஏமாற்றுகாரனி அலைகிறேன் என்று கண்ணீர்விடுகிறான்.


பொய்ச் செய்தி, கிசுகிசுப்பு, ஏமாற்றுதனம் என்று பரபரப்பாக துவங்கிய படத்தின் ஊடாக மிக உயர்வான நாவலின் அத்யாயங்கள் போன்ற இந்த பகுதியை உருவாக்கியது தான் குரசேவாவின் சாதனை.


தெருநாய் (STRAY DOG) குரசேவாவின் உன்னதமான படம். இப் படத்தினை எனக்கு மிகவும் பிடித்திருப்பதற்கான முதற்காரணம் படம் முழுவதும் வெயில் வழிந்தோடுகிறது. இவ்வளவு தீவிரமாக கோடைகாலத்தை படமாக்கிய இயக்குனர் எவருமில்லை. வீட்டில் படம் பார்த்து கொண்டிருக்கும் போது கூட கழுத்தில் முகத்தில் வியர்வை வழிவதுபோன்ற உணர்ச்சியை ஏற்படுத்த கூடியது படத்தின் காட்சிகள்.1949ம் ஆண்டு  வெளியான இந்த படம் போலீஸ்காரனின் அலைச்சல்களையும் ஏமாற்றத்தையும் பேசுகிறது. அதுவே இதன் முன்பு திரையில் காணாத ஒரு புதுத்தளம். டோக்கியோ நகரில் முராகமி என்றபோலீஸ் துப்பறிவாளன் ஒரு நாள் பேருந்தில் செல்லும் போது அவனது துப்பாக்கியை ஒரு பிக்பாக்கெட் திருடிக் கொண்டு ஒடிவிடுகிறான். முராகமி அவனை துரத்தியோடுகிறான். ஆனால் திருடன் சந்துபொந்துகளில் ஒடி தப்பிவிடுகிறான்.


துப்பாக்கியை தொலைத்த போலிஸ்காரன் அதைத் திரும்ப கண்டுபிடிக்காவிட்டால் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டுவிடுவான் என்று உயர்அதிகாரி எச்சரிக்கிறான். தனது துப்பாக்கியை தேடி போலீஸ்காரன் அலைவதே படம். திருடன் எதற்காக துப்பாக்கியை திருடினான். அவனை எங்கே போய் தேடுவது என்று தெரியாமல் டோக்கியோவின் கோடை வெயிலில் வெக்கை வழிய தெருநாய் போல அலைந்து திரிகிறான் முராகமி.
அவனது கண்களில் பகலின் வெளிச்சம் கத்தி போல மின்னுங்கிறது.


துப்பாக்கியை தொலைத்துவிட்ட ஆத்திரம். கண்டுபிடிக்க முடியாத ஆதங்கம். கோடை தன்னை வதைக்கிறதே என்ற இயலாமை, எங்கேயிருந்து இந்த தேடுதலை துவங்குவது என்று தெரியாத குழப்பம் அத்தனையுமாக அவன்  அலைகிறான். படத்தின் துவக்கத்தில் நாயின் நாக்கு துடித்து கொண்டிருக்கும் ஒரு காட்சி இடம் பெறுகிறது. அந்த துடிப்பு முடிவில்லாதது. தெருநாய்கள் கைவிடப்பட்டவை. அவை தன் அலைச்சலின் வழியே மட்டுமே தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியும். போலீஸ்காரன் கண்களின் வழியே ஜப்பானின் கோடை விரிகிறது.


உதிர்ந்த பூக்கள் வெயில் தாங்க முடியாமல் வாடிப்போவது போல சுருங்கி போகிறார்கள் மனிதர்கள். தண்ணீரை அருந்தும் முகங்கள், விசிறிக் கொண்டே பேசும் ஆட்கள், வெயில் குடைகள். குளிர்பானங்கள், காலியான வீதிகள், நிழலில் மயங்கி கிடக்கும் தொழிலாளிகள். கோடை கருணையற்றது என்பதை காட்சிகள் விளக்குகின்றன. அந்த கோடையின் ஊடே தனது துப்பாக்கியை தேடி அலைகிறான் போலீஸ்காரன். எவ்வளவு பெரிய முரண் பாருங்கள்.


இந்த சூழலில் அந்த துப்பாக்கியை பயன்படுத்தி ஒரு கொலை நடந்துள்ளதாக தகவல் கிடைக்கிறது. முராகமி பயந்து போய்விடுகிறான். அது மட்டும் உண்மையானால் தனது வேலை காலி என்று பதற்றமாகிறான். அதை பற்றி உடனே விசாரிக்கிறான். அது அவனது துப்பாக்கியில்லை என்று நம்புகிறான். எப்படியாவது தனது துப்பாக்கியை மீட்டு கொள்ள வேண்டும் என்று அல்லாடுகிறான். அவனுக்கு உதவி செய்வதற்காக அவனது துறையின் மூத்த அதிகாரியான சாதோ உதவி செய்ய முன்வருகிறார்.


குரசோவா உருவாக்கிய கதபாத்திரங்களில் இவர் மிக முக்கியமானவர்.  அவருக்கு அந்த நகரில் வாழும் அத்தனை திருடர்களையும் தெரியும். அவர்கள் எப்படி திருடுவார்கள். திருடிய பொருளை என்ன செய்வார்கள். யாருக்காக திருடுகிறார்கள் என்று துல்லியமாக அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களை அவர் ஒரு போதும் மோசமாக நடத்துவதோ, குற்றவாளி என்று கடுமையாக தண்டிப்பதோயில்லை. அவர்களும் சாதோவை நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள்.


சாதோ திருட்டிற்கு உதவி செய்யும் ஒரு பெண்ணை பற்றி சொல்லி அவள் நிச்சயம் அன்று நீ பயணம் செய்த பேருந்தில் வந்திருப்பாள். அவள் நினைத்தால் உனக்கு உதவி செய்யமுடியும் என்று சொல்கிறார். முராகமி அந்த பெண்ணை தேடி ஒரு இடத்தில் காத்திருக்கிறான். அவள் தனக்கு எதுவும் தெரியாது என்று மறுக்கிறாள். ஆனால் அவளை அன்று பேருந்தில் தான் பார்த்தாக உறுதியாக சொல்கிறான் முராகமி.  அவள் தன்னை சந்தேகிக்க வேண்டாம் என்று தப்பிபோகிறாள். அவள் பின்னாடியே துரத்துகிறான். ஆனால் அவன் நினைத்தது போல திருட்டை மீட்பது எளிதானதில்லை.


அது கைமாறி போய்க் கொண்டேயிருக்கிறது. அலைந்து திரிந்து ஒரு நிலையில் அவன் குற்றவாளிகளின் உலகில் ஒரு பிச்சைகாரனை போல மாறிவிடுகிறான். யாரை பார்த்தாலும் சந்தேகம் வருகிறது. யார் மீதோ கோபபடுகிறான். தொலைத்த துப்பாக்கி அவன் மனதில் ஊசலாடிக் கொண்டேயிருக்கிறது.
திருட்டு ஒரு பின்னல்வலை. அதன்பின்னே எண்ணிக்கையற்ற மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வெறும் அம்புகள். அதை இயக்குபவன் வேறு யாரோ என்பதை அறிகிறான். திருட்டு பொருளை மீட்க சென்ற இடத்தில் உணவு தட்டுபாடில் மக்கள் படும் அவஸ்தையும், இருப்பிடமின்றி குடிநீர் இன்றி மக்கள் படும் பாட்டையும் பார்க்கிறான். அவனது வேதனையை விட பலமடங்கு மக்கள் அன்றாடம் வேதனைபடுகிறார்கள் என்பது புரிகிறது. அவன் மனது அதற்காக வேதனைபடுகிறது.


தனது உயர்அதிகாரியிடம் தன்னால் துப்பாக்கியை கண்டுபிடிக்கமுடியவில்லை என்று சொல்லி புலம்புகிறான். அவர் ஒரு நாள் முராகமியை தனது வீட்டிற்கு அழைத்து போகிறார். அங்கே சாதோவின் குழந்தைகள் வெயில் தாங்கமுடியாமல் அப்படியே சுருண்டு உறங்கி கொண்டிருக்கிறார்கள். அந்த வீடும் சூழலும் பிள்ளைகளும் சாதோவின் மனைவியின் அன்பும் வெகு அற்புதமாக படமாக்கபட்டிருக்கிறது. குழந்தைகள் விளையாடி போட்ட பொம்மைகள் அருகில் கிடக்கின்றன. அதுவும் கோடை தாங்காமல் உறங்குவது போன்றே தோன்றுகிறது.தனது வெற்றிகள் எதுவும் பெரிய விசயமில்லை. போலீஸ்காரன்  ஒரு எளியைமான ஒரு குடும்ப வாழ்க்கை உருவாக்கி கொள்வது பெரிய சவால் என்று சாதோ அவனுக்கு புரிய வைக்கிறார்.


முராகமி தனது துப்பாக்கியை தேடி அலையும் அலைச்சல் மெல்ல திசைமாறுகிறது. துப்பாக்கியை திருடியவனின் காதல்கதையாக அது மாற்றம் கொள்கிறது. குரசேவா தவிர வேறு ஒரு இயக்குனரால் இப்படியொரு கதைபின்னலை உருவாக்கவே முடியாது. கோடையில் மழை வரப்போகிறது என்பதை போல திருடனை காதலிக்கும் பெண் இடம்பெறுகிறாள். அவள் வழியே திருடன் பற்றிய தகவல்கள் வெளியாகின்றன.


அவன் காதலுக்கும் அன்றாட உலகின் நெருக்கடிக்கும் இடையில் சிக்கி அல்லாடுகிறான். ஒரு வகையில் போலீஸ்காரனின் மறுபிம்பம் போலவே திருடன் இருக்கிறான். திருடனை காதலிக்கும் பெண் நடனமாடுகிறவாளக இருக்கிறாள். அந்த நடனகுழுவும் அங்கே பெண்கள் வெக்கையோடு நடனமாடிவிட்டு ஒடிவந்து ஆங்காங்கே சாய்ந்து படுத்து ஆசுவாசம் கொள்வது எத்தனை அற்புதமான காட்சியது. குரசேவாவின் படம் கலையின் உச்சபட்ட சாதனை என்பதற்கு இதன் உள்அடுக்குகளும் அதன் தீவிரத்தன்மையும் சான்றாக இருக்கிறது.


திருடனை பிடிப்பதற்காக வலைவிரிக்கிறான். திருடனுக்கோ விளையாட்டு போட்டிகளை காண்பதில் அதிக ஆர்வமிருக்கிறது. அந்த போட்டி நடக்கும் மைதானமும் வெயிலை மறந்து மக்கள் விளையாட்டினை ரசிப்பதும் விளையாட்டின் ஊடாக திருடினை பிடிக்கும் ரகசிய விளையாட்டு நடைபெறுகிறது. திருடன் தன்னை பிடிக்க வலைவிரித்திருப்பதை அறிந்து தப்பியோட பார்க்கிறான். அதே நேரம் விளையாட்டு போட்டி முடிந்து மக்கள் வெளியேறுகிறார்கள். அதன் ஊடாக அவனை துரத்துகிறார்கள். திருடன் தப்பியோடுகிறான்.


வெகு அசலான கலைப்படைப்பு பார்வையாளளின் சமன்கலைத்து அவனை நிம்மதியற்று செய்துவிடும். அவன் கதாபாத்திரங்களின் விதியை நினைத்து துயரம் கொள்பவனாகிவிடுவான். அவர்கள் கற்பனையில் உருவான புனைஉருவங்கள் என்பதை தாண்டி அவர்களுடன் தனக்கு ஏற்பட்ட நெருக்கமான உறவு ஏற்பட்டுள்ளதை உணர்ந்து கொள்வான். அவர்களின் மீட்சிக்காகவும் இழப்பிற்காகவும் செயல்பட துவங்குகிறான். நிகழ்உலகிற்கும் திரை உலகிற்கும் இடையில் உள்ள இடைவெளி அழிக்கபட்டு இரண்டு ஒன்று கலக்க துவங்கிவிடுகிறது . அதுதான் குரசேவாவின் மேதமை.


படம் போலீஸ்காரனை பற்றியது. ஆனால் அவனது சாகசத்தை அது விவரிக்கவில்லை. மாறாக மனஅவஸ்தையை விவரிக்கிறது. எப்போதுமே அகிரா குரசேவாவின் முக்கிய கவனமாக இருப்பவர்கள்  பெண்களும். அவர்களே கதையை முன்நகர்த்துகிறார்கள். இப்படத்தில் திருட்டு துணை செய்யும் பெண், சாதோவின் மனைவி, திருடனை காதலிக்கும்பெண், அவனது தாய் என்று பல்வேறு விதமான பெண்கள் இடம்பெறுகிறார்கள். அத்தனை பேருக்கும் பொதுவான ஒற்றுமை உள்ளது. அது அவர்கள் தான் நேசிப்பவர்களுக்காக எதையும் செய்ய முன்வருகிறார்கள். திருடன், குற்றவாளி என்ற பேதம் அவர்களிடம் இல்லை.


திருடனின் கடந்தகாலம் எனக்கு முக்கியமில்லை. என்னிடம் அவன் எப்படி நடந்து கொள்கிறான் என்பதே முக்கியம். அவன் என்மீது கொண்டுள்ள காதல் உண்மையானது. அவனுக்காக சாவதை பற்றி கவலையில்லை என்று சொல்கிறாள் நடனக்காரி. போலீஸ்காரனின் மனைவி தனது கணவனின் சாகசங்களை தாண்டி அவன் இயல்பில் மற்றவர்களை புரிந்து கொள்ள கூடியவன் என்பதில் தான் அக்கறை கொள்கிறாள்.


டோக்கியோவின் நிழல்உலகம், அதை நம்பி வாழும் எளிய மனிதர்கள். அவர்களது குடும்பங்கள்., குடியிருப்புகள் என்று கதை நீள்கிறது. டோக்கியோவை பற்றிய அத்தனை உயர்பிம்பங்களும் படத்தின் வழியே அழித்து மறுஉருவாக்கம் கொள்கின்றன. அதே போல போலீஸ்காரன் என்றாலே அதிகாரம், அகம்பாவம் என்பது கலைந்து துப்பாக்கியை தொலைத்த போலீஸ்காரன் மீது நமக்கு இரக்கமும் அன்பும் பீறிடுகிறது. அதே அன்பையும் அக்கறையும் திருடன் மீதும் நமக்கு ஏற்பட செய்வதே அகிராகுரசோவாவின் தனித்துவம்.


**

Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: