வண்ணம் கலந்த சொற்கள்

பிரசாந்தி சேகர் எழுதிய காஃப்கா பற்றிய கட்டுரை ஒன்றை சில வருஷங்களுக்கு முன்பு வாசித்திருந்தேன். மிகச்சிறந்த கட்டுரை. நினைவிலேயிருந்தது.

நேற்றிரவு திடீரென அதை மீண்டும் வாசிக்க வேண்டும் போலிருந்தது. காலச்சுவடு இணையதளத்தில் தேடி மீண்டும் வாசித்தேன்.

அபாரமான மனஎழுச்சிதரக்கூடிய கட்டுரை. இதுவரையாரும் காஃப்கா பற்றி இப்படியொரு கட்டுரையை  எழுதியதில்லை. ஒரு எழுத்தாளனை மிகத் தீவிரமாக உள்வாங்கியிருந்தால் மட்டுமே இப்படி எழுத முடியும்.

தஸ்தாயெவ்ஸ்கி சிறப்பிதழை கோணங்கி கல்குதிரைக்காக கொண்டுவந்த போது கவிஞர் தேவதச்சன் தஸ்தாயெவ்ஸ்கிக்கு ஒரு கடிதம் எழுதினார். நேரடியாக தஸ்தாயெவ்ஸ்கியை  விளித்து ஒரு தமிழ்கவிஞன் எழுதிய கடிதமது. அற்புதமாக எழுதியிருப்பார்.

பிரசாந்தியை வாசிக்கும் போது அந்தக் கடிதம் நினைவில் வந்து போனது.

அயல்எழுத்தாளர் ஒருவரை பற்றி எழுதும் போது பெரிதும் அறிமுக நிலையில் தான் கட்டுரைகள் எழுதப்படுகின்றன. எழுத்தாளனின் ஆன்மாவை பிரதிபலிக்கும் கட்டுரைகள் குறைவே. அக்குறையை போக்கும்படி தொடர்ந்து பிரசாந்தி எழுதிவருவது மகிழ்ச்சியளிக்கிறது.

யாரோ ஒரு நவீன ஒவியர் தான் இந்தப் புனைப்பெயரில் எழுதிக் கொண்டிருக்கிறார் என நினைத்துக் கொண்டிருந்தேன்.

சமீபத்தில் தான் அவர் ஜெர்மனியைச் சேர்ந்தவர்  என அறிந்து கொண்டேன்.

பிரசாந்தியின் எழுத்து தனித்துவமானது. நிகரற்றது. கவித்துவமும் உணர்ச்சிவேகமும் ஒன்றிணைந்து செல்லும் பாய்ச்சல் கொண்டது. அவர்சொற்களை அடுக்குவதில்லை. மாறாக நீரைப்போல கரைந்தோடச்செய்கிறார். சூடேற்றுகிறார். கொந்தளிக்க வைக்கிறார். சில நேரம் சாரல் போலத் தெளிக்கிறார்.

கலைஞர்களை நேரடியாகப் பெயரை விளித்து, உரிமையோடு, உணர்வோடு எழுதும் முறையை அவரது கட்டுரைகளில் காண்கிறேன்.  உணர்ச்சி கொந்தளிப்புடன், குருதிவேகம் போல உன்மத்தமாக எழுதுகிறார். காப்காவை இப்படி தான் அணுக வேண்டும்.

அவரது Vincent  van Gogh பற்றிய  கட்டுரை வண்ணங்களைக் கரைத்து எழுதியது போலிருக்கிறது.

தனிமையின் துயரை தீவிரமாக அனுபவித்தவர்களையே அதிகம் பிரசாந்தி ரசிக்கிறார். குறிப்பாக நிராகரிப்பின் வலியை, அன்பின் வெளிச்சத்தை,  நிகரற்ற கலையின் உன்னதத்தை வியந்து வியந்து  எழுதுகிறார். பால்ய வயதில் கசப்பை, தனிமையை அதிகம் அனுபவித்தவர்களே இப்படி எழுதமுடியும். பிரிவுத்துயரை நிறைய அனுபவித்தவராக . அல்லது பிரிவின் வலியை முழுமையாக உணர்ந்தவராக இருந்தால் மட்டுமே இந்த எழுத்து சாத்தியம்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் விடுமுறை நாள் ஒன்றில் ஒருமுறை வழக்கறிஞராக நண்பரைக் காணச்சென்றிருந்தேன். அந்த படிக்கட்டுகள். விசித்திரமான அறைகள். திடீரென ஒரு மாடிப்படியில் காஃப்கா அழைத்துக் கொண்டு போகப்படுவதைப் போலவே உணர்ந்தேன். உலகின் எல்லா நீதிமன்றங்களிலும் ஒரு காஃப்கா உலவிக் கொண்டுதான் இருக்கிறார். நம்மை கடந்து செல்லும் போது அவரது தலை நிமிர்வதேயில்லை.

Virginia Woolf , susan sontag போன்ற உலகப்புகழ் பெற்ற பெண் எழுத்தாளர்களுக்கு  நிகரானது பிரசாந்தியின் எழுத்து. பிரசாந்தி சேகரின் கட்டுரைகள் எத்தனை வந்திருக்கின்றன. அவை தொகுக்கப்பட்டிருக்கிறதா எனத்தெரியவில்லை. தனிநூலாக வெளியாகியிருந்தால் அதை வாசிக்க ஆவலோடு இருக்கிறேன்.

இணைப்பு

http://www.kalachuvadu.com/archives/issue-170/%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE

Archives
Calendar
November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Subscribe

Enter your email address: