யானை பார்த்தல்


மகாபலிபுரத்தில் ஒரு கல்யானையின் முன்னால் அமர்ந்திருக்கிறேன். அதை பார்க்க பார்க்க மனது களிப்புறுகிறது. யானை பார்ப்பது என்பது பால்யத்தின்  விளையாட்டு.  வீதியில் யானை வரும்போது யானையை பார்க்க குழந்தைகளும் பெண்களும் ஆசையாக வீதிக்கு வருவார்கள். வாசற்படி தாண்டால் நின்று வேடிக்கை பார்க்கும் இளம் பெண்களும் உண்டு.  யானை கம்பீரமாக அசைந்து உலா போகும். என்ன பார்க்கிறார்கள்யானையிடம் என்ன பார்க்கிறார்கள். மஹாமௌனம் கண்முன்னே ஊர்ந்து போகிறது. யானை தன்னை வேடிக்கை பார்க்கும் உலகின் மீது அக்கறை கொள்வதில்லை. அது தன்னியல்பில் நடக்கிறது. யானையின் வழியாக எதையோ பார்க்கிறார்கள். உலகில் வேறு எந்த மிருகமும் இவ்வளவு வியப்போடு திரும்ப திரும்ப பார்க்கபடுவதேயில்லை.


நம்மால் ஆசையோடு கட்டிக் கொள்ள முடியாத, கையில் தூக்கி கொஞ்ச முடியாத, ஆனால் நமக்கு பிடித்தமான வளர்ப்பு மிருகமாக யானையை நினைக்கிறோமா? யானையை காணும் கண்கள் ரகசியமாக சிரித்து கொள்கின்றன. அதில் யாரையோ பரிகசிப்பது ஒளிந்திருக்கிறது.


தெருபுழுதியை தன்மீது ஏற்றிக் கொண்டு யானை கடந்து போகிறது. அருகாமையில் கடந்து செல்லும் ரிக்ஷாக்கள், சைக்கிள்களை அது போட்டியாக நினைப்பதேயில்லை. யானை செல்கிறது .திரும்பி பார்க்காத நடையது. உடல் அழகு என்பதை யானை தான் புரிய வைக்கிறது. அதன் விசிறி செல்லும் காதுகளுக்கு  உலகின் ஒசைகள் போதுமானதாகயில்லை.


ஒரு சிறுவன் யானையின் வாலை பிடித்து தொங்க ஆசைப்படுவது போல பின்னாடியே போகிறான். அவன் நடை யானையை பரிகாசம் செய்கிறது. ஆனால் தன்னை பரிகசப்பதை யானைகள் வெறுப்பதேயில்லை. தெருநாய் ஒன்று ஆதங்கத்துடன் யானையை பார்க்கிறது. என்ன நினைத்திருக்கும். ஆனால் நாயின் பார்வை யானையின் மீது பட்டு வெறுப்போடு திரும்புகிறது. தெருநாய்களை எவரும் வியப்பதேயில்லை. அது யானையை பார்த்து குரைக்கவில்லை. சலிப்போடு மீண்டும் அதே இடத்தில் படுத்து கொள்கிறது. யானை நடந்த தடங்கள் வீதியெங்கும் நீள்கின்றன. யானை கண்ணில் இருந்து மறைந்தும் நீண்ட நேரம் மனதில் மறையாமலே இருக்கிறது.


பத்து வயதில்கோவில் வாசலில் நிற்கும் யானையை காண்பதற்காகவே கோவிலுக்கு போதுவண்டு. எல்லா ஊர்களிலும் யானைகள் இருப்பதில்லை. யானை இல்லாத ஊர்சிறுவர்கள் எப்படியாவது ஒரு யானையை கடத்தி கொண்டுவிட ஆசைப்படுகின்றவர்களே. அவர்கள் காகிதத்தில் யானை செய்கிறார்கள். துணியை யானையாக்கி விளையாடுகிறார்கள் நிழல்கள் வழியாக யானையை சுவரில் நடக்க வைக்கிறார்கள்.. அன்று துவங்கிய யானை பார்க்கும் வியப்பு இன்றும் அடங்கவேயில்லை.


ஒரே வேறுபாடு நிஜயானைகளை விட கல்யானைகள் அதிகம் பிடிக்கிறது. ஏனோ நிஜமான யானைகளை விட கல்யானைகள் எப்போதுமே கூடுதல் வசீகரம் கொண்டிருக்கின்றன. கல்யானைகளிடம் பயமில்லை. அதை நெருங்கி தொடவும் தடவிக் கொள்ளவும் ஆசைப்படாதவர் எவர் இருக்ககூடும்.
கல்யானைகள் சாந்தமானவை. அதன் நினைவில் காடுகள் .இல்லை. கல்யானை சிற்பங்களை யார் உருவாக்கியது. எல்லா கற்களுக்குள்ளும் யானை ஒளிந்திருக்கிறதா? தூரத்து மலைகள் ஏன் எப்போதும் யானை என்றே தெரிகிறது.என் பால்யத்திலிருந்து கோவில்களில் கல்யானைகளை பார்த்து கொண்டேயிருக்கிறேன். அந்த கண்கள் பாதி திறந்தும் பாதி மூடியும் லயத்து கிடக்கின்றன. காதுகள் அசைவதில்லை.  நெற்றிபூடம் அலங்காரமாக இருக்கிறது. உயர்த்திய கால்களுடனோ, தும்பிக்கையுடனோ அது உறைந்து நிற்கிறது. கல்யானையின் மௌனம் கலைக்க முடியாதது. அது பசியற்றது. உறக்கமற்றது. அல்லது நித்ய விழிப்புநிலை.


எல்லா வயதினருக்கும் யானையை பிடிக்கிறது.  யானையை தடவி பார்த்த குருடர்கள் சொன்ன கதை போல தான் கல்யானையை பார்ப்பவர்களும். அவரவர் மனதிற்கு.  ஏற்ப அதை பற்றிய கதையை சொல்கிறார்கள். உருவாக்கி கொள்கிறார்கள்.


ஒரு மழைநாளில் கோவிலின் கல்யானை முன்பாக ஒரு சிறுமி வாழைப்பழம் தேங்காயும் வைத்துவிட்டு அது சாப்பிடுமா என்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள். கல்யானைகளுக்கு சபலமில்லை. அவை அந்த வாழைப்பழங்களை சலனமற்று பார்க்கின்றன.


சிறுமி  தான் எடுத்து சாப்பிட்டுவிடுவேன் என்று பாசாங்கு காட்டுகிறாள். யானையிடம் சலனமில்லை. அவளது கைகள் பரிவோடு யானையின் துதிக்கையை தடவிக் கொடுக்கின்றன. நிஜயாûனையின் மூச்சொலி  போல கைகளில் பெருமூச்சு படியாமல் இருப்பதை கண்டு அவள் மேலும் ஸ்நேகம் கொள்கிறாள்.


கல்யானைகள் எதையோ யோசித்து கொண்டிருக்கின்றன. ஒரு யானையின் முன்பாக எவ்வளவு நேரம் உட்கார்ந்திருக்க முடியும். கோவிலின் கல்யானைகளை பார்த்தபடியே தங்களது மாலை நேரத்தை முழுமையாக கழிக்கும் சிலரை கண்டிருக்கிறேன். அவர்கள் பார்வையை விலக்குவதேயில்லை. கற்கள் உற்று கவனிக்க துவங்கியதும் சலனம் கொண்டுவிடுகின்றன. தொட்டி மீன்களை போல அது அசைவதை நம்மால் உணர முடியும். கல்யானைக்கு கரும்பு தந்த கதை நம் ஊரில் இருக்க தானே செய்கிறது.


பெரும்பான்மை கல்யானைகளின் கண்கள் எதையோ ரகசியமாக பார்த்து கொண்டிருப்பதை போலவே இருக்கின்றன. யானையை கடித்து பார்க்க வேண்டும் என்றே சிறுவர்கள் விரும்புகிறார்கள். ஒரு தின்பண்டத்தை போல அதை ஆசையோடு கடித்து பார்த்தால் எப்படியிருக்கும் என்று ரகசியமாக  யோசிக்கிறார்கள். தன் சிறிய கால்களால் யானைகளை மிதித்து ஏறுகிறான். ஒரு சிறுவன். கல்யானையை சைக்கிள் ஒட்டுவது போல ஒட்டுகிறான். இன்னொருவன் அவனை தள்ளிவிட்டு தான் மேலே ஏறி அதை குதிரை போல ஒட்டி போகிறான்.ஒரு வயதானவர் அவர்களை திட்டி இறங்க சொல்கிறார். பிறகு அவர் அதன் பருத்த வயிற்றை பார்த்தபடியே நிற்கிறார். அருகில் சென்று ஆசையுடன் அதன் நெற்றியை பரிவோடு தடவி கொடுக்கிறார். எந்த யானையை பார்த்து உருவானது இந்த கல்யானை. ஏதோ கனவு காண்பது போல கல்யானைகள் எப்போதும் தன்னை மறந்து கிடக்கின்றதா?


மகாபலிபுரத்தின் யானை சிற்பங்களை கண்டிருக்கிறீர்கள் தானே. அவை கல்லை மீறி ஒடி விடத் துடிப்பவை. அந்த யானைகள் உன்மத்தம் கொண்டிருக்கின்றன.  அதே கல்யானையை ஒரு இரவு நல்ல நிலா வெளிச்த்தில் கண்டேன். ஆஹா.. என்ன அழகு. அந்த யானையின் கண்கள் நிலவை வெறித்தபடியே இருக்கின்றன.  நீரில் அசைந்து மிதப்பது போன்று நிலாஒளியில் யானை தென்படுகிறது. மனம் நழுவிப்போய் அதை பார்த்து கிறங்கி கிடக்கிறேன்.


போதை ஏறிய ஒரு மனிதன் தன் ஆசை தீராமல் அதை காதலியை போல தடவிக் கொடுத்து  முத்தமிடுகிறான். கல்யானையை முத்தமிடுவதற்கு கூட ஏன் கூச்சம் வருகிறது.. யானைகள் கனவில் வருவது அதிர்ஷடம் என்பார்கள். புத்தனின் தாய் கருவுற்ற நாளில் அவள் கனவில் யானை வந்திருக்கிறது. புத்தனை யானை என்றே சொல்கிறார்கள்.


யானையின் கண்களும் எறும்பின் கண்களும் ஒன்றாக தான் உலகை காண்கின்றன என்று புரிய வைத்தவன் புத்தன்.  ஆண்டாளின் கனவில் யானை வருகிறது. அவள் யானையோடு பேசுகிறாள். கோபித்து கொள்கிறாள். சொற்களால் உருவாக்கபடும் யானைகள் விசேசமானவை. அவை மனிதசுபாவமே அதிகம் கொண்டிருக்கின்றன


ஆண்களின் கனவில் யானைகள் வருகின்றனவா? அலைந்து திரிந்த இருபது வயதில் ஒரு நாள் கனவில் யானை வந்தது. பச்சை நிறத்திலான யானை. கடலின் முன்பாக அது நின்று கொண்டிருந்தது. முப்பது நாற்பது அடி உயரமிருக்ககூடும். கண்கொள்ள முடியவில்லை.  அதன் துதிக்கைகள் என்னை நோக்கி நீள்கின்றன. தப்பியோடுகிறேன். யானை மறையவேயில்லை. திடுக்கிட்டு விழித்தபோது என்ன கனவு அது என்று புரியவில்லை. பின்பு யானை கனவில் நுழையவேயில்லை.


யானையின் துதிக்கையில் சுருண்டு உறங்கும் ஒரு இளம்பெண்ணின் இந்தோனேஷியா ஒவியம் ஒன்றை பார்த்தேன். அந்த மயக்கமும் யானையும் பெண்ணும் கொண்டுள்ள நெருக்கமும் பெண்ணின் மஞ்சள் நிற ஆடைகளும் உடல்தொய்வும், தானே ஒரு தந்தமாக இருப்பதை போலவே தோன்றியது. மனித மனம் எவ்வளவு விந்தையானது. எதெற்கெல்லாம் ஆசைப்படுகிறது பாருங்கள். எப்படியெல்லாம் சிருஷ்டிக்கிறது.


யானையின் தந்தங்கள் போல மனவுறுதி வேண்டும் என்று கபீரின் ஒருவரி நினைவிற்கு வருகிறது.   சிறு வயதில் ஏதோ ஒரு பூங்காவில் மண்ணால் செய்யப்பட்ட யானை ஒன்றின் வயிற்றுள் சென்று வாய் வழியாக வெளியே வந்தேன். அந்த நிமிசம் ஏற்படுத்திய சிலிர்பு அற்புதமானது. வாழ்வில் ஒரு போதும் சாத்தியமாகாத அதிசயமில்லையா அது.


யானையின் வயிறு ஒரு வெற்றிடம் என்று அந்த வயதின் மனது சொன்னது. அதிலிருந்து எந்த யானையை பார்த்தாலும் அதன் வயிற்றில் உள்ளே சென்று வெளியே வந்தால் என்ன வென பால்ய கனவுகள் துளிர்விட்டது. யானைகளை வேடிக்கை வடிவமாக எப்போதும் நினைக்கிறார்கள். யானைகள் போர் செய்யும். யானையின் காமம் தீர்க்கபட முடியாது. ஏதேதோ நினைவில் தோன்றி மறைகிறது. .


கல்யானை அசைவற்றிருக்கிறது. என் மனம் நிலை கொள்ளாமல் அசைந்து கொண்டிருக்கிறது..
*

Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Subscribe

Enter your email address: