பதின் நாவல் குறித்து

பதின் – எஸ். ராமகிருஷ்ணன்

கணேஷ்பாபு, சிங்கப்பூர்

உலகளவில் குழந்தைகளுக்கான நாவல்கள் எப்போதுமே அதிகளவில் வாசிக்கப்படுவதும், விவாதிக்கப்படுவதும், உடனடியான ஒரு வெளிச்சத்துக்கு வருவதும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. பெரியவர்களுக்கான புனைவுகளை விடவும் சிறார்களுக்கான புனைவுகள் பரவலாக கவனிக்கப்படுவதும் நம் சூழலில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. இன்றும் உலகின் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு சிறார் நாவல் பற்றிய விமர்சனமும், அதைக் குறித்த விவாதங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தமிழில் எழுதப்பட்ட சிறார் நாவல்களுக்கு இது நிகழ்கிறதா என்று பார்க்கையில் ஆங்கிலத்தில் வெளியாகும் சிறார் நாவல்களைக் காட்டிலும் பரவலான வாசிப்பு இன்னும் பெருகவில்லையாயினும் தீவிர வாசிப்புத் தளத்தில் இருப்பவர்கள் இவற்றை வாசித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தங்களால் இயன்ற வரை சிறார் நாவல்கள் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, நல்ல சிறார் நாவல்களை பொது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியவண்ணம் இருக்கும் எத்தனையோ நபர்கள் தமிழில் இருக்கிறார்கள்.

உலகளவில் இப்படி வெளியாகக்கூடிய சிறார் நாவல்களை என் வாசிப்பனுபவத்தில் மூன்று விதமாகப் பகுக்க விரும்புவேன். முதல் வகை சிறார் நாவல்கள், சிறார்களுக்கேயுரிய தனித்துவமான கற்பனையை மையமாகக் கொண்டு எழுதப்படும் நாவல்கள். சிறார்கள் பொதுவாக தங்கள் பெற்றோராலும், ஆசிரியராலும், வீட்டிலுள்ள இதர பெரியவர்களாலும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதும், கட்டுப்படுத்தப்படுவதுமான யதார்த்த சூழலை விட்டு விலகி கற்பனையில் தங்களுக்குத் தாமே சிறகு கட்டிக் கொண்டு பறக்கத் துவங்குகிறார்கள். அவர்களுக்கேயுரிய அந்த கற்பனை உலகில் அவர்களை கட்டுப்படுத்தக்கூடிய சக்திகளுக்கு இடமேயில்லை. ஆதலால், இந்த கற்பனையுலகில் முடிவற்று சஞ்சரிக்க விருப்பப்படுபவர்களாக இருக்கிறார்கள் குழந்தைகள். குழந்தைகளின் இந்த அபாரமான கற்பனையைக் குறிவைத்து எழுதப்படும் நாவல்கள் முதல் வகையில் அடங்கும். முற்றிலும் யதார்த்ததுக்குப் புறம்பான, கற்பனை அம்சம் மிகுந்த Fantasy வகை நாவல்கள் இவை. உலகளவில் எழுதப்படும் சிறார் நாவல்களில் இவ்வகை நாவல்கள் இன்றும் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கின்றன. லூயி கரோலின்(Lewis Carol) “Alice in Wonderland” (எஸ். ராமகிருஷ்ணன் இந்நாவலைத் தமிழில் “ஆலிஸின் அற்புத உலகம்” என்று மொழிபெயர்த்திருக்கிறார்), ஜோனதன் ஸ்விப்ட் (Jonathan Swift) எழுதிய Gulliver’s travels (யூமா வாசுகியின் மொழிபெயர்ப்பில் “கலீவரின் யாத்திரை” என தமிழில் வெளிவந்துள்ளது, உலகளவில் இன்று அதிகம் பேசப்படும் “லில்லிபுட்” மற்றும் “யாகூ” ஆகிய பெயர்கள் இந்நாவலில்தான் முதன்முதல் இடம்பெற்றன.  டோல்கின் (J.R.R Tolkien ) எழுதிய “லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்” (Lord of the Rings) போன்ற நூல்களிலிருந்து இன்றைய ஹாரி பாட்டர் (Harry Potter) வரை இவ்வகை நூல்களுக்கான உதாரணங்களை அடுக்கலாம்.

இரண்டாம் வகை நூல்கள் முற்றிலும் யதார்த்த தளத்தில் எழுதப்படும் சிறார் நாவல்கள். சிறார்களின் அன்றாட உலகில் அவர்கள் எதிர்கொள்ளும் சின்னச் சின்ன இன்ப துன்பங்கள், வேடிக்கைகள், துடுக்குத்தனங்கள், சிறு சாகசங்கள் என அவர்களின் அகநிலையையும் உளவியலையும் நுட்பமாகப் பிரதிபலிக்கும் நாவல்கள் இவ்வகையில் அடங்கும். மார்க் ட்வைன் (Mark Twain) எழுதிய “Adventures of Tom Sawyer and Huckleberry Finn” என்ற நாவலை இதற்குச் சரியான உதாரணமாகச் சொல்லலாம். இந்திய அளவில் ஆர்.கே. நாராயண் எழுதிய “Swami and friends” ( தமிழில் “சுவாமியும் நண்பர்களும்”) என்ற நூலையும் உதாரணமாகச் சொல்லலாம்.

மூன்றாம் வகை நூல்கள் சிறுவர் உலகின் துன்பியல் சம்பவங்களை மட்டுமே பிரதானமாக எழுதிச் செல்லும் நாவல்கள். எல்லோருக்கும் பால்யம் என்பது இனிமையான அனுபவங்கள் நிறைந்ததல்ல. சிலரது வாழ்வில் பால்யம் என்பது இருண்மையான சித்திரங்கள் நிறைந்ததாகவும், துன்பங்கள் மலிந்தாகவும் இருப்பதையும் காண்கிறோம். அத்தகையோருக்கு பால்யம் என்பது எப்போதும் ஒரு கொடுங்கனவுதான். அப்படிப்பட்ட துன்பியல் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல்களில் இன்றும் முக்கியமானதாக இருப்பது சார்லஸ் டிக்கன்ஸ் (Charles Dickens) எழுதிய “Oliver Twist” (ஆலிவர் ட்விஸ்ட்). இந்த நாவல் வெளியான பின்னர் குழந்தைத் தொழிலாளர் மற்றும் வறுமையில் உழலும் குழந்தைகளின் மறுவாழ்வு குறித்து இங்கிலாந்தில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டது என்கிறார்கள்.

எஸ். ராமகிருஷ்ணனின் “பதின்” நாவல் மேலே சொன்ன மூன்று வகைகளில் இரண்டாம் வகையைச் சேர்ந்தது என்று முதல்பார்வைக்குத் தென்பட்டாலும், இந்நாவலின் பல அத்தியாயங்களும் மேலே சொன்ன மூன்று வகைகளிலும் மாறி மாறி சஞ்சரிப்பதை வாசகர் உணரலாம். கற்பனை அம்சம் மிகுந்த முதல் வகை நாவலாகவும், யதார்த்தச் சம்பவங்கள் அடங்கிய இரண்டாம் வகை நாவலாகவும், துன்பியல் சம்பவங்கள் நிறைந்த மூன்றாம் வகை நாவலாகவும் ஒரே சமயத்தில் காட்சியளிக்கிறது பதின் நாவல்.

பதின் நாவலின் துவக்கமே வெகு சுவாரஸ்யமாக இருக்கிறது. நாவலின் துவக்கத்தில் வாசகர்களிடம் சில கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன. அவையாவன,

  1. நீங்கள் இரும்புக் கை மாயாவியை நம்புகிறவரா?
  2. வீட்டில் நிறைய அடி வாங்கியிருக்கிறீர்களா?
  3. பயந்தாங்கொள்ளியா?
  4. நிறைய பொய் சொல்வீர்களா?
  5. எப்போதும் எதையாவது கற்பனை செய்து கொண்டேயிருப்பவரா?

இக்கேள்விகளுக்கெல்லாம் உங்கள் விடை ‘ஆம்’ என்றிருந்தால் நீங்கள் இதைப் படிக்கலாம். ‘இல்லை’ என்பது உங்கள் பதிலாக இருக்குமானால் நீங்கள் இதை மூடிவைத்து விடலாம், இது உங்களுக்கானதல்ல என்று துவக்கத்திலேயே சொல்லப்படுகிறது. இக்கேள்விகளே வாசகரைத் தூண்டில் போல நாவலுக்குள் இழுத்துச் செல்கிறது.

“நந்து” என்ற சிறுவனின் ஐந்து வயதிலிருந்து பதினைந்து வயது வரையிலான டைரிக் குறிப்புகள்தான் நாவலாக விரிகிறது. நாவலின் துவக்கத்திலேயே நந்து “எப்போதோ நான் எழுதிய இக்குறிப்புகளை எதற்காக நீங்கள் படிக்க ஆர்வம் காட்டுகிறீர்கள் எனத் தெரியவில்லை” என்றுதான் துவங்குகிறான். இதைப் படிக்கும்போதே அடுத்தவரின் டைரியைப் படிக்கும் ஒரு ஆர்வமும் குறுகுறுப்பும் வாசகனிடம் தொற்றிக் கொள்கிறது.

நந்துவின் நெருங்கிய நண்பன் சங்கர். நந்து அடிப்படையில் பயந்த சுபாவமும் உடையவன். சாகசம் செய்வதற்கு விருப்பமுள்ளவன். பள்ளி, ஆசிரியர், வீட்டுப் பெரியவர்களின் கட்டுப்பாடு, இவற்றையெல்லாம் அடிப்படையில் வெறுக்கக் கூடியவன். ஆனாலும், பெரியவர்களின் கட்டுப்பாட்டுக்குப் பயந்தவனாக இருக்கிறான். அவனது ரகசிய கற்பனையில் அவன் எல்லாவிதமான மீறல்களுக்கும், சாகசங்களுக்கும் ஏங்குபவனாகத்தான் இருக்கிறான். அவன் ஏக்கத்தைப் பூர்த்தி செய்வதற்கு ஏற்ற நண்பனாக சங்கர் இருக்கிறான். நந்துவை Mark Twain-இன் Tom Sawyer உடனும், சங்கரை Huckleberry Finn- உடனும் ஒப்பிடலாம்.

சங்கர் பள்ளிக்குச் செல்வதில்லை. சங்கரின் உலகில் கட்டுப்பாடுகள் இல்லை. அச்சம் இல்லை. ஆகையால், அவன் சகல விதமான சேட்டைகளையும் செய்பவனாகவும் தனித்துவமான அத்துமீறல்களை புதிது புதிதாகக் கண்டுபிடித்துச் செய்பவனாகவும் இருக்கிறான்.  நந்துவுக்கு சங்கர்தான் பொய் சொல்லவும் திருடவும் கற்றுத் தருகிறான். சங்கர் மூலம் கிடைக்கும் புதிய அறிதல்களுக்காகவும், புதிய புதிய சாகச அனுபவங்களுக்காகவும் நந்து அவனுடன் சுற்றித் திரிய விரும்புகிறான். நந்து செய்ய விரும்பித் தயங்கும் விஷயங்களையெல்லாம் சங்கர் இயல்பாகவே செய்பவனாக இருப்பதால் சங்கர் நந்துவின் ஆல்டர் ஈகோவாக வருகிறான்.

நந்துவின் நினைவுக் குறிப்புகள் போன்ற சாயலைக் கொடுக்கும் நாவல் சட்டென்று ஓர் புள்ளியில் தன்னை ஒரு இலக்கியப் பிரதியாக நிறுவிக் கொள்கிறது. சாதாரணமாக ஒரு சம்பவத்தை எளிய மொழியில் சொல்லிச் செல்வது போல அமைந்து அதன் உள்ளடுக்கில் அச்சிறுவர்களின் உளவியலை யதார்த்தத்துடன் கவித்துவமாக இணைக்கும் புள்ளியில் நாவல் இலக்கியமாக மலர்கிறது. உதாரணமாக, நந்துவின் தம்பி ஆறு வயது செழியன் இறந்ததும் வண்ணத்துப் பூச்சியாக வருவது போன்றதான கற்பனை சிறுவர் உலகுக்கே உரிய கவித்துவமான படிமம். (இந்த இடத்தில் தேவதச்சனின் “ஒரு வண்ணத்துப்பூச்சி” என்ற கவிதையும் நினைவுக்கு வருகிறது).

சிறுவர்களுக்கே உரிய பிறிதொன்றில்லாத கற்பனை உலகை நாவல் விரித்துக் காட்டுகிறது. உதாரணமாக, பகலின் நீளத்தை அளக்கக் கிளம்பும் சிறுவர்கள், சாலையில் கண்ணாடி அணிந்தவர்களை எண்ணுவது, பேக்கரியில் வாசம் பிடிப்பது, இரவில் கூடிப் பேசுவது போன்ற அத்தியாயங்களைச் சொல்லலாம். வாசிப்பவர்கள் இதில் ஏதோ ஒரு அனுபவத்தோடு தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவும், பிணைத்துக் கொள்ளவுமான வெளியை நாவல் அளிக்கிறது.

அந்தச் சிறுவர்கள், தாம் செய்யும் இது போன்ற வேடிக்கைகளுக்கு மிகவும் உண்மையாகவும் விசுவாசமாகவும் இருக்கிறார்கள். பகலின் நீளத்தை அளந்தபின்னர் சங்கர் அந்தச் சம்பவத்தை எவரிடமும் சொல்லக்கூடாது என்று நந்துவை எச்சரிக்கிறான். வீடு செல்லும் நந்துவை, “எங்கே வெட்டியாக அலைந்துவிட்டு வருகிறாய்? என்று அவனது அம்மா கேட்டதும் அவனுக்குக் கோபம் வருகிறது, “நான் ஒண்ணும் சும்மா ஊர் சுத்தலை” என்று வெடுக்கென பதில் சொல்கிறான் (இவன் பகலின் நீளத்தை அல்லவா அளந்து விட்டு வந்திருக்கிறான்!)

காசு கொடுக்காமல் ஓட்டலில் தோசை சாப்பிடும் சாகசம், தங்கையை சைட் அடிக்கும் பிற சிறுவர்களை ஆள் வைத்து அடிப்பது, குகைக்குள் தவம் செய்யும் போலிச் சாமியாரைக் கண்டுபிடித்தல், ரத்தத்தில் திலகமிட்டு நட்பினை உறுதி செய்தல் என சாகசங்களுக்குப் பஞ்சமில்லாத அந்த சிறுவருலகு வசீகரமானதாக இருக்கிறது.

தாண்டவராயன் என்ற ரௌடியைப் பார்க்கச் செல்லும்போது அவனது வீட்டில் அவனது சிறுவயதுப் புகைப்படம் ஒன்றை நந்து பார்க்கிறான். அந்த வீட்டை விட்டு வெளியே வரும்போது தாண்டவராயனைப் பற்றிய பயம் முற்றிலும் வடிந்து போயிருந்தது என்ற வரியில் சிறுவர்களின் உளவியலை நுட்பமாக விவரிக்கிறார் எஸ்.ரா. எத்தனைப் பெரிய ரௌடியாக இருந்தாலும், அவனது சிறுவயதில் அவனும் தங்களைப் போலிருந்த சிறுவன்தானே என்று உணரும் தருணத்தில் அந்த சிறுவனுக்கு ரௌடியைப் பற்றிய பயம் வடிந்து விடுகிறது. அதுபோலவே ஒரு நாளின் புதிர் என்ற அத்தியாயமும் சிறுவனின் உளநிலையை மிகுந்த துல்லியத்துடன் காட்சிப்படுத்துகிறது. ஒரு நாள் மெல்ல மலரும் போதும், வளரும் போதும் மனோகரமான அனுபங்களைத் தருகிறது. பகல் வடியும்போது மெல்ல மெல்ல மீண்டும் உலகம் அந்த இனிமையான அனுபவங்களையெல்லாம் அவனிடமிருந்து பிடுங்கிக் கொள்கிறது. இந்தக் குறிப்பிட்ட அனுபவத்தை கிட்டத்தட்ட அனைவரும் கடந்துதான் வந்திருப்போம். அதுபோல பள்ளியில் உடம்புக்கு முடியாமல் வாந்தியெடுத்து உடன் படிக்கும் நண்பனின் உதவியோடு வீட்டிற்குத் திரும்பும் அந்தப் பகலை பெரும்பாலான வாசகரும் கடந்துதான் வந்திருப்பார்கள். படிப்படியாக ஒரு சிறுவனின் உடல்நலம் குன்றுவதை “முழுப்பரீட்சை” என்ற இந்த அத்தியாயம் காட்டிச் செல்கிறது.

நாவலின் துன்பியல் சம்பவங்களாக செழியின் மரணம், ரொக்கம் என்ற மனிதனின் விசித்திர முடிவு, கண்ணாடி அணிந்த புலி, நாயின் கண்கள் போன்றவைகளைச் சொல்லலாம். கண்ணாடி அணிந்ததும் தன்னை ஒருவரும் சீண்டாததைக் கண்டு கலங்கும் புலி வேஷம் போடுபவர், தூயவளான ஃப்ளோரா கைது செய்யப்படும்போதும் தன் மேல் பட்ட சாணித் துகள்களுக்காக வருத்தப்படுவது, ஐந்து நாட்களாகப் பட்டினியில் தவிக்கும் நாயின் முடிவு, சங்கரின் அம்மாவின் கோர மரணம், தன் உடம்பில் மின்சார பல்பை எரிய வைத்துச் சாகசம் செய்த மனிதன் பின்னாளில் உடம்பு முடியாமல் ரிக்‌ஷாவில் ஒரு மருந்து பாட்டிலைக் கையில் வைத்துக் கொண்டு தலைகுனிந்து செல்வது ஆகிய சம்பவங்கள் தரும் துயர அனுபவம் காகிதப் பக்கங்களை மீறியதாக இருக்கிறது.

காதல் அனுபவமும் நாவலில் வருகிறது. ஆனால், மெல்லிய மழைச் சாரலாக உதிர்ந்து விடுகிறது அந்த காதல் அனுபவம். நந்து பியானோ கற்கப்போகும் ஆசிரியரின் வீட்டில் அவரது மகள் அந்த அனுபவத்தின் சாயலைக் காட்டிச் செல்பவளாக இருக்கிறாள். முதற்காதல் எப்போதும் ஏன் இசையுடனே சம்பந்தப்பட்டிருக்கிறது என்ற விடை தெரியா கேள்வியை எழுப்பிச் செல்கிறது பேப்பர் பியானோ என்ற இந்த அத்தியாயம். பேப்பர் காதலும் இந்தப் பியானோவுக்குள்தான் மறைந்திருக்கிறது.

“அழகன்” என்ற அத்தியாயம் வேடிக்கையின் உச்சம். நந்து அழகாக இருப்பதாக கனகதுர்கா என்ற மாணவி சொன்னதாக அவளது தோழி சாந்தி என்பவள் நந்துவிடம் தெரிவிக்கிறாள். அதை நம்பிய நந்து உண்மையில் தன் முகம் அழகாக இருக்கிறதா என்று நம்ப மாட்டாதவனாக அதன்பிறகான நாட்களில் முகத்துக்கு சோப்பு போட்டபடியே இருக்கிறான். ஆனால், அடுத்த சில நாட்களில், கனகதுர்கா என்ற அந்த மாணவி அவனிடம் தான் பொய் சொன்னதாகவும், அவனை முட்டாள் என்று உலகுக்கு உணர்த்துவதற்காகவுமே அப்படிச் சொன்னதாகச் சொல்கிறாள். மறுநாளில் இருந்து அவன் தன் முகத்துக்கு சோப்பு போடுவதை நிறுத்தி விட்டதாக இந்த அத்தியாயம் நிறைவுறுகிறது.

சிறுவருலகின் கனவிலும் யதார்த்தத்திலுமாக மாறி மாறி சஞ்சரிக்கும் இந்த நாவல், நந்துவும் சங்கரும் பெரியவர்களின் உலகில் கால்வைக்கும் அந்த தருணத்தில் முடிவுறுகிறது. அப்பாவைப் பகைத்துக் கொண்டு மும்பை சென்று திரும்பும் சங்கரை ஆசையுடன் பார்க்கக் கிளம்புகிறான் நந்து. எந்த சங்கர் அவனுக்குத் திருடவும் பொய் சொல்லவும் கற்றுத் தந்தானோ அந்த சங்கர் இப்போது நந்துவுக்கு “ நல்லா படிக்கணும்டா” என்று அறிவுரை சொல்கிறான். இந்த சங்கரை நந்துவுக்குப் பிடிக்காமல் போகிறது. மெல்ல மெல்ல பால்யத்தில் வசீகரமான வண்ணங்கள் சாயம் போகத் துவங்கும் இந்தப் புள்ளியில் நாவல் முடிகிறது. நாவலை ஒரு சரடெனக் கொண்டால், சரடின் ஒரு முனை கள்ளங்கபடமற்ற பால்யத்தில் துவங்கி அதன் மறுமுனை கசடுகள் நிறைந்த பெரியவர்களின் உலகின் வாயிலில் சென்று முடிகிறது.

நாவலில், அப்பா மீதான சிறுவர்களின் வெறுப்பும் பதிவாகியிருக்கிறது. அப்பாக்களின் மூர்க்கத்தனம், சிறுவர்களை முரட்டுத்தனமாக அவர்கள் கையாள்வது, அப்பாவைத் தவிர மற்ற பெரியவர்களெல்லாம் சிறுவர்களுக்கு நல்லவர்களாகவே தெரிவது போன்ற காட்சிகள் சிறுவர்களின் அப்பா வெறுப்பைப் பதிவு செய்கிறது. கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் இது மட்டும் இன்னும் மாறாமலேயேதான் இருக்கிறது.

பால்யம் என்னும் மலர்ச்சோலைக்குள் தும்பியைப் போல பறந்து திரியும் இந்த நாவல் ஒரு கேள்வியையும் எழுப்புகிறது. உண்மையில் இந்த நாவல் தற்காலத்தைய சிறுவர்களுக்கான நாவலா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது. நாவலின் முன்னுரையில் கேட்கப்பட்ட கேள்விகளில் முதல் கேள்வி “நீங்கள் இரும்புக்கை மாயாவியை நம்புகிறவரா?” இந்தக் கேள்விக்கு இக்காலத்தைய குழந்தைகளின் பதில் இல்லை என்பதாகவே இருக்கும். அடுத்ததாக, இந்நாவல் காட்டும் சிறுவர்கள் ஒரு சிறுநகரில் வளரும் சிறுவர்கள். ஆகவே நகர்ப்புறச் சிறுவர்கள் இதன் பல அத்தியாயங்களை தங்கள் வாழ்வுடன் தொடர்புபடுத்திக் கொள்வதில் சிக்கல்கள் எழலாம். மேலும், நாவல் காட்டும் சிறுவர்களின் காலகட்டம் என்பது எழுபதுகளின் இறுதியிலிருந்து எண்பதுகளின் இறுதி வரையிலான காலகட்டம். ஆகவே, அந்தக் காலகட்டத்தில் வளர்ந்த சிறுவர்களுக்கான நாவலாகவே இது தென்படுகிறது. அவர்கள் இப்போது பெரியவர்களாகிவிட்டார்கள். ஒரு கோணத்தில் இந்த நாவலை, அக்கால கட்டத்தில் சிறுவர்களாக இருந்து இப்போது பெரியவர்களாக இருப்பவர்களுக்கான நாவலாகவும் சொல்லலாம். நாவலின் அடுத்த பதிப்பில் ஒவ்வொரு அத்தியாயத்தையும் அதன் பக்க எண்ணையும் முகப்பில் கொடுத்தால் வாசிப்பதற்கு இன்னும் எளிமையாக இருக்கும்.

நாவல் வாசித்து முடிந்ததும், ஒரு காலகட்டத்துக்கு சென்று வாழ்ந்து மீண்டதைப் போன்றிருக்கிறது. ஒருபோதும் நம் உடம்பைச் சுமந்து அந்த காலத்துக்கு நாம் மீண்டும் செல்ல முடியாது. ஆனால், நினைவுகளையும் கற்பனையையும் சுமந்து கொண்டு நாம் அதனுள் மீண்டும் பிரவேசிக்கலாம். காலத்தைப் பிளந்து மீண்டும் பால்யத்தில் சஞ்சரிக்க வைக்கும் இந்த அலாதியான அனுபவத்தைப் பெறுவதற்காகவே இந்த நாவலை மீள மீள வாசிக்கலாம்.

( சிங்கப்பூர் வாசகர் வட்டத்தில் வாசிக்கப்பட்டது)

நன்றி :

சிங்கப்பூர் வாசகர் வட்டம்

Archives
Calendar
March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: