அஞ்சலி

எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி இன்று காலை காலமானார்.

விருதுநகர் மாவட்டம் மேலாண்மறை நாடு என்ற சிறிய கிராமத்தில் வசித்து வந்த மேலாண்மை பொன்னுசாமி தினமும் அவரது கடைக்குரிய பலசரக்குப் பொருட்கள் வாங்குவதற்காக விருதுநகருக்கு வருவார். அந்த வேலை அரைமணி நேரத்தில் முடிந்துவிடும்.

நானும் நண்பர்களும் அவருடன் இணைந்து டீ குடித்தபடியே பலமணி நேரம் இலக்கியவிவாதம் செய்வோம். சினிமா பார்ப்போம். கிராம வாழ்வினை அசலாகப் பதிவு செய்த எழுத்தாளர் மேலாண்மை. கதைகள் எழுதி நிறைய பரிசுகள் வாங்கியிருக்கிறார்.

சில நாட்கள் இரவுக்காட்சி சினிமா பார்த்துவிட்டு அவரது ஊருக்கு போவதற்கான காலை முதல் பேருந்து வரும்வரை பேருந்து நிலையத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்திருக்கிறோம்.

நானும் கோணங்கியும் பலமுறை அவரது வீட்டிற்குப் போயிருக்கிறோம். சிறந்த மனிதர். பண்பாளர்.

என் அண்ணன் டாக்டர் வெங்கடாசலத்துடன் மிக நெருக்கமாக இருந்தார். அடிக்கடி அவரைத் தேடி வந்து பேசிக் கொண்டிருப்பார்.

என்னையும் எழுத்தையும் மிகவும் நேசித்தவர் மேலாண்மை.

இருபது நாட்களுக்கு முன்பாகப் போனில் பேசினார். குரல் உடைந்திருந்தது. பழைய நினைவுகளைப் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சின் ஊடே அவர் விசும்புவது கேட்டது. என்னாலும் தொடர்ந்து பேச இயலவில்லை.

அன்பு நண்பர் மேலாண்மை பொன்னுசாமிக்குக் கண்ணீர் அஞ்சலிகள்

Archives
Calendar
November 2017
M T W T F S S
« Oct    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
Subscribe

Enter your email address: