கடைசி வைஸ்ராய்

Gurinder Chadha இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்Viceroy’s House. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

லண்டனில் வசிக்கும் குரிந்தர் Bend It Like Beckham, Bride and Prejudice போன்ற படங்களை இயக்கிப் புகழ்பெற்றவர். இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக நியமிக்கப்பட்ட மவுண்ட்பேட்டன் தேசப்பிரிவினையை எதற்காக உருவாக்கினார். அவர் முன்னிருந்த சவால்கள் எவை என்பதையே இப்படம் சித்தரிக்கிறது.

சிறந்த கலைவடிவமைப்புடன் நேர்த்தியான ஒளிப்பதிவுடன் உருவாக்கபட்டுள்ள இப்படம் வைஸ்ராய் இல்லத்தின் பிரம்மாண்டத்தைத் துல்லியமாகக் காட்சிப்படுத்தியுள்ளது.

இன்றைய ஜனாதிபதி மாளிகையே அன்றைய வைஸ்ராய் மாளிகை.  ஆகவே அதன் புறத்தோற்றத்தை மட்டும் படமாக்கியிருக்கிறார்கள். படம் முழுவதும் ஜெய்ப்பூரிலுள்ள உமைத் பவன் மாளிகையினுள் படமாக்கபட்டிருக்கிறது

வைஸ்ராய் இல்லத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலைசெய்தார்கள். தனியே அதிலும்  தனியான சினிமா அரங்கு கூட இருந்தது.  வைஸ்ராய் மாளிகையில் சமையற்கூடம் தனியுலகமாக இயங்கியது. நூற்றுக்கும் மேற்பட்ட சமையற்பணியாளர்கள். விதவிதமான உணவு வகைகள். விருந்து நடக்குமுறைகள். நாய்களுக்குக் கூட விசேசமாகத் தயாரிக்கபடும் உணவுகள். வைஸ்ராய் இல்லத்தின் அகவுலகை முழுமையாகப் படம் காட்சிப்படுத்தியிருக்கிறது.

ஜாலியன்வாலா பாக் படுகொலையில் தந்தையில் இழந்த ஜீத் என்ற இளைஞன் மவுண்ட்பேட்டனின் தனிஉதவியாளராகப் பணியேற்கிறான். மவுண்ட்பேட்டனின் வருகை இந்தியாவிற்குச் சுதந்திரம் அளிக்க வேண்டும் என்பதற்கே எனப்படம் துவங்குகிறது.

படம் முழுவதும் மவுண்ட்பேட்டன் எதுவுமறியாத அப்பாவி போலவும் பிரிட்டீஷ் அரசு அவரைத் தந்திரமாகப் பயன்படுத்திக் கொண்டது என்றும் காட்டப்படுகிறது. இது முழுப்பொய்.

மவுண்ட்பேட்டன் பிரிட்டீஷ அரசின் எண்ணங்களை சரியாக புரிந்து கொண்டவர், ராஜவிசுவாசி. இந்தியர்களை அவரால் எளிதாக கையாளமுடியும் என்பதாலே அனுப்பி வைக்கபட்டார்.

படத்தில் மவுண்ட்பேட்டனின் மனைவி எட்வினா, மகள் பமீலா இருவரும் இந்தியர்களின் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் காட்டுகிறார்கள். இந்தியப்பிரிவினை கூடாது என்று எட்வினா மன்றாடுகிறார். மதக்கலவரத்தின் போது ஒடியோடி உதவிகள் செய்கிறார்.

இந்தியப்பிரிவினை என்பது பிரிட்டீஷ் அரசு தனது சுயலாபத்திற்காக உருவாக்கப்பட்டது. குறிப்பாக ரஷ்யாவோடு இந்தியா நெருக்கமாகிவிடக்கூடாது என்பதற்காகப் பாகிஸ்தான் பிரிவினையை உருவாக்கியது. எண்ணெய் வளமிக்க அரபு நாடுகளுடன் பிரிட்டீஷ் கடல்வழி வாணிகம் செய்வதற்கு இந்தப் பிரிவினை தேவைப்பட்டது. இதைச் சர்ச்சில் அறிந்திருந்தார். அவரது ஆலோசனையே இந்தியாவை இரண்டு துண்டாக்கியது எனப்படம் கூறுகிறது.

இந்தியப்பிரிவினையைப் பற்றிய படத்தின் ஊடாகச் சீக்கிய இளைஞனுக்கும் முஸ்லீம் பெண்ணிற்குமான காதலும் அதனால் ஏற்படும் சிக்கல்களும் பிரிவும் ஊடாடுகின்றன.

பெண் இயக்குனரான குரிந்தா இந்தியப்பிரிவினையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது பாட்டி பிரிவினையின் போது அகதியாக வாழ்ந்தவர். ஆகவே இந்தியப்பிரிவினை குறித்துப் படம் உருவாக்க வேண்டும் என்பதைப் பல ஆண்டுகளாகக் கனவு கண்டிருக்கிறார். லண்டனில் வசித்து வரும் குரிந்தா முன்னதாக இங்கிலாத்தில் வசித்து வரும் சீக்கிய குடும்பங்களின் கதையைத் திரைப்படமாக உருவாக்கி பெரும்வெற்றிபெற்றிருக்கிறார்.

இப்படத்தில் வைஸ்ராய் இல்லக்காட்சிகள் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. காலனிய அதிகாரம் எப்படி வானளாவியது என்பது பார்வையாளர்களுக்குத் துல்லியமாகப் புரிய வைக்கபடுகிறது. படத்தின் ஒரே பிரச்சனை மவுண்ட்பேட்டன், சிரில் ரெட்கிளிப் உள்ளிட்ட அத்தனை பேரும் இந்தியர்களுக்காக வருந்துவதும், ஏதுமறியாத நல்லவர்கள் போன்று சித்தரிக்கபடுவது. அதிலும் குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் எல்லைக்கோட்டினை உருவாக்கிய ரெட்கிளிப் பிரிட்டீஷ் அரசின் நிர்ப்பந்தம் காரணமாக அப்படி நடந்து கொண்டார். அதில் அவருக்கு உண்மையான விருப்பமில்லை என்று சித்தரித்திருப்பதும் முழுப்பொய்.

இந்தியப்பிரிவினையைப் பற்றிய Garam Hava,Tamas,Train to Pakistan போன்ற படங்கள் உருவாக்கிய அழுத்தமான பாதிப்பு இப்படத்தில் இல்லை. ஆனால் காந்தி, நேரு, ஜின்னா போன்ற தலைவர்களுக்குப் பொருத்தமான நடிகர்களைத் தேர்வு செய்து அவர்களின் பங்களிப்பை சரியாகக் காட்டியிருக்கிறார் குரிந்தா.

வைஸ்ராய் மாளிகையினுள் நடைபெறும் மதச்சண்டைகள், மவுண்ட்பேட்டன் முன்னால் ஜீத் கோபமாக சண்டையிடுவத போன்றவை நம்பத்தகுந்தவிதமாக இல்லை. ஒம்புரி பார்வையிழந்து போன விடுதலைப்போராட்ட வீரராகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அலியாவாக நடித்துள்ள ஹீமா குரேசியும் வெகுசிறப்பாக நடித்துள்ளார்.

இந்தியப்பிரிவினைக்குச் சர்ச்சில் மட்டுமே காரணம். மவுண்ட்பேட்டன் வெறும்பலியாடு மட்டுமே என இப்படம் சித்தரிக்கிறது. அது நிஜமில்லை. வரலாற்றைக் காட்சிப்படுத்துவதில் தேவைப்படும் இடங்களில் உண்மையான ஆவணக்காட்சிகளைப் பயன்படுத்தியிருப்பது சிறப்பானது. ஆனால் வரலாற்றுப் பிழைகள் அதிகமுள்ள படமாக உருவாக்கபட்டிருப்பதே இதன் பெருங்குறை.

குரிந்தா பிரிட்டனில் வாழ்ந்துவருபவர். பிபிசிக்கு ஆவணப்படங்கள் உருவாக்கி தருபவர். பிரிட்டனின் உயர்ந்த விருதுகளைப் பெற்றவர் என்பதாலே மயிலறாகால் அடிப்பது போலப் பிரிட்டீஷ் அரசை பட்டும் படாமலும் விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்தியப்பிரிவினையின் போது வைஸ்ராய் இல்லம் எப்படிப் பிரிக்கபடுகிறது என்பதைக் காட்சிப்படுத்தியிக்கும் விதம் அற்புதமாக உள்ளது. கலைக்களஞ்சியங்கள் கூடக் கூறுபோடப்படுகின்றன. ஸ்பூன், தட்டுகள், கோப்பைகள் கூடப் பிரிக்கபடுகின்றன. பணியாளர்கள் எந்தத் தேசத்திற்குப் போக விரும்புகிறார்களோ அவர்கள் விருப்பம் போல அனுப்பிவைக்கபடுகிறார்கள். பிரிவினையின் போது ஏற்பட்ட கலவரங்கள். உயிரிழப்புகள். பசி, மரணம் ஆகியவை மேலோட்டமாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

படத்திற்கு உயிர்துடிப்பை உருவாக்கியிருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். அவரது பின்னணி இசை சிறப்பாக உள்ளது. எட்வினாவிற்கும் மவுண்ட்பேட்டனுக்கும் நடக்கும்விவாதமும், மவுண்ட்பேட்டனைநேரு, காந்தி ஜின்னா மூவரும் சந்திக்கும் காட்சிகளும் அற்புதமாகப் படமாக்கபட்டுள்ளன. குறிப்பாகப் பிரிவினையின் போது மனைவி குடும்பத்தை இழந்த ஒருவன் நேருவை தாக்கிவிட்டு அழும்போது நேரு அவனைக்கட்டிக் கொண்டு ஆறுதல் கூறுவது நெகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது

இஸ்லாமியர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி இப்படத்தை பாகிஸ்தான் அரசு தடைசெய்துவிட்டது.

இந்தியப்பிரிவினை எனும் துயரக்கதைக்குத் தங்கமுலாம் பூசி வண்ணவண்ண ஆடைகள் அணிவித்துப் பிரம்மாண்ட காட்சிகளாக உருமாற்றியிருக்கிறது இப்படம். ஒருவேளை பிரிட்டீஷ் மக்களுக்கு இப்படம் பிடிக்ககூடும். இந்தியர்களுக்கு இப்படம் ஏமாற்றமே .

••

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: