அறம் வென்றது

கோபி நயனார் இயக்கத்தில் வெளிவந்துள்ள அறம் திரைப்படத்தை நேற்றிரவு பார்த்தேன். அற்புதம். தமிழ்சினிமா பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய படத்தை இயக்கியிருக்கிறார் கோபி நயினார்.

பொழுதுபோக்குத் திரைப்படங்களை மட்டுமே தமிழ் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்ற மாயையை உடைத்து அரங்கு நிரம்பி வழிகிறது. கடைசிக்காட்சியின் போது அருகிலுள்ள இருக்கையில் இருந்தவர்கள் பீறிடும் கண்ணீரை துடைக்கமுடியாமல் விசும்பினார்கள். படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம். திரையில் வெளிப்படும் உண்மை.

திரைப்படம் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற உணர்வே ஏற்படவில்லை. மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிருக்கும் போராடும் சிறுமியின் நிர்கதியை செயலற்றுப் போய் நாமும் அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்ற குற்றவுணர்வே ஏற்படுகிறது. .

அரசு இயந்திரத்தின் அலட்சியம், அரசியல்வாதிகளின் குறுக்கீடு. மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்மை, பாதிக்கபட்ட பெற்றோர்களின் கண்ணீர், பொதுமக்களின் ஆதங்கம், கோபம். எனப் படம் பல்வேறு தளங்களில் உண்மையை முகத்தில் அறைவது போலக் காட்சிப்படுத்தியிருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டத்தின் அருகே, காட்டூர் என்ற சிறிய கிராமம் வறட்சியில் வாடுகிறது, மக்கள் தண்ணீருக்காகப் போராடுகிறார்கள். சாரை சாரையாகப் பைக்கில் அவர்கள் தண்ணீர் தேடிப்போகும் காட்சி மனதை உலுக்குகிறது. ஒரு பக்கம் உணவகங்களுக்கும், நட்சத்திர விடுதிகளுக்கு டேங்கர் லாரிகளில் தண்ணீர் செல்ல, இன்னொரு பக்கம் குடிக்கத் தண்ணீர் இல்லாமல் அடித்தட்டு, மக்கள் செத்துப் பிழைக்கிறார்கள் என்ற உண்மையை உரத்துப் பேசுகிறது படம்

எங்கோ சோமாலியாவில் வாடும் மக்களைப் பற்றிப் பேசும் ஊடகங்கள், ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அருகில் இப்படியான கிராமங்கள் புறக்கணிக்கபட்ட நிலையில் இருக்கின்றன என்பதைக் கண்டுகொள்வதேயில்லை. அந்த மக்களின் குரலை படம் ஒங்கி ஒலிக்கிறது. தாகத்தைத் தீர்க்க ஏதாவது மருந்திருக்கிறதா என ஒரு பெரியவர் கேட்கும் கேள்வி முக்கியமானது.

தண்ணீர், நிலம், மருத்துவம், கல்வி சார்ந்த பிரச்சனைகள் வெறும் நிர்வாகச் சீர்கேடுகள் மட்டுமில்லை. அதற்கு வேர்கள் இருக்கின்றன. அது தனியார்மயம், சுயலாபம், அரசியல் சார்ந்த வணிகம் என ஊற்றுக்கண்களை அடையாளம் காட்டுகிறார் கோபி.

போலியோ சொட்டு மருந்து அளிப்பதற்காகக் கிராமத்துக்குள் நுழையும் நர்ஸை பயன்படுத்தி விளம்பர போட்டோ எடுத்துக் கொள்ளும் மருத்துவதுறையின் தந்திரத்தை சொல்லத்துவங்கி, அரசுத்துறைகளுக்குச் சாமானிய மக்கள் வெறும் விளம்பரப்பொருட்கள் தானா எனக்கேட்கிறார் கோபி.

ஒரு காலத்தில் விவசாயக் கூலிகளாக இருந்த மக்கள், இன்று நிலத்தை இழந்து பிழைக்கவழியின்றி அல்லாடுகிறார்கள். அவர்களின் வாழ்வாதரங்கள் பறிக்கபட்டுவிட்டன. மகனின் காதுவலிக்கு மருத்துவம் பார்க்ககூடப் பணமின்றித் திண்டாடுகிறார் ராமசந்திரன். இந்தச் சூழ்நிலையில் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட்விடுவதைக் காட்டூர் மக்கள் தங்கள் சொந்த சந்தோஷம் போலக் கொண்டாடுவார்கள் என்ற முரண்பாட்டினையும் சுட்டிக்காட்டுகிறது படம்

ராக்கெட் விடுவதன் மூலம் விஞ்ஞானச் சாதனை புரிந்துவிட்டதாகப் பெருமைப்பட்டுக் கொள்ளும் இந்தியாவில் தான் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க எந்த உபகரணமும் கிடையாது. அதற்கு மாற்று வழி கண்டுபிடித்துள்ள இளம்விஞ்ஞானியை நாம் கண்டுகொள்ளவில்லை. எது உண்மையான அறிவியல் முன்னேற்றம். யாருக்கு அறிவியல் பயன்படுகிறது என்ற அறக்கேள்விகளை எழுப்புகிறது இப்படம்

தன்ஷிகா என்ற சிறுமியின் முகம் மனதில் அழுத்தமாகப் பதிந்துவிட்டது. அவள் கண்களில் வெளிப்படும் வலியும் வேதனையும் மனதை உலுக்குகிறது. தன்ஷிகாவின் பெற்றோராக நடித்திருக்கும் சுனுலட்சுமி, ராமச்சந்திரன் அண்ணன் ‘முத்து, என அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அவர்களின் பரிதவிப்பு நிஜமாகப் பார்வையாளர்களைத் தொடுகிறது.

மதிவதினி என்ற ஆட்சியாளர் கதாபாத்திரத்தை ஏற்று மிகச்சிறப்பாக நயன்தாரா நடித்திருக்கிறார். நெருக்கடியை அவர் கையாளும், மக்களிடம் அவர் பேசும்பாங்கு, அரசுஅதிகாரிகளிடம் அவர் காட்டும் கண்டிப்பு, பெற்றோர்களுக்குச் சொல்லும் ஆறுதல், சிறுவன் முத்துவிற்குச் சொல்லும் தைரியம். விசாரணையின் போது வெளிப்படுத்தும் நேர்மை என மிக உணர்ச்சிபூர்வமாக நடித்திருக்கிறார். அவருக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள்.

ஒளிப்பதிவாளர் ஒம்பிரகாஷ், எடிட்டர் ரூபன். கலை இயக்குனர் இளையராஜா, இசையமைப்பாளர் ஜிப்ரான் நால்வரும் படத்திற்கு நான்கு தூண்கள் எனத் தாங்கியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு அபாரம். வைட் ஆங்கிள் காட்சிகளில் வெளிப்படும் நிலக்காட்சிகள், சிறார்கள் கடலில் நீந்தும் காட்சிகள். எனப் பல காட்சிகள் பிரமிக்கவைக்கின்றன. எளிமையும் கவித்துவமும் கொண்ட ஒளிப்பதிவு. வாழ்த்துகள் ஒம்பிரகாஷ்.

Democracy is not merely a form of Government. It is essentially an attitude of respect and reverence towards fellowmen’ என்னும் சட்டமேதை அம்பேத்கரின் வார்த்தைகளைச் சரியான இடத்தில் பேசியிருப்பது படத்தின் தனிச்சிறப்பு.

மிகச்சிறந்த படத்தை உருவாக்கியுள்ள கோபி நயினார் அவர்களுக்கும் அவரது குழுவினர்களுக்கும் எனது அன்பும் பாராட்டுகளும்

••

Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: