வான்கோவின் கடைசி கடிதம்

ஓவியர் வான்கோவின் (Vincent vanGogh)வாழ்க்கை குறித்துச் சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் LOVING VINCENT. திரையில் இப்படத்தைக் காண்பது பரவசமூட்டுகிறது. வான்கோவின் ஒவியங்கள் உயிர்பெற்று கண்முன்னே கடந்து போகின்றன. அவர் வரைந்த உருவங்கள் நம்முன்னே நடமாடுகிறார்கள். வான்கோவின் சீற்றமிக்கக் கோடுகள் திரையில் அலைபோல எழுந்து மறைகின்றன. வான்கோவின் நீலம் வான்கோவின் மஞ்சள், சிவப்பு என அவரது வண்ணக்கலவைகளே படத்தின் ஆதாரவண்ணங்கள். ஒவியத்திலிருந்தே ஒரு திரைப்படத்தை உருவாக்கமுடியும் என்ற நவீன தொழில்நுட்பத்தின் சாதனைப்படைப்பு இதுவென்பேன்.

அகிரா குரசேவாவின் ட்ரீம்ஸ் திரைப்படத்தில் வான்கோவின் ஒவியம் ஒன்றினைக் கேலரியில் பார்வையிடும் ஒருவன் அந்த ஒவியத்திற்குள் சென்று அதே நிலக்காட்சிகளை நேரில் காண்பதுடன் வான்கோவைச் சந்தித்துப் பேசுவான். அக்காட்சியில் ஒவியன் வான்கோவாக நடித்திருப்பவர் பிரபல இயக்குனர் மார்டின் ஸ்கார்ஸசி. வான்கோ வரைந்த பாலமும் துணிதுவைப்பவர்களும் அப்படியே உயிர்பெற்று இயங்குவார்கள். அகிரா குரசேவாவிற்குப் பிடித்தமான ஒவியர் வான்கோ என்பதால் அவரது ஒவியத்தின் அகத்தை உயிர்பெறச்செய்திருந்தார்.

அந்த ஒற்றை அனுபவத்தின் முழுப்பரிமாணத்தை LOVING VINCENT படத்தில் நாம் காணமுடிகிறது. அதுவும் கையால் வரையப்பட்ட தைலவண்ண ஒவியங்களைக் கொண்டு முழு அனிமேஷன் திரைப்படத்தை உருவாக்குவது பெரிய சவால். அதை வெற்றிகரமாக சாதித்துக் காட்டியிருக்கிறார்கள்.

வான்கோ 9 ஆண்டுகளில் 860 ஓவியங்கள் வரைந்துள்ளார் அவற்றில் ஒன்றே விற்பனையானது, தனது முப்பதாம் வயதுக்குப் பின்னரே அவர் ஓவியம் வரையத் துவங்கினார். அவரது பெரும்பாலான ஓவியங்கள் வாழ்வின் கடைசி ஆண்டுகளில் வரையப்பட்டவை.

வின்சென்ட் வான்கோவின் மரணத்திற்கு ஒரு வருடம் கழித்து, வான்கோவின் நண்பரான போஸ்ட்மேன் ரவுலின் தனது மகன் அர்மண்ட் வசம், வான்கோ எழுதிய கடைசிக் கடிதம் ஒன்றை கொடுத்து வான்கோவின் சகோதரன் தியோவிடம் சேர்ப்பிக்கச் சொல்கிறார். இந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு அர்மண்ட் பயணிப்பதே கதை. வான்கோ எழுதிய கடிதங்களிலிருந்தே இத்திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்கள்.

Dorota Kobiela and Hugh Welchman இருவரும் இணைந்து இப்படத்தை இயக்கியிருக்கிறார்கள். Polish Film Institute இதற்கான ஆதார நிதியுதவியைச் செய்துள்ளது. அனிமேஷன் திரைப்பட வரலாற்றில் இப்படம் உச்சபட்ச சாதனை.

world’s first fully oil painted feature film என கொண்டாடுகிறார்கள். இப்படத்திற்காக 65000 பிரேம்களை ஒவியர்கள் வரைந்துள்ளார்கள். ஒவியம் தீட்டும் பணியில் 115 ஒவியர்கள் ஈடுபட்டார்கள். பத்துச் செகண்ட் வரைவதற்கு 20 வாரங்கள் தேவைப்பட்டிருக்கிறது. அதாவது ஒரு பிரேமை வரைவதற்கு ஆறுமணி நேரம் தேவைப்பட்டிருக்கிறது. வழக்கமாக அனிமேஷன் திரைப்படங்களில் கம்ப்யூட்டரே ஒவியங்களை உருவாக்கி தந்துவிடும். ஆனால் இப்படத்திற்கு உலகெங்குமிருந்து ஒவியர்கள் தேர்வு செய்யப்பட்டு வான்கோவின் ஒவியங்களை மாதிரியாகக் கொண்டு அதன் நகல்பிரதிகளை வரைந்திருக்கிறார்கள்.

Starry Night என்ற வான்கோவின் புகழ்பெற்ற ஒவியத்திலிருந்து படம் துவங்குகிறது, எந்தக் கோணத்திலிருந்து ஒரு நபரை வான்கோ வரைந்திருப்பாரோ அதே கோணத்தில் தான் படத்தில் அவர் அறிமுகமாகிறார். வான்கோவின் நிறக்கலவையைத் திரையில் அப்படியே உருவாக்கி காட்டியிருக்கிறார்கள். வண்ணக்காட்சிகள் மட்டுமின்றிக் கறுப்புவெள்ளைகாட்சிகளும் கூட வான்கோவின் சார்க்கோல் ஒவியங்களின் சாயலில் உருவாக்கபட்டவையே. Richard Linklater இயக்கிய Waking Life என்ற அனிமேஷன் திரைப்படம் இப்படத்திற்கு ஆதர்சமாக இருந்துள்ளது.

வான்கோவை இந்தச் சமூகம் புரிந்து கொள்ளவில்லை. அவரைக் கேலி செய்தது. அவமானப்படுத்தியது என ரவுலின் ஆதங்கப்படுகிறார். அர்மண்ட்  தியோவை தேடி வருகிறான். வான்கோவின் மரணத்தை ஒட்டியே அவரது சகோதரன் தியோ சிஃப்லிஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்துபோய்விட்டார் என்பதை அறிந்து கொள்கிறான். இதனால் வான்கோவின் நண்பராக இருந்த டாக்டர் காகேட்டை சந்திக்கச் செல்கிறான். அவரது மகளை சந்தித்து பேசுகிறான். அவள் வழியாக வான்கோவின் ஆளுமையின் ஒரு பகுதி வெளிப்படுத்தபடுகிறது. முடிவில் தியோவின் விதவை மற்றும் குழந்தைகளைச் சந்திக்கச் செல்கிறான் அர்மண்ட். வான்கோவின் ஆளுமையை அவர் சந்தித்த மனிதர்களின் நினைவுகள் வழியாக மீட்டுருவாக்கம் செய்கிறது இப்படம்.

தனது 37 ஆம் வயதில் 1890 ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் நாள் வான்கோ தற்கொலை செய்து கொண்டார். அதுவும் தன் வயிற்றில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார். இரண்டுநாட்கள் உயிருக்குப் போராடி முடிவில் இறந்து போனார். எது அவரைத் தற்கொலைக்குத் தூண்டியது என்பதையே இப்படம் ஆராய்கிறது.

வான்கோவின் ஒவியங்கள் இன்று விலைமதிப்பற்றவை. உலகெங்கும் அவரது பாதிப்பில் ஒவியர்கள் உருவாகியிருக்கிறார்கள். வான்கோவின் வாழ்க்கை வரலாற்றை அவரது ஒவியங்களைத் தவிர்த்துவிட்டு உருவாக்கமுடியாது என்பதால் இப்படத்தை அவரது ஒவியங்களைக் கொண்டே உருவாக்கியிருக்கிறோம் என்கிறார்கள் படத்தின் இரட்டை இயக்குனர்கள்.

வான்கோ வரைந்த ஒவியங்களில் இடம்பெற்ற மனிதர்களின் உருவத்தை அச்சு அசலாக அப்படியே பிரதியெடுத்துக் கொண்டு அதே சாயலில் உள்ள நடிகர்களைக் கொண்டு படமாக்கிவிட்டு பின்பு பின்புலக்காட்சிகளையும் உருவத்தையும் ஒவியமாகத் தீட்டி உருவாக்கியிருக்கிறார்கள். நான்கு நாடுகளில் இப்படத்திற்கான ஆதாரப்பணிகள் நடைபெற்றிருக்கின்றன

வான்கோவின் புகழ்பெற்ற ஒவியங்கள் உயிர்பெற்று விரிவது வியப்பூட்டுகிறது. குறிப்பாக அவரது Café Terrace at Night என்ற ஒவியம் திரையில் அப்படியே உருப்பெரும்போது சிலிர்த்துப்போனேன். அந்த ஒவியத்தினுள் தான் எத்தனை நுட்பங்கள். வானில் ஒளிரும் நட்சத்திரங்கள், காலி நாற்காலிமேஜைகள். நிழல்மனிதர்கள். அடர் மஞ்சள் நிற படுதா, தூரத்து இருட்டு, மரத்தின் பாதிக்கிளை, பரிசாரகனின் நடமாட்டம், என அப்படியே அந்த ஒவியக்காட்சி நிஜமாகிறது. வான்கோவின் மேதமையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் அவரது ஒவியங்கள் பூ மலர்வது போல தானாக விரிந்து ஒளிர்வது மறக்கமுடியாத அனுபவம்.

LOVING VINCENT. சென்னையில் இரண்டு அரங்குகளில் இரவுக்காட்சியாக ஒடுகிறது. குறைவான பார்வையாளர்களே படத்தைக் காணுகிறார்கள். உலகின் அரிய திரைப்படம் ஒன்று திரையிடப்பட்டிருக்கிறது என்ற தகவலே கூடப் பலருக்கும் தெரியவில்லை.

ஒவியர்கள் ஒவியங்களை ரசிப்பவர்கள் கட்டாயம் இப்படத்தைக் காண வேண்டும். சினிமாவின் அடுத்தக் கட்ட தொழில்நுட்பசாதனையைக் காண நினைப்பவர்கள் அவசியம் இந்த அனிமேஷன் திரைப்படத்தை பாருங்கள்

சினிமாவின் வழியாக ஒரு மகத்தான ஒவியனை எப்படிக் கௌரவிக்கமுடியும் என்பதை அறிந்து கொள்வதற்காகப் பொதுமக்கள் அனைவருமே இதைக்காண வேண்டும் என்பேன்.

LOVING VINCENT  வான்கோவிற்குச் செலுத்தப்பட்ட மிகப்பெரிய காணிக்கை .

••

Archives
Calendar
December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Subscribe

Enter your email address: