அமேசானில்

இரண்டு நாட்களுக்கு முன்பாக எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் போனில் அழைத்து அமேசானில் எனது புத்தகங்கள் கிடைக்கிறதா என விசாரித்தார். இல்லை என்றதும் நானே நேரில் வந்து மின் புத்தகமாக பதிப்பிக்க  உதவி செய்கிறேன் என்று கூறினார்.

சென்னைக்கு வந்த நாட்களில் இருந்து மாமல்லனுடன் பழகியிருக்கிறேன். அவரது கோபத்தைப்  போலவே அன்பும் தீவிரமானது.  மாமல்லன் சிறுகதைகளை எனக்கு மிகவும் பிடிக்கும்.  தனது விமர்சனங்களை, கருத்துகளை எவ்விதமான தயக்கமும் இன்றி நேரடியாக முன்வைப்பவர். அது பாராட்டிற்குரிய விஷயம்.

முன்பு டிரைவ் இன் உட்லேண்ட்ஸ் ஹோட்டலில் அடிக்கடி சந்தித்து பேசிக் கொண்டிருப்போம். சில நாட்கள் ஷங்கர்ராமன் வீட்டில் சந்தித்திருக்கிறேன். மாமல்லன் அலுவல் காரணமாக திருச்சி போன பிறகு இடைவெளி உருவாகிவிட்டது. ஆனாலும் புத்தக கண்காட்சி, இலக்கியக்கூட்டங்களில் சந்தித்துப் பேசுவது வழக்கம்.

அவர்தனது புத்தகங்களை அமேசானில் பதிப்பித்ததோடு  கவிஞர் விக்ரமாதித்யன்,எழுத்தாளர் ரமேஷ்பிரேதன் ஆகியோரின் நூல்களையும் பதிப்பித்துள்ளார்.  அத்துடன் தான் அறிந்த எழுத்தாளர்கள் பலரையும் சுயமாக அமேசானில் புத்தகம் பதிப்பிக்க உதவிகள் செய்து வருகிறார்.  அவருக்கு என் மனம் நிரம்பிய பாராட்டுகள்.

நேற்றிரவு என் அலுவலகம் வந்திருந்த மாமல்லன் இரண்டு மணி நேரம் பள்ளி மாணவனுக்குச் சொல்வது போல அத்தனை விரிவாக, எளிமையாக எடுத்துச் சொல்லி எனது புத்தகம் ஒன்றை பதிப்பிக்கவும் உதவி செய்தார்.

பத்தாண்டுகளுக்கு முன்பாக ஒரு நாள் எழுத்தாளர் பா.ராகவன் இப்படி என்னை அழைத்து வலைப்பதிவு பற்றி சொல்லி எனக்கான பக்கம் ஒன்றை உருவாக்கித் தந்தார். அது தான் எனது இணைய எழுத்தின் துவக்கப்புள்ளி. நேற்று அந்த தருணத்தில் அவரை நினைத்துக் கொண்டேன்.

பாரா அருமையான மனிதர். சிறந்த படைப்பாளி.  அவரோடு பேசி நீண்ட நாட்களாகிவிட்டதே என ஆதங்கமாக இருந்தது.  அவரது தொடர்பு எண் இல்லாத காரணத்தால் அழைக்க இயலவில்லை

மாமல்லன் காலையிலும் தொலைபேசியில் அழைத்து எழுத்தாளர் பக்கத்தை உருவாக்குவதற்கு உதவி செய்வதாக சொன்னார். இந்த அன்பும் ஈடுபாடும் நிகரற்றது.  நன்றி மாமல்லன்.

இன்றுமுதல் அமேசான் இணையதளத்தில் எனது நூல்கள் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளன.

முதல்முயற்சியாக உறுபசி நாவலை வெளியிட்டுள்ளேன்.

இனி எனது எல்லா நூல்களும் வரிசையாக வெளியிடப்படும்.

தேசாந்திரி பதிப்பகம் வெளியிடும் நூல்களும் அச்சுவடிவில் அமேசானில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

https://www.amazon.in/dp/B077T217F1

விலை ரூ 100

Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: